Wednesday, July 14, 2010

தமிழ்த் திரைப்படத் தலைப்புகள்


மதராசபட்டினம் என்கிற சொற்றொடர் மிகச் சரியான பயன்பாடுதானா எனத் தமிழாய்ந்து நின்றேன். நெய்தல் நிலக் கடலூர்களாகப் பொருள் கொள்ளப்படுகிற பட்டணம் என்கிற சொல் மிகச் சரியாக இருக்கக்கூடும். ஆனால், காவிரிப்பூம்பட்டினம் என்னும் பழைய வழக்காக வழங்கிய ஊர் இருப்பதால் அவ்வாறே வழங்கும் மதராசபட்டினத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். என் மனமொழிச்செயலி பட்டினம் என்பதற்குப் பட்டு வகைகள் என்றே முதன்மையாகப் பொருள்படுத்தித் தொலைக்கிறது. மேலும், தமிழ்த் திரைத்துறையில் தமிழறிவுடையோர் அருகிப் போய்விட்ட கோலம் நாமறியாத ஒன்றன்று.

முன்பொரு முறை, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் திரைப்பட அறிவிப்பு ஆயுத எழுத்துஎன்பதாகத் தினத்தந்தியின் வெள்ளிக்கிழமை சினிமாப் பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. மறுநாள் சனிக்கிழமை அத்திரைப்படத்தின் உரையாடல் இயற்றுநர் எழுத்தாளர் சுஜாதாவுடன் அம்பலம் இணைய தளத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். ஆயுத எழுத்து குறித்த பேச்செழுந்தபோது “சார்! ஆயுத எழுத்து-திரைப்படம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டிருப்பவர்களைப் பற்றியதா?என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை. கதை மூன்று இளைஞர்களைப் பற்றியது. தமிழில் அஃ என்ற எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளைப் போல அவர்கள் கதையின் மூன்று பிரதிநிதிகள்என்னும் பொருள்படச் சொன்னார். அதற்கு நான் ‘சார்! அத்திரைப்படத் தலைப்பு ஃ என்கிற எழுத்தைக் குறிக்க வேண்டுமென்றால் அது ஆயுத எழுத்தன்று. ஆய்த எழுத்து !என்றேன். சுஜாதாவிடமிருந்து ஒரு மௌனத்தொடர்தான் பதிலாக வந்தது. பிறகு படத் தலைப்பை ‘ஆய்த எழுத்து என்று மாற்றிக்கொண்டுவிட்டார்கள். தமிழ்த் திரைப்படத் தலைப்பொன்றில் புழங்க நேர்ந்த முறையான தமிழுக்கு நான் இவ்வாறு மறைமுகக் காரணமாயிருந்திருக்கிறேன்.

எப்படியாவது முயன்று இயக்குநராகிய கூட்டம் ஒன்று தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்த்திரையுலகைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டத்திடமிருந்துதான் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் திரையுலகைக் கைப்பற்றிய காலம் துவங்குகிறது. திரைப்படத் தலைப்புகளில் என்னென்ன மாறுபாடு காட்டலாம் என்பது சொந்த மொழியறிவுக்கு எட்டாத நெருக்கடியாக அவர்கள்முன் முளைத்து நின்றது. அப்பொழுதுதான் ஆங்கிலத் தலைப்புகளைப் படங்களுக்குச் சரமாரியாக வைக்கத் துவங்கினார்கள். அந்த வசதியைத் தமிழ்த் தலைப்புகளுக்கே வரிவிலக்கு என்கிற அறிவிப்பின் மூலம் மாநில அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது. உடனே நம் இயக்குநர்கள் கதாநாயகன் பெயரையோ அல்லது அவனது பண்புருவத்தையோ பெயராகச் சூட்ட ஆரம்பித்து காலத்தை ஓட்டுகின்றனர். இன்னொரு கூட்டம் பழைய தலைப்புகளைச் சலித்துக்கொண்டு இருக்கிறது.

தாயின் கருவறையைக் குறிப்பிடும் விதமாக அருமையான தலைப்பு வேண்டும். என்னாலோ உங்களாலோ கற்பனை செய்யவே முடியாத அசத்தலான தலைப்பு அது. அப்படிப்பட்ட தலைப்பு ஒன்றை எம்.ஜி.ஆர் தம் படத்திற்கு வைத்தார். அந்தத் தலைப்புதான் குடியிருந்த கோயில். இன்றைய சூழலில் இப்படி ஒரு தலைப்பை நம்மவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா ?

வல்லின ஒற்று மிகுவதை நம் இயக்குநர்களால் எந்தக் காலத்திலும் சகித்துகொள்ள முடிந்ததில்லை. மேட்டுக்குடி என்று வைக்கவேண்டிய பெயரை மேட்டுகுடி என்று வைப்பார்கள். யாரும் கேட்கமாட்டார்கள்.

ஒற்று எவ்வாறு மிகும் ஏன் மிகாது என்பதற்கு மிக எளிய புரிதல் ஒன்றைச் சொல்கிறேன். ‘தமிழ் படம்என்ற பயன்பாடு ஒற்று மிகாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அது ‘தமிழும் படமும்என்றே பொருள் தரும். உம் என்னும் ஈற்று விகுதியைக் கொண்டு தொகுப்பதால் இதை உம்மைத் தொகை என்பார்கள். ‘தமிழ்ப்படம்என்று ஒற்று மிகுமானால் மட்டுமே ‘தமிழின் படம்அல்லது ‘தமிழில் படம் எனக் கொள்ள முடியும். ‘அங்காடி தெருஎன்றால் அங்காடியும் தெருவும். அங்காடித் தெருஎன்றால்தான் அங்காடிகளால் ஆகிய தெருவாகும். தினத்தந்தி என்பதுதான் தினமும் வரும் தந்தி என்னும் பொருளைத் தரும். இங்கே மதராசபட்டினம் மதராசப்பட்டினம் ஆகாமல் நிற்பதைக் கவனிக்கலாம். தமிழ்ப்படமும் அங்காடித் தெருவும் ஆரம்பக்கட்டக் குழப்பத்திற்குப் பிறகு ஒருவாறு பிழை நீங்கின.

திரைப்படங்களுக்குத் தலைப்பிடுவதும் அத்திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிகரான கலைதான். உலகப் புகழ்பெற்ற இயக்குநர்கள் தத்தம் படங்களுக்குச் சூட்டிய பெயர்களை எல்லாம் மனதில் உருட்டிப் பார்த்தால் நம் இளைய தலைமுறை இயக்குநர்கள் எவ்வளவு ஆழமான பாதாளத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கலைஞன் ஒருவன் தான் இயங்கும் மொழியில் தன் வாழ்நாள் கனவுப் படத்துக்கே இலக்கணப் பிழை நீங்கிய தலைப்பை இடமுடியாதவனாக இருக்கிறான் என்றால் இது எவ்வளவு பெரிய அவமானம் !

பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார், “சார் ! நாங்க சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகிறபோது எங்களுக்கு டிபன் கொடுப்பாங்க சார். அந்த டிபன் எப்படி இருக்கு என்பதை வெச்சே அந்தப் படத்தோட அத்தனை லட்சணத்தையும் – அந்தப் படம் முடியுமா முடியாதா நல்லாருக்குமா நல்லாருக்காதா வெளியாகுமா வெளியாகாதா ஓடுமா ஓடாதா என்று - எங்களால் துல்லியமாகச் சொல்ல முடியும்.

