Monday, September 27, 2010

காந்தி அண்ணல் - பகுதி 4

தொலைதூர நாட்டிலிரு பத்தி ரண்டு

சுளையான வருடங்கள் கழித்து மீண்டார்;

கலையழகு மக்களவர் நால்வர் பெற்றார்;

கடந்தபத்து வருடங்கள் பிரம்மச் சர்ய

நிலைகாத்து வருகின்றார்; இறக்கும் மட்டும்

நேர்பிறழ வில்லையெனில் உறுதி காண்க !

தலைநோற்ற தவவாழ்வு எளிய குச்சு

தவசிக்கு உடைமையென்று வேறு ஏது ?


இமயமலை அடிவாரம் பீகார்ப் பகுதி

இருந்தவொரு மாவட்டம் சம்பா ரண்ணில்

சமமில்லாக் குத்தகைக்கு நிலத்தைப் பெற்றுச்

சாயந்தரு அவுரியினைச் செய்தார் மக்கள்;

சுமையாகப் போனதந்த நிலத்தின் வாரம்;

சொல்லொண்ணாத் துயருற்றார் விவசா யத்தார்;

தமைமீட்க வேண்டுமென்ற வேண்டு கோளால்

தாமாக அங்கேகி நின்றார் அண்ணல் !


திரண்டபெருங் கூட்டத்தால் அரசு வண்டி

திணறிற்று; காந்தியாரைத் திரும்பச் சொல்லும்;

மிரளாமல் மறுத்திட்டார்; கைதும் ஆனார்;

விசாரணைக்குப் பெருங்கூட்டம் அங்கே கூட

அரசுக்கு வழியேதும் தோன்ற வில்லை !

அவருக்கு விடுதலையைத் தந்து நிற்க

பரபரத்து வந்தபணி செய்தார் காந்தி;

பலருக்கும் தந்திவழி நிலைமை சொன்னார் !


குத்தகைக்கு ஈடாகப் பணத்தைப் பெற்றுக்

கும்மாளம் இட்டுவந்த ஆங்கி லேயர்

மொத்தமாகத் தலைகவிழ்ந்து செல்லும் வண்ணம்

முத்தான ஆணையத்தை அரசு செய்யச்

சத்தான சாட்சியங்கள் எதிராய்க் கூறச்

சந்தடியில் லாமலவர் ஊர்போய்ச் சேர்ந்தார்;

அத்தரையில் இருந்தநிலம் அத்த னைக்கும்

அம்மக்கள் உரிமைபெற்று உயிரைப் பெற்றார் !


சம்பாரண் வென்றிட்ட சாந்த மூர்த்தி

சகமெங்கும் புகழொளியால் மூழ்க லானார்;

எம்பாரம் தீர்க்கவந்த எம்மான் காந்தி

எனக்கண்டார் மக்களெல்லாம் வாழ்த்தலானார்;

அம்பாறாத் தூணியில்லை; ஆட்சி இல்லை;

அழகொழுகும் தோற்றமில்லை; வசியம் இல்லை;

தெம்பான செல்வமில்லை; இருந்தும் காந்தி

செய்முறையால் தேசத்தின் இதயம் வென்றார் !



கடையடைப்பால் போர்புரியும் உத்தி தன்னைக்

கண்டிருந்தார்; நாடெங்கும் மக்கள் ஒன்றாய்க்

கடையடைப்பு நடத்தென்று அண்ணல் கூறக்

கடையடைப்பால் ஊர்த்தெருக்கள் வெறிச்சோ டிற்று;

படைநடத்திச் செல்லாமல் பண்புள் ளோர்கள்

பகல்வாழ்க்கை துறக்கின்ற யுத்தம் அஃது !

நடைபோடாக் காரணத்தால் நாடே தேங்கும்

நடந்துவரும் உற்பத்தி முடங்கும் மூழ்கும் !

பஞ்சாப்பில் ‘ஜாலியன்வா லாபாக் கென்னும்

பாழடைந்த சுவர்சூழ்ந்த மைதா னத்தில்

நெஞ்சுரத்தார் ஒன்றாகக் கூடி நின்று

நிலைமைக்கு விளக்கங்கள் ஆற்றிச் சொல்ல

வஞ்சகத்துப் படையோடு டையர் என்பான்

வக்கிரத்தால் வெளியேறும் வழியில் நின்று

செஞ்சினத்தால் கூட்டத்தைச் சுட்டுக் கொன்றான் !

