Friday, September 17, 2010

முன்னறிவிப்பு


காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு நம் தளத்தின் வாசகர்களுக்கு இனிய பரிசொன்றைத் தரலாம் என்றிருக்கிறேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 57 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதியிருந்தேன். அந்த நூல் திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை நிறுவனர் திரு. வி.டி. சுப்ரமணியன் அவர்களால் கையடக்க வடிவில் பதிக்கப் பெற்றது.

திருப்பூர் காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகத்தில் காந்தியடிகளின் அஸ்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாதிருக்கலாம். அச்சிறுநூல் அந்த அஸ்தி மேடையில் காந்தி பிறந்த நாளான 02.10.2006 அன்று எழுத்தாளர் திலகவதி அவர்களால் வெளியிடப்பட முதல் பிரதியை அப்போதைய நாடாளுமன்றக் கோவை உறுப்பிநர் தோழர் கே. சுப்பராயன் பெற்றுக்கொண்டார்.

அப்புத்தக வெளியீட்டு விழா காந்தியைப் பற்றிய முக்கியமான நினைவுக் கூட்டமாக நிகழ்ந்தது. முன்னதாக சர்வோதய சங்கத் தொழிலாளர் தோழர்கள் கூட்டிசையாகரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காந்தி கனவு கண்ட உலகம் எத்துணை இலட்சியபூர்வமானது என்பதை அங்கே உணர்ந்தேன்.

அச்சமயம் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுப் பரப்புரைகள் நிகழ்ந்தேறியபடியிருந்த நேரம். கூட்டத்திற்குத் திருப்பூரிலிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் வி.டி.எஸ் அழைத்திருந்தார். அவர்களில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் பாஸ்ட் பழனிச்சாமி மட்டும் தொண்டர் படை புடை சூழ வந்து கலந்து கொண்டிருந்தார். மற்றும் பொதுவுடைமைத் தோழர்கள் வந்திருந்தனர். காங்கிரஸ் உள்பட வேறு கட்சியினர் யாரும் வரவில்லை.

அந்நூல் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு திருப்பூரிலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இப்பொழுது அது எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை. காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் காந்தியடிகளின் நூல்களைப் படித்து விருத்தங்களை எழுதியிருந்தேன். முக்கியமான விஷயம் அவற்றை ஒரே நாளில் எழுதினேன் என்பதே.

எதிர்பாருங்கள் !

3 comments:

  1. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வடிவில் எழுதி என்ன பயன் வரப்போகிறது ?

    "காந்தி கனவு கண்ட உலகம்" என்ன கனவு கண்டார் ?

    வரலாறை எடுத்து பாருங்கள். வெள்ளையன் நாட்டை விட்டு ஓடியது பசி பஞ்சம் பட்டினியால் !

    நேருவின் லேடி மவுண்ட்பேட்டன் தொடர்பால் !

    சும்மா பழைய விசயங்களை பேசி என்ன பயன் ?

    ReplyDelete
  2. நோகாமல் உரைநடையில் எழுதியும் படித்தும் பழகிப்போய்விட்ட உங்களுக்கு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதுவதும் படிப்பதும் மிரட்சியூட்டக் கூடிய ஒன்றே. வேண்டாத வேலையே.

    காந்தி கனவு கண்ட உலகை சுலபத்தில் சொல்லிவிட முடியாது. காலம் முழுவதும் இடுப்புத் துணியோடு அலைந்த அவரை முன்முடிவற்று, திறந்த மனதோடு அணுகுபவன் தெரிந்துகொள்வான்.

    நீங்கள் படித்த வரலாற்றில் வெள்ளையன் தானாக அஞ்சியோடிப் போய்விட்டானோ ?

    நேரும் திருமதி மவுண்ட்பேட்டனும் தொடர்புகொண்டிருந்ததால் வெள்ளையன் நமக்கு சுதந்திரம் வழங்கிச் சென்றுவிட்டானோ ?

    பழைமை பேசாமல் நீர் புதுமை பற்றியே பேசிக்கொண்டிரும். உம்மை யாரும் தடுக்கப் போவதில்லையே !

    நீர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தான் என்ன பயன் ?

    ReplyDelete
  3. நான் பின்னூட்டம் போட வந்தது வேறு. இங்கே வந்த பின் நிலைமையை மாற்றிக்கொள்ள வேண்டியாதகிவிட்டது. காந்தியை பற்றி 'இப்படியான மனிதர் இருந்தார் என்பதை நம்புவதற்கே தயங்கும்' என்ற வாக்கியம் உண்மையாகி விட்டது என்று நினைக்கிறேன்
    கவிஞரே.. காந்தியை விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று எங்கே நாமறிவோம். இரண்டாவதாக, 'காந்தியம்'(நண்பர் ஸ்வாமி ஓம் சைக்கிள் கவனிக்கவும் : காந்தியம்)பற்றி புரிதலுக்கான வழியாகவும் இது இருக்கலாம்.

    நண்பர் ஸ்வாமி ஓம் சைக்கிள் //அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வடிவில் எழுதி என்ன பயன் வரப்போகிறது ?//
    பயன் என்பது அவரவர் பார்வையை , தேவையை பொறுத்து. உங்களுக்கு 'இதனால் பயனில்லை' என்று நினைத்தால் அது உங்களது எண்ணம் மட்டுமே.
    எனக்கு கூட போட்டி என்பதில் விருப்பம் இல்லை. இன்று வரை நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளவும் போவதில்லை. அவ்வளவே. அதற்கு போட்டி வைப்பதே வீண் என்றும் தவறு என்றும் நான் சொல்லவும் கூடாது. சொல்லிவிட முடியாது.

    மற்றபடி , இந்த பதிவை பற்றி கவிஞருக்கு ..... வாழ்த்துகள். இளம் தலை முறையினர் உங்களால் ஊக்கம் பெறட்டும்.

    ReplyDelete