அந்தப் பத்திரிகை நண்பரைப் போலவே ஒரு படத்திற்கு இடப்படும் தலைப்பை வைத்தே அப்பட இயக்குநரின் சகல அம்சங்களையும் நாமும் கணிக்க முடியும். அந்த இயக்குநரின் படைப்பு மனம் இயங்கும் தளம் எது என்கிற முடிவுக்கும் வரலாம். எடுத்துக்காட்டாக இயக்குநர் பாலாவின் தலைப்புகளைப் பாருங்கள் - சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் – இந்தத் தலைப்புகள் ஆத்திரம் பிடித்த அகங்காரமான ஆணாதிக்கமான அடங்குதலுக்குட்படாத ஆதிக்க உணர்வுள்ள பாத்திரங்களின் உலகங்களைச் சுட்டுகின்றன. அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வண்ண வண்ணப் பூக்கள் போன்ற தலைப்புகள் அந்தப் படைப்பாளியின் மனதில் சுழன்றடிக்கும் காட்சிரூபச் சித்திரங்களின் பெரும் அலைவரிசையை முன்வைக்கின்றன. பேரரசுவின் தலைப்புகளிலிருந்து நாம் எந்த முடிவுக்கு வருவது என்று கேட்காதீர்கள்.

தமிழில் தம் திரைப்படங்களுக்கு மிகச் சிறந்த தலைப்புகளைச் சூட்டியவர் என்ற பெருமை இயக்குநர் ஸ்ரீதர் அவர்களையே சேரும். அவருடைய தலைப்புகள் ஒவ்வொன்றையும் தனியே அமர்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்.

கல்யாணப் பரிசு, நெஞ்சிருக்கும் வரை, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை, விடிவெள்ளி, தேன் நிலவு, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, அவளுக்கென்று ஒரு மனம், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், துடிக்கும் கரங்கள், ஓடை நதியாகிறது, ஆலய தீபம், தென்றலே என்னைத் தொடு, நினைவெல்லாம் நித்யா, யாரோ எழுதிய கவிதை, தந்துவிட்டேன் என்னை... என அத்தனை தலைப்புகளிலும் இன்பமும் இனிமையும் கவிதையும் கதையும் ஊறிச் செறிவுற்றிருப்பதை உணரலாம்.

7 comments:

 1. அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை...

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 3. சுவாரசியமான அலசல். சுஜாதா ஒருமுறை தமிழ்ப்படங்களின் தலைப்பை பற்றி இதே போல் எழுதி இருந்தார். சந்திப்பற்றிய உங்கள் இலக்கண குறிப்பும் Simple and Sweet :)

  ReplyDelete
 4. நல்ல அலசல். இதைப் படிக்கிற போது பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற நல்ல தலைப்புகளை (சில பாடல் வரிகள் எனினும்..) வைத்துக் கொண்டிருந்த கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தலைப்பு நினைவுக்கு வருகிறது. ‘நடுநிசி நாய்கள்’

  ReplyDelete
 5. பரிசல் ! கௌதமின் படத்தலைப்புகளில்தான் தமிழ் இருக்கிறதே ஒழிய அவர் ஆங்கிலத்தில் பேசுகிற தமிழ்ப்படம் எடுப்பவரே. திரு.வி.க.வும் பெரியாரும் தமிழுணர்வுள்ளவர்களே என்றாலும் திரு.வி.க. தாம் நடத்திய பத்திரிகைக்கு நவசக்தி என்று பெயரிடுகிறார். பெரியார் தம் பத்திரிகைகளுக்கு குடியரசு, விடுதலை என்று பெயரிடுகிறார். தமிழுணர்வு இயங்கும் தளம் எது என்கிற வேறுபாட்டை இது காட்டுகிறதா இல்லையா ?

  டூயட், ஜாதிமல்லி... ஆகிய தலைப்புகளை வைத்தவர் என்பதால் பாலசந்தரை நிராகரித்தேன். கேப்டன் மகள் என்கிற தலைப்பை வைத்ததால் பாரதிராஜாவை நிராகரித்தேன்.

  நிறைய சொல்வதற்கு இருக்கிறது. ஆனால், இதுவே போதும்.

  ReplyDelete
 6. தமிழ்ப்படப் பெயர்களை பொறுத்த மட்டில், ஒற்றுப்பிழைகளுக்கு எண் ஜோதிடத்தின் பங்கும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஆவலாய் இருக்கிறது.

  ReplyDelete