செத்தவர்கள் எண்ணற்றோர்; பிழைத்தோர் சொற்பம் !



ஆறாக ஓடிற்று மனித ரத்தம்

ஆண்பெண்டிர் பசுங்குழந்தை முதியோர் ரத்தம் !

தீராத வெறிகொண்டார் தேச பக்தர்

திண்மையுடன் போராட சித்தம் கொண்டார் !

வேரோடி விட்டதடா சுதேசி வேட்கை

வேங்கைக்கு வெறியூட்டி விட்டாய் தீர்ந்தாய் !

நீறாகப் பூத்திருந்த நெருப்புக் குள்ளே

நெய்யூற்றி விட்டதுன்றன் கொடுமைக் கோன்மை !


ஒத்துழைப்பு நல்காத இயக்கம் ஒன்றை

ஒருவாறு வடித்திட்டார் காந்தி அண்ணல் !

எத்துறையும் அரசுக்குள் இயங்கா வண்ணம்

எல்லாரும் வெளியேறி விடுவார்; சர்க்கார்

சத்தற்று இயங்குநிலை சிறிதும் அற்றுச்

சாவதன்றிப் பிறிதெந்த வழியும் இல்லை;

புத்துயிர்ப்பு தருகின்ற இயக்கம் தோன்ற

புதுக்கனலால் தேசமெங்கும் ஒன்றாய் நிற்கும் !


புறக்கணித்தார் பள்ளிகளை மாணாக் கர்கள் !

புறக்கணித்தார் ஆலைகளைத் தொழிலா ளர்கள் !

புறக்கணித்தார் நீதிமன்றம் வக்கீல் எல்லாம் !

புறக்கணித்தார் அரசுவிற்கும் பொருளை எல்லாம் !

மறக்கடித்துச் சனத்திரளைச் சுரண்டி வந்த

மகத்தான அரசாங்கம் தள்ளா டிற்று !

அறப்போரின் பெருவலிமை தேசம் கண்டு

அகங்குளிர்ந்து முகம்மலர்ந்து நின்ற காலம் !


--------தொடரும்-------

Thursday, September 23, 2010

காந்தி அண்ணல் - பகுதி 3

வருங்கால பாரதத்தின் தலைமைத் தந்தை

வருத்தமுடன் அன்றிருந்தார் இரண்டு ஆண்டு !

அரும்பான இருமகவு பிறந்து விட்டார்

அவர்காக்கும் கடமைதமக் கிருக்கக் கண்டார் !

ஒருவழக்கு வரப்பெற்று மன்றம் சென்றார்

ஒருசொல்லும் பேசாமல் மலைத்து நின்றார் !

பெருந்தேசம் காக்கவந்த பெருமான் அன்று

பேதைபோல் மருட்சியொடு மருக லானார் !


தெற்கிலுள்ள ஆப்பிரிக்கப் பகுதி தன்னில்

அப்துல்லா எனும்செல்வர் வணிகம் செய்தார் ;

சிற்சிலவாம் அவர்வழக்கை ஏற்றுச் செய்யச்

சிறந்தவழக் கறிஞரெனக் காந்தி சென்றார் ;

கற்கால வழக்கங்கள் எல்லாம் அங்கே

கடுகேனும் பிசகாமல் வழங்கக் கண்டார் !

தற்காலம் செல்கின்ற திசையில் லாமல்

தறிகெட்ட வேற்றுமைகள் நிலவக் கண்டார் !



தொடர்வண்டி முதல்வகுப்புச் சீட்டு பெற்றுத்

தொலைதூரப் பயணமொன்று செய்தார் காந்தி ;

இடரொன்று மாரிட்ஸ்பர்க் நகரில் தோன்றும் !

‘‘இவ்வகுப்பு வெள்ளையரின் வகுப்பு; நீயோ

தொடவொண்ணாக் கருநிறத்தோன் வெளியே’’ றென்று

தொடுத்திட்ட கொடுஞ்சொல்லை மறுத்தார் காந்தி !

மடமைசெய் அலுவலனின் கருத்தை மாற்ற

முதல்வகுப்பில் தாமெடுத்த சீட்டைத் தந்தார் !



‘அதுபற்றிப் பொருட்டில்லைஎன்று கூற

அவ்வாறு வெளியேற மறுத்தார் காந்தி !

பதைபதைக்கக் காந்தியவர் பிடரி பற்றிப்

பண்பாடு ஏதுமற்ற வெள்ளைக் காரன்

உதைக்காத குறையாக வெளியே தள்ளி

உடைமைகளை எடுத்தெறிந்து விட்டான் ! ஐயோ !

புதுப்பனியில் குளிர்இரவில் அந்நாள் முற்றும்

புயல்மனதில் சுழன்றடிக்க நின்றார் அங்கே !



நிறவெறியில் அந்நாடு நிதமும் வேகும்;

நிறங்கறுத்தோர் விலங்கினைப்போல் வாழச் செய்தார்;

நிறம்பழுத்த இந்தியரும் அங்கே சென்று

நெல்விளைத்தார்; சிறுவணிகம் பலவும் செய்தார்;

அறங்காக்கும் அரசென்று உலகத் தோற்றம்;

அதன்குடிகள் புழுப்போலும் வாழ்வார் நித்தம்;

புறமக்கள் எல்லாரும் மிடிமை ஏற்றுப்

போக்குவழி அறியாமல் பொய்யாய் வாழ்ந்தார் !



ஒப்பந்தம் முடிந்தவுடன் ஒவ்வோர் ஆண்டும்

உறுதியொடு வரியொன்றைச் செலுத்த வேண்டும்;

ஒப்பரிய கிறித்தவத்து விவாகம் அன்றி

ஒருமணமும் செல்லாது; மேலும் மக்கள்

தப்பாதுத் தம்விரலின் இரேகை தீற்றிச்

சான்றுக்கு ஒருசீட்டு பெறுதல் வேண்டும்;

எப்போதும் அதைக்கையில் கொள்ளல் வேண்டும்;

எங்கும்போய்க் காவலர்கள் சோதிப் பார்கள் !


பிறமதத்துத் திருமணங்கள் செல்லா தென்றால்

பிறமதத்தோர் மனைவியெல்லாம் வைப்பாட் டியரா ?

பிறமதத்துப் பிள்ளையெல்லாம் முறைகே டான

பிசகான உறவுகளில் பிறந்தோர் தாமா ?

பிரஜையெல்லாம் சமமென்ற அரசில் இன்று

பிளவொன்று புரிவீரா ? நியாயம் தானா ?’’

குரலெடுத்துக் கேள்விகளைக் கேட்டார் காந்தி !

குமுறிட்டார்; போராட்டம் செய்வோம் என்றார் !



யாருக்கும் துணிவின்றி இடையூ றின்றி

யாருக்கும் தீங்கொன்றும் புரியா வண்ணம்

யாருக்கும் அடிபணியா எதிர்ப்பின் மூலம்

யாருக்கும் நிந்தையிலாக் கிரியை செய்து

போருக்குச் செல்லுகிற முறைமை கண்டார் !

போர்புரிவோர் மனதாரத் துன்பம் ஏற்பார் !

பேரிட்டார் சத்தியாஅக் கிரகம் என்று !

பெறும்பயனும் வழிமுறையும் அன்பின் சின்னம் !


மக்களெல்லாம் அறப்போரில் கலந்து கொண்டார்;

மண்மைந்தர் நிலம்அகழும் சுரங்கத் தோழர்

பக்கமெல்லாம் காந்திக்குப் புகழ்தோன் றிற்று !

பட்டுவந்த துயரழிக்க உடன்சேர்ந் திட்டார்;

வெட்கமுற வெறியரசு தடுமா றிற்று !

வீழ்ந்துநலிந் திட்டததன் பொருளா தாரம் !

தக்கபடி சட்டங்கள் திரும்பப் பெற்றுத்

தன்மக்கள் கேட்டபடி வழிமா றிற்று !


நடந்தவைகள் நானிலத்தில் எங்கும் செல்ல

நம்நாட்டில் காந்திபுகழ் ஓங்கி நிற்கக்

கடந்தவைகள் லண்டனுக்கும் தெரியப் போகக்

கண்கொத்திப் பாம்பானார் ஆள்வோர்; காந்தி

உடன்கிளம்பி தாய்நாடு திரும்பி வந்தார்;

ஊரெல்லாம் கூடிபெரும் வருகை நல்கும் !

முடமாகி முனகுகிறாள் அன்னை பூமி !

