Tuesday, July 6, 2010

உதடுகள் உதடுகளுக்குத் தரும் கொடை

உதடுகள் உதடுகளுக்குத் தரும் கொடை

ஒன்று ஒன்றாகத் தந்தபடியிருந்தேன்

உதடுகள் உதடுகளுக்குத் தரும் கொடையை !

நரம்புக் குழல்களில் நறுமணமாய் ஏறிற்று

உன் ஏளனப் பார்வை

உன்மத்தத்தின் புதுப்புனல்

வன்மத்தின் படுகையில்

பெருக்கெடுத்தது

கரைகளில் பூத்திருந்த கதலிகள்

கணுவெல்லாம் வெடித்து மதுவைச் சொரிந்தன

உன் மௌனத்தின் மணற்பரப்பை

முனகி முனகி அரித்தது பெருவெள்ளம்

மோதும் பேரழுத்தத்தில்

பிடி தளர்ந்துகொண்டிருந்தன

உன் பாசாங்குப் பாறைகள்

அவை தம் வேர்களை முற்றாகத் துண்டித்துக்கொண்டு

நீரோட்டத்தில் புரண்டு படுத்தன

முடிவில்

மாணிக்கப் பரல்களாக

உன் மடியெங்கும் நிறைந்தன

புதுப் புதுக் கூழாங்கற்கள் !

7 comments:

 1. ரொம்ப நாள் கழிச்சு, பழைய பெயர்கள் சில கண்டெடுத்தேன் மகுடேசுவரன்.கணையாழி, சுபமங்களா, புதியபார்வை, மகுடேசுவரன்!

  (குதிரை வீரன் பயணம், அன்னம் விடு தூது, கவிதாச்சரண், போன்ற பழைய முகம் இன்னும் தட்டுப் படல. தட்டுப் படும். எங்க போயிரப் போது எல்லாம்?)

  காலம், எங்காவது போய் விடுகிறதா என்ன?

  இணையத்திற்கும், வெயிலானுக்கும் நன்றி!

  ReplyDelete
 2. அன்புமிக்க பா. ராஜாராம்..,
  கணையாழி என்ற சொல் இலக்கிய உலகில் மகத்தான மந்திரச் சொல்தான். அதில் இயங்கிய படைப்பாளிகளுக்கு உள்ள மரியாதை எக்காலத்திலும் மங்குவதில்லை. அவர்களைப் போன்ற தகைமை உள்ள இலக்கியவாதிகளை இன்று காணமுடிகிறதா என்ன ?

  ReplyDelete
 3. கவிஞரே,

  மேய்ச்சல் வெளியூடே உங்கள் வலைத்தளத்தில் தடுக்கி விழுந்தேன். உவகையால் நிறைந்தேன். இனிப் புதையல் எடுப்பேன். வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. அன்பிற்கினிய ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி..,

  என் எளிய இணையதளத்திற்குத் தாங்கள் புரிந்த வருகை குரூபியின் குடிசைக்கு மேனகை வந்ததற்கு நிகராகும். வருக வருக என்று வரவேற்கிறேன். தங்களைப் போன்றவர்கள் வாசிக்கின்றீர்கள் என்ற பொறுப்புடனும் தகுதிவாய்ந்தனவற்றையே தளத்தில் இடவேண்டும் என்ற விருப்புடனும் இயங்குவேன்.
  நன்றிகள் பல !

  ReplyDelete
 5. வாழ்க! கவிஞரே, மேனகை என்றெல்லாம் புகழ்ந்து விஸ்வாமித்திரர்கள் திக்கம் அனுப்பிவிடாதீர்கள். என்ன இவ்வளவு குறைவாக எழுதி இருக்கிறீர்கள்? 'ஒரு கவிஞன் எழுதவேண்டிய மகத்தான கவிதை வாழ்க்கை' என்கிற தெளிவினாலா?

  'உதடுகள் .. .. கொடை' காட்டும் காமக் கடும்புனல் ஓவியம்... கதலிகள் வெடித்துச் சிதறுவதும், மணற்பரப்பை முனகி முனகி அரிப்பதூஉம், பாறைகள் புரண்டு படுப்பதும், ஆகா!

  நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 6. அன்பிற்கினிய ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி.,

  கவிதை மீதான தங்கள் பாராட்டுரைக்கு நன்றிகள் !

  ஆமாம். தாங்கள் கூறுவதுபோல சற்றுக் குறைவாக இணையத்தில் எழுதியிருக்கிறேன். ஏனென்றால், என்னை நிரூபிப்பதற்காகவோ, அடுத்தவனைச் சாய்ப்பதற்காகவோ, இன்னொருவனை முந்துவதற்காகவோ, இணையவழித் தொடர்புகளின் லாபங்களுக்காகவோ நான் வெறிகொண்டு எழுதித் தள்ளுவதில்லை. என்னை எனக்குத் தெரியும். தங்களைப் போன்ற பெருங்கவிக் கிழார்களுக்கு என்னை மிக நன்றாகத் தெரியும். நிறைவுணர்ச்சி வந்துவிட்டால் பிறவுணர்ச்சிகள் ஏதாம் ? அதனால் அடக்கி வாசித்திருந்தேன்.

  மேலும், தங்களைப் போன்றோரின் அறிவுரைகளையும் மனதில் கொண்டு கூடுதலாகவே எழுத முயல்கிறேன். நன்றி !

  ReplyDelete