Tuesday, August 3, 2010

மொழியின் துல்லிய உலகம் - சுப்ரபாரதிமணியன்

மொழியின் துல்லிய உலகம்

சுப்ரபாரதிமணியன்

எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், குறும்படக் கலைஞர்கள் - தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன. இந்நகரின் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் படைப்பில் பிரதானமாக வந்து போவார்கள்.

இந்நகரிலிருந்து இயங்கும் கவிஞர் மகுடேசுவரனின் படைப்புகளிலும் இவ்வூர்த் தன்மைகள் மிகுந்திருப்பதும் கதை மாந்தர்கள் இவ்வூரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும் இயல்பான ஒன்றுதான்.

மகுடேசுவரனிடமிருந்து இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பூக்கள்பற்றிய தகவல்கள்’-ஐ நான் தான் கனவு சார்பாக வெளியிட்டேன். அது மிக முக்கியமான தொகுப்பு. வெளிவந்ததும் அத்தொகுப்பு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட்து. சுஜாதா உள்ளிட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அத்தொகுப்பை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். கமல்ஹாசன், இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வசந்த் போன்றோர் அத்தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அதற்குப் பின்பு அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக் கடும்புனல், மண்ணே மலர்ந்து மணக்கிறது, இன்னும் தொலையாத தனிமை என இதுவரை அவர் ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து பொதுவாக தமிழ்ச் சூழலின் கவிதையுலகம் பற்றியும் மகுடேசுவரன் கவிதைகளின் ஆதார மையம் பற்றியும் பேசுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

கவிதைகளின் இயங்குதளம் மொழியாகவே இருக்கிறது. நடையும் மொழிநேர்த்தியும் கைகூடிவருமிடத்திலிருந்தே கவிதை பிறக்கிறது. தனக்குக் கைவந்த அத்திறனிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்வதற்கோ, தான் உணர்ந்த வலியை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ கவிதைகள் கதைகளை எழுதுகிறார்கள். மகுடேசுவரன் தன் படைப்புலகைக் கவிதைகளில் ஆரம்பிக்கிறார். நானும் கவிதையில்தான் ஆரம்பித்தேன். கவிதையிலிருந்துதான் கதைகள், நாவல்கள் என்று வெவ்வேறு படைப்புகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

மகுடேசுவரன் தன்னுடைய ஆறு தொகுப்புகளில் என்ன மாதிரியாக இயங்கியிருக்கிறார் – அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மை என்ன – அவர் தன் கவிதைகளுக்காக எடுத்தாளும் பாடுபொருள்கள் எவையாக இருக்கின்றன - என்பன குறித்தெல்லாம் பார்க்கலாம்.

கவிதைக்கான முக்கியமான மூலதனம் மொழியும் சொந்த அனுபங்களும் தாம். அதிலும் மொழிக்கே பிரதான இடம். இப்பொழுதுங்கூட கடந்த நூற்றைம்பது வருடங்களாக உலகில் ஏராளமான மொழிகள் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அந்தமானில் ஒரு மொழி அழிந்துபோய்விட்டதாக அறிகிறோம். தமிழைச் செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உலகிலுள்ள அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

எதுவாயினும் நமக்கான ஒரே தொடர்பு சாதனம் மொழிதான். மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமேயன்று – அது ஒரு கலாச்சார ரீதியிலான கூர்மையான ஆயுதம். கலாச்சாரத் தளத்தில் படைக்கும் பணியைச் செய்பவர்கள் கையில் அதன் வலிமை இன்னும் இன்னும் அதிகம்.

கவிதைத் தொகுப்புகள் தற்சமயம் மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரண்டாயிரம் இரண்டாயிரத்து ஐந்திற்குப் பிறகு தமிழ்க் கவிதைகள் உலகத் தரத்திற்கு ஈடாக எழுதப்பட்டு வருகின்றன. இதுவரை எழுதாத பாடுபொருள்களில் எல்லாம் கவிதைகள், கதைகள், நாவல்கள் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய இலக்கியங்கள் என்றால் முதலில் இந்தி இலக்கியங்களைச் சொல்வார்கள். அதோடு அதிகபட்சம் வங்காள இலக்கியங்களைச் சொல்வார்கள். ஆனால், இன்று இந்திய இலக்கியங்களை அடையாளப்படுத்தத் தமிழைப் புறந்தள்ளி யாரும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய மாறுதல் !

ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பண்டிதர்கள்தாம் கவிதை எழுதினார்கள். பா வடிவிலான அவற்றில் எதுகை மோனை சீர் சந்தம் அடி தளை என யாப்பு முன்வைத்த வடிவத்தில் அவற்றை எழுதினார்கள். பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத புதுக்கவிதை தோன்றியது. அதன் தோற்றமே எல்லாரும் கவிதை எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. இப்பொழுது சாதாரண கையடக்கக் கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் போல, எண்பதுகளில் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டங்களில் வீட்டுக்கொரு மரம் இருந்ததைப் போல வீட்டுக்கொரு கவிஞர் இருந்தார்.



எளிமை என்பதற்காக எழுதுவதெல்லாமே கவிதையாகிவிடுகிறதா என்றால் இல்லை. நாம் சாதாரணமாக உரையாடுகிறோம் – அது கவிதையாகிவிடுமா என்றால் ஆகாது. புதுக்கவிதை எளிமையின் வழியாக அடையப்படவேண்டிய இறுக்கமான கட்டுமானம். அங்கே மொழி சுண்டக் காய்ச்சப்பட்ட பால்.

இன்று கவிதைகள் நிறைய எழுதப்படுகின்றன. எழுதுகிற எவரேனும் மொழி குறித்த அக்கறை கொண்டிருக்கிறார்களா என்றால் வருத்தமே எஞ்சுகிறது. கவிதை வெளிப்பாட்டு முறைகளில் காட்டப்படும் மேதைமை கவிதைக்கு மிகவும் பிரயோஜனமானது.

இன்றைய வாழ்க்கை மிகவும் இறுக்கம் நிரம்பியதாகவே இருக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்து எழும் கவிதைகள் மேலும் இறுக்கம் கொண்டதாக இருக்கவேண்டுமா, அல்லது சாதாரண எளிமையோடு இருந்தால் போதுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படியாயினும் மொழி மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சலுகை எதுவும் இல்லை.

மக்களிடத்தே புழங்குகிற அதே மொழியை இலக்கியமாக்குவதில் முதன்மையாக வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறவை முன்னால் நிற்கின்றன. மக்கள் வாயிலிருந்து விழுகிற அதே சொற்களை அப்படியே பயன்படுத்தி ஏராளமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மொழியினை அதே கவிச்சத்தோடு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லாமலில்லை.

இன்னொரு தரப்பில் கனவுகள், நனவுநிலைகள், அதீத எண்ணங்கள் போன்றவற்றைச் சொல்வதற்கு மிகச் சிக்கலான மொழியையே பயன்படுத்துகிறார்கள். மொழியின் இலக்கண அழகுகளைக் கெடுக்காமல் யார் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழை அறிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் பழைய ஆள்களாகவே இருப்பார்கள். கண்ணதாசன் வாய்மொழிச் சொற்களை - அது சினிமாப் பாடலாக இருந்தாலும் கூட - இலக்கிய வடிவமாக்கிப் பயன்படுத்துவார். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற மொழிப் பேராசிரியர்கள் மரபையும் அறிந்து புதுக்கவிதை எழுத வந்தவர்கள் ஆதலால் இருவகைப் போக்குகளையும் உணர்ந்து எழுதுவார்கள். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவிதையைச் சந்த ஒழுங்குக்கு உட்படுத்தி எழுதினார்கள்.

மகுடேசுவரன் தன் கவிதையில் மொழியைச் செறிவாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துகிறார். மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்று தமிழைப் பாடமாகப் பயிலவில்லை. ஆனால், அவரிடத்தில் கவிதை குறித்து கனமான அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையே அவரை மொழியை வல்லமையோடு பயன்படுத்துபவராக மாற்றியிருக்கிறது. அதனால் சொற்களை மிகக் கவனத்தோடு பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். நகைசெய்பவர்கள் எப்படி ஒவ்வொரு வளைவையும் நெளிவையும் நிதானித்துச் செதுக்குவார்களோ அத்தகைய துல்லியத்தோடு இருக்கும் அது. இதை நகாசு வேலை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், மொழியை அதன் துல்லிய பதச்சேர்க்கைகளைக் கொண்டு அமைப்பதால் - மரபில் உள்ள புலமையைப் போதிய விகிதத்தில் கலப்பதால் - உருவாகும் கவிதை பலமுள்ளதாகவே இருக்கிறது.

என்னை எடுத்துக்கொண்டால் நான் கல்லூரியில் முதுகலைக் கணிதம் பயின்றவன். நான் மொழியை இந்தளவு நுணுக்கங்களோடு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை. நான் தமிழைப் பாடமாகவும் படிக்கவில்லை. மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார் என்றறியும்போது - அது இந்தக் காலகட்டங்களில் எளிதான ஒன்றாக எனக்குப் படவில்லை. அவருடைய கவிதைகளைப் படித்திருப்பவர்களுக்கு நான் கூறுவது நன்கு பிடிபடும்.

இதற்கு இன்னொருபுறத்தில் வேறு நிலைகளும் இருக்கின்றன. இப்பொழுது பெண்கள் கவிதை எழுத வந்திருக்கிறார்கள். தலித்துகள் எழுத வந்திருக்கிறார்கள். அரவாணிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களிடம் இத்தகைய நுட்பங்களையும் மொழிப் புலமையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்தத் தலைமுறையில்தான் எழுதப் படிக்கவே அறிந்தார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இலக்கணம் இருக்காது. நாம் வகுத்துவைத்திருக்கும் இலக்கணங்களிலிருந்து முற்றிலும் பிழைபட்டதாகவே இருக்கும். ஏதாவதொரு வகையில் தங்கள் நிலையை, கருத்தை, படைப்பைப் பதிவு செய்ய முன்வந்திருக்கும் அவர்களிடம் நாம் அவரகளுடைய குரல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவும் கூடாது. சில தேர்ச்சிகளைக் காலப்போக்கில் அவர்களும் அடைந்து விடுவார்கள் என்றும் இருந்துவிடலாம்.

மகுடேசுவரன் ஒரு விஷயத்தைப் பல்வேறு முனைகளிலிருந்து எழுதிப் பார்க்கிறார். சிலர் தங்கள் கவிதையை ஒரே மாதிரி வார்த்ததுபோல் எழுதிக்கொண்டிருப்பார்கள். அப்படியல்லாமல் எல்லா வகை மாதிரியும் எழுதத்தானே வேண்டும் ? ஒரு படைப்பாளி தீண்டாமல் விட்டுவைத்த வடிவம், சொல்முறை என்றிருப்பதை நாம் அவனது பலம் என்று கொள்ள முடியாது. மகுடேசுவரன் கவிதைகளில் எல்லா வகை மாதிரிகளையும் காண முடியும். ஒரு சிலவற்றை நாட்டுப் புறப் பாடல்களில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிராக தூய இலக்கண வடிவத்திலும் எழுதியிருக்கிறார். கொஞ்சம் இருண்மை கலந்து எழுதும் அதேநேரம், அதிக எளிமையுடனும் எழுதுகிறார். கதையாகும் பொருள்களைக் கவிதையாக்குகிறார். நகைச்சுவையும் அங்கதமும் எழுதுகிறார். காமக்கடும்புனலில் காமத்தைப் பாடுபொருளாக்கி நானூறு கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தற்போது பழைய அற இலக்கியமான திருக்குறள்களை நவீன கவிதை வடிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர்கள் பலரும் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவார்கள். அவர்களுடைய எழுத்துக்கு வலிமை சேர்க்கும் பயிற்சியாக அம்முயற்சியை அமைத்துக்கொள்வார்கள். அந்த இலக்கியங்களை ஒருவர் ஆழ்ந்து அணுகுவதற்கு இதைவிடச் சிறந்த வேறுமுறைகளே இல்லை எனலாம். மு. வரதராசன், சுஜாதா போன்றவர்கள் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றின் வழியாக அந்த எழுத்தாளர்கள் அந்நூல்களை எவ்வாறு அணுகினார்கள், அவர்களின் பார்வைகள் எப்படிப்பட்டனவாக இருந்தன என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இறுதியாக, மகுடேசுவரன் கவிதைகளின் பிரதான அம்சங்கள் என - துல்லியமான செறிவான மொழி, கூறும் முறைகளில் பல்வேறு சாத்தியப்பாடுகளின் இயக்கம், தான் வாழும் உலகின் அத்தனை கீழ்மைகளையும் சமரசமின்றிப் படைப்பாக்கும் தன்மை - ஆகியவற்றைக் கூறுவேன்.

எழுத்தாளன் காலத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறவன். அவன் படைப்புகள் அவன் நடமாடிய உலகத்தின் மறுக்கமுடியாத ஆவணங்களாக மாற்றம் கொள்ளும். இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் மனித உறவுகள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றன. உலகமயமாக்கலின் கோரப் பிடிக்குள் நமது அன்றாடப் பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது. மக்கள் சங்கமாக ஒன்றுகூடித் தங்கள் முழக்கங்களை முன்வைத்த சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாகி அலைகிறோம். தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டவர்களாக தொழிலாளர் வர்க்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதன் என்றைக்கும் இல்லாத அளவு வன்முறைக்கு இலக்காகிறான். எங்கும் ஊழல்மயமாகி மாறாத மதிப்புடைய விழுமியங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட மூச்சுத் திணறடிக்கும் சூழலில் படைப்பாளிகளாகிய நாம் பிடிவாதத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே ஆறுதல்தான்.

  • (கடந்த 18.07.2010 அன்று திருப்பூர் வழக்கறிஞர் சங்கமும் கனவு இலக்கிய வட்டமும் சேர்ந்து நடத்திய புத்தக விமர்சனக் கூட்ட்த்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

7 comments:

  1. அற்புதமான உரை. ஆயினும் அவர் பேச்சில் சமூகம் வாழ்க்கை பற்றிய ஒரு வலி/ வருத்தம் தொனிக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி மகுடேசுவரன்.

    ReplyDelete
  2. அந்த வலி நம் எல்லாருக்கும் பொதுவானதுதானே, மோகன்குமார் !

    ReplyDelete
  3. தெளிவான பார்வை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன.

    உணர்ந்தவர்கள் எத்தனை பேர்கள்?

    ReplyDelete
  5. மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார்

    இது புதிய செய்தி. அனுபவத்தை விடவா கல்வியறிவு கற்றுத் தரமுடியும்?

    ReplyDelete
  6. ஜோதிஜி ! நான் +2 கடைசிப் பரீட்சை முடிந்ததற்கு மறுநாள் வேலைக்குப் போய்விட்டேன். பிறகு சில ஆண்டுகள் கழித்து இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துவைப்போமே என்று ஒரு பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வியில் சேர்ந்தேன். வந்து சேர்ந்த பாடப்புத்தகத்தில் புதுக்கவிதை வரலாற்றுப் பகுதியில் என் பெயர் இருந்தது. அந்தக் கணம் இலக்கிய படிப்பு படிக்கலாம் என்கிற என் எண்ணத்தைக் கைவிட்டேன்.

    ReplyDelete
  7. நல்லதோர் பகிர்வு கவிஞரே . மிக்க நன்றி

    ReplyDelete