முடம்நீக்கி உயிரூட்டும் கடமை கண்டார் !

---------தொடரும்---------

Monday, September 20, 2010

காந்தி அண்ணல் - பகுதி 2

பதின்மூன்றாம் பிராயத்தில் தம்பிள் ளைக்குப்

பால்யமணம் செய்விக்கும் வழக்கம் ஒன்றால்

பதிவாழும் கோகுல்தாஸ் மகான்ஜி பெண்ணாள்

பண்புநிறை கஸ்தூரி பாயைத் தேர்ந்து

இதமான மணம்செய்து வைத்தார் பெற்றோர் !

ஏற்கனவே ஏழ்வயதில் நிச்ய தார்த்தம்

விதிகூட்டி வைக்குமிரு ஆணும் பெண்ணும்

விவாகத்தின் வழியொழுகல் இந்து தர்மம் !



இருவருக்கும் சமவயது பத்தும் மூன்றும்

இருவருக்கும் விளையாடும் வெகுளிக் காலம்

இருவருக்கும் வாழ்வர்த்தம் தொலைவு தூரம்

இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் தோழர்

இருவருக்கும் கண்மறைக்கும் இளமை ஆர்வம்

இருவருக்கும் இடையிடையே ஊடல் கூடல்

இருவருக்கும் தாம்பத்யம் நடந்த ஆண்டு

இமைவிரியும் அறுபத்து இரண்டு ஆண்டு !


காலத்தில் தந்தையவர் கலந்த போது

காந்திக்குப் பதினைந்து வயது; பள்ளிக்

காலத்தைக் கடந்துவிட்டார்; மேலும் கற்க

கல்லூரி சென்றதையும் கற்று விட்டார்;

சீலத்தில் சிறந்தபடி குடும்பம் செல்ல

சிற்றப்பா உதவிவர தனயன் காக்க

ஞாலத்தை வெல்லுமொரு மேற்ப படிப்பை

நாம்கற்றல் வேண்டுமென்று காந்தி கண்டார்.



மருத்துவத்தைப் பயில்வதற்கு விருப்பு உண்டு;

மனதாரப் பிணம்தீண்டும் படிப்பை அண்ணன்

மறுத்துவிட தந்தைசெய்த பிழைப்பை எய்த

மகத்தான சட்டங்கள் பயிலும் நல்ல

கருத்தெழவே லண்டனுக்குக் கல்வி கற்க

கண்மணியை அனுப்புவது எனவா யிற்று;

உறுத்தலுக்கு ஆளானார் புத்லித் தாயார்;

உவப்பில்லா பழக்கங்கள் பற்றும் என்றார்.


குடும்பத்தின் நலம்நாடும் சமணர் முன்னம்

கும்பிட்டு மூன்றுபெரும் வாக்கு தந்தார்;

‘கொடும்மதுவும் புகையிறைச்சி எதுவும் கொள்ளேன்;

கூடாதார் சகவாசம் கொள்ளேன்என்றார்;

மடுவுக்கும் மலைதனுக்கும் உள்ள தூரம்

மகனேற்ற சத்தியமும் நாட்டின் பண்பும் !

தடுக்கிவிழும் மனதுக்கு வாய்மை இல்லை !

தனையடக்கும் மனதுக்குச் சொல்லே எல்லை !



கரம்சந்து பெரும்பதவி வகித்தார்; ஆனால்

கடைசியிலே உபகாரச் செலவு பெற்று

சிரமத்து வாழ்வைத்தார் வாழ்ந்தார்; அன்னார்

சேர்த்துவைக்கத் தெரியாத உண்மைச் செல்வர் !

சுரந்தவறும் பண்போலே குடும்பத் திற்குள்

சூழ்ந்திட்ட சிறுவறுமை நிலவக் கண்டோம் !

இரந்துயிரைக் காப்பாற்றும் நிலைமை இல்லை

என்றாலும் படிப்புக்குப் பணத்தைக் காணோம் !


பம்பாய்க்கு லட்சுமிதாஸ் அழைத்துச் சென்றார்;

பணம்நல்க முன்வந்தார் தம்பி கற்றார்;

‘நம்சாதி வழக்கில்லை கடலைத் தாண்டல்;

நாமதனை ஏற்கமுடி யாதேஎன்று

பம்பாய்வாழ் பனியாக்கள் தீர்மா னித்தார்;

சாதியிலே ஒதுக்கிவைத்துப் பாவித் திட்டார்;

கம்பாலும் கதையாலும் அடித்தால் கூட

காந்தியவர் தம்முடிவில் பிறழார் அன்றோ !



சட்டகலா சாலைபெயர் இன்னர் டெம்பிள்;

தனக்குநிகர் இல்லாத உயர்கல் லூரி !

இட்டமுடன் இரண்டாண்டு எட்டு மாதம்

ஏற்றிட்ட சட்டங்கள் பயின்று வந்தார்;

எட்டுக்கும் மேல்மைல்கள் நடந்தார் நாளும்

எளிமையும் சிக்கனமும் கண்ணாய்க் கொண்டார்;

திட்டமுடன் செலவிட்டார்; அண்ணன் வேர்வை

தினம்தம்மைக் காப்பாற்றி வருதல் கண்டார் !


எட்டோடு பத்தாண்டு நிறைந்த காந்தி

ஏழ்கண்டத் தலைநகராம் லண்டன் சென்று

முட்டாமல் முறியாமல் நாக ரீக

முனையாடும் நகர்கண்டு அழிந்தி டாமல்

குட்டாமல் குனியாமல் மனதில் கொண்ட

கொள்கைநெறி பிறழாமல் வழிமா றாமல்

பட்டத்தைப் பெற்றிட்டார்; மறுநாள் பேரைப்

பதித்திட்டார்; தாய்நாடு திரும்பி விட்டார் !


தாய்நாடு வந்தவுடன் பெற்ற செய்தி

தமையீன்ற தாய்மரணச் செய்தி யாகும் !

வாய்மூடி மௌனத்தால் அழுதார் காந்தி

வளர்த்திட்ட பெற்றோரை முற்றாய்த் தோற்றார்;

ஓய்வின்றி ஒழிவின்றி உலகு சுற்றி

ஓரிடத்தில் நின்றாலோ ஒன்றும் காணோம் !

ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதை சொல்லும்

ஆற்றுபணி ! பலனேதும் கருத வேண்டா !

------------தொடரும்-------

Sunday, September 19, 2010

காந்தி அண்ணல் - பகுதி 1

கத்தியவார் தீபகற்பப் பகுதி தன்னில்

கணக்கான சமஸ்தானம் சிலவாம் உண்டு;

மெத்தசிறு போர்பந்தர் அவற்றுள் ஒன்று;

மேதினியில் புகழ்தாங்கப் போகும் ஓரூர் !

அத்தகைய சமஸ்தான அமைச்ச ராக

அற்றைநாள் உத்தம்சந்த் என்பார் வாழ்ந்தார்;

உத்தம்சந்த் புதல்வர்தான் கரம்சந்த் காந்தி

உத்தமமும் உயர்பண்பும் உருவாய் நின்றார் !



இந்துமதம் நால்வருணப் பிரிவு சொல்லும்

இதில்மூன்றாம் வருணத்தார் வைஸ்யர் ஆவார்;

இந்தபெரும் வருணத்தார் வணிகம் செய்வார்;

இவ்வருணம் காந்திகுலம்; பனியா சாதி;

தந்தபொருள் காந்தியெனும் சொல்லில் கண்டால்

தகைமளிகை வியாபாரிஎன்னும்; அங்கே

சிந்துநதி பெருக்காகிக் கடலில் கூடும்

சிந்துமொரு சிறுதுளியும் புனிதத் தண்ணீர் !


மனைவியருள் முதல்மூவர் மரணம் எய்த

மறுதார மாய்ப்புத்லி பாயைக் கரம்சந்த்

துணையாக்கிக் கொள்ளுங்கால் நாற்ப தகவை;

துணைவிக்குப் பிறந்தார்கள் மக்கள் நால்வர்;

சுனையூறும் புதுநீர்போல் தூய பண்பு

சுகந்துறந்து அகங்காக்கும் இனிய தாயார் !

மனைமாட்சி விரதங்கள் உண்ணா நோன்பு

மகிழ்வோடு மேற்கொள்ளும் குணத்தின் குன்றம் !


அண்ணன்மார் முதலிருவர் தமக்கைக் கடுத்து

ஆயிரத்தெண் ணூற்றறுபத் தொன்ப தாண்டில்

பண்திங்கள் அக்டோபர் இரண்டாம் நாளில்

பகல்வானில் செழுங்கதிரின் பாய்ச்சல் போலே

இன்னமுதப் பூமகவு மண்தோன் றிற்று !

இந்தியத்தாய்ப் பொன்முகத்தில் நகை தோன்றிற்று !

கண்மணிக்கு மோகன்தாஸ் பெயர் தோன்றிற்று !

ககனவெளி திகழ்இருளில் ஒளிதோன் றிற்று !



அவ்வாண்டு நெப்பொலியன் நூறாம் ஆண்டு !

அன்னைநிலம் அடிமையுற்றுக் கிடந்த ஆண்டு !

வெவ்வேறு கருவிகண்ட தாமஸ் எடிசன்

விருப்போடு காப்புரிமை கண்ட ஆண்டு !

செவ்வாய்க்கால் சூயஸினைத் திறந்த ஆண்டு !

சிந்தைக்குள் கொப்பளித்த ஞானம் நல்க

ஒவ்வாத வைதீர்க்க காரல் மார்க்சு

உயர்பெருநூல் மூலதனம் பதித்த ஆண்டு !


பேர்காணப் பிறந்தமோகன் தாஸாம் காந்தி

பிறவியிலே தாயன்பு மிகுந்த பிள்ளை !

போர்பந்தர்ப் பள்ளியிலே படிப்போ ராண்டு;

புதுவூராம் ராஜ்கோட்டில் படித்தார் பின்பு !

யாரோடும் சேராத கூச்சம் அச்சம்

இளமைக்கே உரியசிறு குறும்புச் செய்கை

சீரோடும் சிறப்போடும் வளர்ந்தார் காந்தி

சிறப்பான கல்வியொடு உலகம் கற்றார் !


வகுப்பறைக்கு ஆய்வுக்கு ஒருவர் வந்தார்

கெட்டிலெனும் சொல்லொன்றை எழுதச் சொன்னார்

தகுந்தவாறு எழுதிடாமல் பிழையொன் றோடு

தவறாக எழுதிவிட்டார் காந்தி; தம்மை

வகுப்பாசான் சைகையால் அருகில் உள்ளோன்

வகையாக எழுதியதைப் பார்க்கச் சொல்ல

மிகத்தாழ்ந்து மறுத்துவிட்டார்; அவருள் அன்றே

மிகையாக முளைத்தனவோ அறமும் பண்பும் !



இந்தியரை ஆங்கிலேயர் ஆள்வ தற்கு

இதம்செய்யும் மாமிசத்தின் பலமே என்று

உந்தியவோர் எண்ணத்தால் ஒருநாள் தேர்ந்து

ஊரொதுங்கிப் புறம்சேர்ந்து இறைச்சி உண்டார் !

அந்தவொரு நாளிரவில் உறக்கத் தூடே

ஆட்டுக்குட் டிவயிற்றுள் ளிருந்து கத்தத்

தம்தவற்றை உணர்ந்தவராய் வருந்தி நொந்து

தவறியுமே ஊன்உண்ணல் விலக்கலானார்


மாசுற்ற ஊன்பழக்கம் சின்ன பொய்கள்

மனந்துணிந்து களவொன்றைச் செய்த தாலே

கூச்சமுற்ற மனசாட்சி முள்ளாய்க் குத்தக்

குற்றத்தின் மன்னிப்பை நல்க வேண்டிப்

பேச்சற்ற நோய்ப்படுக்கை கொண்ட தந்தை

பின்பாய்ப்போய் அழுதுமுகம் புதைத்தார் காந்தி !

ஏச்சற்ற அன்பான பார்வை பெய்து

இளமகனின் தலைதீண்டி அழுதார் தந்தை !


வரலாற்றின் தடமெங்கும் மகான்கள் யாரும்

வழக்கத்தின் தவறுகளால் உளக்கண் பூத்து

உரமேற்றி உயிர்ப்பண்பின் இயல்பைக் கண்டு

உலகத்தார் படும்பாட்டால் இதயம் வெந்து

கரம்பற்றி உய்விக்கும் தவத்தை ஏற்றுக்

கடுந்துயரில் தம்முயிரை நெய்யாய் ஊற்றிப்

பரவுலகின் சொர்க்கத்தை இகத்தில் செய்யப்

பாடுபடும் பெருவழியில் நடப்பார் தாமே !


--------தொடரும்--------