மழை தன் வன்மையழிந்து
சிட்டுக்குருவி இரைகொத்தும் ஒலியில்
பெய்கிறது
குளிர்
அமைதியாய்ப் பரவி
அணைக்கிறது
அவித்த வேர்க்கடலை கொஞ்சம்
அருகில் இருக்கிறது
அதன் கூர்முனையைக்
குத்தி உடைக்கிறேன்
செம்பகுதியாகப் பிரிகிறது
வேர்க்கடலையின் தொட்டு
யாரோ சொல்லி வைத்ததுபோல்
அதன் இடது புறத் தொட்டில்தான்
பருப்புகள் இரண்டும் வெந்து படுத்திருக்கின்றன
தொட்டை வாய்க்குள் கவிழ்த்து
கடலையை உதிர்க்க முயல்கிறேன்
உள்ளிருக்கும் நொய்ந்த பருப்பு
பிடியிழந்து வாய்க்குள் விழுகிறது
கூடவே
இரண்டு நீர்த்துளிகளும் விழுகின்றன
அந்த நீரின்
தனித்த உப்பு ருசிக்கு
நான் தடுமாறுகிறேன்
அதுதான்
விதியின் புதிரான சுவையோ !
ஊழியின் மர்ம முடிச்சுகள்
அவிழ்ந்த சுவையோ !
பல்லிடுக்கில் கசியும் குருதியின்
வெப்பச் சுவையோ !
காந்தியின் இதயத்தில் உரமேற்றிய
அறவுணர்ச்சியின் சுவையோ !
புன்செய்க்குள் உழுது விதைத்த உழவனின்
வியர்வைச் சுவையோ !
அந்த மண் என் நாவிற்கு எழுதிய கடிதத்தின்
கண்ணீர்ச் சுவையோ !
//சிட்டுக்குருவி இரைகொத்தும் ஒலியில்// என்பது நீங்களே வகுத்துக்கொண்ட 'வலைத்தள எளிமை' விதிகளையும் மீறிக் கவிமொழியாய் அடர்கிறது. எனக்கு இதுவே பிடித்திருக்கிறது.
ReplyDelete//காந்தியின் இதயத்தில் உரமேற்றிய
அறவுணர்ச்சி//
"என்ன எழவு அறவுணர்ச்சியோ!" என்றும் ஒருவருக்குத் தோன்றலாம் அல்லவா?
என்றாலும், ||உன் கவிதையை நீ எழுது; என் கவிதையை நீ ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காதே|| என்னும் பசுவய்யாவின் வரிகளை ஓர்த்து, இன்ன அரசியலுக்கும் இடமுண்டு என்று உணர்கிறேன்.
அண்ணாச்சி ! இந்த வம்பு விவகாரங்களே வேண்டாமென்றுதான் இப்படி வேர்க்கடலைக்குள் தேங்கும் உப்புத் தண்ணீரைப் பற்றிக் கவிதை எழுதப் பார்க்கிறேன். அதிலும் பொருந்தாக் குறைகள் தோன்றுமானால் அதற்கு நான் என்னதான் செய்ய !
ReplyDeleteஎப்படி எழுதினாலும் அதில் ஒரு தப்படி தோன்றிவிடுகிறதே ! பாவம்ங்க நாங்க !
உண்மையில், அரசியல் கவிதை எழுதுவற்கு இங்கு ஆளில்லை என்பது நம்மை வருத்தும் உண்மை.
ReplyDeleteஅரசியல் கவிதை எழுதப்பட வேண்டும்தான். பாப்லோ நெரூதா எழுதவில்லையா? உலகின் தலைசிறந்த கவிஞன் என்கிற பேரும் அவனுக்குத்தான் - முதலாளித்துவ நாடுகளிலும். காந்திஜியை அவன், தன் 'Memoir'-இல், "shrewd politician" என்கிறான். அது, அவரை அவன் அறிந்த வகையில் அவனுக்கு உண்டான கருத்து. ஆனால் தன் கவிதைகளில் எங்கும் ஒரு பொருந்தாப் புனைவாக idolatry-யை (நேர்முறையாகவும் எதிர்மறையாகவும்) அவன் இணைத்தது இல்லை.
"வாழ்க நீ எம்மான்" என்னும் பாரதியின் பாட்டில் நாம் குறை கூற ஒன்றும் இல்லை. அது வெளிப்படை. அங்கே அதனை அவனது கொள்கையாக நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இங்கு, குருதிக்கும் வியர்வைக்கும் நடுவில் இட்டுக் கற்பிக்கப் படுகிற காந்திஜியின் அறம் romanticize ஆகிறது. ஒரு கவிதை வாசகனாக இதைச் சொல்கிறேன், அவ்வளவுதான். (நீங்கள் காந்திஜியைப் பற்றி முன்பு எழுதிய விருத்தங்களில் எனக்கொரு முரணும் இல்லை).
அரசியல் கவிதையைத் திட்டமிட்டெல்லாம் எழுதிவிட முடியாதுதான். அதே வேளையில் எல்லா மொழியியல் செயல்பாட்டுக்கும் அரசியல் பார்வையைத் தந்துவிட முடியும். எல்லாச் சொல்முறைகளும் கருத்துத் தெரிவிக்கும் முறைகளும் தமக்குள் மொழிதோன்றிய காலத்தேயிருந்து ஊறிய எல்லா நுண்பொருள்களையும் நுட்பமாகத் தாங்கியே நிற்கின்றன. அவை அனிச்சையாக படைப்புச் செய்பவனையும் பற்றிப் பீடிக்கின்றன. காந்தியியலைக் கொஞ்சம் மெனக்கெட்டுப் படித்தவன் என்பதால் எனக்கு அவர்மீது ஆரோக்கியமான மனச்சாய்வு உண்டு. அந்த மனச்சாய்வு இல்லாவிட்டால் அவர் வாழ்க்கையை மரபில் சொல்லிச்சென்றுவிட முடியாதல்லவா ? அவரின் அநேக செயல்பாடுகளின் மீது எனக்கு உணர்வு ரீதியான தொற்றும் உண்டு. அதுவும் இன்றைய கேடான சுயநலக் கோலத்தைக் காண்கையில் அது இன்னும் அதிகரிக்கிறதே அல்லாமல் தணியமறுக்கிறது. அந்த மனிதர் வாழ்வு முழுக்க வேர்க்கடலையைக் கொறித்தவர். அதனால் கவிதைக்குள் உரிமையோடு வந்துவிட்டார். ஒரு வேர்க்கடலைக்குள் ஒரு விந்துக் கழிவுக்கு வேண்டிய புரோட்டீன் அடங்கியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ReplyDeleteஎப்படியாகினும் சுவை சுவை தான்
ReplyDeleteஎனக்கு இந்த கவிதை மிகுந்த சுவையாகிறது.