Wednesday, August 18, 2010

அரங்கு சூழ் உலகம்

கிராமங்களிலும் நகரங்களிலும் ஏன் பெருநகரங்களிலும் கூட சினிமா பார்க்கக் கிளம்புவது குடும்பத்திற்குள் மிகுந்த தடபுடலை, உடனடி ஆனந்தத்தை இன்றளவிலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றும் ஏற்படுகிறதா என்று ஒரு கால்புள்ளியை உங்களைப் போலவே நானும் வைத்திருக்கிறேன்தான்.

முன்பதிவு செய்யப்பட்ட புதுப்படச் சீட்டைக் காட்டிக்காட்டியே எத்தனையோ காரியவாதிகள் தத்தம் மணவாட்டிகளைத் தாம் அமைத்துக்கொடுத்த கையாலாகாத வாழ்க்கையின் அதிருப்தியிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்திருக்கிறார்கள். அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி அடுத்தபடியாக ஆளில்லாத அரங்கின் மென்னிருளில் எக்கச்சக்கமாக நோக்கு நோக்கு என்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

தனது கல்லூரி நாள்களில் வெளியான அத்தனை படங்களையும் கல்லூரி மாணவன் கண்ணுற்றுவிடுகிறான். குழந்தைகள் அந்தந்த காலத்தின் இரண்டு மாச ஆயுளுடைய குத்துப் பாடலை மழலை குழைத்து உளறுவதன் மூலம் பெற்றோர்களை ஈன்றபொழுதின் பெரிதுவக்க வைக்கின்றன.

ஆதிக்கத் தோரணை மிகுந்த மிடுக்கான ஒரு பெருங்கட்டிடம் சிறுகுடில் தமிழனைத் தன்னுள் புக அனுமதித்ததும் அங்கே அவன் அமர சாய்மானம் உள்ள ஓர் இருக்கை தரப்பட்டதும் திரையரங்குகளால் இயன்ற சரித்திர முக்கியத்துவமான நிகழ்வுகளாகும். குனியாமல் நுழைய முடியாத குடிசைக்குள்ளிருந்து வருபவனை அண்ணாந்து 
பார்த்தால் கழுத்து சுளுக்கும் ஓர் ஆடம்பர மாடம் ஏற்றுக்கொண்டது அங்குதான். 

அன்று தொடங்கிய பாசப்பிணைப்பு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பழைய அரங்கின் முன்பு நின்று தீப்பிடித்தெரிந்த வீட்டைப் பார்ப்பதுபோல் ஏக்கமாகப் பார்த்தழுவதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது. 

படியேறுவதை வைத்து ஆரோக்கியத்தை அளக்கமுடிவதுபோல திரையரங்குகளின் எண்ணிக்கையைக்கொண்டு அந்த ஊரின் கனபரிமாணத்தைக் கணிக்க முடியும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இரண்டே இரண்டுக்குத்தாம் லேண்ட்மார்க்காகும் அருகதை உண்டு. ஒன்று திரையரங்குகள். மற்றொன்று என்ன ? ஆம். அதேதான். சிலைகள் !  

திரையரங்குகளுக்கு வைக்கப்படும் பெயர்களைக்கொண்டும் பேராராய்ச்சி நடத்தலாம். மானாமதுரை சீனியப்பா பொள்ளாச்சி நல்லப்பா உடுமலை கல்பனா ஊட்டி லிபர்ட்டி வடபழனி எஸ். எஸ். ஆர். பங்கஜம் திருப்பூர் டைமண்ட் திருச்செங்கோடு பிளவர்கிங். 

இவற்றில் தொகுப்பரங்குகள் சூட்டியிருக்கும் ஈற்று இயைபான பெயர்கள் இன்னும் சுவாரசியமானவை. சினிப்ரியா மினிப்ரியா சுகப்பிரியா. கங்கா யமுனா காவேரி. சாந்தம் சத்யம் சங்கம். கொங்கு நாட்டில் நால்வரில் ஒருவனுக்குப் பழனிசாமி என்ற நாமகரணம்போல பெரும்பாலான ஊர்களில் ஏதாவதோர் அரங்கு சென்ட்ரல் அலங்கார்.    




