Saturday, August 7, 2010

ராஜசுந்தரராஜன் என்னும் கவி

(கண்ணகி கோட்டத்து மலைச் சரிவில் உள்ளூர் அரசியல் பிரமுகருடன்)

(எம். கோபாலகிருஷ்ணன், மகுடேசுவரன், ராஜசுந்தரராஜன், க. மோகனரங்கன்)

தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியோடு உரையாடும்போது மரபில் மூழ்கிப் புரண்டெழுந்துவரும் வீரியமான நவீன கவிதை வரிகள் சிலவற்றை சொல்லிச் செல்வார். அந்த வரிகளின் ஆசிரியர் ராஜசுந்தரராஜன்.

தேவையற்ற ஒற்றைச் சொல் இல்லாத இரும்புக் கம்பிகளைப் போல் வன்மையாகத் திரண்டு நிற்கும் கவிதை வரிகளை ராஜசுந்தர ராஜனின் கவிதைகளில் தரிசித்தேன். இந்த இயல்பினாலோ என்னவோ ராஜசுந்தரராஜன் அளவு கருதி அமைந்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். என்னை மிகவும் பாதித்த கவிதை என்று அநேக அமர்வுகளில் நான் சொல்லும் ஒரு கவிதை ராஜசுந்தரராஜனுடையது. அதைப் படித்த தருணம் நான் இடிந்து அமர்ந்தேன். அந்தக் கவிதை இது –

விபரீதம்


கிறுக்கும் பிடித்த பெண்ணைக்

கர்ப்பவதியாக்க

எவன் மனம் துணிந்தது இப்படி !

அதற்கும் முன் இவளைப்

புஷ்பவதியாக்க

இறை மனம் துணிந்ததே எப்படி ?

இந்தக் கவிதை என் இதயத்தில் ஆழமான வெட்டாகப் படிந்துவிட்ட காரணத்தால்தான் எல்லாரும் என்னைக் கண்டதும் சொல்லிச் செல்லும் கவிதையான   ’’’வலியின் ஒலி’-யை எழுதியிருப்பேன் என்று நம்புகிறேன்.

வாழ்ந்து கெட்டவனின்

பரம்பரை வீட்டை

விலை முடிக்கும்போது உற்றுக்கேள்

கொல்லையில் சன்னமாக எழும்

பெண்களின் விசும்பலை

நான் எழுதும் சிறுகவிதைகளின் அந்தரங்க அடி ஸ்கேலாக ராஜசுந்தரராஜனின் கவிதைகளும் கலாப்ரியாவின் சில கவிதைகளும் மாறியிருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது.

தமிழினி புத்தக அரங்கில் ராஜசுந்தரராஜனின் அறிமுகம் கிடைத்தது. சில கவிகளுடன் உரையாடினால் அது மலை முகட்டுக் கல்விளிம்பில் நின்றுகொண்டு உரையாடுவதைப் போலவே இருக்கும். கல்லும் புரளாமல் நாமும் உருளாமல் அத்தனை உஷாராக இருக்க வேண்டும். ஆனால், அண்ணாச்சி ராஜசுந்தரராஜன் எனக்கு உடனே ஒரு தந்தையைப் போல் நெருக்கமானவராகத் தென்பட்டார். அவரைப் போலவே ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து என்னைப் பார்க்கும் இன்னொருவர் பாதசாரி ஆவார். இவர்கள் இருவரையும் என் மனம் அங்கீகரித்து வைத்திருக்கும் இடம் அத்தனை பரிசுத்தமானது. தந்தையற்றவனாகிய எனக்கு இவ்வுணர்வுகள் கொஞ்சம் இயல்பை மீறிய அடர்த்தியோடு ஊற்றெடுக்கின்றன.  

