Saturday, March 19, 2011

நஞ்சுபுரம்


நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 17.03.2011 அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் என்னைப் பாடலாசிரியராக இயக்குநர் சார்லஸ் அறிமுகப்படுத்துகிறார். படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன். படத்தின் நாயகன் ராகவ் இசையமைத்துள்ளார். மூத்த இயக்குநர் இராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பலரும் பார்த்திருப்பீர்கள்.

நஞ்சுபுரம் திரைப்பட உருவாக்கத்தில் பங்குபெற்றது எனக்குக் கிட்டிய மிக இனிய அனுபவம். மகத்தான நண்பர்கள் பலர் அங்கே எனக்குக் கிடைத்தார்கள். அவர்களுள் இயக்குநர் சார்லஸும் ராகவும் மிக முக்கியமானவர்கள். சார்லஸின் உதவியாளர்கள் பாஸ்கர், கண்ணன், அதி, பால் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆண்டனி போன்றவர்களும் என் ஞாபகத்தில் என்றும் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவர்கள்.


திரையுலகில் பலரையும் நான் சந்தித்ததுண்டு. அவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த சார்லஸ் மிக வித்தியாசமானவர். அவர் அதிகம் பேச மாட்டார். ஒவ்வொரு வாக்கியத்தையும் முடிக்கும் முன்பாக வசீகரமாகப் புன்னகைப்பார். குறைவாகப் பேசுகின்றவர்களின் திரைமொழி வன்மையாக இருக்கும் என்பதற்கு மணிரத்னம், பாலா போன்றவர்கள் உதாரணம். இசைவெளியீட்டுக்கு முந்தைய நாள்தான் நான் நஞ்சுபுரத்தைப் பார்த்தேன். சார்லஸின் திரைமொழியில் அதே வன்மையைக் கண்டேன்.

அவருடைய உலகத் திரைப்பட ஞானம் குறித்து வலையுலக வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். திரைப்படக் கல்லூரியில் திரைக்கலையைப் பாடமாகப் பயின்று, நிறைய இயக்குநர்களிடம் பயிற்சி பெற்று, ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களை இயக்கித் தம்மை முழுமையாகத் தகுதிப்படுத்திக்கொண்டவர் அவர். நஞ்சுபுரம் திரைப்படத்தை உருவாக்க அவர்முன் இருந்த வசதிகளைவிடவும் வரம்புகள்தாம் அதிகம். அந்த அளவீடுகளுக்குள் அவர் எத்துணை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களை வியப்பிலாழ்த்திய விஷயம்.



நஞ்சுபுரம் படம் உருவாக்கத்தில் இருந்த காலகட்டத்தில் சார்லஸுடன் ஏராளமான உரையாடல்களை நேரிலும் செல்பேசியிலும் நிகழ்த்தியிருக்கிறேன். அந்தத் தருணங்களிலெல்லாம் அவர் உண்மைக்கு வெளியே ஒரு சொற்றொடரைக் கூடப் பயன்படுத்தியதில்லை. ஒரு தவறான வாக்கு அவர் வாய் தவறியும் வந்ததில்லை. நிலைமைக்கு மாறாக ஏதொன்றையும் மிகையாகவோ குறையாகவோ அவர் சொல்லவில்லை. இந்தப் பண்புதான் அவர் மீது என் அன்பைப் பெருக்கியது. திரையுலகில் இத்தகைய உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் மிகவும் அரிதாக மட்டுமே காணக்கூடியவர்கள். படப்பிடிப்பில், வாய் நுரைக்கும் வரை காட்சிகளை விவரித்து, இரவும் பகலும் கணநேர ஓய்வின்றி இயக்கிய சார்லஸின் அந்த அசுர உழைப்பைக் கண்டு பிரமித்துவிட்டேன். அந்த நிமிடம் முதல் திரையுலகின் மீது நான் கொண்டிருந்த இரக்கமற்ற என் விமர்சனப் பார்வையை முற்றாக மாற்றிக்கொண்டேன். என்னோடு அமர்ந்து நஞ்சுபுரம் படத்தைப் பார்த்த வசந்தகுமார் அண்ணாச்சி சார்லஸைப் பற்றி சொன்ன வாசகம் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. அவர் சொன்னது, ‘இவர் ஒரு இயக்குநராகத் தேறி முன்னணிக்கு வரக்கூடியவர்தான். இந்தப் படத்தை இவர் ஹேண்டில் செய்துள்ள விதம் அருமை. படத்தில் நாவல்டியான அம்சங்கள் நிறைய’’ என்றார்.

படத்தைப் பற்றி நான் நிறைய சொல்லலாம். ஆனால், அதற்கு நீங்கள் படம் வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். படத்தில் நிறைய பாம்புகள் வருகின்றனவே, அதனால் இது ஒரு வழக்கமான பாம்புப் படமோ என்று ஐயுற வேண்டாம். அது ஜுராசிக் பார்க் படத்தை ஒரு டினோசர் படம் என்று அடையாளப்படுத்திக் கொள்வது போல் எளிமையானது.

(விழாபற்றிய மேலதிக புகைப்படங்களும் காணொளிகளும் பல்வேறு இணையப் பக்கங்களில் காணலாம்)

14 comments:

  1. வாழ்த்துகிறேன், கவிஞரே, இப் படம் வெற்றிபெறவும் உங்களைப் போன்ற எளிய இயல்பான கவிஞர்களால் தமிழ்த்திரை உலகம் வளம்பெறவும்!

    வசந்தகுமார் பாராட்டினார் என்றால் படம் தரமுள்ளதாகத்தான் இருக்கும். பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. தாங்கள் எழுதியுள்ள அர்த்தமுள்ள வரிகளை கேட்க ஆவல். இன்று முயல்கிறேன். வாழ்த்துக்கள் கவிஞரே.

    ReplyDelete
  3. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

    நஞ்சுபுரம் வெற்றி அடைய வாழ்த்துகள். தங்கள் பாடல்களை கேட்ட பின் கருத்தை சொல்கிறேன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மகுடேஸ்வரன் -கலாப்ரியா

    ReplyDelete
  5. திரு.சார்லஸ் அமைதியானவர்.அவர் தன்னைப்பற்றி வலையில் அதிகம் பேசியதில்லை,மாறாக அவரது கட்டுரைகள் பேசும்,தெளிவான எழுத்துக்கு சொந்தக்காரர்.அபாரமான உலக சினிமா ஞானம் உள்ளவர். தம்பட்டம் அறவே இருக்காது.அவரது எழுத்துக்கள் எப்போதும் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடும்.தூக்கம் வர வழைக்காது.நிச்சயம் படம் நன்றாகவே எடுத்திருப்பார்.பார்த்துவிட்டு நிச்சயம் அதற்கு விமரசனம் எழுதுவேன்.

    ReplyDelete
  6. அண்ணா, கலக்குங்க...!

    ReplyDelete
  7. மகிழ்ச்சி நண்பரே..

    திரையுலகில் உங்கள் முத்திரையை பதிக்க வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  8. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வசனம் எழுதியதும் நீங்கள் தான் போல?
    வாழ்த்துக்கள் மகுடேசுவரன்!!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மகுடேசுவரன்

    ReplyDelete
  11. நண்பர்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள் !

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  13. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. http://www.getcinemas.com/nanjupuram-review

    ReplyDelete