Saturday, April 2, 2016

கவிஞர் மகுடேசுவரனுடன் கேள்வியும் பதிலும்புத்தகம் பேசுது’ இதழில் வெளியான என் ‘ஒரு புத்தககம் பத்துக் கேள்விகள்’ பகுதி. கேள்விகள் அனுப்பித் தரப்பட்டன. பதில்கள் எழுதித் தரப்பட்டன.
-----------------
தமிழினி வெளியீடாக மகுடேசுவரன் எழுதியுள்ள ‘விலைகள் தாழ்வதில்லை’ என்னும் நூல் திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியாகிறது. புத்தகத்தின் முன்னட்டைக் குறிப்பே அது பொருளாதாரவியல் குறித்துப் பேசும் கட்டுரைகள் சிலவற்றைத் தாங்கியுள்ளதைக் கூறுகிறது. தமிழ்ச்சூழலில் பொருளாதாரம் உள்ளிட்ட பிற பெருந்துறைகள்பற்றி எழுதப்படும் நல்ல நூல்களுக்கு என்றும் தேவைப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்தான் மகுடேசுவரனின் ‘விலைகள் தாழ்வதில்லை’ நூல் கூடுதலான கவனம் பெறுகிறது. நூல்குறித்தும் நூலாசிரியரின் ஒட்டுமொத்தச் செயற்களத்தின் ஈடுபாடுகள் குறித்தும் எழுப்பட்ட பத்துக் கேள்விகளும் அவற்றுக்குரிய பதில்களும் :-

1. பங்குச் சந்தைகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் பொது மனநிலையை இந்நூல் எவ்வாறு அணுகப் போகிறது ?

தற்காலப் பொருளாதாரப் போக்கின் அடிப்படையில் பார்க்கையில் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் தேவைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் உரசும் எல்லாக் காரணிகளும் பங்குச் சந்தைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தீர்மானிக்கின்றன என்பதுகூட உண்மைதான். பெருநிறுவன மதிப்புகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் பங்குச் சந்தைகளை ஊன்றிக் கவனிப்பதும் அறிவை வளர்த்துக்கொள்வதும் நம்மைத் தாக்கும் அலைகள் எத்தகையன என்பதைக் கணிக்க உதவும். அரசு நிறுவனங்களின் மதிப்புகள்கூட அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டதால் விண்ணளவு உயர்ந்திருக்கின்றன. யார்வேண்டுமானாலும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டு விருப்பமற்றவர்கள் அதன் போக்குகளைக் கவனிக்கலாம். முதலீடு என்று பெருந்தொகையைக் குறிக்கவில்லை. அங்கே செய்யப்படும் சில நூறுகளும் ஆயிரங்களும்கூட முதலீடுதான். நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றின் பங்குகளில் முதலிடுவதுகூட நம்மை நாம் ஆதரிப்பது போன்றதுதான். மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளோடு நிரந்தரமாகப் போராடமல் வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் அதைப் பார்க்க வேண்டும்.

2. பங்குச் சந்தைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் செபியின் செயல்பாடுகள் எவ்வாறுள்ளன ? அது சிறு முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்குத் துணை நிற்கின்றதா ?

நன்கு கண்காணிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டின் பன்னாட்டுத் துயரத்திற்குப் பிறகு பேரளவில் அதிர்வுகளை ஊட்டிய நிகழ்வுகள் எதுவுமில்லை. அத்தகைய இடர்கள் எல்லாக் கைகளையும் மீறிய நிதிச்சந்தைகளின் நெரிக்கட்டுகள் என்றுதான் கருதப்படுகின்றன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியச் சந்தைகள் முன்னிலும் வலுவோடு எழுந்து நின்றன. அதற்கு செபியின் கண்காணிப்புத் தீவிரம்கூட ஒரு காரணம்தான். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடு நம் பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட அண்மைக்காலக் கரும்புள்ளி என்று வைத்துக்கொண்டால்கூட, அந்நிறுவனத்தைக் கைம்மாற்றி நிவாரணம் கண்டதை மறப்பதற்கில்லை. இப்போதெல்லாம் கருத்துகளைப் பரப்பிவிட்டு, ஒரு நிறுவனப் பங்குவிலையைச் செயற்கையாக உயர்த்துவதற்கோ தாழ்த்துவதற்கோ வழியில்லாதபடி செபியின் விதிகள் தடுக்கின்றன. செபியில் பதிந்துகொண்டவர்கள் அன்றி பிறர் அச்செயலில் ஈடுபடக்கூடாது. நிறுவனங்களின் செயல்பாடுகளும் காலாண்டு முடிவுகளும்தாம் அங்கே விலைகளைத் தீர்மானிக்கின்றன.

3. கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் குறித்து…

நிச்சயமாய்க் கடந்த இருபத்தைந்தாண்டுகள் மிகவும் கரடுமுரடான பாதைகளைத்தான் நம் பொருளாதாரம் கடந்து வந்திருக்கிறது. உலக நாடுகளுக்கிடையில் இத்தனை ஊடுபாவு உறவுகள் பொருளாதார நலன்கள் சார்ந்தே ஏற்பட்டிருக்கின்றன. நாம் அத்தகைய ஒரு திறப்பில் அடியெடுத்து வைத்தது தவிர்க்க முடியாத கட்டாயத்தால்தான். எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நம் நாட்டிலும் நுழைந்திருக்கின்றன. அரசு நிர்வாகம் சார்ந்த இணையோட்டம் அவற்றுக்குப் போதவில்லை என்றாலும் இருக்கின்ற சாத்தியங்களுக்குள் இயன்றவற்றைச் செய்திருக்கிறோம். நாடளவில் நல்ல இணைப்புச் சாலைகள் தோன்றியிருக்கின்றன. பெருநகரங்கள் பன்மடங்கு வளர்ந்திருக்கின்றன. ஊடகத்துறை, கட்டுமானம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விரிவுகளைக் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வளங்கள் கண்டறியப்பட்டு அசுர வேகத்தில் நுகரப்படுவது கவலைக்குரிய ஒன்றுதான். இந்தச் சூறாவளியில் இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை, சிறுதொழில்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஏராளமான ஊர்ப்புறத் தொழில்கள் அழிந்துவிட்டன. கிராமங்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்வது என்று தவிக்கின்றன.4. அடுத்த பத்தாண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரப் போக்குகள் எவ்வாறு இருக்கக்கூடும் ? குறிப்பாக, இந்தியாவிற்கு.