அநேகமாக நாம் அனைவரும் சுமார் நூற்றுக்கும் குறைவில்லாத அரங்குகளுக்குள் புகுந்து வெளியேறியிருப்போம். யாராவது இத்தொகை தன்னைப்பொறுத்தவரை குறைவென்று கையுயர்த்துவாரேல் அவர் திரைமயக்கால் பாழடையாத மகாத்மாவாக இருப்பார். அல்லது ஒரே அரங்கில் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்தவராக இருப்பார். இந்த இடத்தில் அவரைப்பற்றிய அனுமானமொன்றை சத்தியம் செய்து சொல்லமுடியும். அவர் ஒத்தைப் பொண்டாட்டிக்காரர்.

சினிமாவுக்குப் போன அனுபவங்களை எண்ணிப்பார்த்தால் ரசமான ஞாபகங்கள் குமிழியிடுகின்றன. வெங்கச்சங்கல்லை வாயில் போட்டு மென்றால் எழும் ஒலிகளைத் தம் பெயர்களாகக் கொண்ட சர்வதேச இயக்குநர்களின் படங்களை நான் அப்பொழுது பார்த்ததில்லை. இப்பொழுதும் கூட அதிகம் பார்ப்பதில்லை. 

ஏதாவதொரு திரைப்படச் சங்கத்தில் சேர்ந்து ரசனையை உயர்த்திக்கொள்ளலாம் என்று முயன்றால் அக்குழுக்கள் தமது பட்டிக்குள் அடங்கிய ஆடாக இருக்க நிர்ப்பந்திக்கின்றன. வெளியே மேயப்போகாமல் என்னால் இருக்க ஏலாது. அதனால் என்னுடைய இளவயது காட்சியின்பத்தின் கர்த்தாக்கள் உள்ளூர் முத்துராமன்கள் மற்றும் விஜயன்களே. அரங்குகள் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் அல்ல. உள்ளூர் கொட்டகைகளே.

எண்பதுகள் திரையரங்குகளின் பொற்காலங்கள். ஊருக்கு ஒரு படம் ஓர் அரங்கில் மட்டுமே நின்று நிதானமாக எழுபது நாள் ஓடும். தீபாவளி பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு ஆகஸ்டு 15 ஆகிய சமயங்களில் இருபத்தாறு படங்கள் வெளியாகும். பிரேமபாசம் திறமை விடிஞ்சா கல்யாணம் படிக்காதவன் ஊமை விழிகள் என்னும் அந்தப் பட்டியலிலிருந்து உவப்பான ஒரு படத்தைத் தேர்வு செய்யவேண்டும். 


இப்பொழுது முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல் சோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு இந்தப் படத்திலா சிரிப்புக்கு கவுண்டமணியா(இந்த சென்னைம்மா நகரத்திலே) ஜனகராஜா(தங்கச்சீயெ நாய் கட்சிட்சீப்பா) ஜோடி யாரு கடைசிப் பாட்டு சிலுக்குக்கா அனுராதாவுக்கா சீட்டுக் கிடைத்தால் படிக்காதவன் இல்லையேல் விடிஞ்சா கல்யாணம். ஒரு சினிமாவுக்குக் கிளம்புவதற்குள் எத்தனை சிந்தனைச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் !

இப்படிப்பட்ட முன்னாராய்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆய்வு முடிவுகளோடு எத்தகைய திரையரங்குளை நாடி எவ்வாறு ஒரு படத்தைப் பார்த்தேன் என்பதை இழைபிசகாமல் ஞாபகத்தில் திருப்பிப் பார்த்தேன். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம், கொஞ்சம் ஏழ்மை, கொஞ்சம் கலை தாகம், கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் நகைச்சுவை என அந்த அனுபவங்களின் பொதுத்தன்மை உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம் என்பதால் இதைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டுதலுற்றேன்.

அரங்கில் நுழைந்ததும் உடைசல் இல்லாத முன் தலை மறைக்காத கைப்பிடி ஆடாத நடுமையமான ஆசனம் தேர்ந்து உட்கார்வேன். கீழ்வகுப்புகளில் அமர்ந்து படம் பார்ப்பவர்கள் குருவிக்கூட்டைப் பார்ப்பதுபோல் அண்ணாந்து பார்க்கவேண்டியிருக்கும். இந்தக் கஷ்டத்தில் திரைக்கு மையமாக அமராமல் ஓரஞ்சாரமாக அமர்ந்துவிட்டால் அவ்வளவுதான் கதாபாத்திரங்கள் எல்லாம் வற்றி ஒடுங்கிக் குச்சியாகத் தெரிவார்கள். மொத்தப் படத்தையும் எங்கோ இருந்து எட்டிப்பார்த்த கதையாகிவிடும்.

பொருளாதாரமே என் திரைப்படங்களை நான் கீழ்வகுப்புகளில் அமர்ந்து பார்க்கக்காரணம் என்றாலும் திரைக்கு அருகிலிருந்து பார்ப்பதில்தான் எனக்கு அலாதி விருப்பம். எதற்கு எச்சுக்காசு கொடுத்து எட்ட அமர்ந்திருக்கிறார்கள் என்னும் ஐயத்திற்கு வெகுநாள் விடைதெரியாமல் விழித்திருக்கிறேன். சில நாய்கள் கிணற்றுத் தண்ணீரை எட்டிப்பார்க்காது. இறங்கி நக்கிப் பார்க்கும். 

இப்பொழுதுவரும் அகல்திரைப்படங்களை கீழ்வகுப்பின் நடுமையத்தில் அமர்ந்தாலும் பாடில்லாமல் பார்க்க முடியாது. இடதுபுறத்தில் ஒருவர் வசனம் பேசும்பொழுது இடதுபுறம் திரும்பிப் பார்க்க வேண்டும். வலதுபுறத்தில் பேசும்பொழுது வலதுபுறம் திரும்பிப் பார்க்க வேண்டும். விறுவிறுப்பான டென்னிஸ் போட்டியைப் பக்கவாட்டில் அமர்ந்துள்ள ரசிகர் எப்படி இடவலம் வல இடம் என்று கழுத்தைத் திருப்போ திருப்பென்று திருப்பிப் பார்ப்பாரோ அப்படி இருக்கும் அது. இருபுறத்திலும் பேசிக்கொண்டால் யாராவது ஒருவரைத்தான் பார்க்க இயலும். காதல் காட்சிகளில் மட்டும் இந்தத் தொந்தரவு இருக்காது. யார் யாருடன் பேசினாலும் வைத்த கண் வாங்காமல் நான் பார்த்துக்கொண்டிருப்பது நாயகியைத்தானே !

என் இருக்கையையடுத்து வந்தமர்பவனிடமிருந்து தொடங்குகிறது பிரச்சினை. வகுப்பின் அத்தனை இருக்கைகளும் காலியாக இருந்த போதிலும் அவன் என் இருக்கைக்கு அடுத்துள்ள இருக்கைக்கே வந்தமர்வான். புது ஆசாமி மட்டும் வகுப்பின் ஓரத்தில் அமர்ந்து குச்சித் தொடைகளைப் பார்க்கத் துணிவானா ? தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு நாங்களிருவரும் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையும் நட்பு பெருகிக் கைத்தலம் பற்றி அமர்ந்திருப்பவர்களைப் போலத் தோற்ற மயக்கம் ஏற்படுத்துவோம். இருவருக்கும் பொதுவாக அமையும் கைப்பிடியால் அது சாத்தியம்தான். FCFS முறைப்படி அந்தக் கைப்பிடியை நான் மட்டுமே பற்றிக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருப்பதான பாத்தியதையில் இருப்பேன். கொஞ்சம் ஏமாந்து பெண்வகுப்புப் பக்கம் திரும்பும்போது புது ஆசாமி கைப்பிடியைக் கைப்பற்றிக்கொள்வான். அவன் மட்டும் என்ன மகரிஷியா ? அவனது முறையில் பெண் வகுப்புப் பக்கம் கவனமுறும்போது நான் கைப்பிடியை ஆக்கிரமித்து விடுவேன்.

இனி மெதுவாக அரங்கின் உள் கட்டழகுகளில் மனம் செலுத்துவேன். இருபுறமும் கொடுக்குகளாகத் தொங்கும் மின்விசிறிகள் நான் அமர்ந்துள்ள நடுசென்டருக்குக் காற்றை வாரி இறைக்க இயலாதவை. சட்டையின் கழுத்துப் பட்டையைத் தளர்த்திக்கொள்வேன். பெரும்பாலும் குளிர்காற்றரங்குகளில் படம் பார்த்த அனுபவம் இல்லையாததால் அதன் முடைக்குளிர் நாற்றம் பற்றி ஒன்றும் அறியேன். பின் சுவரில் படத்தைப் பாய்ச்சும் பொந்துகள் சரியாக இருப்பதைப் பார்த்து நிறைந்துபோவேன். அதற்குள் ஆள் நடமாட்டம் ஏதும் தென்பட்டால் விரைவில் படம் போகப்போகிறதை முன் கூட்டியே அறிந்த மகிழ்ச்சி முகத்தில் ஏறிவிடும். அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பாமல் திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து படத்தின் முதல் பிரேமிலிருந்து காட்சி இன்பம் பெறுவேன். 

