Thursday, October 28, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

  • ஒபாமா இந்தியா வரப்போகிறார். அவரை நேரில் சந்திக்க வாய்த்தால் என்ன கேட்பீர்கள் ?

டாலர் மதிப்பு சரியாமலிருக்க எதையாவது செய்யுங்களேன். 


  • அம்மாவிற்குக் கூடிய கூட்டங்கள் அப்படியே வாக்குகளாக மாறுமா ?

வாக்குகளாக மாறியவுடன் அம்மாவின் போக்குகளும் மாறி விடாதா ?

 

  • கோவில் பூசாரிகள் வேலை நிறுத்தம் செய்யலாமா ?

ஐயகோ... வேலை நிறுத்தத்தால் கடவுள் மேனி வியர்த்து வடியுமே !


  • பருத்தி நூல் விலை நூற்றுநாற்பது வருடத்தில் இல்லாத விலையுச்சத்தில் இருக்கிறதாமே ?

ஆனால், அதே பருத்தி விவசாயி 140 வருடங்களாக அதே வறுமையிலேயே இருக்கிறானே !

  • ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும் மாற்றிக்கொள்ளும் கைப்பேசி வசதியைப் பயன்படுத்துவீர்களா ?

எண்களில் எல்லாம் இருக்கிறது என்ற மூடநம்பிக்கைக்கு இது கட்டியம் கூறுவதைப் போலிருக்கிறது.

 

  • நீங்கள் எப்படி எந்திரன் திரைப்படத்தைப் பார்க்கலாம் ?

ஏனுங்க... அவனவன் ஆகாத பொண்டாட்டி கூட ஐம்பது வருசம் குடித்தனம் நடத்தலயா ?

  • வ குவார்ட்டர் கட்டிங் என்றால் என்ன ?

நான் வைக்கிறதுதான் தலைப்பு என்று அர்த்தம்

  • பங்குச் சந்தையின் உச்சம் எதைக் காட்டுகிறது ?

மலைமுகட்டின் உச்சத்தில் மறுபுறம் உள்ளது அதலபாதாளமே.

  • இந்தோனேசியாவில் அடிக்கடி இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வது ஏன் ?

தீபகற்ப  மற்றும் தீவு நாடுகள் இயற்கையோடு உரசி உரசி இல்லாமலாகிவிடும் அபாயத்தில் உள்ளன.

  • கவாஸ்கர் கொச்சி அணி உரிமையாளர் குழுவில் இடம்பெறுகிறாராமே ?

அண்ணாத்தை மைதானத்திற்கு வெளியே ஆட நிறைய விளையாட்டுகளைத்  தெரிந்துவைத்திருக்கிறார்.

  • விஜயகாந்த் திருப்பூரைத்  தான் வளர்ந்த ஊர் என்றாராமே ?

இதற்காகச் சென்னைத் தமிழன் கோபித்துக்கொள்ளவா போகிறான் ?

  

  • புதிய புதிய தங்க நகைக் கடைகள் நிறைய முளைக்கின்றனவே, மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறதா ?

ஆசை ஆசை அதிகரித்திருக்கிறது.

Sunday, October 17, 2010

உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்


நான்

உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்

ஆனால் நான்

என் சகாக்கள் பலரையும்போல்

உங்களிடம் டியூசன் படிக்கவில்லை


ஐயா

என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை

இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்

விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது

அதனால்தான் எப்பொழுதும்

கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்


காதறுந்த துணிப்பையில்

என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்

முத்து முத்தான கையெழுத்தால்

நிறைந்து வழியும் என் ஏடுகள்

உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை

நான் அறியவில்லை ஐயா !


என் உணவுப் போசியில்

கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது

எப்பொழுதும் நான்

நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்

தனித்து மூலையில் அமர்ந்து

வாரி வாரிச் சாப்பிடுவதை

நீங்கள் பார்த்திருக்கலாம்


ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்

கொஞ்சம் மை கசியும் என்றாலும்

மாவுபோல் எழுதும்

அது காணாமல் போன அன்று

நான் கதறிக் கதறி அழுதேன்

புல்மேயும் ஆடுபோல்

குனிந்த தலை நிமிராமல் தேடி

மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்

எனக்கு உயிரே வந்தது.


காலில் செருப்பில்லை.

என்னிடமிருப்பவை

சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்

தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே

மறதியறியாத

கத்திக் கூர்மையை ஒத்த

சாம்பல் மூளை மட்டுமே


ஐயா

உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்

ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்


காரணமேயில்லாமல்

என்னைக் கடியாதீர்

ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று

நீங்கள் அறிந்திருப்பதுபோல்

ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என

நான் அறியவில்லை ஐயா !


பாடம் எடுக்கும்போது

என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா !

Saturday, October 9, 2010

அன்று


அன்று

  •  

மதுக்கோப்பையைப் போல்

மாறி நின்றது

முருங்கைப் பூ

 

அது

காம்பிலேயே கைவிடப்பட்ட

பறித்துச் சூடப்படாத

மாற்று மல்லிகை

 

தேன்சிட்டுக்கு உண்டே

சின்னஞ்சிறு அலகுக் குழல் !

அரிசி மணி அளவேயான அதன் வயிற்றுக்கும்

பசியென்ற

பழைய நியதி உண்டே !

 

மலர்க் கோப்பைக்குள்

மூக்கால் மூழ்கி

மதுத்துளியைப் பருகியது

 

மலர் கருவுற்று

பிஞ்சொன்றை ஈன்றது

 

பிஞ்சுக்கும் சிட்டுக்கும்

இருக்கவில்லை

பிறகெந்த உறவும் ! 

Wednesday, October 6, 2010

வாழ்க தமிழர் !


எந்திரன் பார்த்தேன். பார்க்கத் தேவையில்லை என்று முடிவு செய்திருந்த படம்தான். ஆனால் பங்குச் சந்தையில் சில வாங்குதல் மற்றும் விற்றல் நிலைகளை மறுநாள் நிலவரத்தை யூகித்து நான் எடுத்துவைத்திருந்தேன். அது மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது. அந்தப் பதற்றங்களிலிருந்து நான் எங்காவது ஓடிப் போக வேண்டியிருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என் வீட்டருகில் உள்ள திரையரங்கை அங்கே என்ன படம் நடக்கிறது என்கிற அறிதலில்லாமலே நான் அடைவதுண்டு. அப்படி அடைந்த இடத்தில் எந்திரம் கட்டியிருந்தார்கள். போச்சாது போ என்று போனேன். பார்த்தேன். வந்துவிட்டேன். இதற்கு மெனக்கெட்டதற்குப் பதிலாக வீட்டில் பாப்பா எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் JETIX பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாராட்டுரையாக, சுஜாதாவின் மூளையில் உறைந்திருந்த மின்னல்களின் கடைசித் துளியைப் பருகினேன் எனலாம்.

மேலும், படம் ஓடிக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருக்க இடையில் அதிகார தோரணை மிகுந்த சிலர் ஒவ்வொரு மண்டையின் மீதும் கையொளி விளக்கைப் பாய்ச்சித் தலைகளைத் திரும்பத் திரும்ப எண்ணினார்கள். அரிசிச் சோற்றுக்கும் பருப்புக் குழம்புக்கும் சிந்தித்துச் சிந்தித்தே தம் மூளைகளைத் தொலைத்துவிட்ட அந்த அப்பாவி ஜனங்களோடு நானும் ஒரு மூடனாய் என் தலையை எண்ணக் கொடுத்தேன். ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியிலும் இவ்வாறு மீறப்பட்ட அவமதிக்கப்பட்ட தருணங்கள் எத்தனை எத்தனையோ !

சும்மாவா சொன்னார் நாமக்கல் கவிஞர் ‘தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவர்க்கோர் குணமுண்டுஎன்று !