அடுத்த பத்தாண்டுகள் இதே அலைவரிசையில்தான் உலக நிகழ்வுகள் இருக்கும். எண்ணெய் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும்போது அவற்றை வழக்கம்போல் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தோற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என் ஊகம்தான். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து - ஏனெனில் இது இருதரப்புக்கும் முக்கியம் - நாடுகளுக்குள் நல்ல உறவுகள் ஏற்படும். சொத்துடைமை விலையேற்றங்கள் இதே ஏறுவிகிதத்தில் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை. தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து பாதியாகியிருந்தபோதும் டாலருக்கு நிகரான உரூபாய் விலைவீழ்ச்சியால் நம்மால் அதை நுகரமுடியவில்லை. மக்கள்தொகை மிக்குள்ள நாடுகளில் வேலையின்மையும் மூத்த வயதினர் தொகையும் அதிகரிக்கும். 2025-க்குப் பிறகு இந்த வளர்ச்சி நிரலில் ஒரு அமைதி ஏற்படும். அதற்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவைகூட எழலாம். அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு நம் தேசம் மீண்டும் விவசாயத்திற்கும், தற்சார்புப் பொருளாதாரத்திற்கும் திரும்பக்கூடும் என்று நான் கணிக்கிறேன். ஏனென்றால் உணவுப்பொருள் உற்பத்தியின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உக்கிரமாய் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

5. தற்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிகம் எழுதுகின்றீர்கள். அவற்றின் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றனவா ?

முகநூல், கீச்சர் போன்ற சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன என்றால் மிகையில்லை. முன்பெல்லாம் ஒரு கவிதை எழுதி, அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு, மாதக்கணக்கில் பிரசுரத்திற்காகக் காத்திருப்போம். பதினெட்டு மாதங்கள் கழித்துப் பிரசுரமானதெல்லாம் எனக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால், இன்று எழுதி முற்றுப்புள்ளியிட்டு அடுத்த நொடியில் முகநூலில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்தப் படைப்புக்கான எதிர்வினைகளைப் பெற முடிகிறது. இது ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். தன் வாசகரோடு இடம் தொலைவு பொழுது தாண்டி எப்போதும் தொடர்பில் இருப்பதைப்போன்ற உணர்வு. நாம் எழுதுவதை உலகளாவிய தமிழர்கள் படிக்கின்ற வாய்ப்பு. எல்லாவற்றிலும் உள்ளது போன்று இதிலும் சில தீமைகள் உள்ளன என்றாலும் நிகரமாக இவற்றால் பயனே மிகுதி. நான் எழுதுவதை நாடோறும் இருபதாயிரம் வாசகர்கள் படிக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் இணையவழிப்பட்ட என் தமிழ் கற்பிப்பில் பயன் பெற்றுள்ளார்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ?

6. இணையத்தில் பரவலாகப் பேசப்படும் இணையச்சமன் (நெட் நியூட்ராலிடி) விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதே…

இணையம் என்பது எல்லார்க்குமானது என்று இறும்பூது எய்தியிருக்கிறோம். இதன் பயனாளிகள் எல்லாச் சேவைகளையும் விட்டுவிட்டு இணையத்தில் குதிப்பதால் ஏற்பட்ட கலவரம்தான் இணையச் சமநிலைக்கு ஏற்பட்டுள்ள இடர். என்வினவி (வாட்சப்) போன்ற இணையச் செயலிகள் தமக்குள் பேசிக்கொள்ளும் வசதியையும் கொண்டுவந்திருக்கின்றன. ஏற்கெனவே குறுஞ்செய்தியில் பணம் பார்த்த தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் என்வினவி, முகநூல் போன்றவற்றின் வருகையால் வருமானத்தை இழந்தன. இத்தோடு பேசும் சேவை, காணொளித் தொடர்புச் சேவையையும் வழங்கினால் எண்களை அழைத்துத் தொலைபேசும் வழக்கமே இல்லாதொழியும் என்று அஞ்சுகின்றன. இணையத் தொடர்பின் வழி இந்த செயலிகளைப் பயன்படுத்தி இருதரப்பும் பேசவும் காணவும் செய்யலாம். அதனால் இவற்றுக்கு ஒரு வரையறையைக் கோருகின்றன. ஆனால், இணையத்தின் பலம் அதன் கட்டற்ற சுதந்திரமே என்பதால் இவற்றுக்கு எதிராக எதைச் செய்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். அறிவியலின் எல்லா சாத்தியங்களையும் ஏற்றுக்கொள்வதே தீர்வு.7. என்வினவி என்றதும் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எண்ணற்ற பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல்லாக்கங்கள் படைத்துத் தருகிறீர்கள். அந்த அனுபவம், மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டது பற்றியெல்லாம் சொல்லுங்கள்.

நாள்தோறும் கணக்கிலடங்காத பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுந்துகொண்டே இருக்கின்றன. அந்த வேகத்திற்கு ஈடாக, தமிழ்ச்சொல்லாக்கங்கள் நிகழவே இல்லை. இது இப்படியே போனால் நம் மொழியே அழிந்துவிடும் என்ற அச்சம் யார்க்குமே இல்லை. மொழியுணர்வுள்ள தமிழாசிரியர்கள் எல்லாம் சென்ற தலைமுறையோடு போய்விட்டார்கள். அவர்கள் முதுமையுற்றுச் செயலிழந்தனர். தமிழையே பிழையாய் எழுதுபவர்கள்தாம் தமிழ் கற்பிக்கிறார்கள். நிலைமை இப்படியே நீடிக்குமானால் மொழியைக் காக்கும் செயல் காலந்தாழ்ந்த ஒன்றாகிவிடும் என்று கருதியே நான் இறங்கினேன். இங்கே தமிழை எழுதுபவர்கள்கூட, ஒரு சொல்லைப் பார்த்தால் அதன் அர்த்தத்தையே மங்கலாய்த்தான் உணர்கிறார்கள். எனக்கு ஒரு சொல்லின் ஏழெட்டு அடுக்குகளும் தெளிவாய்த் தெரியும். அவ்வாறுதான் நான் தமிழ்கற்றேன். அதனால் என்னால் அர்த்தத்திற்கேற்ப எளியதாய், சிறியதாய், ஒரு சொல்லையோ சொற்றொடரையோ புதிது புதிதாய் உருவாக்க முடியும். அவ்வாறு ஆக்கிய அச்சொல் புதிது என்று பிறர் சொல்லித்தான் தெரியவந்தது. இந்தத் தமிழ்ப்புலமை தற்காலத்தில் சிறப்பு என்று தமிழறிந்த என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் இயன்றவரை தமிழ்ச்சொல்லாக்கங்களில் ஈடுபடத் தொடங்கினேன். நான் முகநூலுக்கு வந்தபோது எல்லாரும் அதை வதனப்புத்தகம் என்றார்கள். என்போன்றோர் மீண்டும் மீண்டும் எழுதித்தான் முகநூல் என்பதைப் பதியவைத்தோம். இன்று அந்நிறுவனமே முகநூல் என்று தன் தமிழ்ப்பதிப்பில் பதிக்கிறது. செல்பி என்பதைச் சுயமி என்றார்கள். சுயம் என்பது வடமொழிச்சொல் என்ற அறிவுகூட இல்லாமல் இங்கே தமிழ்ப்படுத்துகிறார்கள் பாருங்கள். நான் அதைத் தற்படம் என்றேன். அடுத்த நொடியில் அச்சொல்லை விக்கிபீடியாவில் சேர்த்தார்கள். கூலிங்கிளாஸ் என்பதைத் தண்ணாடி எனலாம் என்றேன். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம். குளிர்கண்ணாடியைத் தண்ணாடி எனலாம்தானே ? மறுநாள் தினமணியில் அச்சொல் குறித்து எழுதினார்களாம். இப்படி என் சொல்லாக்கங்கள் தொடர்கின்றன.

8. தமிழ்ப்பிழை நீக்கங்களில் ஈடுபடுகையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன ? கல்வி நிறுவனங்களில் வீற்றிருப்பவர்கள் என்ன சொன்னார்கள் ?

தமிழ்ப் பிழை நீக்கங்களில் ஈடுபட்டபோதுதான் இங்கே தமிழுக்கு எதிராய் யார் யாரெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே புரிந்தது. தமிழை எழுதுகின்ற ஊடகத்துறையினரிடமிருந்து பிரபல எழுத்தாளர்கள்வரை எல்லாரும் ‘பத்திக்குப் பத்து’ என்ற கணக்கில் பிழையிழைத்தே வந்திருக்கின்றனர். பன்மையில் எழுவாய் இருந்தால் ஒருமை வினைமுற்றில் முடிப்பார்கள். எங்கும் சந்திப் பிழைகள் மிகுந்திருக்கும். எங்கே வலிமிகும் எங்கே வலிமிகாது என்று யார்க்குமே உணர்த்தியில்லை. சரியாக எழுதுகிறேன் என்று எல்லாவிடத்திலும் வலிமிகுவித்துவிட முடியாது. பொருளே மாறிவிடும். முன்புபோல் பிழைதிருத்துநர்களும் அருகிப்போய்விட்ட காரணத்தால் தமிழை ஈவு இரக்கமில்லாமல் அடித்து வீழ்த்தியிருக்கின்றனர். காலில்லாதவர்கள் ஆடிய ஆட்டத்தைத்தான் இத்தனை நாளாகப் பார்த்துக்கொண்டிருந்தோமா என்று அதிர்ச்சியுற்றேன். ஐகாரத்தை அடுத்தும் ய் என்ற மெய்யெழுத்தை அடுத்தும் மகரச் சொல் வந்தால் ம் என்று மெலிமிகும். கைம்மாறு, தைம்மாதம், பொய்ம்முகம். வலிமிகுதலைப்போலவே இவ்வாறு மெலிமிகுதலும் உண்டு. இந்த விதி காற்றில் பறக்கிறது. ஊறுகாய், சுடுகாடு மட்டுமில்லை, எரிமலை, வெடிகுண்டு, குடிநீர் இவையும் வினைத்தொகைதான் என்று சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்டு எழுதிய பேராசிரியர் ஒருவர் வினைத்தொகைக்கு உதாரணங்களாக அவற்றை எழுதினால் மதிப்பெண் போடமாட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இப்படித்தான் இருக்கிறது தமிழ்க்கல்விச்சூழலில் நிலைமை.

9. நீங்கள் எழுதும் கவிதைகளுக்கு இணையத்தில் மிகப்பெரிய வாசகர் வட்டம் இருக்கிறது. தினமும் ஓரிரண்டு கவிதைகளையேனும் பதிகிறீர்கள். தொடர்ச்சியாய்க் கவிதை எழுதுவது எவ்வாறு முடிகிறது ?

இங்கே நம் உற்சாகத்தைத் தீர்மானிப்பது நமக்கு வாய்த்துள்ள களம்தான். நான் கவிதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்றிருந்தவன். உரைநடைக்குச் செல்பவர்கள் வழிநடையில் இளைப்பாறக் கிடைத்த காட்டுமர நிழல் என்று கருதித்தான் கவிதையின்கீழ்த் தங்கினர். அதனால் விரைவில் அவர்கள் கவிதையைக் கைவிட்டனர். உரைநடையில் எழுதுவதால் பணமும் கொஞ்சம் கூடுதல் கவனிப்பும் கிடைக்கும்தான். ஆனால், தோன்றுகின்றவர்கள் எல்லாம் புனைகதைக்குச் சென்றுவிட்டால் மொழிக்குக் கவிதை வளத்தை யார் ஊட்டுவர் ? கவிதையூற்றம் இல்லாத தொன்மொழியாகலாமா நம்மொழி ? அங்கே புதிதாய்க் கவிதை எழுத முனைவோர் மட்டுமே மிஞ்சி நிற்பர். கவிதையியலின் எல்லா மதகுகளையும் திறந்துவைத்திருந்தால்தான் மொழி வளரும். கவிதைத் தோய்வுதான் மொழிக்குள் நம்மை ஈர்க்கும். அதனால்தான் நான் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறேன். உரைநடையில் அறிவுத்துறை நூல்களையும் மொழிநூல்களையும் எழுதுவேன்.

10. மொழி இலக்கணம் கற்பிப்பது என்பது யாருமே முன்வராத செயல். அதில் எப்படி இறங்கினீர்கள் ?

இயற்கையை ஆராய்ந்து அதன் இயல்புகளை எழுதிவைத்ததுதான் இயற்பியல் என்னும் அறிவியல். அதுபோல் உயிர்ப்பொருள்களைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட அறிவுத்தொகுப்புதான் உயிரியல், இல்லையா ? அவ்வாறே ஒரு மொழியின் இயற்கையை நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்ட அம்மொழியின் அறிவியல்தான் இலக்கணம். நாம் இலக்கணத்தை விதிகளின் தொகுப்பாகப் பார்க்கிறோம். இல்லவே இல்லை. நம் மொழியின் இயல்புகளைப்பற்றிய தொகுப்புதான் இலக்கணம். கடந்த முப்பதாண்டுகளாக நவீன இலக்கியம் என்ற போர்வையில் கைவிடப்பட்டவற்றுள் முக்கியமானது தமிழ் இலக்கணம். இலக்கணத்தைக் காக்காமல், அதைப்பற்றிய அறிவை ஊட்டாமல் மொழி வளர்ப்பதோ மொழியைக் காப்பதோ இயலாமற் போகும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லைக்கூடத் தவறாக எழுதாத தமிழர்கள் தமிழை ஏனோதானோவென்று எழுதுகின்றனர். இங்கே இலக்கணத்தை வலியுறுத்த ஒருவருமில்லை. அந்த உணர்ச்சியே இல்லை. எத்துணை ஆண்டு காலத் தொன்மையுடையது தமிழ். அதன் இலக்கணம்தானே அதை வேலியிட்டுக் காத்தது. அது குறித்து நம் சூழலில் ஓயாது உரையாட வேண்டும்தானே நாம் ? ஆனால், டீக்கடை இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் ஜோதிட அறிவு பரவிய அளவுக்குக்கூட இங்கே இலக்கண அறிவு பரவவில்லை. அதனால்தான் நான் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இலக்கணம் கற்பிப்பதையும் இலக்கணம் குறித்த உரையாடலைத் தோற்றுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டேன். மக்கள் நன்கு இலக்கணம் கற்பிப்பவரைத் தோள்மீதமர்த்திக் கொண்டாடுகிறார்கள். அதை நான் உணர்ந்தேன்.

நன்றி:
புத்தகம் பேசுது - பிப்ரவரி 2016.

Wednesday, March 16, 2016

சங்க காலங்கள் மூன்றையும் அறிவோம்தமிழைப்பற்றிய பெருமைப் பேச்சு எங்கே தொடங்கினாலும் சங்கத் தமிழ், சங்க காலம் என்று சொல்லப்படுவது தவறாது. அது என்ன சங்கத் தமிழ் ? சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட, சங்கத்தில் அங்கம் வகித்த பெரும்புலவர்களால் வளப்படுத்தப்பட்ட உயர்தனிச் செம்மொழி என்பதால் அப்பெயர்.
அத்தகைய சங்கங்கள் நிறுவி, தமிழ் வளர்க்கப்பட்ட முற்காலமே சங்ககாலம். சங்கம் என்பதற்கு ஒத்த நிறையுடைவர்கள், தகுதியுடையவர்கள், எண்ணமுடையவர்கள் ஒன்றுகூடுமிடம் என்பது பொருள்.
தமிழ்ச்சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்த காலம் சங்க காலம். சங்ககாலம், தமிழ்ச்சங்கங்கள் குறித்து நாம் அறிமுக அளவிலேனும் தெரிந்து வைத்துக்கொள்வோம். தமிழறிஞர்கள் பலர் இதுகுறித்து எளிமையாய் விளக்கியிருக்கிறார்கள். எல்லாரும் சங்கம் குறித்துப் பேசுகிறார்கள். நாமும் அவ்வாறே பேசிப் பழகியிருக்கிறோம். இப்போதேனும் தமிழ்ச்சங்கங்கள், சங்ககாலங்கள் குறித்துச் சிலவற்றை அறிந்துகொள்வோமே.


ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறோம். பொதிகை மலையில் அகத்தியர் என்ற முனிவர் மாத்தமிழுக்கு முதன்மை முனியாய் வீற்றிருக்கிறார். அவருடைய தலைமையில் தமிழ்ப்புலவர் குழு ஒன்று, இயற்றுவதும் இசைப்பதுமாய் தமிழ்வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறது.
அந்தப் பொதிகை மலைக்கும் தெற்கே குமரிக்கண்டத்தில் நாற்பத்தொன்பது நாடுகள் சூழ தமிழ்நாடு பரவியிருந்தது. அந்த நாற்பத்தொன்பது நாடுகள் என்னென்னவென்றால் - தெங்க நாடுகள் ஏழு, மதுரை நாடுகள் ஏழு, முன்பாலை நாடுகள் ஏழு, பின்பாலை நாடுகள் ஏழு, குன்ற நாடுகள் ஏழு, குணகாரை நாடுகள் ஏழு, குறும்பாணை நாடுகள் ஏழு. மொத்தம் நாற்பத்தொன்பது.
அங்கே குமரி ஆறு, பஃறுளி ஆறு போன்றவை பெருக்கெடுத்து ஓடின. குமரி மலை என்ற மலையும் இருந்ததாம். இப்போதுள்ள குமரிக்கும் தெற்கே பன்னெடுந்தூரம் அந்நிலப்பரப்பு பரந்திருந்தது.
அங்கே இருந்த பாண்டிய நாட்டுத் தலைநகரம்தான் மதுரை. இப்போதுள்ள மதுரை நகரம் பிற்காலத்தில் தோன்றியது. குமரிக்கண்ட மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகத்திய முனிவரை நாடித் தம் தலைநகரில் தமிழுக்கு ஒரு சங்கம் நிறுவித் தமிழ்வளர்த்துத் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். காய்சினவழுதி என்பது அப்பாண்டிய மன்னனின் பெயராய் இருத்தல் வேண்டும். ஏனெனில் தலைச்சங்கத்தைப் பாதுகாத்து வளர்த்த பாண்டிய மன்னர்கள் எண்பத்தொன்பது பேர். அவர்களில் காய்சினவழுதி முதலாமவன். கடுங்கோன் என்பவன் கடைசி மன்னன்.
பாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப தென்மதுரையில் தலைச்சங்கம் நிறுவப்பட்டு நம்மொழியின் முதன்மைத் தலைமையகமாகச் செயல்படத் தொடங்கியது. அக்காலத்தில்தான் அகத்தியம் என்ற இலக்கண நூலை அகத்தியர் எழுதினார். இயல், இசை, நாடகம் என்று தமிழை மூவகையாகப் பிரித்து ஆக்கங்கள் செய்தனர். ஒருவர் புலவராய் எழுதியவற்றை இச்சங்கம் சீர்தூக்கி ஆராயும். அரங்கேற்றும். குற்றங்குறையுள்ளவற்றைச் செம்மைப்படுத்தும். சங்கம் ஏற்றுக்கொண்டால் அவர் தமிழ்வல்லார் ஆவார்.


அகத்தியர் தொடங்கி திரிபுரம் எரித்த முடிசடைக்கடவுள், குன்றம் எறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் என 549 பெருந்தமிழ்ப்புலவர்கள் தலைச்சங்க பீடத்தில் அமர்ந்து அணிசெய்திருக்கின்றனர். 4449 புலவர்கள் தலைச்சங்கத்தில் வந்து பாடியவர்கள். 89 பாண்டிய மன்னர்கள் அதைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். அது நிலவிய காலம் 4440 ஆண்டுகள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். தலைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘இறையனார் அகப்பொருள்.’ அதற்கு எழுதப்பட்ட உரைநூலொன்றின் பகுதி நம்மிடம் கிட்டியிருக்கிறது. இச்செய்திகள் அதில் காணக்கிடைக்கின்றன.
குமரிக்கண்டத்தில் தென்மதுரை கண்ட தலைச்சங்கத்தைப் பற்றிப் பார்த்தோம். பாண்டிய மன்னனுக்குத் தன் தலைநகரம் கடலொட்டிய துறைநகரமாய் இருந்தால் நல்லது என்று தோன்றியிருக்கிறது. சோழன் புகாரிலும் சேரன் வஞ்சியிலும் கடல்பார்த்து இருக்கும்போது, தானும் அதுபோல் இருக்கவேண்டும் என்ற விருப்பம் பாண்டிய மன்னனுக்கு. அதனால் தாமிரவருணியை அடுத்திருந்த துறைமுக நகரான கபாடபுரத்திற்குத் தலைநகரை மாற்றிக்கொண்டானாம்.
தலைநகர் மாற்றத்தால் தமிழ்ச்சங்கமும் கபாடபுரத்திற்கு மாறியது. கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் இடைச்சங்கம் எனப்பட்டது. இடைச்சங்க காலம் 3700 ஆண்டுகள் நீடித்ததாம். இந்தக் கால வரம்புகளை நாம் ஆய்வுக்குட்படுத்தலாம் என்றாலும் பன்னெடுங்காலம் நீடித்தது என்று கொள்வதில் தயக்கம் வேண்டியதில்லை.


