ரமேஷ் வைத்யா இதைக் கேட்டு வைத்ததாகத் திருப்பூர் பதிவர் சந்திப்பின்போது பரிசல்காரன் கூறினார். அந்தக் கேள்வியிலிருந்து நாங்கள் வேறொரு சிரிப்புப் பேச்சில் திசைமாறிச் சென்றுவிட்டாலும் இதற்கு உரிய பதிலைச் சொல்லியாகவேண்டிய கடமை எனக்கிருப்பதாக உணர்ந்தேன்.
ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.
சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.
சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.
ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.
ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !
முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.
போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.
தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.
ஆஹா ... அருமை. மிகுந்த நன்றியும் கூட. அதிலும் இறுதி இரண்டு வரிகளில் சொன்னவிதம் மிக அற்புதம். மீண்டும் மிகுந்த நன்றியும் அன்பும்.
ReplyDeleteமிக்க நன்றி. என்னிடமும் கேட்டார். ஏதேதோ யோசித்து என்ன என்னவோ பதில் சொல்லி வைத்தாலும் உங்களின் பதில் இனி மனதில் நிற்கும்.
ReplyDeleteநன்றி.
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய//
ReplyDeleteஉண்மைதான். ஆனால், இவற்றை ஆரம்பப் பள்ளிகளிலேயே தொடங்க வேண்டும். இன்றைய கல்வி முறை ? கேள்விக்குறிதான்.
நன்றி மகுடேஸ்வரன் அவர்களே!
ReplyDeleteதிரு மகுடேஸ்வரன் ஆகிய உங்களை.........
என் போன்ற........
இப்படி ஒற்றைப்படையில் குறிப்பிடும்போது உபயோகப்படுத்தலாமா?
எழுத்தாளரும் நண்பருமான ச.நா.கண்ணன் ட்விட்டரில் இதற்கான விளக்கத்தை எனக்களித்தார். இந்த வாரம் நான் அதை பதிவிலெழுத இருந்தேன்.
ReplyDeleteதங்களுக்கும் நன்றி.
அந்த கடைசி வரி பதிவிற்கு கன கச்சிதம்!
ReplyDelete'ஆகிய', 'முதலிய' இவற்றின் பயன்பாடு பள்ளிப்பாடங்களில் படித்ததுதான். இற்றை எழுத்தாளர்களில் பலர் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக ஹிந்தி, பிரெஞ்சு என்று மொழிப்பாடம் தேர்ந்து படித்தவர்களாக இருக்கலாம்.
ReplyDeleteதி.மு.க. வலைத்தளத்தில் என்று நினைக்கிறேன், எளிய நடையில், சுருக்கமாக எழுதப்பட்ட இலக்கண நூல் ஒன்று இருக்கிறது. பயன் தரலாம்.
கூடுதல் தகவல் கொடுத்தமைக்கு ராஜசுந்தரராஜன் - க்கு நன்றி
ReplyDeleteமுரளிகுமார் ! இந்த ஒருமை பன்மை விவகாரம் குறித்து நூறு பதிவுகள் எழுதலாம். தமிழில் அத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றன.
ReplyDelete‘மகுடேசுவரன் அவர்களே !’ என்றெழுதினால் பிழை. மகுடேசுவரன் ஒருமை. அவர்கள் பன்மை. ‘மகுடேசுவரனார் அவர்களே !’ என்றெழுத வேண்டும். இங்கேதான் மகுடேசுவரனார் பன்மை. அவர்களே-வும் பன்மை.
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்பது பிழை. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார் - என்பதுதான் சரி. அல்லது ‘என் படுக்கையறையில் யார்யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்பது சரியாகும். சொற்றொடரின் பிழையற்ற பயன்பாட்டில் அந்தக் கவிஞன் உணர்த்த விரும்பிய அர்த்த உலகே வரவில்லை.
ஆயிரம் பெண்மை மலரட்டுமே !
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே !
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் - என்பது கண்ணதாசனின் பாடல். ஒவ்வொரு பூக்களுமே’ என்றெழுதி தேசிய விருதும் வாங்கப்பட்டுவிட்டதால் தமிழ் இலக்கணங்கள் யாவும் ஓலைச் சுவடிகளுக்குள்ளேயே அழிந்து போய்விட்டனவோ என்னும் ஐயம எனக்கிருக்கிறது.
திரு. மகுடேசுவரன் ஆகிய உங்களை - என்றால் ‘மகுடேசுவரன், கவிஞன், மொழியறிஞன், என் நண்பன்’ என்றெல்லாம் ஆகிய உங்களை - என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
என் போன்ற... - என்றால் ‘என்னை, வெயிலானை, பாற்கடல் சக்தியை, பரிசல்காரனைப் போன்ற - என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இவற்றில் ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றனவாதலால் இப்போதைக்கு எளிய புரிதலொன்றில் உறுதியாக இருங்க.
ஒருமைப் பெயர்களுக்கு ஒருமை வினைமுற்றுகளை ப் பயன்படுத்துங்கள். பன்மைப் பெயர்களுக்குப் பன்மை வினைமுற்றுகளைப் பயன்படுத்துங்கள். இதில் உறுதியாக இருந்தால் போதும்.
ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி.,
ReplyDeleteசமயத்தில் ஙி ஙீ ஙு ஙூ ஆகிய எழுத்துகளைத் திடீரென்று தனியாகப் பார்த்தீர்களானால் நாம் முன்பின் பார்த்தேயிராத எழுத்துகளைப் போலவே தோன்றும். ஏதோ இந்தி எழுத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். திருவள்ளூர் என்ற ஊர்ப்பெயரில் ளூ என்ற எழுத்தை திருவள்ளூர் இரயில் நிலைய மஞ்சள் பலகையில் எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் தெரியுமா ? நூ என்ற எழுத்தில் ’ஊ’காரத்தை உணர்த்த அடியிலிருந்து வழித்து ஒட்டியதைப்போல ஒரு கால் போடுவோமில்லையா, அப்படி ளூ-வை எழுதியிருக்கிறார்கள் ? இதில் எது சரி ? எனக்கு ரயில்வேக்காரான் சரியாகத்தான் இருக்கிறானோ என்று தோன்றுகிறது.
நீங்கள் கொஞ்சம் விளக்கத்தான் வேண்டும்.
நன்றி சார்.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteநல்ல விளக்கம். நன்றி அண்ணே...
ReplyDeleteதாழ்கிடைக்கோடு கொண்டு முடியும் ஞ, த, ந, ற இவை முறையே, ஞு, து, நு, று என மாறுகையில், ழ ஏன் ழு என்று மாறுகிறது? கீழ்க்குத்துக்கோடு கொண்டு முடியும் ண, ன இரண்டும் ணு, னு என மாறுகையில், ள ஏன் ளு என்று மாறுகிறது? இடையின எழுத்துகள் அப்படி ஆகாவோ என்று கொள்ளவும் விடாமல் லு ஏன் குழப்புகிறது? (தமிழ் வரிவடிவத்தில் சௌந்தர்யாவுக்கு வந்த குழப்பத்தைத் தெளிவுபடுத்தக் களம் இறங்கி நான் பட்ட பாடு இது).
ReplyDeleteஉகர ஊகார மெய்களுக்கு ஒருசீரான குறியீடு தேவை என்பவர்களில் நானும் ஒருவனாய் ஆகி நிற்கிறேன்.
உபயோகமாயிருக்கும்.
ReplyDeleteஇது மாதிரி நிறைய எழுதலாமே.
Mikka nandri makudeshwaranaar avarkale! :-))
ReplyDeleteஎனக்கும் இலக்கணம் புரிகிற அளவுக்கு ஏளிமையாக விளக்கியுள்ளீர்கள்.. மிகவும் நன்றி.
ReplyDeleteமுரளிகுமார் பத்மநாபன் ! என்ன ஒரேயடியாக ஆங்கில வடிவத்துக்கு ஓடிப் போய்விட்டீர்கள் ! என் தமிழாசான் கு. கதிர்வேலு ஐயாவின் மாணவன் தமிழ் இலக்கணத்தை விரல்நுனிக்குள் வைத்திருப்பான் அல்லவோ ? இதற்கெல்லாம் அஞ்சுவதோ ? ஊதி உதிர்க்க வேண்டாவோ ?
ReplyDeleteஎன்னை போன்ற பாமரனுக்கும் இலக்கணம் புரியும் வகையில் ஏளிமையாக விளக்கியமைக்கு நன்றி!
ReplyDeleteகடைசி வரி அருமை!
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteசிறப்பான பகிர்வு இதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞரே .