Saturday, April 2, 2016

கவிஞர் மகுடேசுவரனுடன் கேள்வியும் பதிலும்



புத்தகம் பேசுது’ இதழில் வெளியான என் ‘ஒரு புத்தககம் பத்துக் கேள்விகள்’ பகுதி. கேள்விகள் அனுப்பித் தரப்பட்டன. பதில்கள் எழுதித் தரப்பட்டன.
-----------------
தமிழினி வெளியீடாக மகுடேசுவரன் எழுதியுள்ள ‘விலைகள் தாழ்வதில்லை’ என்னும் நூல் திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியாகிறது. புத்தகத்தின் முன்னட்டைக் குறிப்பே அது பொருளாதாரவியல் குறித்துப் பேசும் கட்டுரைகள் சிலவற்றைத் தாங்கியுள்ளதைக் கூறுகிறது. தமிழ்ச்சூழலில் பொருளாதாரம் உள்ளிட்ட பிற பெருந்துறைகள்பற்றி எழுதப்படும் நல்ல நூல்களுக்கு என்றும் தேவைப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்தான் மகுடேசுவரனின் ‘விலைகள் தாழ்வதில்லை’ நூல் கூடுதலான கவனம் பெறுகிறது. நூல்குறித்தும் நூலாசிரியரின் ஒட்டுமொத்தச் செயற்களத்தின் ஈடுபாடுகள் குறித்தும் எழுப்பட்ட பத்துக் கேள்விகளும் அவற்றுக்குரிய பதில்களும் :-

1. பங்குச் சந்தைகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் பொது மனநிலையை இந்நூல் எவ்வாறு அணுகப் போகிறது ?

தற்காலப் பொருளாதாரப் போக்கின் அடிப்படையில் பார்க்கையில் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் தேவைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் உரசும் எல்லாக் காரணிகளும் பங்குச் சந்தைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தீர்மானிக்கின்றன என்பதுகூட உண்மைதான். பெருநிறுவன மதிப்புகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் பங்குச் சந்தைகளை ஊன்றிக் கவனிப்பதும் அறிவை வளர்த்துக்கொள்வதும் நம்மைத் தாக்கும் அலைகள் எத்தகையன என்பதைக் கணிக்க உதவும். அரசு நிறுவனங்களின் மதிப்புகள்கூட அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டதால் விண்ணளவு உயர்ந்திருக்கின்றன. யார்வேண்டுமானாலும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டு விருப்பமற்றவர்கள் அதன் போக்குகளைக் கவனிக்கலாம். முதலீடு என்று பெருந்தொகையைக் குறிக்கவில்லை. அங்கே செய்யப்படும் சில நூறுகளும் ஆயிரங்களும்கூட முதலீடுதான். நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றின் பங்குகளில் முதலிடுவதுகூட நம்மை நாம் ஆதரிப்பது போன்றதுதான். மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளோடு நிரந்தரமாகப் போராடமல் வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் அதைப் பார்க்க வேண்டும்.

2. பங்குச் சந்தைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் செபியின் செயல்பாடுகள் எவ்வாறுள்ளன ? அது சிறு முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்குத் துணை நிற்கின்றதா ?

நன்கு கண்காணிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டின் பன்னாட்டுத் துயரத்திற்குப் பிறகு பேரளவில் அதிர்வுகளை ஊட்டிய நிகழ்வுகள் எதுவுமில்லை. அத்தகைய இடர்கள் எல்லாக் கைகளையும் மீறிய நிதிச்சந்தைகளின் நெரிக்கட்டுகள் என்றுதான் கருதப்படுகின்றன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியச் சந்தைகள் முன்னிலும் வலுவோடு எழுந்து நின்றன. அதற்கு செபியின் கண்காணிப்புத் தீவிரம்கூட ஒரு காரணம்தான். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடு நம் பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட அண்மைக்காலக் கரும்புள்ளி என்று வைத்துக்கொண்டால்கூட, அந்நிறுவனத்தைக் கைம்மாற்றி நிவாரணம் கண்டதை மறப்பதற்கில்லை. இப்போதெல்லாம் கருத்துகளைப் பரப்பிவிட்டு, ஒரு நிறுவனப் பங்குவிலையைச் செயற்கையாக உயர்த்துவதற்கோ தாழ்த்துவதற்கோ வழியில்லாதபடி செபியின் விதிகள் தடுக்கின்றன. செபியில் பதிந்துகொண்டவர்கள் அன்றி பிறர் அச்செயலில் ஈடுபடக்கூடாது. நிறுவனங்களின் செயல்பாடுகளும் காலாண்டு முடிவுகளும்தாம் அங்கே விலைகளைத் தீர்மானிக்கின்றன.

3. கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் குறித்து…

நிச்சயமாய்க் கடந்த இருபத்தைந்தாண்டுகள் மிகவும் கரடுமுரடான பாதைகளைத்தான் நம் பொருளாதாரம் கடந்து வந்திருக்கிறது. உலக நாடுகளுக்கிடையில் இத்தனை ஊடுபாவு உறவுகள் பொருளாதார நலன்கள் சார்ந்தே ஏற்பட்டிருக்கின்றன. நாம் அத்தகைய ஒரு திறப்பில் அடியெடுத்து வைத்தது தவிர்க்க முடியாத கட்டாயத்தால்தான். எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நம் நாட்டிலும் நுழைந்திருக்கின்றன. அரசு நிர்வாகம் சார்ந்த இணையோட்டம் அவற்றுக்குப் போதவில்லை என்றாலும் இருக்கின்ற சாத்தியங்களுக்குள் இயன்றவற்றைச் செய்திருக்கிறோம். நாடளவில் நல்ல இணைப்புச் சாலைகள் தோன்றியிருக்கின்றன. பெருநகரங்கள் பன்மடங்கு வளர்ந்திருக்கின்றன. ஊடகத்துறை, கட்டுமானம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விரிவுகளைக் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வளங்கள் கண்டறியப்பட்டு அசுர வேகத்தில் நுகரப்படுவது கவலைக்குரிய ஒன்றுதான். இந்தச் சூறாவளியில் இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை, சிறுதொழில்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஏராளமான ஊர்ப்புறத் தொழில்கள் அழிந்துவிட்டன. கிராமங்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்வது என்று தவிக்கின்றன.



4. அடுத்த பத்தாண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரப் போக்குகள் எவ்வாறு இருக்கக்கூடும் ? குறிப்பாக, இந்தியாவிற்கு.

அடுத்த பத்தாண்டுகள் இதே அலைவரிசையில்தான் உலக நிகழ்வுகள் இருக்கும். எண்ணெய் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும்போது அவற்றை வழக்கம்போல் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தோற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என் ஊகம்தான். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து - ஏனெனில் இது இருதரப்புக்கும் முக்கியம் - நாடுகளுக்குள் நல்ல உறவுகள் ஏற்படும். சொத்துடைமை விலையேற்றங்கள் இதே ஏறுவிகிதத்தில் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை. தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து பாதியாகியிருந்தபோதும் டாலருக்கு நிகரான உரூபாய் விலைவீழ்ச்சியால் நம்மால் அதை நுகரமுடியவில்லை. மக்கள்தொகை மிக்குள்ள நாடுகளில் வேலையின்மையும் மூத்த வயதினர் தொகையும் அதிகரிக்கும். 2025-க்குப் பிறகு இந்த வளர்ச்சி நிரலில் ஒரு அமைதி ஏற்படும். அதற்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவைகூட எழலாம். அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு நம் தேசம் மீண்டும் விவசாயத்திற்கும், தற்சார்புப் பொருளாதாரத்திற்கும் திரும்பக்கூடும் என்று நான் கணிக்கிறேன். ஏனென்றால் உணவுப்பொருள் உற்பத்தியின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உக்கிரமாய் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

5. தற்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிகம் எழுதுகின்றீர்கள். அவற்றின் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றனவா ?