இடைச்சங்கத்திலும் அகத்தியமே தமிழுக்கு முதல் நூல். அகத்தியரின் முதன்மை மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர். அகத்தியத்தையொட்டி அவர் எழுதிய இலக்கண நூல்தான் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம் ஆகிய இலக்கண நூல்களும் இந்தக் காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றில் தொல்காப்பியம் மட்டும் நம்காலம்வரை காப்பாற்றப்பட்டுக் கையில் கிடைக்கிறது.
வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியன்தான் இடைச்சங்க காலத்தின் முதல் மன்னன். மொத்தம் 59 பாண்டிய மன்னர்கள் இடைச்சங்கத்தைக் காத்தவர்கள். இவர்களில் ஐம்பது பாண்டிய மன்னர்கள் சங்கப் புலவர்களாகவும் விளங்கினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சங்கப் புலவர்களாக ஐம்பத்தொன்பது பேர் இருந்திருக்கிறார்கள். 3700 புலவர்கள் இடைச்சங்கத்தில் தோன்றிப் பாடியிருக்கிறார்கள்.
தலைச்சங்கத்தில் 4440 புலவர்கள், இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் என்னும்போது ஆளுக்கொரு நூல் என்றாலும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்நெடுங்காலமும் பெருநூல்களில் பயின்றதால்தான் தமிழ் இந்த அளவுக்குச் செம்மையும் சிறப்பும் பெற்று வளர்ந்திருக்கிறது.அந்நூல்கள் எல்லாம் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆழிப்பேரலையையும் கடல்கோளையும் கூரைமூடும் வெள்ளத்தையும் நாம் கண்கூடாகக் கண்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் இச்செய்திகளில் எள்ளளவும் உண்மைக்கு மாறாக இல்லை என்று நம்பலாம்.
முடத்திருமாறன் என்ற பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கடல்கோள் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு குமரிக்கண்டம் தாழ்ந்தது. ஆழிப்பேரலைகள் மேவின. தென்மதுரையும் கபாடபுரமும் நீலத்தண்ணீரில் மூழ்கின. காப்பாற்ற முடிந்த தமிழ்ச்சுவடிகளோடு உயிர்தப்பிப் பிழைத்து உள்நாட்டுக்குள் வந்தான் பாண்டிய மன்னன்.
கடல்கோள் ஆபத்தை உணர்ந்ததால் தன் தலைநகரை நாட்டின் நடுவில் தோற்றுவிக்க எண்ணினான் பாண்டியன். அவ்வாறு தோன்றிய நகரம்தான் தற்போதைய மதுரை. கபாடபுரத்து அழிவோடு இடைச்சங்க காலம் முடிந்தது.
மதுரை நகரை நிர்மாணித்தவுடன் முடத்திருமாறப் பாண்டியன் செய்த முதல் வேலை கபாடபுரத்தில் இருந்தது போன்ற ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவியதுதான். இந்தச் சங்கமே கடைச்சங்கம் எனப்பட்டது. மூன்று சங்கங்களில் இறுதிச் சங்கம் இது என்ற பொருளில்.


கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் அணிசெய்தனர். சிறுமேதாவியார் சேந்தம்பூதனார் தொட்டு நாமறிந்த நெற்றிக்கண் நக்கீரர்வரை அப்புலவர்களின் பட்டியல் இருக்கிறது. கடைச்சங்கத்தில் தம் பாடல்களை அரங்கேற்றிய புலவர்களின் எண்ணிக்கை 449. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப்பெருவழுதி வரை நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலம் முடிய சங்கம் இருந்தது. நாற்பத்தொன்பது பாண்டியர்களில் மூவர் சங்கப் புலவர்களாயும் இருந்துள்ளனர். சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கம் நிலவியதாகக் கூறுகிறார்கள்.
கடைச்சங்க காலத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. அவற்றில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய முப்பத்தாறு நூல்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழ் தன்னுடைய முழு வளர்ச்சியை எட்டிப் பாரெங்கும் பரவும் பான்மை எய்திச் சிறந்தது என்றே கூறவேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்

Sunday, December 14, 2014

சிதையா நெஞ்சுகொள் !

எங்கு திரும்பினும்
உன் நெஞ்சத்தைச் சிதைக்கும்
சித்திரங்களைக் காண்பாய் !
அதிகாலை எழுந்ததிலிருந்து
விழிமூடி உறங்கும்வரை…

உன் உறக்கத்தைச் சேவல் கூவி
கலைக்காது
கொசுகடித்துக் கலைக்கும்.

அந்த வைகறை
கடந்த நாளின் புகையும் தூசும்
படிவதற்காக வாய்த்த பொழுது.

எழுந்து
குழாய் திருகி வாய்கொப்பளிக்கும் நீர்
உன் காலத்தின் கடைசிச்சொட்டாகவும் இருக்கலாம்.நீ பிதுக்கும்
ஒவ்வொரு பற்பசைத்துளிக்கும்
பத்துப் பைசா
அயல்நாட்டு முதலாளிக்கு
இலாபமாய்ப் போகிறது.

காலைக்கடனை
முழுமையாய்த் தீர்க்க முடியாதபடி
கவலைச் சிந்தனைகள் உன்னைச் சூழும்.
அரைகுறையாய்த்தான் அது நிகழும். 

கொஞ்சம் நடைபயிற்சி செய்ய
வீதியேகுவாய்.
தளர்ந்த மூதாட்டிபோல்
இந்த நகரம் அயர்ந்திருக்கும்.

ஓரிரவுக்குள்
சுவரொட்டி முளைக்கும் சுவர்கள்
நம்நாட்டிலன்றி வேறெங்கும் இல்லை.

