ஒரு காதல் தோன்றியிருக்கிறது
அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது
அது தன்னை
யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது
அதற்காக
ஒரு பாடலாக உருமாறி
காற்றின் நாளங்களில் பரவியலைந்தது
ஒருவரும் செவிமடுக்கவில்லை
அது தன்னை
யாருக்கேனும் தின்னத் தரவும் தயாராக இருந்தது
அந்தக் காதல்
தன்னை ஒரு கரும்புத் தண்டாக மாற்றிக்கொண்டு நின்றது
ஒருவரும் அதைக் கடித்துறிஞ்சவில்லை
அது தன்னை
யாருக்கேனும் முழுதாகக் காண்பிக்க முன்வந்தது
அதற்காகவே
தன் ஆடைகளைக் களைந்து நடந்தது
அதன் பித்துநிலை கண்டு
அனைவரும் அஞ்சியோடினர்
அது தன்னை
யாருக்கேனும் விற்று ஒழியப் பார்த்தது
ஒரு விலைமகளாக
கடைத்தெரு மூலையில் காத்திருந்தது
ஒரு ரோகிகூட விலை வினவவில்லை
ஒரு காதல் தோன்றியிருக்கிறது
அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது
காதலின் பயணம் அருமை. இன்னமும் தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்
ReplyDeleteபெரும்பாலான காதல்கள் தன்னைச் சொல்லும் வலிமையற்றதாகவே இருக்கின்றது.
ReplyDeleteநன்றி வேல்கண்ணன் !
ReplyDeleteகொல்லான் ! உங்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரம், போன பதிவின் பாதிப்பினால், உங்கள் வாக்கியத்தை உங்கள் அனுமதியோடு பிழை நீக்கி அமைக்கும் ஆவல் பற்றிக்கொண்டுவிட்டது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும் - என்பதால்.
பெரும்பாலான காதல்கள் தம்மைச் சொல்லும் வலிமையற்றனவாகவே இருக்கின்றன.
நன்றி கவிஞரே.
ReplyDelete/ யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது /
ReplyDeleteஅனைவரும் இப்படி தான் இல்ல அண்ணே?
கவிதை அழகு........
வினோ...
ReplyDeleteயாரிடமும் சொல்லமுடியாமல்
சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் துக்கத்தில் சுருளும்
மௌனத்தில் புரளும
காதல்கள்தாம் எத்தனை எத்தனை !
சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் இருப்பது தான் வேதனை...
ReplyDeleteகவிதை அழகு.
ReplyDeleteமகுடேசுவரன்,
ReplyDeleteஆமாம். இங்கே ஆயிரமாயிரம் காதல் “இது காதல் தானா ?” என் உணரும் முன்னே கலைந்து விட்டிருக்கிறது.
நூற்றாண்டுகள் கடந்தும் காதலும், காதல் கவிதைகளும் பிறந்துக் கொண்டேயிருக்கும்.
உங்களின் “காமக் கடும்புனல்” நூல் வாங்கிப் படித்தேன். படி தேன்.
சரியாக சொன்னீர்கள் சத்ரியன். 'படி தேன்'. மேலும் படிக்க படிக்க ஒவ்வொரு கவிதையும் அள்ளித்தரும் பல படி தேன்(ஆங்காங்கே பல தேனீக்களும் உண்டு. அதனிடம் கொட்டுபட்ட அனுபவமும் எனக்குண்டு)
ReplyDeleteசத்ரியன், வேல்கண்ணன் ! நன்றி.
ReplyDeleteகவிதையின் மொழி எளிமைக்காகப் பாராட்டுகிறேன். பாடுபொருள் உணர்த்தும் தவிப்புக்காகவும்.
ReplyDelete'விலைமகள்' என்னும் சொல்லிடுகையால் என்னில் மிக வருத்தம் தோன்றுகிறது! 'விலை-மகள்/மகன் ஆக' என்று இட்டிருக்கலாம் அல்லது இருபாலையும் குறிக்கும் ஒரு வார்த்தையைக் கண்டுநிரப்பி இருக்கலாம். ஆண்பிறப்புப் பிறந்த எங்களுக்கு, அந்தோ, விற்று ஒழியக் காத்திருத்தலான இழிநிலை இல்லையா என்ன?
ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி., நீங்கள் சொல்வது சரிதான்.
ReplyDelete