Tuesday, May 15, 2012

மூணாறு



இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதால் இந்தக் கோடைக்கு கோடை வாசஸ்தலத்திற்கு மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்வதாக முடிவெடுத்தேன். கோடை காலத்தில் கோடை வாசஸ்தலங்களை எட்டியும் பார்க்கக் கூடாது என்று சபதமே எடுத்திருந்தேன். அங்குள்ளவர்களும் மக்களே, அங்குள்ளவையும் மேடு பள்ளங்களாலான புவியியல் தோற்றங்களே என்கிற தெளிவு மட்டுமே காரணமில்லை. அதுநாள்வரை இல்லாத புதுவெறியோடு ஊருலகத்தில் உள்ள அத்தனை மக்களும் புற்றீசல் போலப் படையெடுத்து அச்சிறுநகரங்களைப் புகையாலும் புழுதியாலும் நெருக்கடியாலும் கழுத்தைத் திருகிக் குற்றுயிராக்கி விடுகிறார்கள் என்பதுதான் முதல் காரணம். மலையூர்களுக்குச் செல்ல விரும்பினால் கோடை துவங்குவதற்கும் கார்காலம் முடிவதற்கும் இடையிலுள்ள ஒரு பருவத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர் பிடிக்கும் என்றால்  நடுங்கும் குளிர் மாதங்களும் கூட பயணத்திற்கு ஏற்றவைதாம்.




அருகில் உள்ள உதகையும் கோடைக்கானலும் எனக்கு வாந்தி வருகிற அளவிற்கு ஒவ்வாமை ஏற்படுத்திய இடங்கள் என்பதால் மூணாறுக்குச் செல்வதாக இறுதியாயிற்று. மூணாற்றில் ஹைடல் பார்க், மாட்டுப் பட்டி அணை, சில காட்சி முனைகள், இரவிகுளம் வரையாட்டுப் பூங்கா ஆகியன பார்க்கவேண்டியவை என்றாலும் செல்லும் வழியில் மறையூர் தொல்குடிகளின் கல்லறை மேடு, தூவானம் அருவி, லாகூன் அருவி ஆகியனவும் காண்பதற்கு அழகியவை. எங்களுக்கு உடுமலைப் பேட்டையிலிருந்து மூணாறு 89 கிலோமீட்டர்கள் என்பதால் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தின் யானைத்தடங்கள் வழியாக அமராவதி அணையின் கரையைப் பிடித்தபடிதான் செல்ல வேண்டும். ஊர் வழமையான ஒரு மலையூர் என்றாலும் செல்வழிக் காட்சிகளும் பசுமையும் கண்களுக்கு விருந்து.


போகும்போது மொத்தம் ஆறு இடங்களில் வண்டிகளை சாரை சாரையாக நிற்கவைத்து வண்டி ஓட்டுநரைக் குச்சுக்கு வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேர் இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். மறக்காமல் இருபது ரூபாய் கொடுங்கள் என்று லஞ்சத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த லஞ்சப் பொறுக்கிகள் உள்ளவரை இந்த தேசத்தை எந்த அன்னா ஹசாரேவும் காப்பாற்ற முடியாது.


மறையூரைத் தாண்டி ஓர் பள்ளத்தில் சினிமா ஷூட்டிங் கும்பல் காணப்பட்டது. சாலையோரத்தில் நின்ற அந்தக் கும்பலின் வண்டிகளில் இளவட்ட சினிமா முயற்சியாளர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். உடைகளுக்கான வேனிலிருந்து ஒருவர் பழைய புடவைகளைச் சாலையில் விரித்து வைத்து சுத்தியால் கொட்டி மேலும் கந்தலாக்கிக்கொண்டிருந்தார். யார் நடிகர்கள் என்று கேட்டோம். முரளியோட பையனும் அரவான் ஹீரோயினும் என்ற பதில் கிடைத்தது. படத்தின் பெயர் என்ன? என்றேன். ’பரதேசி’ என்று உங்களைத் திட்டும் பாவனையில் சொன்னான் ஒருவன். படத்தின் இயக்குநர் யார் என்றதற்குப் ‘பாலா’ என்றார்கள். சாலையில் சேலையை விரித்து வைத்துக் கந்தலாக்கிக்கொண்டிருந்ததற்கான காரணம் எனக்குக் கிடைத்துவிட்டது. பாலாவைச் சந்திக்கலாமா என்று ஓர் எண்ணம் தோன்றியது. புத்தகக் கண்காட்சியில் சுரேஷ் கண்ணனுடன் பாலா வந்தபோது ‘உங்களைப் பற்றி பாலுமகேந்திரா சார் நிறைய சொல்லியிருக்கார்’ என்று அவர் என்னோடு உரையாடிய ஞாபகம் வந்தது. வேண்டவே வேண்டாம்…. தன் பட ஷூட்டிங்கில் அதன் டைரக்டர் ஒரு மசை நாயைப்போல் காணப்படுவான் என்று என் ஞானம் சொல்லியதால் அப்படியே எஸ்கேப்.



மூணாறு போய்ச் சேர்ந்ததும் கிழவி கெட்ட வார்த்தை பேசத் துவங்கியதுபோல் அத்தனை மழை. அந்த மழை ஓர் இரண்டு மணி நேரம் எங்களை ஒரு தாழ்வாரத்தில் கட்டிப் போட்டுவிட்டது. சாலைகள் எல்லாம் நசுங்கிப் பிதுங்கும் வண்ணம் ஒரே வாகன நெரிசல். கேரள மஞ்சள் தோலர்களும் திருத்தமான மீசைக்காரர்களும் எங்கும் திரிகிறார்கள் என்றாலும் தமிழுக்குக் குறையில்லாத ஊர் மூணாறு. அந்தக் கருப்பு ஆட்டோக்களும் ஜீப்புகளும் ஆட்களைப் பிதுங்கப் பிதுங்க அள்ளிப்போட்டுக்கொண்டு எந்தப் பள்ளத்திலும் விழாமல் பாய்கின்ற இலாகவத்திற்கு எதையும் ஈடாகத் தரலாம்.

திரும்பி வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. வழியில் புலியோ யானையோ சாலையின் குறுக்கே நின்றால் என்ன செய்வது என்ற அச்சம் வேறு. நல்லவேளை ஒரே ஒரு காட்டுப் பன்றி மட்டும் குறுக்கிட்டு ஓடியது. 

3 comments:

  1. அருமையான பதிவு.
    வித்தியாசமான எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி திரு. ரத்னவேல் நடராஜன் !

    ReplyDelete
  3. இனிய வணக்கங்கள்.தங்கள் தளம் பற்றி முகநூலஜல் தெரிந்து கொண்டேன்.ஏற்கனவே நண்பர் ஒருவர் கூறியதுமுண்டு.மிக்க மகிழ்ச்சி.கவிக்கடிமை நான்.தாயாகக் கருதி தவழ்ந்து கொள்கிறேன் இங்கும்.

    ReplyDelete