இடைவேளைக்குப் பின்பான படத்தைக் குறைவில்லாமல் பார்க்கவேண்டுமானால் இரைப்பைக்குள் இரண்டு முறுக்குகள் அரைபட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இரண்டு முறுக்குகளை இருக்கைக்கே கொண்டுவந்து மொர்மொருக்குச் சத்தமெழத் தின்று பக்கத்து சீட் ஆசாமியை வெறுப்பேற்றி என்னோடு இதுவரை அவன் நிகழ்த்தி வந்த பங்காளிச் சண்டைக்குப் பழி தீர்த்துவிடுவேன். படம் முடிந்ததும் நேராக நிறுத்தத்திற்குள் போய் மிதிவண்டியைக் கொத்தாகப் பற்றி இழுத்துக்கொண்டு ’ஊரத் தெரிஞ்சிகிட்டேன் ஒலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி’ என்ற பாடலைப் பாடியபடி வெளியேற வேண்டியதுதான்.

அப்பொழுதெல்லாம் சினிமா பார்ப்பதற்கான அனுமதி எனக்கு அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. பத்துகிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மிதிவண்டியில் தண்ணீர் சுமந்து தொட்டியை நிரப்பினால் என் தாயாருக்கு மனது இளகிவிடும். தொட்டியை நிரப்பிவிட்டு ’கூம்பும் பருவத்துக் கொக்காக’ அவர் முகமெல்லாம் சிரிப்பாணியாக இருக்கும் நேரம் பார்த்து ஒரு மனுப்போட்டு வைப்பேன். கேட்ட மாத்திரத்தில் சிரிப்பை சைபருக்குக் கொண்டுவந்து மனுவின்மீது மந்திரிமார்கள் நடந்துகொள்வதுபோல ஒன்றுமே சொல்லாமல் போய்விடுவார். அதற்காக நான் எனது கலைத்தேட்டத்தைக் கைவிடமுடியுமா ? கமுக்கமாகக் கிளம்பிவிடுவேன். திரும்பி வரும்போது தண்ணீர் சுமந்து நான் அடைந்திருந்த சலுகை மட்டம் மேட்டூர் அணையைவிட மோசமாக வற்றியிருக்கும். அதை மறுநாள் நான்குநடை சேர்த்து தண்ணீர் அடித்து நேர்செய்யவேண்டும்.

ஒவ்வொரு தடவையும் இதே உத்தியைச் செயல்படுத்தியதில் என்னுடையை சினிமா பார்க்கச் செல்லும் முறை இலக்கியத்தில் புழங்கும் அலுப்பூட்டும் சொல்முறைகளைப் போல ’க்ளீஷே’ ஆகிவிட்டது. தேய்வுற்றுப் பொருளிழந்து கண்டனத்திற்குரியதாகிவிட்டது. ’தண்ணீ நப்பி வெச்சுட்டு சினிமாவுக்கு ஓடுனே தொலச்சுப்புடுவேன் ஆமா“.

அப்பொழுதுதான் என் மூன்று வயதுத் தம்பி கண்ணில் பட்டான். அவனுக்கும் எனக்கும் ஒன்பது வயது வித்தியாசம். நான் எழுபத்தைந்து மாடல். அவன் எண்பத்தைந்து மாடல். அவனும் சிம்மம் நானும் சிம்மம். ஏக லக்கினத்தால் யோகங்கெட்டது என்பது என் தந்தையார் நம்பிக்கை. பிறந்து ஆறுமாசம் கழிச்சலாகக் கழித்துக்கொண்டிருந்தும் தேறியவன். நன்கு வாய்பேசுபவனாக இருந்த அவன் தன் தாயாரின் கக்கத்தில் தொற்றிக்கொண்டு அடிமைப் பெண், தேடிவந்த மாப்பிள்ளை போன்றவற்றுக்குப் போய்வந்திருந்தான். அத்திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளால் குழந்தை பெரிதும் மயங்கி இருந்தான். அவன் முதன் முதலாக மனப்பாடம் செய்த குழந்தைப்பாடல் ’வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி உன் ஒடம்பைப் பிச்சி போட்டுடுவேன் பஜ்ஜி’ என்பதுதான். அந்தப் பாடலைப் பாடியபடி வெகுகாலம் என் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டிருந்தான். 

அன்று நான் பார்க்க எண்ணியிருந்த படத்திற்கு அவனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். எனவே அவனைத் தனியாக மடக்கி நம்மூர் கொட்டகையில் பயங்கரமான சண்டைகள் நிறைந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அம்மாவிடம் அந்தப் படத்தை இன்றைக்கே பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடி என்றும் திருகிவிட்டேன். 

சண்டயில கடசியில யாரு ஜெயிப்பா?’ என்று கேள்வி கேட்டான். ’யாரு ஜெயிச்சா என்னடா ? நாம்ப சண்டயப் பாக்கவேண்டியதுதானே? ’சண்ட இப்படியெல்லாம் போடுவாங்களா?’ என்று காற்றில் இரண்டு கைகளை உதறி கால்களைச் செங்கோணமாகவும் குறுங்கோணமாகவும் கண்டபடி நீட்டி நெளித்து உத்தரவாதம் கேட்டான். ’ஆமாமா... அப்படியெல்லாம் போடுவாங்க...’ என்று உறுதியளித்ததும் பையன் உற்சாகமாகிவிட்டான்.     

நேராக அம்மையிடம் சென்று சினிமாவுக்காக அழ ஆரம்பித்துவிட்டான். என்றுமில்லாத புதிய கோரிக்கையுடன் குழந்தை அழுவதைப் பார்த்த தாயார் அவன் கோரிக்கையை நிறைவேற்றச் சித்தம் கொண்டு உடனடி நிவாரணமாக என்னைக் கூப்பிட்டு தம்பியைக் கூட்டிக்கொண்டு சினிமாவுக்குப் போகப் பணித்தார். நான் உடனே முகம் மலர்ந்துவிடக் கூடாதே ! ’இன்னிக்கி நெறயப் படிக்கவேண்டியது இருக்கு’ என்ற போலி அலுப்புடன் “சரி சரி... தம்பிக்காகப் போய்வருகிறேன்“ என்றேன். சினிமாவுக்குக் கிளம்பிவிட்டோம்.

முதலிரண்டு இரவுக் காட்சிகளை மட்டுமே தினசரி காட்டிக்கொண்டிருந்த அந்தக் கீற்றுக் கொட்டகையில் அப்பொழுது முதல்தான் மதியக் காட்சிகளைத் திரையிட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் திரையிடும் மதியக் காட்சிகளுக்கு உலகத்தைப் பழக்கும்பொருட்டு அத்திரையரங்கினர் இரண்டு உபாயங்களைச் செய்து வந்தனர்.
  
முதலாவதாக சுமார் பதினொன்றரை மணிக்கே ஊர்களை நோக்கிய திசையில் இறுக்கிக் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகளைப் பாடல்களால் அலற வைப்பர். இரண்டாவதாக நடுப்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து நுழைவுக் குகைவழியைத் திறந்து வைத்து ஆள் சேர்க்க ஆரம்பித்துவிடுவர். மதியக் காட்சியிடும் நேரமோ பிற்பகல் இரண்டரை.

பன்னிரண்டு மணிக்கெல்லாம் முதல் ஆட்களாக நுழைந்து அமர்ந்துவிட்டோம். அவ்வளவு பெரிய அரங்கில் தனித்திருக்கக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஓர் அரை மணி நேரம் பொறுமை காத்த இளவல் மெல்ல நெளிய ஆரம்பித்தான். தட்டித் தடவி சமாதானப்படுத்திவைத்தேன். அது அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடித்தது. 

பிறகு மெல்ல விசும்பி ’நான் வீட்டுக்குப் போறேன்’ என்றான். பார்க்கவிருக்கிற சண்டைக் காட்சிகளின் பேரின்பத்தை அவனுக்குள் கனவுகளாக விரியும்படி ஊதிப் பெருக்கினேன். அந்தக் கனவுகளின் அழுத்தத்தோடு திரையை உற்றுப் பார்த்ததில் சில நிழல்கள் கட்டிப்புரண்டு சண்டையிடுவதுபோல் தெரிய சற்று சமாதானமாகியிருந்தான். அடுத்து அவன் பொறுமையிழந்து கண் சொக்கி ஒரு குட்டித் தூக்கமும் போட்டுவிட்டு எழுந்தபோது வெற்றுத் திரையே அரங்கில் வியாபித்திருந்தது. என்னுடைய நல்ல நேரம் - அரங்கிற்குள் கொஞ்சம் கும்பல் சேர்ந்திருந்ததில் அவனுக்குச் சில வேடிக்கைகள் கிடைத்தன. அடுத்து அவன் பெருங்குரலெடுத்து அழுவதற்குள் இரண்டரை ஆகிவிட்டிருந்தது. எதிர்பார்த்த கூட்டமில்லாததால் திரை வேண்டா வெறுப்பாக மின்னியது.

மதியக் காட்சிக்காகப் புதிதாகச் செய்யப்பட்டிருந்த ’அரங்கை இருள்படுத்தும் ஏற்பாடுகள்’ பொய்த்திருந்தன. அதனால் திரையில் அழுத்தமில்லாத வண்ண நிழல்கள் மட்டுமே தெரிந்தன. படம் வேறு இருட்டைக் காட்சியாக்கும் இயக்குநரான மணிரத்னத்தின் ’இதயக் கோயிலாகப்’ போய்விட்டது. இது சண்டையே இல்லாத துயர காவியம் என்பதைத் தம்பி புரிந்துகொண்டுவிட்டான். விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தான். எனக்குக் கோபம் அதிகமாகித் தலையில் இரண்டு குட்டுகள் வைத்தேன். அடங்கவில்லை. கட்டித் தூக்கிக்கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன். 

மெல்ல மெல்ல எனது கட்டுகள் எனது வளர்ச்சியின் விகிதத்தோடு அவிழ்த்துவிடப்பட்டன. சுதந்திரமாகத் திரைப்படத்திற்குச் சென்றுவந்ததில் முன்பிருந்த ஆசைகள் அத்தனையும் வடிந்துவிட்டன. அதற்காக எனது சிந்தனைகளும் ஈடுபாடுகளும் பெரும் தரத்தை அடைந்துவிட்டன எனப் பொருளல்ல. திரைப்பட ஆர்வங்கள் மங்கியதற்குத் திரைப்படங்களும் திரையரங்குகளுமே பிரதான காரணங்கள். ஒரு காலத்தில் கூட்டம் அலைமோதும் ஒரு திரையரங்குள்ள சாலை வழியாகவே செல்ல முடியாது. அந்த அரங்கங்கள் எல்லாம் இன்று வண்ணப் பூச்சுக்கு வகையற்று நிற்கின்றன. 
அவற்றுக்கான காலம் முடிந்துவிட்டதை அவை உணர்ந்திருக்கின்றன. 

இன்றுகூட என்னோடு எங்காவது வருவதென்றால் பிய்த்துக்கொண்டு ஓடி ஒளிந்துகொள்கிறான் என் தம்பி. அந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு தசம ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. பயல் பழையதை மறந்திருப்பான் என்று சினிமாவுக்கு அழைத்துப் பார்த்தேன். எந்தக் குழப்பமுமமில்லாமல் ஊசலாட்டம் இல்லாமல் மிகத் தெளிவாக ’நான் வர்லே’ என்றான்.  


9 comments:

  1. @நிச்சயமாக சார், மலரும் நினைவுகளுக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள், நானும் எனது தம்பியும், எனது அப்பா, அம்மா ஆளுக்கு ஒரு சைக்கிளில் டபுள்ஸ் சென்று படம் பார்த்த நினைவுவருகிறது, அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் படம் ரீலிஸின் போது பார்ப்பது என்பது கூடுதல் திருப்தி, பதின் பருவங்களில் பள்ளிகளில் அந்த படம் பார்த்தேன், அதில் எப்படி தெரியுமா என்று திரித்து விடுவதில் உள்ள சுகமே தனி தான், ஹோம் தியேட்டரில் டிவிடி பார்ப்பதில் நிச்சயம் எனது குமாரனுக்கு அந்த திருப்தி கிடைப்பதில்லை என நம்புகிறேன், ஆனாலும் இந்த குழந்தைகள் தியேட்டரை விரும்புவதில்லை தான் என நினைக்கிறேன், ஏன் என்றால் எனது புத்திரனை முதன் முதலில் திரையரங்கிற்கு அதுவும் தவமாய் தவமாயிருந்து திரைபடத்திற்கு அழைத்துச் சென்றேன், ஒரே அழுகாச்சி படம் அது, இயக்குநர் சேரன் அவர்களுடையது, உடனே புத்திரன் சேனலை மாத்து , இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என்றானே பார்க்கலாம், அதிலிருந்து அவனை அழைத்துச் செல்வதில்லை , தற்போது 3ம் வகுப்பு படிக்கிறான், ஆனால் விஜய் படம் பார்த்தே ஆக வேண்டும் என்கிறான், வேறு வழியின்றி அவனுக்காக அந்த தண்டனையை நானோ எனது துணைவியாரோ அல்லது எங்கள் கடையில் பணிபுரியும் பெண்களோ தண்டனையை அனுபவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,

    ReplyDelete
  2. "மலரும் நினைவுகள்". நினைவுகள் சொல்லும் முக்கியமான பதிவு கவிஞரே
    //அவற்றுக்கான காலம் முடிந்துவிட்டதை அவை உணர்ந்திருக்கின்றன. //
    அவைகள் உணர்ந்தாலும் நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.இளைய தலைமுறையினர் திரையரங்கம் போவதை தவிர்ப்பது திரை சார்ந்தவர்களுக்கும் பங்கு உண்டு என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ராகவேந்திரன் ! உங்கள் மகன் பிற்காலத்தில் நல்ல திரைப்பட ரசிகனாக உருவாவான்.

    கண்ணன் ! திரையரங்குக்குச் செல்வதை இப்போதெல்லாம் பலர் அவதியாகவே உணர்கின்றனர்.

    ReplyDelete
  5. தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர், 'சார்லஸ்', 'மினிசார்லஸ்' என்று இரண்டு அரங்குகளைக் கொண்டது. நான் சீட்டுவாங்க, 'மினி' வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். நான்கு இளவட்டங்கள் வந்தார்கள். "இந்தப் படமா? அந்தப் படமே? எதுல சண்டை நிறையா இருக்கும்?" என்று வினவினார்கள். "பக்கத்துல" என்றார் என் பக்கத்தில் நின்றவர். அந்தப் பக்கத்துக்குத் தாவி ஓடிவிட்டார்கள். அப்படி நம் தேசிய ரசனை இருக்க, உங்கள் தம்பி நடந்துகொண்டது/ கொள்வதில் பிழையொன்றும் இல்லை. அதிலும், 'இதயக்கோவில்'ஆ? உங்களை மன்னிக்கவே முடியாது.

    ஏழைப் பிள்ளைகள் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளுக்குப் போக முடியாது என்பதுபோல், இப்போது தியேட்டருக்கும் போக முடியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். சென்னை அமைந்தகரை பி.வி.ஆர். தியேட்டருக்குப் போனேன். டிக்கெட் ஒன்றின் விலை ரூ.120. வண்டியை நிறுத்த மணிக்கு ரூ.15. நுழைவுவாயிற் செங்குத்து மேட்டில் ஏற்றி வாயிற்காவலனை இடிக்காமல் விட்ட என் திறைமைக்கு நிறுத்தக் கூலி ரூ.50 ஆனது. அங்கிருந்த சாப்பாட்டு மாலில்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்த குழந்தைக்கு இரண்டு மடங்கு விலையில் பாடாவதி உணவு கிடைக்கிறது. என்ன செய்ய?

    திருட்டு சி.டி. தயாரிக்கிற மனிதாபிமானிகள் வாழ்க.

    ReplyDelete
  6. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! அன்று அந்த இதயக்கோயிலை ரூ 1.25 க்குப் பார்த்தேன். இன்று ராவணனை ரூ. 100 க்குப் பார்க்கிறோம். சினிமாச் செலவு 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. தங்கம் 10 மடங்குதான் அன்றிருந்ததைவிட அதிகரித்திருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகபட்சம் 10 மடங்குதான் அதிகரித்திருக்கிறது. கேட்பார் யார் ?

    ReplyDelete
  7. // FCFS முறைப்படி //

    :))))

    ReplyDelete
  8. வெயிலான் ! அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்.

    ReplyDelete