முகநூல், கீச்சர் போன்ற சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன என்றால் மிகையில்லை. முன்பெல்லாம் ஒரு கவிதை எழுதி, அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு, மாதக்கணக்கில் பிரசுரத்திற்காகக் காத்திருப்போம். பதினெட்டு மாதங்கள் கழித்துப் பிரசுரமானதெல்லாம் எனக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால், இன்று எழுதி முற்றுப்புள்ளியிட்டு அடுத்த நொடியில் முகநூலில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்தப் படைப்புக்கான எதிர்வினைகளைப் பெற முடிகிறது. இது ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். தன் வாசகரோடு இடம் தொலைவு பொழுது தாண்டி எப்போதும் தொடர்பில் இருப்பதைப்போன்ற உணர்வு. நாம் எழுதுவதை உலகளாவிய தமிழர்கள் படிக்கின்ற வாய்ப்பு. எல்லாவற்றிலும் உள்ளது போன்று இதிலும் சில தீமைகள் உள்ளன என்றாலும் நிகரமாக இவற்றால் பயனே மிகுதி. நான் எழுதுவதை நாடோறும் இருபதாயிரம் வாசகர்கள் படிக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் இணையவழிப்பட்ட என் தமிழ் கற்பிப்பில் பயன் பெற்றுள்ளார்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ?

6. இணையத்தில் பரவலாகப் பேசப்படும் இணையச்சமன் (நெட் நியூட்ராலிடி) விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதே…

இணையம் என்பது எல்லார்க்குமானது என்று இறும்பூது எய்தியிருக்கிறோம். இதன் பயனாளிகள் எல்லாச் சேவைகளையும் விட்டுவிட்டு இணையத்தில் குதிப்பதால் ஏற்பட்ட கலவரம்தான் இணையச் சமநிலைக்கு ஏற்பட்டுள்ள இடர். என்வினவி (வாட்சப்) போன்ற இணையச் செயலிகள் தமக்குள் பேசிக்கொள்ளும் வசதியையும் கொண்டுவந்திருக்கின்றன. ஏற்கெனவே குறுஞ்செய்தியில் பணம் பார்த்த தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் என்வினவி, முகநூல் போன்றவற்றின் வருகையால் வருமானத்தை இழந்தன. இத்தோடு பேசும் சேவை, காணொளித் தொடர்புச் சேவையையும் வழங்கினால் எண்களை அழைத்துத் தொலைபேசும் வழக்கமே இல்லாதொழியும் என்று அஞ்சுகின்றன. இணையத் தொடர்பின் வழி இந்த செயலிகளைப் பயன்படுத்தி இருதரப்பும் பேசவும் காணவும் செய்யலாம். அதனால் இவற்றுக்கு ஒரு வரையறையைக் கோருகின்றன. ஆனால், இணையத்தின் பலம் அதன் கட்டற்ற சுதந்திரமே என்பதால் இவற்றுக்கு எதிராக எதைச் செய்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். அறிவியலின் எல்லா சாத்தியங்களையும் ஏற்றுக்கொள்வதே தீர்வு.



7. என்வினவி என்றதும் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எண்ணற்ற பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல்லாக்கங்கள் படைத்துத் தருகிறீர்கள். அந்த அனுபவம், மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டது பற்றியெல்லாம் சொல்லுங்கள்.