தேக்கடி பெரியார் அணைக்கு இலக்கிய நண்பர்களோடு உலாச் சென்றிருந்தோம். படகுக்கு நுழைவுச் சீட்டு பெற நெடிய வரிசை. யாராவது ஒருவர் குழுவுக்குச் சீட்டுகள் பெற வரிசையில் கால் கடுக்க நின்று வாங்கி வரவேண்டும். நியாயமாக என் வயதொத்தவர்கள் சென்று வரிசையில் நின்றிருக்க வேண்டும். எங்களுக்கு அது தோன்றி நிற்கும் முன்பாக அண்ணாச்சி ராஜசுந்தரராஜனையும் நாவலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணனையும் தேடினால் காணவில்லை. இருவரையும் எங்கே என்று பார்த்தால் நீண்ட வரிசையின் நடுமையத்தில் நின்றுகொண்டு கையசைக்கிறார்கள். நாங்கள் எத்தனிக்கும் முன்பே அவர்கள் செய்துமுடித்தார்கள். இவர்கள் இருவரிடமும் தலைமையைக் கைதந்துவிட்டு நாம் பின் தொடர்ந்து எங்கும் செல்லலாம். பார்த்துப் பக்குவமாகக் அழைத்துக்கொண்டு போய்ப் பத்திரமாகக் கூட்டி வருவார்கள். அண்ணாச்சி கைநிறைய படகுச் சீட்டுகளுடன் வந்ததும் நான் கேட்டேன்.

‘அண்ணாச்சி ! உங்களைக் கால்கடுக்க வரிசையில் நிற்க வைத்துவிட்டோமே !

‘இதில என்ன இருக்கு ? இதெல்லாம் மூத்தவங்க பொறுப்புதான். நீங்க சின்ன பசங்க பலதையும் வேடிக்கை பாக்க வேண்டியிருக்குமில்லையா ?என்றார்.

ராஜசுந்தரராஜன் தமிழினி இதழில் நாடோடித் தடம் என்று இப்புவியின் நெடும் பரப்புகளில் தாம் அற்று அலைந்த சரிதையை மாத்தமிழ் நடையில் எழுதினார். அவரின் உரைநடையை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய உலகமே விழிவிரிய வாசித்தது. அவர் எழுத்தை வாசிப்பதற்காகவே அடுத்த இதழுக்காகக் காத்திருந்தவர்கள் பலர். அந்த நாடோடித் தடங்களில் ஊடாடித் தோன்றி மறையும் மகளிர் ஒவ்வொருவரும் அண்ணாச்சியின் வாழ்க்கையில் எழுப்பிய ராகங்களை நாம் கண்ணீர் மல்கத்தான் எதிர்கொள்ள முடியும். விரைவில் அது கனமான புத்தகமாக வரக்கூடும். ஆனால், அண்ணாச்சியை யாராவது ஊக்கி நிற்காவிட்டால் அதைப் புத்தகமாக்காமலே இருந்தும் விடுவார். அதுவே அவர் இயல்பு !

ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி கைரேகை எண்கணிதம் முதலானவற்றிலும் நிபுணர். நாங்கள் எல்லா முற்போக்குகளையும் வாய் கிழியப் பேசிவிட்டு அண்ணாச்சியிடம் கையைக் கொடுத்து ‘அது கிடக்குது... எங்க கையைப் பார்த்து என்ன சொல்லுதுன்னு சொல்லுங்கஎன்போம். அண்ணாச்சி என் கையைப் பார்த்துவிட்டு ‘செல்வநிலை திருப்திகரம். முப்பத்தைந்தாம் வயதுக்கு மேல் உங்கள் தொழில் முற்றாக வேறாகும் வாய்ப்பிருக்கிறதுஎன்றிருக்கிறார். இப்பொழுதுதான் எனக்கு முப்பத்து ஐந்து. திருப்பூர் போகும் போக்கைப் பார்த்தால் அண்ணாச்சியின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்று எனக்கும் அச்சமாகத்தான் இருக்கிறது.

அண்ணாச்சி SPIC உர நிறுவனத்தில் பணியாற்றினார். தன் பணியின் நிமித்தம் வெளிநாடுகளில் வசித்துள்ளார். இந்தியாவில் அவர் கால்படாத பிரதேசங்களே இல்லை என்னும் அளவுக்குச் சுற்றியிருக்கிறார். ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை அவற்றின் புழுதியோடும் புன்மையோடும் நேர் நின்று சாட்சியாகக் கண்டதாலோ என்னவோ அவருக்கு இந்தப் பக்குவம் வந்திருக்க வேண்டும்.