நடைமேடையில் துயில்வோர்
உன் காலத்திலும்
குறையாமல் இருப்பதைக் காண்பாய்.

உன்னை அறிந்திருந்தால்
நாய்கள் குரைக்காமல் பார்க்கும்.
நீ புதிதென்றால்
அந்தப் பாதை நாய்க்குச் சொந்தம்.
சிலது குரைக்கும்.
சிலது குரைக்காமல் வந்து கடிக்கும். 

பாதி நடையோடு
வீடு திரும்புவாய்.
அண்மையில் விலையேறிய
பால் வந்திருக்கும்.
தேநீர்போல் ஒன்று தரப்படும்.
திருப்தியாய்க் குடித்துக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், அந்த அதிகாலையை
அதிருப்தியோடு தொடங்க
நீ விரும்பமாட்டாய்.

செய்தித்தாள் வந்திருக்கும்.
விளம்பரங்களுக்கு மத்தியில்
நீதான் செய்திகளைக்
கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாச் செய்தித்தாளும் ஒன்றுதான்.
நான் தினந்தோறும் செய்தித்தாள் வாங்குவதை
விட்டுவிட்டேன்.
மாதத்தில் முதல்நாள்மட்டும்
வாங்குவேன்.
அடுத்தநாள்
தேதியை மட்டும் மாற்றிப்போட்டு
அதையே படித்துக்கொள்கிறேன்.
இன்றுவரை
தினப்படி செய்திகளில்
பெரிதாய் ஒன்றும் வேறுபாடில்லை.

செய்திகளை ஊன்றிப்படித்தால்
சித்தபிரமை பிடித்துவிடும்.
அதனால்தான் நாமெல்லாரும்
மேலோட்டமாகச் செய்தித்தாள் படிக்கிறோம்.

குளித்துக் கிளம்புகிறாய்.
பிள்ளைகளும் பள்ளிக்குக் கிளம்புகின்றன.
இரத்த அழுத்தம் வந்ததற்கு
என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்.
உண்மையான காரணம் ஒன்றுண்டு :
பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பும் முயற்சியில்
பெற்றோர்களுக்கு வந்த நோய் அது.மனைவி ஒரு பாட்டைப் பாடுகிறார்.
அது தற்காலத் திரைப்பாடல்போல.
பிடிக்காவிட்டாலும்
கேட்டுத் தொலைக்கவேண்டும்.
தலையை ஆட்டவேண்டும்.

எரிபொருள் குடிப்பதற்கென்றே
ஓர் ஈருருளி வைத்திருக்கிறாய்.
அதில் அலுவலகம் கிளம்புகிறாய்.

நீ உனக்காகப் பணியாற்றுகிறாயா
ஊருக்காகப் பணியாற்றுகிறாயா
என்பதே புரியாத ஓர் உத்தியோகம் அல்லது தொழில்.
அந்தத் தெளிவின்றி நகர்பவை
உன் நாள்கள்.

வருமானம் போதுமா,
மேலும் மேலும் புதுக்கடன்களா,
இறுதிக் காலத்திற்கு ஏதேனும்
உறுதி செய்துகொண்டாயா,
குழப்பத்தில் ஆழ்கிறாய்.

ஆறிய சோற்றை
மதியம் உண்கிறாய்.
அதிலொரு மிளகாய்த் துணுக்கைக்
கடித்துவிடுகிறாய்.
உன் தயிர்சோற்றை
அந்தக் காரம் ருசியாக்கிவிடுகிறது.
இப்படிச் சிறு சிறு எதிர்பாராச் சுவைகளால்தான்
நீ உயிர்ப்போடிருக்கிறாய்.

பின்மதியத்தில்
சுழித்தோடும் ஆறுகூடத் தேங்கி ஓடும்.
அரைமயக்க விழிகளோடு
வேலை பார்க்கிறாய்.

வீட்டுக்கு வருகிறாய்.
மற்றொரு தேநீர் கிடைக்கிறது.
மனையாளின் மஞ்சள் முகம்
களையாகத்தான் இருக்கிறது.
உன் இவ்வெண்ணம்
அந்தி வந்ததால் வந்ததில்லை என்று
நாங்கள் நம்புகிறோம்.

பிள்ளைகள்
பள்ளிக் கதைகள் சொல்கிறார்கள்.
நமக்குப் பிறந்த பிள்ளை
நம்போலில்லாமல்
என்னமாய்ப் பேசுகிறது என்று
வியப்புடன் பார்க்கிறாய்.

தொலைக்காட்சி காண்கிறாய்.
குடும்பத் தொடர்களில்
கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்
எல்லாரும் தோன்றுகிறார்கள்.
இவை குடும்பம்தானா
இல்லை குஸ்திக்கூடமா என்று
உனக்கே குழப்பமாக இருக்கிறது.

விவாத நிகழ்ச்சி பார்க்கிறாய்.
நமக்கென்று வாய்த்த அறிவுஜீவிகள்
வரிசையாக அமர்ந்து
உளறு உளறு என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைவிட்டால்
நானே நல்லாப் பேசுவேன்’ என்று நினைத்து அமர்த்துகிறாய்.

இரண்டு தோசைகளைப் பிய்த்துத் தின்கிறாய்.
அடுத்த மாதக் கூடுதல் செலவுகளுக்கு
என்ன செய்வது என்று யோசிக்கிறாய்.
உறங்கிப்போகிறாய்.

இதுதான் நீ.
உன்போல் இங்கே ஓராயிரம்.
எளிமையான நிரல்படி
வாழ்கின்ற பொதுஜனம்.
உன் நெஞ்சத்தில் என்னவுண்டு
யாரும் அறியமாட்டார்.
உன் சின்னஞ்சிறு விருப்பங்கள் என்னென்ன
எவர்க்கும் அக்கறையில்லை.
உனக்கே உன்னைத் தெரியுமா ?
தெரியாது என்றுதான் சொல்கிறாய்.

ஒரு தினம்
உனக்குப் பரிசுப்பொருள்போல்
தரப்படுகிறது.
அதைக் குரங்குபோல்
ஏன் நீ பிய்த்துப்போடுகிறாய் ?
அதன் ஒவ்வொரு நிமிடத்தையும்
ஆக்கபூர்வமானதாக்கு.
ஆக்கம் மறவா நெஞ்சுகொள் !

நடையில் வேகங்கூட்டு.
இந்தச் சோம்பலை நீக்கிச் சுழன்றுதிரி.
நகரும் திறன்
உள்ளவரைதான் நாம்
நலம்வாழ்கிறோம்.
காலில்லாத ஊர்வனவற்றிடம்
இடப்பெயர்வின் அருமை கேள்.
உடலைத் தேய்த்து தேய்த்து
இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் அவற்றோடு ஒப்பிட்டால்
நீள்கால்களால் நிலமளக்கும் நீ
எத்துணை கொடுப்பனையாளன் ?
ஊக்கம் மறவா நெஞ்சுகொள் !

உறவுகள் என்பவை
உன்னைச் சார்ந்திருப்பவை.
நீ அடிமரம்.
கிளைகளும் பூக்களுமான உன் உறவுகள்
உன்னால் செழிக்கின்றன.
அவை இன்பச்சுமை.
மகிழ்வோடு தாங்கிக்கொள்.
தியாகம் மறவா நெஞ்சுகொள் !  

பற்றாக்குறை எங்கோ இருக்கிறது எனில்
உன் ஆசைகளை ஆராய்ச்சி செய்.
உன் நுகர்வுகளைச் சரிபார்.
எல்லாம் சரியாய் இருந்தும்
பற்றாக்குறை என்றால்
உன் வரத்துகளைப் பெருக்கு.
இந்த உலகம்
உலுக்க உலுக்க எல்லாம் தரும்.
ஒன்றும் செய்யாதவனுக்கு
நிழல்மட்டுமே கிடைக்கும்.
வினையால் அணையும் நெஞ்சுகொள் !

உனக்கு உயிர் தந்தது.
நீர் தந்தது.
கனி தந்தது.
வாழ்க்கை தந்தது.
இந்த உலகுக்கு
நீ தரவேண்டிய கடமையும் உண்டு.
அதற்காகவேனும் சிதையா நெஞ்சுகொள் !குறிப்பு : கடந்த டிசம்பர் 13, 2014 கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் பாரதி பாசறை நடத்திய ‘பாரதி திருவிழா - 2014’இல் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் பங்கேற்று வாசித்த கவிதை இது

.

Monday, December 8, 2014

கடன் என்ப...

உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு)
உப்பாதல் சான்றோர் கடன்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு.


அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள்.
நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை.
இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள்.
நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன்.என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள்.
அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ?
ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள்.
ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் !
இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன்.
வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள பொருளைக்கொண்டு செய்கின்ற வினை. 

பின்குறிப்புகள் : 

1. 
இரண்டு இலட்சத்துக்கு வாங்கியது இருபது ஆகலாம். நாற்பதுகூட ஆகலாம். பத்துக்கோடி ஆகியிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஆகும் என்றால் அம்பானி எண்ணெய் சுத்திகரிக்க மாட்டார். அம்பத்தூரில் வாங்கிப் போடுவார்.  கொங்கு பகுதிகளில் மின்வெட்டால் எல்லாச் சொத்துகளும் விலையிறங்கின. 2000-இல் வாங்கிய இடம் ஒன்றை இன்றும் விற்கமுடியாத நிலையுள்ளது.

2. 1991 முதல் 2010 வரை ஏறிய விலையேற்றத்தின் மனப்பதிவுகளை மக்களிடமிருந்து அகற்றுவது பெரும்பணியாகத்தான் இருக்கும்போலுள்ளது. அந்த விலையேற்றம் மதிப்பேற்றம் இல்லை என்பதையும் பதிவில் விளக்கியுள்ளேன். எல்லார் உள்ளத்தையும் அரம்போன்று அறுத்துக்கொண்டிருப்பது நிலத்தின் விலையேற்றம். அந்த நிலத்தை சென்ட் முந்நூறு ரூபாய்க்கு விற்றுச் சென்ற குடும்பமும் அதை ஏதோ ஒரு கடனுக்காகத்தான் விற்றிருக்கும். அக்குடும்பத்தினர் நிலையை நினைத்துப் பார்க்கலாம். அவர்களும் இன்றும் அருகிலேயேதான் இருப்பர். ஆனால், அப்படியெல்லாம் சிந்திக்கமாட்டோம். நம் அக்கறைகளை வேறாக மாற்றிவிட்டார்கள். அடிபட்டுத் துள்ளத் துடிக்கச் சாகக் கிடப்பவனைப் பார்த்தும் பாராததுபோல் போகும்படி ஆக்கியவை நம் பொருளாதாரப் போக்குகள். கடன் அடைக்க வேண்டும். சம்பாதித்து நிலம் வாங்கிப் போடவேண்டும். உண்மையில் நாம் அத்தகைய கொடூர நெஞ்சத்தினர் அல்லர். ஆனால் நம்மையே அப்படி ஆக்கிவிட்டார்கள்.