நாள்தோறும் கணக்கிலடங்காத பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுந்துகொண்டே இருக்கின்றன. அந்த வேகத்திற்கு ஈடாக, தமிழ்ச்சொல்லாக்கங்கள் நிகழவே இல்லை. இது இப்படியே போனால் நம் மொழியே அழிந்துவிடும் என்ற அச்சம் யார்க்குமே இல்லை. மொழியுணர்வுள்ள தமிழாசிரியர்கள் எல்லாம் சென்ற தலைமுறையோடு போய்விட்டார்கள். அவர்கள் முதுமையுற்றுச் செயலிழந்தனர். தமிழையே பிழையாய் எழுதுபவர்கள்தாம் தமிழ் கற்பிக்கிறார்கள். நிலைமை இப்படியே நீடிக்குமானால் மொழியைக் காக்கும் செயல் காலந்தாழ்ந்த ஒன்றாகிவிடும் என்று கருதியே நான் இறங்கினேன். இங்கே தமிழை எழுதுபவர்கள்கூட, ஒரு சொல்லைப் பார்த்தால் அதன் அர்த்தத்தையே மங்கலாய்த்தான் உணர்கிறார்கள். எனக்கு ஒரு சொல்லின் ஏழெட்டு அடுக்குகளும் தெளிவாய்த் தெரியும். அவ்வாறுதான் நான் தமிழ்கற்றேன். அதனால் என்னால் அர்த்தத்திற்கேற்ப எளியதாய், சிறியதாய், ஒரு சொல்லையோ சொற்றொடரையோ புதிது புதிதாய் உருவாக்க முடியும். அவ்வாறு ஆக்கிய அச்சொல் புதிது என்று பிறர் சொல்லித்தான் தெரியவந்தது. இந்தத் தமிழ்ப்புலமை தற்காலத்தில் சிறப்பு என்று தமிழறிந்த என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் இயன்றவரை தமிழ்ச்சொல்லாக்கங்களில் ஈடுபடத் தொடங்கினேன். நான் முகநூலுக்கு வந்தபோது எல்லாரும் அதை வதனப்புத்தகம் என்றார்கள். என்போன்றோர் மீண்டும் மீண்டும் எழுதித்தான் முகநூல் என்பதைப் பதியவைத்தோம். இன்று அந்நிறுவனமே முகநூல் என்று தன் தமிழ்ப்பதிப்பில் பதிக்கிறது. செல்பி என்பதைச் சுயமி என்றார்கள். சுயம் என்பது வடமொழிச்சொல் என்ற அறிவுகூட இல்லாமல் இங்கே தமிழ்ப்படுத்துகிறார்கள் பாருங்கள். நான் அதைத் தற்படம் என்றேன். அடுத்த நொடியில் அச்சொல்லை விக்கிபீடியாவில் சேர்த்தார்கள். கூலிங்கிளாஸ் என்பதைத் தண்ணாடி எனலாம் என்றேன். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம். குளிர்கண்ணாடியைத் தண்ணாடி எனலாம்தானே ? மறுநாள் தினமணியில் அச்சொல் குறித்து எழுதினார்களாம். இப்படி என் சொல்லாக்கங்கள் தொடர்கின்றன.

8. தமிழ்ப்பிழை நீக்கங்களில் ஈடுபடுகையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன ? கல்வி நிறுவனங்களில் வீற்றிருப்பவர்கள் என்ன சொன்னார்கள் ?

தமிழ்ப் பிழை நீக்கங்களில் ஈடுபட்டபோதுதான் இங்கே தமிழுக்கு எதிராய் யார் யாரெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே புரிந்தது. தமிழை எழுதுகின்ற ஊடகத்துறையினரிடமிருந்து பிரபல எழுத்தாளர்கள்வரை எல்லாரும் ‘பத்திக்குப் பத்து’ என்ற கணக்கில் பிழையிழைத்தே வந்திருக்கின்றனர். பன்மையில் எழுவாய் இருந்தால் ஒருமை வினைமுற்றில் முடிப்பார்கள். எங்கும் சந்திப் பிழைகள் மிகுந்திருக்கும். எங்கே வலிமிகும் எங்கே வலிமிகாது என்று யார்க்குமே உணர்த்தியில்லை. சரியாக எழுதுகிறேன் என்று எல்லாவிடத்திலும் வலிமிகுவித்துவிட முடியாது. பொருளே மாறிவிடும். முன்புபோல் பிழைதிருத்துநர்களும் அருகிப்போய்விட்ட காரணத்தால் தமிழை ஈவு இரக்கமில்லாமல் அடித்து வீழ்த்தியிருக்கின்றனர். காலில்லாதவர்கள் ஆடிய ஆட்டத்தைத்தான் இத்தனை நாளாகப் பார்த்துக்கொண்டிருந்தோமா என்று அதிர்ச்சியுற்றேன். ஐகாரத்தை அடுத்தும் ய் என்ற மெய்யெழுத்தை அடுத்தும் மகரச் சொல் வந்தால் ம் என்று மெலிமிகும். கைம்மாறு, தைம்மாதம், பொய்ம்முகம். வலிமிகுதலைப்போலவே இவ்வாறு மெலிமிகுதலும் உண்டு. இந்த விதி காற்றில் பறக்கிறது. ஊறுகாய், சுடுகாடு மட்டுமில்லை, எரிமலை, வெடிகுண்டு, குடிநீர் இவையும் வினைத்தொகைதான் என்று சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்டு எழுதிய பேராசிரியர் ஒருவர் வினைத்தொகைக்கு உதாரணங்களாக அவற்றை எழுதினால் மதிப்பெண் போடமாட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இப்படித்தான் இருக்கிறது தமிழ்க்கல்விச்சூழலில் நிலைமை.

9. நீங்கள் எழுதும் கவிதைகளுக்கு இணையத்தில் மிகப்பெரிய வாசகர் வட்டம் இருக்கிறது. தினமும் ஓரிரண்டு கவிதைகளையேனும் பதிகிறீர்கள். தொடர்ச்சியாய்க் கவிதை எழுதுவது எவ்வாறு முடிகிறது ?

இங்கே நம் உற்சாகத்தைத் தீர்மானிப்பது நமக்கு வாய்த்துள்ள களம்தான். நான் கவிதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்றிருந்தவன். உரைநடைக்குச் செல்பவர்கள் வழிநடையில் இளைப்பாறக் கிடைத்த காட்டுமர நிழல் என்று கருதித்தான் கவிதையின்கீழ்த் தங்கினர். அதனால் விரைவில் அவர்கள் கவிதையைக் கைவிட்டனர். உரைநடையில் எழுதுவதால் பணமும் கொஞ்சம் கூடுதல் கவனிப்பும் கிடைக்கும்தான். ஆனால், தோன்றுகின்றவர்கள் எல்லாம் புனைகதைக்குச் சென்றுவிட்டால் மொழிக்குக் கவிதை வளத்தை யார் ஊட்டுவர் ? கவிதையூற்றம் இல்லாத தொன்மொழியாகலாமா நம்மொழி ? அங்கே புதிதாய்க் கவிதை எழுத முனைவோர் மட்டுமே மிஞ்சி நிற்பர். கவிதையியலின் எல்லா மதகுகளையும் திறந்துவைத்திருந்தால்தான் மொழி வளரும். கவிதைத் தோய்வுதான் மொழிக்குள் நம்மை ஈர்க்கும். அதனால்தான் நான் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறேன். உரைநடையில் அறிவுத்துறை நூல்களையும் மொழிநூல்களையும் எழுதுவேன்.

10. மொழி இலக்கணம் கற்பிப்பது என்பது யாருமே முன்வராத செயல். அதில் எப்படி இறங்கினீர்கள் ?

இயற்கையை ஆராய்ந்து அதன் இயல்புகளை எழுதிவைத்ததுதான் இயற்பியல் என்னும் அறிவியல். அதுபோல் உயிர்ப்பொருள்களைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட அறிவுத்தொகுப்புதான் உயிரியல், இல்லையா ? அவ்வாறே ஒரு மொழியின் இயற்கையை நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்ட அம்மொழியின் அறிவியல்தான் இலக்கணம். நாம் இலக்கணத்தை விதிகளின் தொகுப்பாகப் பார்க்கிறோம். இல்லவே இல்லை. நம் மொழியின் இயல்புகளைப்பற்றிய தொகுப்புதான் இலக்கணம். கடந்த முப்பதாண்டுகளாக நவீன இலக்கியம் என்ற போர்வையில் கைவிடப்பட்டவற்றுள் முக்கியமானது தமிழ் இலக்கணம். இலக்கணத்தைக் காக்காமல், அதைப்பற்றிய அறிவை ஊட்டாமல் மொழி வளர்ப்பதோ மொழியைக் காப்பதோ இயலாமற் போகும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லைக்கூடத் தவறாக எழுதாத தமிழர்கள் தமிழை ஏனோதானோவென்று எழுதுகின்றனர். இங்கே இலக்கணத்தை வலியுறுத்த ஒருவருமில்லை. அந்த உணர்ச்சியே இல்லை. எத்துணை ஆண்டு காலத் தொன்மையுடையது தமிழ். அதன் இலக்கணம்தானே அதை வேலியிட்டுக் காத்தது. அது குறித்து நம் சூழலில் ஓயாது உரையாட வேண்டும்தானே நாம் ? ஆனால், டீக்கடை இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் ஜோதிட அறிவு பரவிய அளவுக்குக்கூட இங்கே இலக்கண அறிவு பரவவில்லை. அதனால்தான் நான் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இலக்கணம் கற்பிப்பதையும் இலக்கணம் குறித்த உரையாடலைத் தோற்றுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டேன். மக்கள் நன்கு இலக்கணம் கற்பிப்பவரைத் தோள்மீதமர்த்திக் கொண்டாடுகிறார்கள். அதை நான் உணர்ந்தேன்.

நன்றி:
புத்தகம் பேசுது - பிப்ரவரி 2016.