Saturday, September 4, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே 5
 • மக்களைக் குடிக்க வைத்து, குடிகளின் வரி வாங்கி அரசாங்கம் நடத்த வேண்டுமா ?

குடிக்கக் கூடாது என்று
தனக்குத் தானே வேலியிடும் அதிகாரம்
ஒவ்வொரு குடிகாரனிடத்திலும் உண்டே,
அந்தத் தன்னுணர்ச்சியை
அவன் பற்றி நின்றால் போதுமே !

 • வாய்ப்பாடு - இன்றைய மாணவர்களுக்குத் தெரியுமா ?

புரியாமையின் வாய்ப்பட்டு
அறியாமையின் நோய்ப்பட்டுத்
தெரியாமையின் தீப்பட்டுச்
சோர்வுற்று
நிற்கும் குழந்தையைக்
’கூறடா கணக்கு’ என்று
கேட்க மனம்வரவில்லை.

 • இரண்டரை வயதிலேயே சிறார்களைக் கட்டாயப் படுத்தி, பள்ளிக்கு அனுப்பி வைப்பது சரிதானா? விளையாடும் பருவத்தை வீணடிக்கிற வேலையல்லவா?

பெரும்பாலான பெற்றோர்கள்
குறும்பு பொறுக்க முடியாமல் தான்
அரும்புகளை அனுப்புகிறார்களாம் !
குழந்தைமையில்
நம் குழந்தைகள் இழந்தவை
கொஞ்சநஞ்சமல்ல !

 • இன்றைய குடியாட்சிக்கு, முடியாட்சியே மேல் என்று எப்போதேனும் தோன்றியதுண்டா?

ஆட்சிகள் அனைத்திலும்
காட்சிகள் ஒன்றே !
எரிகிற கொள்ளியில்
எல்லாக் கொள்ளியும்
சுடுகொள்ளியே !

 • ஈழம் - வெறுங்கனவா?

அருங்கனவொன்று
பெருங்கனவாகிப் பெருகி நின்றக்கால்
கொடுங்கனவாகிக் குருதி தீர்ந்தோமே !


 • வளர மறுக்கும் போன்சாய் வகைத் தாவரங்களைக் காண்கையில் எப்படி உணர்வீர்கள் ?

பாரில் உயிர்த்திருக்கப்
பருவுரு வேண்டியதில்லை
உறைந்திருக்கும்
பச்சையம் போதும் !

 • ஒன்றழிந்து தான் இன்னொன்று உருவாகும் - டார்வின் கொள்கை மேற்கண்ட இரண்டில் எந்தக் கோட்பாடு சரியானது ?

அழிவிலிருந்து பிறப்பவற்றில் எனக்கு
ஆர்வமில்லை.
வலியதன் வாய்ப்பட்ட
எளியதன் உயிர்க் கதறல்
நான் நம்பியிருக்கும் அறங்களைச்
சூறையாடுகின்றன.
இரண்டு விதியிலும் உள்ள மரணம்
என்னை நடுங்கவைக்கிறது.

 • தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி நீக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றி ?

ஏராளமான இடங்களில்
தமிழ்த்தாயே
கைவிடப்பட்ட அபலைபோல்
காணப்படுவதைக்
காண்கிறோமே.

 • பாமரனைச் சென்றடையாத இலக்கியங்கள் எதன் கீழ் வகைப்படுத்தப்படும் ?

பாமரன்
இலக்கியத்தின் பாடுபொருள்
அவனை உருவகித்துச் செய்யும் ஒன்றை
அவனுக்கே உணர்த்தி
அவனையும் வேடதாரி ஆக்கவேண்டுமா ?

 • அடிப்படை மொழி இலக்கணம் தெரியாமல் படித்துப் பல்துறை வல்லுனராகும் திறன் தமிழர்களைத் தவிர வேறு எவருக்கேனும் உண்டா?

இந்தப் பெருமையைத் தட்டிப் பறிக்க
ஏழுலகத்திலும் எவருமில்லை என்று
எக்காளமிட்டுக் கூறுவதோடு மட்டுமல்லாமல்
எதிர்காலத்திலும்
இதே பெருமையோடு
உலகத்திற்கே வழிகாட்டியாகப்
பீடுநடை போடுவோம் என்பதையும்
உங்களுக்கெல்லாம்
உறுதியோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்

 • வெல்லுஞ்சொல் - இதைப் பற்றி விளக்கம் தாருங்களேன்.

அந்தச் சொல் எதுவென்று
கண்டறிந்த அக்கணமே
நான்
கவிதை எழுதுவதை நிறுத்திவிடுவேன்.

 • துரித உணவகங்கள் பற்றி வெண்பா ஒன்று சொல்ல முடியுமா?

சாலையில் வண்டியைச் சாய்த்து நிறுத்திவிட்டு
மாலையில் உண்ணாத வாயுண்டா ! - மூலையில்
தன்தட்டைத் தான்பிடித்துத் தன்னுணவை உண்பது
பொன்னான இன்பமடா போ.


 • (இந்தப் பகுதியிலுள்ள கேள்விகள் எல்லாம் நண்பர் கொல்லான் கேட்டவை )

9 comments:

 1. கவிஞரே,
  கவிதை வடிவிலான தங்கள் பதில்கள் நன்றாக இருந்தன.
  நன்றி.

  ReplyDelete
 2. கொல்லானின் கொடுங்கேள்விக்கு
  கல்லால் அடித்தது போல்
  சொல்லால் அடித்துச்
  சொன்ன பதில்கள்
  கல்லில் வெட்டவேண்டும்..
  பல காலங்களை எட்டவேண்டும்.

  ReplyDelete
 3. என்ன சொல்வதென்று தெரியவில்லை
  தேன் தமிழுக்கு நன்றி ,
  தமிழ் சுவையோடு நின்றுவிட்டேன். வேலை பளு அதிகம் பதில் பற்றி சொல்வதற்கு ... மீண்டு(ம்) வருகிறேன்.

  ReplyDelete
 4. போன்சாய் மரங்கள் பற்றிய பதில் பட்டையக் கிளப்புதுங்க...

  வாழ்த்துகளுடன்

  ReplyDelete
 5. பதில்கள் அனைத்தும் கவிதை பேசுகின்றன.

  ReplyDelete
 6. நல்லா இருக்குங்க... வெண்பாவும் கவிதை கலந்த பதில்களும்....

  ReplyDelete
 7. பதில் அனைத்திலும் சுய பரிசோதனை செய்து கொண்டேன். முடிவு : இயலாமை வெட்கம் வயித்தெரிச்சல், அவமானம் இருப்பினும்....
  //பாரில் உயிர்த்திருக்கப்
  பருவுரு வேண்டியதில்லை
  உறைந்திருக்கும்
  பச்சையம் போதும் // இதில் துளிர்ந்த நம்பிக்கையோடு இதை நோக்கி செல்கிறேன்
  வெல்லுஞ்சொல்:
  அந்தச் சொல் எதுவென்று
  கண்டறிந்த அக்கணமே.....
  (பார்ப்போம்)

  ReplyDelete
 8. நண்பர்கள் அனைவரின் பாராட்டுகளுக்கும் நன்றிகள் !

  வெண்புரவி ! இது பூவோடு சேர்ந்த நாரின் மணமா ? அல்லது நீங்களே ஒரு பூவா ?

  வேல்கண்ணன் ! எல்லாரும் ஓர் நிறை. உயர்வு தாழ்வு இல்லை.

  ReplyDelete