அண்மையில்தான் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதற்கு நான் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். ‘நீங்கதான் வாழ்த்து சொன்னீங்க போங்கஎன்றார். ‘அண்ணாச்சி ! உங்கள் காலம் முழுக்க லட்சக்கணக்கான மைல்கள் பயணித்திருக்கிறீர்கள். அந்தத் தருணங்களிலெல்லாம் ஓய்வுக்காக மனம் தவித்திருக்கும். அந்த ஓய்வு இப்பொழுது சித்தித்திருக்கிறது. அதை முழுமையாக அனுபவியுங்கள்என்றேன். ‘ஆமா... இனி அப்படித்தான் இருக்கணும்என்றார்.

அண்மையில் அவரோடு பேசியபோது ‘அண்ணாச்சி... நீங்கள் நிறைய எழுதவேண்டும்என்றேன். மெல்லிய சிரிப்புடன் சொன்னார். ‘இளைஞர்கள் நீங்க எழுதுங்க...என்றார்.

அண்ணாச்சி ராஜசுந்தரராஜன் நமக்குச் சொல்லும் செய்தியும் வேண்டுகோளும் அதுதான்.

அண்ணாச்சியின் ஒரு கவிதையைக் கொண்டு இப்பத்தியை முடிக்கவா ?

இரா முழுக்கத்

தவம் கிடந்தன

வான் நிறைய விண்மீன்கள்.

பரிதியை

நேர் நின்று கண்டதோ

விடிய வந்த ஒரு வெள்ளி.

(புகைப்படங்கள்: தமிழினி வசந்தகுமார்)

11 comments:

  1. //முற்போக்குகளையும் வாய் கிழியப் பேசிவிட்டு //

    சோதிடம் பொய்யென்று சொல்லுவீர்களா கவிஞரே?

    ReplyDelete
  2. கொல்லான் ! கடவுள் இருக்கிறாரா ? என்ற சுஜாதாவின் புத்தகத்திலுள்ள கடைசி வரிதான் உங்கள் கேள்விக்கான பதிலும் : IT DEPENDS

    ReplyDelete
  3. இரா முழுக்கத்

    தவம் கிடந்தன

    வான் நிறைய விண்மீன்கள்.

    பரிதியை

    நேர் நின்று கண்டதோ

    விடிய வந்த ஒரு வெள்ளி.//

    தமிழினியோட புத்தகங்கள் கேட்லாக்ல இந்தக் கவிதையைத்தான் போட்டிருந்தாங்க.என்னாவொரு பொருத்தம் பாருங்க!!முதல்ல நான் பாத்தப்போ, இது யருடைய கவிதைன்னு தெரியாம இருந்தது. அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  4. /////கிறுக்கும் பிடித்த பெண்ணைக்

    கர்ப்பவதியாக்க

    எவன் மனம் துணிந்தது இப்படி !

    அதற்கும் முன் இவளைப்

    புஷ்பவதியாக்க

    இறை மனம் துணிந்ததே எப்படி ?//////////


    வார்த்தைகளும் கொலை செய்யும் என்பதை சில நேரங்களில் உணர்ந்துவிடுகிறது மனம் . புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ராஜ சுந்தர் ராஜன் அவர்கள் பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன்; உங்கள் பதிவின் மூலம் இன்னும் கொஞ்சம் அறிய முடிந்தது. நன்றி

    ReplyDelete
  6. ஆக, நீங்களும் களம் இறங்கிவிட்டீர்கள்! என் கைச் சூரிய ரேகையில் வெட்டு விழுந்து இருப்பதாலோ என்னவோ எனக்கு இதுநாள்வரை கெட்டபேர்தான் கிட்டிவந்தது. இப்போது, ஒரு நல்ல பேரை உருவாக்கித் தர முயல்கிறீர்கள்: முதலில் ராஜநாயஹம், பிறகு நேசமித்ரன், இதற்கு முந்திய பதிவில் 'கருவேலநிழல்' பா.ரா., இப்போது நீங்கள். இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று கணித்துப் பார்த்தால், குரு தசையில் குரு புக்தி நடக்கிறது! காலம் அறிந்தவன் கவலைப்பட வேண்டியதில்லை: இதுவும் கழிந்துபோகும்.

