வான்சிறப்பு
வானம் வள்ளல் என்பதால் வழங்கவில்லை
நாம் அதன் பிள்ளைகள் என்பதால்
பெற்றுக்கொள்கிறோம்
உணவை ஆக்கி உணவும் ஆகும் மழையே !
நீ உயிரை ஆக்கி
உதிரத்தை ஊட்டும் எம் தாயே !
பசிப்பிணி கண்டு
புதுவழிகாணப் புறப்படுவோம் எனத்தானே
நீ பொய்த்துப்போகிறாய் !
எமக்கு ஏர்செய்யத் தெரியும்
மழையே உனக்கு மட்டுமே
நீர் செய்யத் தெரியும்
பெய்து கெடுப்பாய்
பெய்யாமலும் கெடுப்பாய்
கொடுத்துக் கெடுத்தது போதும் என்றா
கெடுத்துக் கொடுக்கிறாய் ?
புல்லிதழ் ஒரு துளி மழையால் துளிர்த்ததென்றால்
மண்ணுயிர்கள் மீது
எத்தனை மாக்கடல்கள் பொழிந்திருக்கும் !
முகில் வற்றும்போது கடல் வற்றும்
கடல் வற்றும் அன்றே
நம் காலம் முற்றும்
உழவுச் சேற்றில்
மிதிபடவே விரும்பும் உன்னை
வழிபடும் தகுதி எமக்குண்டா ?
நீ வானிலிருந்து வந்துகொண்டிருப்பது
எல்லாரும் ஏய்த்துச் சென்ற எம்மை
ஏய்க்க மனமில்லாமல்தானே !
புகைப்போக்கி பொத்துக்கொண்டிருந்தாலும்
பகைப்போக்கில் செல்லாத பண்புருவே
பணிந்தோம் யாம் !
கவிஞரே,
ReplyDeleteமீண்டும் சொல்கிறேன், 'திருக்குறள் வகுத்த வழியிற் புதுக்கவிதைகள்' என்று குறிப்பிடுவதே சரி:
'நாம் அதன் பிள்ளைகள்..', 'உயிரை ஆக்கி உதிரத்தை ஊட்டும் தாய்', 'நாங்கள் புத்தராகப் புறப்படட்டும் என..', 'உழவுச் சேற்றில் மிதிபடவே விரும்பும் உன்னை..', 'எல்லாரும் ஏய்த்துச் சென்ற எம்மை ஏய்க்க மனமில்லாமல்..' இப்படி ஒன்றுக்குள்ஒன்றாக உறவாடும் உங்கள் கோணமும், 'இன்றியமையாதது' என்று தள்ளி நின்று எச்சரிக்கும் வள்ளுவர் கோணமும் வேறுவேறு அல்லவா?
ஆகட்டும் அண்ணாச்சி ! முதலில் பிள்ளை பெறுவோம், அப்புறம் பெயர் வைப்போம். அதுவரைக்கும் எல்லா வகையான விமர்சனங்களையும் திறந்த மனதோடு எதிர்கொள்கிறேன்.
ReplyDelete:)
Deleteபெய்து கெடுப்பாய்
ReplyDeleteபெய்யாமலும் கெடுப்பாய்
கொடுத்துக் கெடுத்தது போதும் என்றா
கெடுத்துக் கொடுக்கிறாய்// நன்று..கூடிய விரைவில் பதிப்பாக வருமெனில் இதையே தமிழ் பாடவகுப்பில் புதுக்கவிதையை மாணவர்க்கு இரண்டையும் ஒப்பிட்டு புரிதலைச் சற்று எளிமையாக்கலாம்.
கவிதைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன மகுடேசுவரன். இவை திருக்குறள்களை மிமிக்கிரி செய்யவில்லை... அவற்றின் பேரக்குழந்தைகளைப் போல இருக்கின்றன... வாழ்த்துக்கள்.
ReplyDelete- சார்லஸ்
"முகில் வற்றும்போது கடல் வற்றும்"
ReplyDeleteதிருத்தப்பட வேண்டியது. அறிவியல் கூற்றுப்படி கடல் பெற்ற குழவியே முகில். அப்படியிருக்க "முகில் வற்றும்போது எப்படி கடல் வற்றும்"
மாற்ற வேண்ட்ய சொல்லாடல்.....
http://www.facebook.com/rsg.suresh