Friday, July 9, 2010

கொஞ்சம் காதல் கவிதைகள்

  • என் உயிர்
உன் உறவுக்குளத்து நன்னீர் மீன் !
அது
அங்கன்றி
எங்கும் வாழாது !
உன் பிரிவென்னும் உப்புக் கடலில்
செத்து மிதக்கும்
உன் வெறுப்பென்னும் சேற்று ஏரியில்
துடித்துச் சாகும்

  • என் கண்கள்
உன்னைக் காண
பசித்திருப்பதில்லை
தனித்திருந்து விழித்திருக்கின்றன

  • என்னை உனக்கு
முழுதாகத் தந்துவிட்டேன்
திரும்பப் பெறத் தெரியாத டெபாசிடர்போல
’’ அதில் நூற்றிலொரு பங்காவது கொடு’’ என்கிறேன்

  • காதல்
சாதி மதம்
குலம் கோத்திரம்
நிறம் உயரம்
வயது வம்சம்
பார்க்காது !
காதல் பார்ப்பது
காதலை மட்டுமே !

  • நீயில்லாவிடில் இன்னொருத்தி !
அந்த இன்னொருத்தி
உன்னொருத்தி போலிருந்தால் போதும் !

  • உன் முத்தம் ஒரு மோசடி
அதைப்போல் பற்றாக்குறையான ஈகை
வேறொன்றுமில்லை

  • நீ நிறையப் பொய்கள் சொல்பவள்தானே...
உன் காதல்
ஒரு பொய்யாகவேனும் வேண்டும்

  • ’’என்னை
வெளியூர் அழைத்துப் போகச் சொன்னால்
எவ்வூர் அழைத்துப் போவாய் ?’’ என்றாய்

”என் கிராமத்திற்கு அழைத்துப் போவேன்’’ என்றேன்

’’ஏன்... அங்கு அதிசயம் எதுவும் உள்ளதா ?" என்றாய்

“ஆம்.
தன் மருமகளின்
உச்சி தடவி
அன்பைப் பொழிய
ஓர் ஏழைத்தாயின்
இடுங்கிய கண்கள் இரண்டு
அங்குள்ளன’’ என்றேன்.

  • நாம் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டால்
நாம் சந்தித்த மரத்தடியில்
நடுகல்லாகப் புதைந்திருப்பது
நானாகத்தான் இருப்பேன் !

14 comments:

  1. காதல்லுனு வந்துட்ட கவிதை எப்படிதான் வருது தெரிலப்பா...

    ReplyDelete
  2. காதல் வந்தால் கவிதை என்ன காவியமே படைக்கலாம் . கவிதைகள் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  4. ஆகா! நாங்களுந்தாம் மனுசனாப் பொறந்து காலத்தெ ஓட்டிட்டோம்; காதல்ல விழுந்து இப்படிப் பிழிவோ புண்ணாக்கோ ஆகலையே!

    ReplyDelete
  5. // * உன் முத்தம் ஒரு மோசடி

    அதைப்போல் பற்றாக்குறையான ஈகை
    வேறொன்றுமில்லை //

    :-) அருமை. நீங்க தாராளமா குடுங்க!

    ReplyDelete
  6. நல்லாருக்க்குங்க.

    ReplyDelete
  7. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  8. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! தாங்கள் பிழிபடவே இல்லை என்று சொல்லிவிட்டீர்களே... தகுமா ? நாடோடித் தடத்தை வாசித்த நான் ஏற்கமுடியுமா ?

    மற்றும் நண்பர்களே ! உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் !

    பனித்துளி சங்கர் ! ஏதோ ரிப்பேர் வேலையைச் செய்யச் சொல்லியிருக்கிறீர்கள்.. பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. //ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! தாங்கள் பிழிபடவே இல்லை என்று சொல்லிவிட்டீர்களே... தகுமா ? நாடோடித் தடத்தை வாசித்த நான் ஏற்கமுடியுமா ?//

    :-))

    என்னண்ணே உங்க பதில்?

    ReplyDelete
  10. அம்மியில, உரல்ல, ஆலையில விழுந்து பிழிபடுறதுக்குப் பேரு அலைக்கழிப்பு. 'காதல்ல விழுந்து' கன்றலையே கனியலையே, தம்பிகளா!

    ReplyDelete
  11. சார்! உங்க கவிதை நல்லாருக்கு. உங்க கவிதைகள் முன்னாடியே விகடன்ல படிச்சிருக்கேன். அந்த மகுடேச்வரன் தானே நீங்க

    ReplyDelete
  12. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! எல்லா ஈடுபாடும் கடைசியில் விழிக்கடையில் நீர் திரளும் நிலைமையைத்தாம் தருகின்றன. என்ன செய்வது..!

    பனித்துளி சங்கர் ! தாங்கள் சொன்ன பழுது நீக்கப்பட்டுவிட்டது.

    க.நா.சாந்தி லெட்சுமணன் ! நான் அதே மகுடேசுவரன் தான்.

    ReplyDelete
  13. இந்த மழையில்
    குளிர குளிர நனைகிறேன்,
    வராமலே போகலாம்
    இன்னொரு மழை
    என்ற கவிதை மூலம் அறிந்து உங்களை வாசித்திருக்கிறேன். அழகான கவிதைகள். மேலும் பல பதிவுகள் இணையத்திலும் வரும் என நம்புகிறேன். :)

    ReplyDelete
  14. மதன் ! உங்கள் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படும்.

    ReplyDelete