Friday, July 23, 2010

புறங்கூறாமை



புறங்கூறாமை


நேரில் இல்லாதார்பற்றி

நிறையழியப் பேசுவோர்

ஊருக்கு நூற்றுவர்

முகத்தின்முன் ஒன்றாக

முகத்தின்பின் வேறாகப் பேசுவோன்

அகமெல்லாம் அழுக்கு

இல்லாத ஆள்குறித்துப்

பொல்லாது சொல்பவன்

மனிதக் கீழ்மையின் நாயகன்

நேர்நின்று காறியுமிழலாம்

புறம்போய்ச் செய்யலாமா

புன்னகை ?

புறஞ்சொல் வல்லாரை

அறவோரின் அறிவு

அப்படியே அறியும்

புறங்கூறித் திரிபவனின் மறுபுறம்

வௌவால்கள் தொங்கியுறங்கும்

பாழிடம்

உவந்து உள்ளம் களிக்கும் நட்பை

புறங்கூறுவோன்

என்றும் பெறத் தெரியாதவன்

உடனிருந்து புறம்சொல்பவனால்

தோழர்கள் தொலைவர்

பெருகுவர் எதிரிகள்

புறங்கூறிக் குடிகெடுத்தோன்

மண்ணுக்குப் போகுமுன்

மனப்பிணியுற மாட்டானா ?

மாற்றானைத் தூற்றும்முன்

மனக்கண்ணாடியில் கண்டாயா

உன்னழகை ?

3 comments:

  1. // நேர்நின்று காறியுமிழலாம்

    புறம்போய்ச் செய்யலாமா

    புன்னகை // அற்புதம்..தொடர்ந்தற்கும்,தொடரப்போவதற்கும்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. புறங்கூறுபவர்களின்
    முகத்தில் உமிழ்ந்திருக்கிறீர்கள்.

    மிக நன்று.

    ReplyDelete
  3. //மாற்றானைத் தூற்றும்முன்
    மனக்கண்ணாடியில் கண்டாயா
    உன்னழகை ?//

    நச்.....

    ReplyDelete