Sunday, October 3, 2010

என்னத்தைச் சொல்ல...!

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மரபுச் செய்யுள்களில் வடித்துப் பதிவேற்றிய பகுதிகளை இதுகாறும் வாசித்திருப்பீர்கள். இவற்றை எல்லாரும் வாசித்தீர்களா அல்லது திறந்து பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டீர்களா என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதிகளில் இடப்படவேண்டிய பின்னூட்டங்களின் அக்கறையின்மை என்னை அவ்வாறு எண்ணச் செய்துவிட்டது. நீங்கள் ஏதாவது கூறப்போக நான் அதுகுறித்துக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவிடுவேனோ என்ற அச்சம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கலாம். மூன்றாம் தரமான அக்கப்போர் விவாதங்களில் பதிவுலக நண்பர்கள் காட்டும் முனைப்பை நம் தேசப் பிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு விவகாரத்தில் காட்டாதது ஒன்றும் தற்செயலானது இல்லை. நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள். விதிவிலக்குகளை இனங்கண்டு போற்றாதவரை முன்னெடுத்து முழங்காதவரை இங்கே எதுவும் மாறாது.

காந்தியின் நிலைப்பாடுகளோடு இங்கே எல்லாரும் யாவரும் பெரிதும் முரண்படவும் செய்வோம். எனக்கும் அவரது ஒற்றைப்படையான மதவாதச் சிந்தனைகள் பல ஏற்புடையவை அல்ல. இந்தக் கவிதைகளிலே கூட ‘ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதைபோன்ற சொற்றொடர்களை அமைக்கும் போது எனக்குள் எளிதில் தணியாத பதற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதுவே காந்தியாரின் கருத்தும் என்பதால் என் நிலைப்பட்டுக்கு அங்கே என்ன வேலை ? அந்த ஒன்றோ அல்லது இன்னபிறவோ அவரைக் கண்டு வியக்கும் போற்றும் செயல்களுக்குத் தடையாக இருக்கப் போதுமானவையும் அல்ல. அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, ஏன் இந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்தும், அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்பொருமுறை நான் பெரியார் காப்பியம் எழுதுவதாக முடிவு செய்து பகுதி எழுதி முடித்தும் இருந்தேன். அதற்காகக் கத்தை கத்தையாகப் புத்தகங்கள் வாங்கிப் பெரிய தொகையாகச் சேர்த்திருந்தேன். தமிழினி பதிப்பகமும் அந்த நூலை வெளிவரவிருக்கும் நூலாக அறிவித்திருந்தது. அந்த நேரமாகப் பார்த்து பெரியார் என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. முடிந்தது கதை. எங்கும் பெரியார் திரைப்படம் பற்றியே பேச்சு. கவனிக்கவும், பெரியார் என்கிற சமூகச் சீர்திருத்தவாதியைப் பற்றிய பேச்சே இல்லை. பெரியாராக சத்யராஜ் நடிக்கிறாராம், அது சிவாஜி கணேசன் நடிக்க விரும்பியிருந்த ரோலாம். பெரியார் விபச்சார விடுதிக்குப் போவது போல் காட்சிகளை எடுக்கிறார்களாம். இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசைமயமைக்க மறுத்துவிட்டாராம். ஜோதிர்மயி பெரியாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். குஷ்பு மணியம்மையாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையே கேவலமாகப் பேசிய குஷ்பு அவ்வேடத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று போலி அறிவு ஜீவிகள் மத்தியில் விவாதங்களாம். அந்த வேடத்தை ஏற்க அவரே மிகப் பொருத்தமானவராம். ஏப்ரல் மாதத்திலே ஸ்டான்லி அண்ணாதுரையாக நடிக்கிறாராம். அண்ணா ஒப்பனையில் இருக்கும் அவரோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒட்டுமொத்தப் படக்குழுவே போட்டிபோடுகிறதாம். விஜய் ஆதிராஜ் வீரமணியாம். தமிழ்நாடு அரசு படத்துக்கு இலட்சக் கணக்கில் மானியத்தை வாரியிறைக்கிறதாம். தமிழ்நாட்டு முதலமைச்சரே எடிட்டிங் டேபிளில் உட்காராத குறையாகப் படவேலைகளில் ஆர்வம் காட்டுகிறாராம். அடப்போங்கடா ஙொய்யாலெ... இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

காந்தியைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தபோது அவ்வாறு ஏதாவது வலிய மனத்தடை ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களின் உதாசீனங்களிலிருந்து ஒருவேளை தப்பியிருப்பேன்.

(கலாநேசன், வெண்புரவி, மதுரை சரவணன், கொல்லான், மோகன்குமார் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள்)

Saturday, October 2, 2010

காந்தி அண்ணல் - பகுதி 6


பிரித்தாளும் சூழ்ச்சிகளால் நாட்டை ஆண்டு

பெருங்காலம் தேசத்தைச் சுரண்டி வாழ்ந்தோர்

பிரித்தார்நம் திருநாட்டை இரண்டு துண்டாய் !

பிதாமனமோ ஏற்காமல் துவண்டு நிற்கும் !

எரிதழலில் வீழ்ந்தமலர் எரிதல் போல

எம்மானின் துயருள்ளம் கருகக் கண்டோம் !

பிரிவெண்ணம் மக்களுக்குள் பேதம் ஊட்டப்

பிற்போக்கு சம்பவங்கள் அரங்கில் ஏறும் !

‘‘இந்தியரே ! பன்னூற்று ஆண்டு சென்று

இனிப்பான வாய்ப்பொன்றின் வாசல் முன்னம்

உம்தலையின் எழுத்துகளை எழுதிக் கொள்ளும்

உவப்பான கட்டத்தில் இருக்கின் றீர்கள் !

இந்தவொரு அரும்வாய்ப்பை மறந்து நீங்கள்

இரத்தவெறி பிடித்தலைதல் நன்றா ? சொல்வீர் !’’

இந்தவாறு ஆங்கிலேய வைஸ்ராய் வேவல்

இரக்கமுடன் கூறுமாறு நிலைமை பாரீர் !

நவகாளி எனுமிடத்தில் மக்கள் கூட்டம்

நரவெறியால் இரத்தருசிச் சாற்றில் நீந்த

தவமெல்லாம் கெட்டதென்று தந்தை அஞ்சி

தவறிழைத்த வீதியெல்லாம் பயணம் செய்து

அவமானம் துடைக்கின்ற பணியைச் செய்தார்;

அஞ்சாமல் உபவாசம் சிரமேற் கொண்டார்;

சவக்காடா காமல்நம் நாடு மிஞ்ச

சத்தியவான் ஏற்றதுயர் இரண்டா ஒன்றா ?

எத்தனைபேர் வீரமுடன் ரத்தம் தந்தார்

எத்தனைபேர் தீரமுடன் உயிரை ஈந்தார்

எத்தனைபேர் சிறைபுகுந்து இன்னல் உற்றார்

எத்தனைபேர் அடியுதையின் வாதை ஏற்றார்

எத்தனைபேர் மனைமகவு உடைமை நீத்தார்

எத்தனைபேர் ஏழ்மையை முயன்று நோற்றார்

எத்தனையோ விலைஈந்து பெற்ற செல்வம்

இன்றினிக்கும் விடுதலையாம் எண்ணிப் பாரீர் !

வழிபாட்டுக் கூட்டத்தை நெருங்கும் போது

வணக்கத்தைச் சொன்னபடி மார்பை நோக்கிப்

பழிபாவம் அஞ்சாதான் ஒருவன் சுட்டான் !

பரம்பொருளை அழைத்தபடி மண்ணின் மீது

படுகிடையாய் விழலானார் ! மூன்று குண்டு

வெறும்நெஞ்சைத் துளைத்துவிட இறந்து விட்டார் !

விழியெல்லாம் நீர்க்கோலம் ! தேசத் தந்தை

விறகுக்கு இரையானார் சாம்பல் ஆனார் !


கொடுங்கூற்றே ! உன்கொடுமைக் களவில் லையோ !

குணக்குன்றம் தீப்பட்டு வேக லாமோ !

நடுங்கிற்றே தேசத்து மக்கள் நெஞ்சு !

நாற்றிசையும் உயிர்க்கதறல் விழிநீர் வெள்ளம் !

அடங்காத துயரத்தை ஆற்ற வல்லோர்

ஆருண்டு ! மேய்ப்பரற்ற மந்தை ஆனோம் !

கடுங்காலம் எதிர்வந்து கண்ம றைக்கக்

காந்திமகான் தகனத்தை ஐயோ கண்டோம் !

‘‘தசையோடும் எலும்போடும் இரத்தத் தோடும்

தகைசார்ந்த அருங்குணங்கள் கொண்டார் பூமி

மிசைமீது நிசமாக வாழ்ந்தார் என்றால்

மிகையாகக் கொள்ளுமெதிர் தலைமு றைகள்’’

இசைவான புகழுரையை ஐன்ஸ்டீன் சொன்னார் !

இம்மண்ணின் மூத்தகவி தாகூர் சொன்னார்;

அசையாத வைரமனம் தொண்டே வாழ்க்கை

’‘‘அவராத்மா மகாஆத்மா !’’ காந்தி வாழ்க !


--------முற்றும்-----------


Friday, October 1, 2010

காந்தி அண்ணல் - பகுதி 5

சௌரிசாரா எனுமிடத்தில் வன்மம் கொண்டு

சர்க்காரின் காவலரை அகிம்சை வீரர்

போர்முறையைக் கணம்மறந்து தீயில் இட்டுப்

பொசுக்கிவிட்டார்; இச்செய்தி கேள்வி யுற்றுக்

கோரநிலை பொறுக்காத காந்தி அண்ணல்

கொண்டநிலை கைவிட்டார்; மனம்நொந் திட்டார்;

சாரமிது சத்தியத்தில் வழியில் இல்லை !

தமைவருத்தி உபவாசம் மேற்கொண் டிட்டார் !

பக்குவத்தை மக்களுக்கு ஊட்ட வேண்டிப்

பருத்தியிழை நூல்நூற்றுக் கதராய் ஆக்கிச்

சிக்கனத்து வாழ்வைத்தான் வாழக் கேட்டார் !

சிறந்தலங்கா சையரிலே ஆலை எல்லாம்

மக்களிடம் துணிவிற்றுக் கொள்ளை செய்யும்

மாற்றுமிதைக் கதரியக்கம் என்று சொன்னார்;

எக்கணமும் கள்ளுண்ணா நோன்பை யாரும்

எந்நாளும் கைக்கொள்ள வேண்டும் என்றார் !

அழித்துவிடு தீண்டாமை என்னும் பேயை;

அகம்பாதி பெண்ணுரிமை நாளும் பேணு;

குழந்தைக்கு மறவாமல் கல்வி நல்கு;

கூட்டுறவால் ஊர்ப்பெருமை உயர்த்திக் காட்டு;

விழிப்புணர்வைப் புகட்டிவிடும் ஆசை பற்றி

விருப்போடு பத்திரிகை நடத்த லானார் !

எழுபத்து இலட்சத்து கிராமங் கள்தாம்

இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்ப தென்றார் !

உப்புக்கு வரிபோட்டு ஆங்கி லேயர்

ஊறுக்கு வழிபோட்டார்; காந்தி அண்ணல்

தப்புக்கு எதிர்ப்பாக எழுபத் தெட்டுத்

தமையொற்றும் அடியார்கள் சேர்ந்து கொள்ள

ஒப்பற்ற நடைபோட்டுத் தண்டி சேர்ந்து

ஓங்குகடற் கரையோரம் உப்பை அள்ள

எப்பக்கம் பார்த்தாலும் மக்கள் வெள்ளம்

எங்கணுமே விதிமீறும் புரட்சிக் காட்சி !

சட்டமறுப் பியக்கமென்று வரலாற் றுக்குள்

தனிப்புகழைப் பெற்றதிந்த நிகழ்ச்சி; ஏழை

திட்டமுடன் உணவுண்ண வில்லை; நாளும்

தீப்பசிக்கு உப்புண்டான்; நீரை யுண்டான்;

கொட்டமடித் தாடுகின்ற வர்க்கத் துக்குக்

கூழுக்கும் வழியற்ற ஏழை தன்னைத்

தொட்டணைத்துத் துயர்நீக்கும் மனமும் இல்லை;

துன்மார்க்க வழிசென்றார் ஆங்கி லேயர் !

நாடெங்கும் விடுதலைத்தீக் கொழுந்து தோன்ற

நாம்செய்ய ஒன்றுமில்லை என்றே ஆக

ஓடோடி வந்துகாந்தி கரத்தைப் பற்றி

ஒருநாளில் வைஸ்ராயைப் பார்க்க வேண்ட

நாடோடிக் கொண்டிருந்த அண்ணல் இந்த

நல்வாய்ப்பை ஏற்றவராய் இர்வின் தன்னை

ஊடாட்டம் இல்லாமல் சந்திக் கின்றார்

ஒருபேச்சு நடந்துகிறார் தேசம் காக்க !

எப்போது எம்மன்னர் வைத்த ஆளை

ஈரிழையால் நெய்தசிறு துணியைப் போர்த்தும்

அப்பாவித் தோற்றமுள்ள பக்கிரி போல்வர்

அழைக்கவைத்து மாளிகைக்குள் அடிவைத் தாரோ

அப்போதே எம்பெருமை மண்வீழ்ந் தாச்சு !

ஆண்டாண்டாய்க் காத்தபுகழ் காற்றில் போச்சு !’’

பிற்பாடு இதுபற்றி வின்ஸ்டன் சர்ச்சில்

பிரஸ்தாபம் செய்திட்ட கூற்று மேலே !

வட்டமேசை மாநாடு ஒன்றைக் கூட்டி

வருகின்ற பிரதிநிதி பலரைச் சேர்த்துத்

திட்டங்கள் பலபோட்டு நாட்டின் துன்பம்

தீர்ப்பதற்கு முயல்வதென முடிவா யிற்று;

முட்டுபல நேர்ந்துகெட்ட பேச்சு வார்த்தை

முகச்சுளிப்பு செய்திட்டார் காந்தி; பின்னால்

வெட்டுகிற தீர்மானம் எதிர்த்து விட்டு

வெறுங்கைகள் இரண்டோடு நாடு வந்தார் !

உலகப்போர் மூண்டுபுவி எங்கும் பற்ற

ஒன்றுக்கும் உறுதியற்ற நிலைமை சூழக்

கலகத்தில் தேசியத்தை மீட்புச் செய்யக்

கண்டுவிடும் விடுதலைக்கு வழியும் தோன்றப்

பலவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தா ராய்ந்து

‘பார்!இதுவே இறுதிப்போர்!என்று கூவித்

தெளிவாக அறிவித்தார்; ‘‘செய்வாய்! அன்றி

செத்துமடி!’’ என்கின்ற முழக்க கீதம் !

‘வெள்ளையனே வெளியேறு நாட்டை விட்டு

விண்ணதிர முழங்கியது மக்கள் கோஷம் !

உள்ளத்தால் ஒன்றிவிட்ட நாடு இஃது !

ஒன்றுமினி செய்வதற்கு இல்லை! மெல்ல

தெள்ளமுத விடுதலையைப் பருகத் தந்துத்

தீர்வாக வெளியேறும் எண்ணம் கொண்டு

வெள்ளையரும் விடுதலைக்கு வழியை விட்டார் !

விதையொன்று மரமாகிக் கனிந்த தின்று !


------------தொடரும்----------