Tuesday, August 31, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே 4

  • ·         அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசுவது - என்றால் என்ன ?

பேச்சுப் பேச்சாக இருக்க வேண்டும். உன் அண்டர்கிரவுண்ட் மேட்டருக்கு நானும் வரமாட்டேன். என் அண்டர்கிரவுண்ட் மேட்டருக்கு நீயும் வரப்படாது – என்று அர்த்தம்.

  • ·         விஸ்வநாதன் ஆனந்த் கௌரவ டாக்டர் பட்டத்தை மறுத்தது ஏன் ?

முணுமுணுத்தபடி தரப்படுவதைப் பெற்றுக்கொள்ள அவர் அரசியல்வாதி அல்லர். மூளையைப் பிழிந்து விளையாடும் ஆட்டக்காரர்.

  • ·         ஆந்திரத் திரையுலகம் போதையில் புரள்கிறதா ?

மிதமிஞ்சிய பணமும் தகுதிக்கு மீறிய புகழும் சென்றடையும் இடம் போதையுலகம்தானே !

  • ·         மீன் தின்னும்போது நாவில் முள் குத்திய அனுபவம் உண்டா ?

ரத்தத்தின் ருசியறியக் கிடைத்த அபூர்வ தருணமல்லவா அது !

  • ·         பொறியியல் கல்லூரிகளைப் புதிதாகத் துவங்க அனுமதி மறுக்கவேண்டும் என்று பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளாரே...

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகளைத் துவங்க அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அவர்களுள் ஆளும் வர்க்கத்தினர் ஒருவருமே இல்லை என்ற உறுதியைத் தந்துவிட்டு அந்த வேண்டுகோளை விடுக்கலாம்.

  • ·         பாகிஸ்தான் அணியினர் ஆடிய கடந்த 80 ஆட்டங்களையும் சூதாடிகளே முடிவு செய்தனரா ?

நான் கிரிக்கெட் பார்ப்பதை எப்பொழுதோ நிறுத்திவிட்டேன்.

  • ·         அண்மையில் கனவு எதுவும் கண்டீர்களா ?

என் கனவுகள் மிகவும் இரகசியமானவை. உறக்கத்தை ஊடறுக்கும் வல்லமை அவற்றுக்கு இன்னும் ஏற்படவில்லை.

  • ·         தர்மபுரி பேருந்து எரிப்புக்கு நிகரான ஒரு கொடிய நிகழ்வென்று எதைச் சொல்லலாம் ?

மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை.

  • ·         தங்கத்தின் விலை ஒரு பவுன் இருபதாயிரத்தைத் தொட்டால் என்னவாகும் ?

மனைவியை மகிழ்விப்பது எப்படி ? என்ற கவலை நூறு மடங்கு அதிகரிக்கும்.

  • ·         பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் போதுமா ?

அப்படியாவது பணத்தாசை நீங்கி மக்கள் பணி ஆற்றட்டும்.

  • ·         எழுத்தாளர்கள் ஏன் ஈகோ பார்ட்டிகளாகவே இருக்கிறார்கள் ?

நாய்வால் ஏன் வளைந்தே இருக்கிறது ?

  • ·         வழக்கத்திற்கு மாறாக நீங்கள் ஒரு கேள்வியைக் கேளுங்கள்.

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா ? – இதை எழுதியவர் யார் ? (சரியான விடையைப் பின்னூட்டவும்)

 

9 comments:

  1. இந்தத் தடவை கேள்வி பதில் மிக சுவாரஸ்யமாக இருந்தது.
    கடைசிக் கேள்விக்குப் பதில் : ராமச்சந்திர கவிராயர்?

    ReplyDelete
  2. அத்தனையும் அருமை :)

    ReplyDelete
  3. முதல் மூன்றை(கேள்வி - பதில்)விட இதில் வீச்சு அதிகமாகவே காணப்படுவதாக எனக்குபடுகிறது.

    எனது நினைவில் :
    எழுதியவர் : இராமச்சந்திரக் கவிராயர் (தனிப்பாடல் அமைப்பு)
    மீதம் உள்ள வரிகளை நீங்கள் இங்கு கொடுத்தால் அழகாக இருக்கும் கவிஞரே ....

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க....

    ReplyDelete
  5. கொல்லான் ! ராமச்சந்திர கவிராயர் சரியான விடை.
    அந்த முழுப்பாடல் :-

    கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
    குடிக்கத்தான் கற்பித்தானா ?

    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
    கொடுத்துத்தான் இரட்சித்தானா ?

    அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
    நோவத்தான் ஐயோ எங்கும்

    பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
    புவியில்தான் பண்ணி னானே.


    இளங்கோ, கலாநேசன் ! நன்றி.

    வேல்கண்ணன் ! இவை ஒரு வாரத்து நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்துத் தயாரிக்கப்பட்ட கேள்விகள். முந்தையவை ஒரு நாளின் நிகழ்வுகள்.

    ReplyDelete
  6. நன்றி கவிஞரே,
    மன்னிக்கவும். ஒரு சந்தேகம்...
    //புவியில்தான் பண்ணி னானே//
    இது சரியா, அல்லது இதுவா
    "புவியிற்றான் பண்ணி னானே"

    ReplyDelete
  7. வேல்கண்ணன் !

    புவியில்தான் பண்ணினானே’ என்பதுதான் ல்+தா புணர்ந்து ’ற்றா’ ஆகியிருக்கிறது.

    நல்+தாள் = நற்றாள்
    நல்+திணை = நற்றிணை

    ஏகப்பட்ட தான் வரும் செய்யுளில் அங்கேயும் ஒரு தான் வந்திருக்கிறது என்று சுட்டவும், எளிதில் தென்படும் பொருட்டும் புணர்ச்சி நீக்கி எழுதுவார்கள்.

    ReplyDelete
  8. அன்பின் மகுடேஸ்வரன்

    கேள்வி பதில் அருமை - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. சார் உங்களின் இந்த இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete