Saturday, September 11, 2010

பாலை


ஏனோ இன்று

மங்கா நினைவுகளும் கொஞ்சம் ரத்தமும்

வெதுவெதுப்பாய்க் கசிகின்றன


தோளருகில் நின்று நீ கொஞ்சியவை

புண்ணோடிருக்கும் என் காதுகளில்

அடர்ந்த சீழாய்க் குமிழியிடுகின்றன


துருவேறிய ஆணிகளைப்போல்

அவ்வப்போது தோன்றுவதுண்டு

கூந்தலைக் கோதி நின்ற என் விரல்கள்


கருஞ்சாயமிடப்பட்ட என் முடிக்கற்றைகள்

ரகசியமாக உதிர்ந்துகொண்டிருப்பது

எனக்குத் தெரிகிறது


என் சொர்க்கங்களின் வரைபடப் பாதைகளாக

உன் மார்புகளின் மீது

புடைத்துப் பரவியிருந்த அந்தப் பச்சை நரம்புகள்

உனக்கும் அங்கே

இற்று நைந்திருக்கலாம்

2 comments:

  1. சொர்க்கங்களின் வரைபடப் பாதைகள்.

    என்னை மிகவும் வசீகரித்த வரி.

    ReplyDelete
  2. நிசமாகவே பாலை தான்.
    கவிதை படித்து முடித்த போது வறண்டு போகிறது நாக்கு

    ReplyDelete