Thursday, May 19, 2011

மொழியறிவற்றவன் எவ்வாறு எழுதுவான் ?


மொழியறிந்தவனுக்கும் மொழியறியாப் பேதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்வது நமக்கு மிகுந்த பயனளிக்கும். மொழிப்புலமை துளியளவு கூட இல்லாதவனும் அதற்கான முனைப்பை எள்ளளவேனும் காட்டத் தயங்குபவனும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என நம்மிடையே உலவுகின்றனர். தேவையற்ற புகழ்ச்சிக்கு அத்தகையோரை ஆளாக்கி அவர்களையும் துன்புறுத்த வேண்டா. நாமும் துன்புற வேண்டியதில்லை.

நம் ஆழ்மனத்தில் கருந்திமிங்கலமாக நாம் பயன்படுத்தும் மொழி வீற்றிருக்கின்றது. பெருந்தொகையான புத்தகங்களில் எறும்புச் சாரையாக அச்சிடப்பட்டிருக்கும் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி, உயிர்ப்போடு உலவுமிடம் - அதைப் பேசும் எழுதும் வாசிக்கும் சிந்திக்கும் உயிர்த்திரளான மக்களிடம் தான். அதைத் தூய்மையாகவும் உயர்தனிப்பண்புகளோடும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

மொழியைத் தவறாகப் பயன்படுத்தும் எழுத்துலக வறியவர்களைக் கண்டறிய எளிய வழிகள் பல உள்ளன. அவை எவை என்று பார்ப்போம்.

எண்களை எழுத்தால் எழுதுவது என்பது நாம் இரண்டாம் வகுப்பிலேயே கற்றறிந்த பாடமாகும். ஆனால், மொழியறியாத எழுத்தாளன் எண்களை எழுத்தால் எழுதும்போது குப்புற விழுவான்.

39 – இந்த எண்ணை எழுத்தால் எழுத வேண்டும். மொழியறியாதவன் ‘முப்பத்தி ஒன்பது’ என்றுதான் எழுதுவான். தமிழ்நாட்டிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகள் மொத்தம் முப்பத்தி ஒன்பது’ என்பான். மூன்று பத்தும் ஓர் ஒன்பதும் என்பதுதான் அவ்வெண் சுட்டும் பொருள். அதை எழுத்தால் ‘முப்பத்து ஒன்பது’ என்று எழுதவேண்டும். முப்பத்தி என்று எழுதலாமா ? இதைப் போலவே எல்லாப் பத்துகளையும் பிழையோடு அடித்து வீசுவான். இருபத்தி, முப்பத்தி, நாற்பத்தி, ஐம்பத்தி, அறுபத்தி, எழுபத்தி, எண்பத்தி... எனப் புழுதி கிளப்புவான். ‘ஆயிரத்து’ என்பதற்குப் பிழையாக ‘ஆயிரத்தி’ என்பான். 460 – இந்த எண்ணை நானூற்றி அறுபது என்பான். ‘நானூற்று அறுபது’ என்று ஒருபோதும் எழுதான்.

எண்களால் ஆள்கணக்கைச் சொல்லும்போதும் இரண்டு பேர், நான்கு பேர் என்றெழுதுவான். தமிழில் இவ்வகையான பயன்பாடுகளுக்கு அருமையான முழுமையான தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றை அவன் பயன்படுத்த அறிந்தே இருக்கமாட்டான். ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர்... என உள்ள சொற்கள் யாராலும் பயன்படுத்தப் படாமல் பரண்மேல் கிடக்கின்றன.

176378 – இது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழர் மனங்களைவிட்டு நீங்கிவிட்ட, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பத்திரிகையாளர்களால் தொடர்ச்சியாகப் புழக்கத்தில் விடப்பட்ட ஓர் எண்ணாகும். ஒருவரும் இந்த எண்ணை எழுத்தால் எழுதத் துணிந்தாரில்லை. அப்படி எழுதினால் ‘ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரத்தி முன்னூற்றி எழுபத்தெட்டு’ என்று தவறாகவே எழுதவும், அவ்வாறே உச்சரிக்கவும் செய்வான். முறையாக ‘ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முந்நூற்று எழுபத்தெட்டு’ என்றெழுத வேண்டும். இங்கேயும் முன்னூறு என்றெழுதி ‘முன்னே நூறு’ என்றே பொருளில் நிற்பார்கள். மூன்று நூறுகள் (மும்+நூறு) முந்நூறுகள் என்றே புணரும்.

மொழியறியாதவன் பதட்டம் என்று எழுதுவான். அவனுக்குப் பதற்றம் என்ற பதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. பதறுவதுதான் பதற்றம். பதட்டத்தால் எப்படிப் பதடுவது என்று எனக்குத் தெரியவில்லை. உடமை என்றெழுதுவான். அவனுக்கு உடைமையைப் பற்றி ஒன்றும் தெரியாது. உடையதுதான் உடைமை. உடமையின் வழியாக அவன் எதை ‘உடுகிறான்’ என்று தெரியவில்லை. நிலமை என்றெழுதுவான். எந்த நிலத்தில் அவன் அந்த மையைக் கண்டுபிடித்தானோ ! நிலைமை என்றெழுத வேண்டும்.

இப்படி எழுதுபவன் தன் மொழியறிவின் நுனிப்புல் அறிவை நாம் அறியத் தருகிறான். நாம் அவனை இனங்கண்டுகொள்கிறோம்.

Tuesday, May 10, 2011

கேள்வியும் நானே பதிலும் நானே - 7

  • · ஏன் இத்தனை நாள்களாக கேள்வி-பதில்கள் எவற்றையும் எழுதாமல் இருந்தீர்கள் ?

அண்மைக் காலமாக என்முன் கேள்விகள் அதிகரித்தபடியே இருந்தன. அவற்றுக்கான பதில்கள் ஒன்றுமே துலக்கமாகத் தென்படவில்லை.

  • · பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியில் அவருடைய மாமியார் மரணமடைந்துவிட்டாராமே...!

மாமியாருக்கும் மருமகனுக்கும் இடைநிலவும் பேரன்பின் உலகத்தை இன்னும் ஒருவரும் எழுதவில்லை. என் தந்தையார் இறந்தபோதும் பெருங்குரலெடுத்துக் கதறியழுதவர் என் தாயாரின் தாய் தான்.

  • · தனியார் பள்ளிகளில் +2 தேர்வுகளில் ஏராளமானோர் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார்களே...!

சுமாராகப் படிக்கும் ஒரு மாணவன் பெருமதிப்பெண் பெற்றிருந்தான். காரணம் என்னவென்று வினவினேன். ஒருவனுக்கு விடை தெரிந்திருந்தால் அந்தத் தேர்வு அறை முழுவதுமே எழுதுவதாகத் தெரிவித்தான்.

  • · கொடநாட்டில் இருந்து அம்மா கிளம்பிவிட்டார். நேராக எங்கே செல்வார் ?

கோட்டைக்குத்தான் என்று குழந்தை கூடச் சொல்கிறது. யதார்த்தம் என்னவென்று பதின்மூன்றாம் தேதி தெரிந்துவிடப் போகிறது.

  • · அயோத்தி நிலப்பகிர்வுத் தீர்ப்புக்குத் தடை விதித்திருக்கிறதே உச்சநீதிமன்றம் ?

நீதிகள் மன்றத்துக்கு மன்றம் மாறுபடும் நிலையைக் களைய ஆட்சியாளர்களும் சட்டவல்லுநர்களும் ஏதேனும் ஆவன செய்தால் நலமாக இருக்கும்.

  • · இலங்கையும் 20/20 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைத் துவக்கப் போகிறதாமே...

சொந்த மக்களையே குண்டுவீசிக் கொன்ற கொடுங்கோல் அரசுக்கு இந்த வேடிக்கைகள் மட்டும்தாம் குறையாகப்பட்டனவோ !

  • · சும்மா ஒரு பழமொழி சொல்லுங்களேன். சொந்த சரக்காக இருந்தால் நலம்.

ஆகாத பொண்டாட்டிக்கிட்டயே

ஆறுபுள்ள பெத்தவன்

தோதானவ கிடைச்சிருந்தா

தொண்ணூறு புள்ள இல்ல பெத்திருப்பான் ?

  • · கங்குலி மறுபடியும் கிரிக்கெட் ஆட வந்துவிட்டாரே...

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை !

  • · கனிமொழி ?

மாடத்தில் தோன்றிய மாதர் இலக்கிய நிலா

எளிமைக்குப் பெயரெடுத்த இளவரசி

(தெரிந்தவரை சொல்லிவிட்டேன்)

  • · +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்டுவீர்களா..?

அந்த முதல் மாணவி எனக்கு ஒரு பொருட்டே அல்ல. முதலிடம் பெறுகிறவர்கள் தங்கள் முன்னுள்ள வழக்கமாக செயல்திட்டத்தின் வழியே ஓர் இலகுவான வாழ்க்கையை அடைந்து காம்பவுண்டு வைத்துக் கட்டப்பட்ட வீட்டுக்குள் கேட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிவிடுவார்கள். என் அக்கறையெல்லாம் அந்தத் தேர்வுகளில் தோற்றுப்போய்விட்ட ஒரு லட்சம் மாணவ மாணவிகளைப் பற்றித்தான். அந்த ஒரு லட்சம் பேர்தான் எதிர்காலத்தில் இந்த உலகை ஆக்குவதில் அல்லது அழிப்பதில் பங்கெடுக்கப்போகிறவர்கள்.

  • · தேவையே இல்லாமல் ஒரு வேலையைத் துவங்கி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா...?

இந்த வலைப்பூவில் நான் எழுதிக்கொண்டிருப்பதை வேறு என்னவென்று நினைக்கிறீர்கள் ?

  • · அண்மையில் வாசித்தவற்றில் உங்கள் மனங்கவர்ந்த பத்திரிகை எது ?

தமிழக அரசியல். கட்டுரைகளின் கட்டுமானம் வழமையாய் இருந்தாலும் அதில் எழுதுபவர்கள் பிற்காலத்தில் நன்கு மலரக்கூடியவர்கள். அதற்கான அறிகுறிகளைக் கண்டேன்.