Wednesday, June 26, 2013

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?





1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

3. தமிழில் பேசுவதற்கு சுவாசமண்டலம் ஏராளமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுவதே நெஞ்சுரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இதமான பயிற்சியாகும். உதாரணத்திற்கு பாரதியார் பாடல்கள் சிலவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள். இரண்டு சுற்று மைதானத்தில் ஓடியதுபோல் மூச்சு வாங்கும்.

4. தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு.

5. தமிழ் அளவில்லாத சொல்வளம் பெற்றிருக்கும் மொழியாகும். தமிழில் வழங்கும் பெயர்ச்சொற்கள் ஒன்றிரண்டோடு சுட்டி முடிந்துவிடுவதில்லை. ஒன்றைக் குறிக்க மிகச் சாதாரணமாகப் பத்திருபது பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. அதேபோல் ஒற்றைச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்களும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாணி என்ற வெறும் இரண்டெழுத்துச் சொல்லுக்கு – காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, இசை, ஒலி, இசையுறுப்பாகிய தாளம், அழகு, அன்பு, முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று, பறைப்பொது, கூத்து, கை, பக்கம், சொல், சர்க்கரைக் குழம்பு, கள், பழச்சாறு, இலைச்சாறு, மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை, நீர், ஊர், நாடு, ஊர்சூழ் சோலை, காடு, பூம்பந்தர், பலபண்டம், கடைத்தெரு, நடை, சரகாண்டபாடாணம், பாடினி – என்று எத்தனை பொருள்கள் வழங்குகின்றன, பாருங்கள் !

6. ஒரு மொழியின் உயிர்நாடி அதில் வழங்கும் வினைச்சொற்கள்தாம். அம்மொழி பேசும் மக்கள் எத்தகைய வினைத்திட்பம் மிக்கவர்கள் என்பதையும் அச்சொற்களே எடுத்தியம்புகின்றன. தமிழ் வினைச்சொற்களின் அருமை என்னவென்றால் அவற்றுள் ஏராளமானவை பெயர்ச்சொற்களைப் போலவே வடிவில் எளியதாயும் அளவில் சின்னஞ்சிறிதாயும் இருப்பவை. உதாரணத்திற்குப் ‘பொங்கு’ என்ற இந்தச் சிறிய வினைச்சொல் பத்துக்கும் மேற்பட்ட செயல்களைச் சுட்டுவதாகும். அவை (பொங்குதல்) : காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், மகிழ்தல், சினத்தல், செருக்குறுதல், நுரைத்தல், விளங்குதல், மயிர் சிலிர்த்தல், வீங்குதல், விரைதல், துள்ளுதல், கண் சூடடைதல், உயர்தல், செழித்தல், ஒலித்தல், சமைத்தல்.

7. ஒருவரின் சிந்தனைப் பாங்கு அவர் பேசுகின்ற மொழியோடு தொடர்புடையது. எண்ணம் வெறும் படிமத்தளத்தில் தோன்றுவது. அந்தப் படிமத்தை விளக்குவதற்கு, குறைந்தபட்சம் எண்ணியவரே விளங்கிக்கொள்வதற்கு அவருக்குத் தெரிந்த மொழியே துணை. எண்ணியவற்றை விளக்க, போதாக்குறையோடு ஒருவரின் மொழி இருந்தால் அந்த எண்ணத்தால் ஆகக்கூடிய நன்மை என்ன ? வளமான தாய்மொழியை வாய்க்கப் பெற்றவர் தம் எண்ணங்களை படிமத் தளத்திலிருந்து இல்லை, மொழித்தளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ள வல்லவர் ஆவார்.

8. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளும் உயிர்மெய்யெழுத்துகளும் தமிழின் உச்சபட்சச் சிறப்பாகும். ‘தமிழ்’ என்ற பெயரே இந்த மூன்று வகை எழுத்துகளையும் பயன்படுத்தி வழங்கும் பெயர் என்பர். த – வல்லின உயிர்மெய். மி – மெல்லின உயிர்மெய். ழ் – இடையின மெய். வன்மையாகக் கூறவேண்டிய இடத்தில் வல்லின மெய்களையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மிகுதியாகப் பயன்படுத்தி முழங்கினால், அந்த முழக்கம் முழங்குபவரின் உடலையும் மனத்தையும் பறைபோல் அதிரச் செய்துவிடக்கூடியது. ’எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ? சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும் !’ – இவ்வரிகளில் வல்லின மெய் மற்றும் வல்லின உயிர்மெய்கள் மிகுந்து புழங்குவதால் உச்சரிப்பும் ஒலிப்பும் வன்மை உணர்ச்சி ததும்ப இருக்கின்றன.

9. மெல்லின மற்றும் இடையின மெய்களைப் பயன்படுத்தி எழுதினால் தமிழ்மொழி மென்மையின் தடத்தில் அதிராமல் நடக்கும். அவ்வகையான சொற்களை உரிய மாத்திரை அளவுகளில் திருத்தமாக உச்சரித்தால் மயக்கமே வந்துவிடும். உதாரணத்திற்கு ‘மெல்ல நட… மெல்ல நட… மேனி என்னாகும் ? சின்ன மலர்ப்பாதம் நோகும் ! உந்தன் சின்ன இடை வளைந்துவிடும் ! வண்ண சிங்காரம் குலைந்துவிடும்.’ மெல்லின மெய்களின் மென்மை புரிகிறதா ? (உங்க ளுக்கு எளிதில் விளங்கவேண்டும் என்பதற்காகவே திரைப்பாடல் உதாரணங்களைக் கூறியுள்ளேன். பாடல்கள் உச்சரிப்பொலிகளையும் கூடுதலாக நினைவூட்டும் என்பதற்காகவும்)

10. உலகில் எத்தனை இனங்களுக்குச் சொந்தமான தாய்மொழி வாய்த்திருக்கிறது என்று சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ நேர்ந்தவருக்கும் உடன் வரும் சொத்து அவர்களின் தாய்மொழி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனை மொழிகள் பேசும் உதடுகளற்றுச் செத்தன என்று எண்ணுங்கள். இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேசுவாரற்று ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று அடங்கிவிட்டது. வெறும் ஆயிரங்களில் சொற்களையுடைய மொழிகளைக்கூட அந்தந்த இனத்தினர் விடாது பற்றிக்கொண்டுள்ளனர். நம் பிள்ளைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் பயிலட்டும். ஆனால், தமிழைப் பழுதறக் கற்றுவிடட்டும்.

8 comments:

  1. சிறப்பிற்கு நன்றி ஐயா...

    குழந்தைகளுக்கும் பழுதறக் கற்றுக் கொண்டு கற்றுக் கொடுப்போம்... உணரவும் வைப்போம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எனது வட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்... நன்றி...

    ReplyDelete
  3. கொண்டாட வேண்டும்

    ReplyDelete
  4. அற்புதம் ஐயா! அற்புதம்! முன்பெல்லாம் அடிக்கடி உங்கள் தளத்துக்கு வந்து கொண்டிருந்தேன். இடையில் நீண்ட காலமாக விட்டுப் போய்விட்டது! அப்பொழுதெல்லாம் நீங்கள் எழுதிக் கொண்டிருந்த திரைப்பாடல் விளக்கங்கள் மட்டும்தான் இங்கு நான் படித்திருக்கிறேன். அதுவே மிக இனிமையான, தமிழறிவூட்டும் வாசிப்பனுபவமாக இருக்கும். இதுவோ அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை போல் இருக்கிறது! இவற்றுள் சிலவற்றைச் சிறு வயதில் நான் என் தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் நல்ல தமிழார்வலர். கண்ணதாசன், தமிழ்வாணன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். ஆனால், பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இவை மறந்துவிட்டன. இங்கு மொத்தமாக நீங்கள் பட்டியலிட்டுக் கொடுத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. இந்தக் கட்டுரையும் முகப்பில் இப்பொழுது புதிதாக இடம்பெற்றுள்ள மேலும் சில கட்டுரைகளும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மிக்க நன்றி ஐயா! என்னால் முடிந்த அளவு இதைப் பரப்புகிறேன்!

    ReplyDelete
  5. Ungaludaiya Arumaiyaana Padivugali Facebook il Share Seiyum Vasadhi Yen Illai ??

    ReplyDelete
  6. மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும்...

    இந்த சிறப்புகளை நினைவில் நிறுத்தினால் நாளைய தமிழ் குழந்தைகள் தமிழில் தான் படிக்கும்...

    சிறிய வினா, ஒரு சொல்லுக்கு பல பொருள் அதுவும் எண்ணிக்கையில் அடங்கா பற்பல பொருட்கள் சற்று குழப்பம் செய்யும் தானே?

    ReplyDelete