    ஆனால் ஒளிந்து திரிந்த என்னை, என் கவிதைகளைத் தொட்டு வெளிக்காட்டி இருந்தாலும் பருவரல் இல்லை. என் படத்தையும் போட்டு... (ஆமா, என் மூஞ்சியெக் கூடவா படமெடுத்துப் பாதுகாப்பீங்க!)... நாம் எழுதியதொரு கவிதை நன்றாக அமையவில்லை என்றால் அதை வெளியிடுவோமா? இவ்வளவு சகிப்புத்தன்மையும் பெரியமனசும் உள்ள உங்களை எப்படி நேர்கொள்வது? நன்றி!

    யோவான் இயேசுவைப் பற்றிச் சொல்கையில், “நான் தேயவேண்டும் அவர் வளரவேண்டும்” என்பான். அதையே நான் உங்களை மனதிலேற்றிச் சொல்கிறேன். இலையானது உதிர்ந்து, கனிவிதைகள் மரங்களாகவதற்கு உரமாவதே பாக்கியம். உங்கள் மொழிநடைகளும் பாடுபொருட்களும் கனிவிதைகள்.

    //ராஜசுந்தரராஜன் எனக்கு ஒரு தந்தையைப் போல நெருக்கமானவராக...// என்ன தவம் செய்தேன்! காசி(பாதசாரி)யின் வீட்டில் நாம் படுத்திருந்த அந்த இரவில், என் ‘எடுபட்ட’ நிலைமைக்குக் கசிந்து, ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்ள எனக்கு அறிவுரை கூறிய உங்களை அன்றே என் தந்தையின் இடத்தில் வைத்தேன், என்னே நம் உறவு!

    பாதசாரியையும் நினைவில் பேணுகிறேன், ஆஹா! உங்கள் இருவருடைய மொழிவீச்சும் அதற்குக் காரணமான அக-ஈரமும் என்றென்றும் வற்றாதிருக்கட்டும். நல்லா இருங்க!

    ReplyDelete
  7. மகுடேஸ்வரன்,

    திருமணத்திற்கு முன்பு வரையில், என்னை பெயர் சொல்லி அழைத்த இளைய சகோதரியை காண அவள் வீடு போயிருந்தேன். முதன் முறை, "வாடா அண்ணா" என்றாள். அவளை அப்படி பூரித்து கண்டதும் முதன் முறை. அவள் அப்படி அழைத்ததும் முதன் முறை.

    அப்படி ஒரு தொணியாக தலைப்பில் இருக்கிற விளிப்பு( மகுடேஸ்வரன்) அமைய வேண்டுகிறேன். வயதில் என்ன இருக்கிறது மகுடேஸ்வரன்?

    மொத்தத்தில், மனசு உரசும்படி நெருக்கி அமரும்போதில், உடலில் சூடு பரவுவது போல உணர்கிறேன்.

    பகிர்விற்கும், புகைப் பட பகிர்விற்கும் மிக்க நன்றி மக்கா!

    அண்ணே,

    பின்னூட்டம் கண் கலங்கியது.

    ReplyDelete
  8. செல்வராஜ் ஜெகதீசன் ! நன்றி.

    ச. முத்துவேல் ! அண்ணாச்சியைத் தெரிந்துகொண்ட தருணம் உங்கள் வாசிப்புப் பயணத்தில் ஒரு முகூர்த்தம் தான்.

    பனித்துளி சங்கர் ! ஆம். அவை கொல்லும் வார்த்தைகளே. அந்தக் கவிதையைப் படித்து முடித்ததும் வாசக மனம் குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடித்திருக்கும் என்பதை நான் உணர்வேன்.

    மோகன் குமார் ! நாடோடித் தடத்தைத் தேடி வாசியுங்கள்.

    பா. ராஜாராம் ! நாம் வேறுடல் திரியும் ஓருயிர்கள். இதில் பெயர்கள் எல்லாம் வேடிக்கைகளே.

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! நான் என்னன்னவோ எழுத வேண்டும் என்றே வந்தேன். ஆனால், ஒன்றும் ஒன்றுமில்லை அண்ணாச்சி. எல்லாம் கழிந்து என்னுள் வியாபித்து நிற்கும் இந்த வெறுமை போதும் அண்ணாச்சி !

    ReplyDelete
  9. மிக நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் .. வேறு வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete