Saturday, June 22, 2013

தலைக்கோட்டைப்போர் - விஜயநகரப் பேரரசின் முடிவு


தென்னிந்தியாவின் பேரரசாக இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் செங்கோல் செலுத்தியிருந்த விஜயநகர அரசுக்குத் தலைக்கோட்டைப் போர் முடிவுரையாக அமைந்தது. 

கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு, ஏதாவது ஒரு வகையில் அரசவம்சத்தில் உதித்தவர்களிடையே பதவிப் பேராசை பிடித்தாட்டியது. ஒருவரை ஒருவர் ஏய்த்தோ கொன்றே அரசராகினர். அல்லது வாரிசுரிமைப்படி ஒருவரை அரச கட்டிலில் அமர்த்திவிட்டு, மதியூகியாக இருந்த அமைச்சர் எல்லா அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆண்டு வந்தார். 

சதாசிவராயர் என்பவரை மன்னராக ஆக்கிவிட்டு அவருடைய பிரதம அமைச்சர் இராமராயர் என்பவர் நிழல் அரசராக வலம் வந்தார். விஜய நகர அரசைப் பொறுத்தவரையில் கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடைப்பட்ட பகுதிக்காக (இடைநாடு என்கிறார்கள்) வடக்கேயிருந்த பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீரார், பீடார் பகுதிச் சுல்தான்களோடு நிரந்தரமான சர்ச்சையும் சமரும் ஏற்பட்டவண்ணம் இருந்தன. அந்த விவாகாரங்களில் எப்போதும் விஜயநகர அரசர் கைகளே ஓங்கியிருந்தன. மேலும் இந்த சுல்தான்களுக்கிடையேயும் தீராத முன்வினைப் பகைகள் இருந்தன. 


காலப்போக்கில் இந்த சுல்தான்களுக்கிடையே மணவினை உறவுகள் ஏற்பட அவர்களுடைய பகை பின்தங்கியது. நட்புக்கரம் நீட்டும் நோக்கத்தோடு பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா இராமராயரின் மகன் இறந்த துக்கம் விசாரிக்க அரண்மனைக்கும் வந்திருக்கிறார். கிளம்பிச் செல்லும்போது தம்மை வழியனுப்ப இராமராயர் வராததைப் பெரிய அவமதிப்பாகக் கருதிவிட்டார் சுல்தான். நட்புக்கரம் முறிந்தது. 

இந்த சுல்தான்களுக்கிடையே மத்தியஸ்தராகவும் இருந்த இராமராயர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் அரசியல் சாணக்கியத்துடன் பிரித்தாளும் சூழ்ச்சியை உபயோகித்திருக்கிறார். இந்த வேலைகள் யாவும் சுல்தான்களிடையே ஏற்பட்ட மண உறவுகளால் அம்பலமாகி, பகை பழுக்கக் காரணமாகிவிட்டது. 

இராமராயர், நிழல் அரசராக வலம்வந்த அமைச்சர்தான் என்றாலும் அவருடைய நிர்வாகத்தில் பேரரசு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான ஆளுநரை மகாமண்டலீஸ்வரர் என்ற பெயரில் நியமித்து (அவர்கள் பெரும்பாலும் அரசர்/அமைச்சர் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள்) ஆண்டிருக்கிறார்கள். 


ஒவ்வொரு மண்டலீஸ்வரரும் அந்தந்த பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் வரையிலான எண்ணிக்கையுடைய காலாட்படையை வைத்திருந்திருக்கின்றனர். போர்க்குதிரைகள் ஆயிரங்களிலும் யானைகள் நூறுகளிலும் படையில் இடம்பெற்றன. 

விஜயநகர அரசர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரையில் கோவா போன்ற பகுதியில் வணிகத்திற்காகக் காலூன்றிய போர்ச்சுகீசியர்களின் முக்கிய வணிகமே கப்பல் கப்பலாக குதிரைகளை இறக்குமதி செய்து விஜயநகர அரசர்களுக்கு விநியோகம் செய்வதுதான். இதுதொடர்பாக போர்ச்சுகீசியர்களுடன் கிருஷ்ண தேவராயர் ‘எப்ப ஆயிரம் குதிரைகள் வந்திறங்கினாலும் நேராக எங்கள் கொட்டடிக்கு ஓட்டி வந்துவிடவும்’ என்று ஒப்பந்தமே போட்டிருக்கிறார். 

குதிரைகளைப் பழக்க இஸ்லாமிய வீரர்களும் பயிற்சியாளர்களும் விஜயநகரப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கோட்டைக்குள்ளேயே தொழுகைக்குப் பள்ளி வாசல் கட்டிக்கொள்ளவும் அனுமதி தந்திருக்கின்றனர்.


இராமராயரிடம் பீஜப்பூர் சுல்தான் ஒரு தூதுக்குழுவை அனுப்பி ரெய்ச்சூர் கோட்டையைத் தம் வசம் ஒப்படைக்கக் கேட்டிருக்கிறார். இராமராயர் வழக்கம்போல் தூதுக்குழுவை மாதக்கணக்கில் சந்திக்காமல் இழுத்தடித்து அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். இதனால் தக்காண சுல்தான்கள் விஜயநகரப் பேரரசுக்கு எதிராய்ப் போரிட, கூட்டுப்படை அமைத்தனர். 

1565ஆம் ஆண்டு கிருஷ்ணை நதிக்கரைக்கு வடக்கே தலைக்கோட்டை என்னுமிடத்தில் அவர்கள் முகாமிட்டனர். தமக்கெதிராக சுல்தான்கள் படைதிரட்டி நிற்பதை அறிந்த இராமராயர் பேரரசின் மண்டலீஸ்வரர்கள், தம் ஆதரவு பெற்ற சிற்றரசர்கள் ஆகிய அனைவரும் தங்களின் முழுப்படையுடன் வந்து சேரும்படி தகவல் அனுப்பினார். பல்வேறு இடங்களில் இருந்தும் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தன. 

சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சதாசிவராயர் விஜயநகரத்திலேயே வீற்றிருக்க, இராமராயர் தம் தம்பிகள் திருமலைராயர், வேங்கடாத்திரி ஆகியோருடன் படைத்தலைமை ஏற்றுத் தலைக்கோட்டைக்குச் சென்றார். இந்திய சரித்திரத்தில் தென்னிந்திய நிலத்தில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான பெரும்போர் தலைக்கோட்டைப் போர்தான். 


விஜயநகர அரச படைகளில் ஒன்பது இலட்சம் காலாட்படையினரும், நாற்பத்தைந்தாயிரம் குதிரைப்படையினரும் இரண்டாயிரம் போர்யானைகளும் இடம்பெற்றிருந்ததாக பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் எழுத , கூட்டோ என்பவரோ காலாட்படையினர் ஆறு இலட்சம், ஒன்று அல்லது இரண்டு லட்சங்களில் குதிரைப்படையினர் மற்றும் நூறுகளில் யானைகள் என்று எழுதுகிறார். எதிர்த்து நிற்கும் சுல்தான்களில் கூட்டுப்படைகள் இவற்றில் பாதியளவே இருந்திருக்கிறது. ஆனால், அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பீரங்கிகள் இருந்திருக்க வேண்டும். 

1565ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் போர் தொடங்கியது. நம்மை ஆண்ட முடியாட்சி முறையின் கடைசி திராவிடப் பேரரசு தன் அந்திமத்தில் அடியெடுத்து வைத்த நாள். இருதரப்புக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது. 



முதலில் விஜயநகரப் படைகள் எதிர்த்தரப்பைத் திணறடித்தன. அவர்களிடமிருந்து வெடித்த பீரங்கிகள் இராமராயர் தலைமையிலான படைக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தன. இராமராயர் தாமே முன்னின்று, தீரமாகப் போரிட்ட வீரர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கி ஊக்கிக்கொண்டிருந்தார். 

ஒருகட்டத்தில் விஜயநகரப் படைகள் வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருக்க, அது நிகழ்ந்தது. வரலாற்றின் மகத்தானவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்த துரோகம்தான் அது. விஜயநகரப் படைப்பிரிவில் முக்கியமான இரண்டு பிரிவுகளைத் தலைமையேற்றிருந்த முஸ்லீம் தளபதிகள் விஜயநகரப் படையை விட்டு விலகி, சுல்தான் படைகளிடம் போய்ச்சேர்ந்தனர். 

இதற்கிடையே மதம்பிடித்த யானையொன்று (போர் யானையின் தந்தங்களில் கூர்வாள்கள் கட்டியிருப்பர் என்பது குறிப்பு) உன்மத்தம் முற்றி இராமராயரின் பல்லக்கை நோக்கிக் கண்மண் தெரியாமல் ஓடிவந்தது. யானையைக் கண்டு பயந்துபோன பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தரையில் எறிந்துவிட்டு அலறியடித்து ஓடிவிட்டனர். 


பல்லக்கில் இருந்து இராமராயர் விழுந்துவிட, அவரை எதிரிப்படையினர் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். அந்த இடத்திலேயே இராமராயரின் தலையைக் கொய்து ஈட்டியில் செருகி விஜயநகரப் படைவீரர்கள் இடையே தூக்கிப் பிடித்தபடி வலம் வந்தார்கள். 

தலைமைக்கு நேர்ந்த முடிவால் விரக்தியும் பீதியும் உற்ற விஜயநகரப் படையினர் சிதறி ஓடினார்கள். இராமராயரின் இளவல் திருமலைராயருக்குக் கண்ணில் அம்பு குத்தியது. மற்றொரு இளவல் வேங்கடாத்திரி என்னவானார் என்றே தெரியவில்லை. போரில் கிடைத்த பொன் பொருள்களையும் குதிரை, யானை உள்ளிட்ட செல்வங்களையும் சுல்தான்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். 


விஜயநகரத்தில் இருந்த அரசர் சதாசிவராயருக்குத் தம் படையும் படைப்பிரதானிகளும் அழிந்துவிட்டது தெரியவர, தம் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததை உணர்ந்தார். விஜயநகரத்தின் கருவூலத்தையும் பொன் பொருள் நவரத்தினங்களையும் ஐந்நூறு யானைகளில் ஏற்றி அருகிலுள்ள பெனுகொண்டாவுக்கு அனுப்பிவிட்டு, தாமும் தம் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினார். 

செய்வதறியாத விஜயநகர மக்கள் இருப்பதை அள்ளிப் போட்டுக்கொண்டு தென் பகுதியை நோக்கிப் பதறி ஓடினர். பலர் தம் செல்வங்களைப் புதைத்து வைத்தனர். பலர் கொல்லப்பட்டனர். அதுவரை சுற்றிலுமிருந்த காடுகளில் திரிந்த கொள்ளையர் கூட்டமும் தம் பங்குக்கு விஜயநகரத்துள் நுழைந்து பெருங்கொள்ளை அடித்தது. 


விஜயநகரத்தில் நுழைந்த எதிரிப் படைகள் சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து நகரை அங்குலம் அங்குலமாகத் தீயிட்டுப் பொசுக்கினர். கலைக்கட்டுமானங்கள், கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் வெளியேறினர். 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் அகலொளிர் மாடங்களும் அன்பெழில் மங்கையரும் கலைதிகழ் கட்டிடங்களும் என விண்ணகம் பழிக்க வாழ்ந்த பெருநகரம் இப்போது பாம்புகளும் நரிகளும் ஒட்டடைகளும் வௌவால்களும் நிறைந்த பாழ்நகராயிற்று. பிறகு சுல்தான்களும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வீழ்ச்சியடையவேண்டிய நிலைமை ஏற்பட்டது வேறு விஷயம்.


பெனுகொண்டாவிற்குச் சென்ற சதாசிவராயர் சில ஆண்டுகள் கழித்து வந்து விஜயநகரத்தைப் புனர்நிர்மாணம் செய்து பார்த்தார். ஆனால், மக்கள் ஒருவரும் அந்நகருக்குக் குடிவர மறுத்துவிட்டார்கள். பெனுகொண்டாவிலும் தலைவலிகள் இருந்ததால் சந்திரகிரிக்கும் வேலூருக்கும் (வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் விஜயநகர அரசர்கள் உபயமே) தம் தலைநகரை விஜயநகர அரசர்கள் மாற்றி மாற்றித் தெற்கே வந்தவண்ணம் இருந்தனர். 


சதாசிவராயரும் 1570இல் திருமலை ராயரால் கொல்லப்பட்டார். திருமலைராயர் 1575இல் இறந்துவிட அவருடைய மூன்று புதல்வர்களில் ஒருவரான வேங்கடர் 1614 வரை ஆட்சி செய்து பின் இறந்தார். அதற்குப் பின் தொப்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு போருடன் விஜயநகரப் பேரரசு முற்றிலுமாக வரலாற்றிலிருந்து மறைந்தது. 

பின்குறிப்பு : இந்தப் படையெடுப்புகள், நகர அமைப்புகள், மக்கள் வாழ்க்கை, அரண்மனை, அரச சிந்தனை, போர்க்காட்சிகள், அழித்தொழிப்புகள், தீவைப்புகள் ஆகியவற்றைக் காட்சிரூபமாகக் காணவிரும்பினால் TROY என்கிற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள். அதில் வரும் காட்சிகள் யாவும் விஜயநகர வரலாற்றுச் சம்பவங்களுக்கு நிகரானவை, பிரம்மாண்டமானவை. ட்ராய் என்ற அந்தப் படம் ஹோமரின் இலியட் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 



(படங்கள் கோட்டை இடுபாடுகளின் மீதம், விஜயநகரத்தின் தலைமைச் செயலகம், அந்தப்புரம்)


10 comments:

  1. அருமையான படங்களுடன் வரலாற்றுத் தகவல்கள்... நேரம் கிடைக்கும் TROY படத்தை பார்க்கிறேன்...

    நன்றி சார்...

    ReplyDelete
  2. ஒரு வழி காட்டியை வைத்துக் கொண்டு பயணித்தது போல இருந்த்து..நன்று.

    ReplyDelete
  3. ஒரு வழி காட்டியை வைத்துக் கொண்டு பயணித்தது போல இருந்த்து..நன்று.

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் வரலாற்றுத் தகவல்கள்... நேரம் கிடைக்கும் TROY படத்தை பார்க்கிறேன்...

    நன்றி!

    ReplyDelete
  5. அருமை. கோட்டை எந்த ஊர் சரியான வழித்தடம் குறிப்பிடலாம் சந்திகிரி எது தொப்பூர் போர் யாருடன் நடந்தது.சேலம் சங்ககிரியை தலைகாட் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர் ஒவ்வொரு இடங்களிலும் தலைக்காடு அ தலைக்கோட்டை இருக்குமா

    ReplyDelete
  6. அருமை. கோட்டை எந்த ஊர் சரியான வழித்தடம் குறிப்பிடலாம் சந்திகிரி எது தொப்பூர் போர் யாருடன் நடந்தது.சேலம் சங்ககிரியை தலைகாட் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர் ஒவ்வொரு இடங்களிலும் தலைக்காடு அ தலைக்கோட்டை இருக்குமா

    ReplyDelete
  7. விஜயநகரம் பற்றி பிறர் அதிகம் பதிப்பிக்காத கோணத்தில் பதிப்பித்துள்ளீர்கள்.படங்கள் ஹம்பியின் காவல் அரண்களை (Military fortifications) காட்டுகின்றன.விஜயநகரம் என்ற ஒற்றை ஹிந்துப் பேர்ரசின் தோல்விக்கு முக்கிய காரணம் lack of stratagem and intelligence failure.

    ReplyDelete
  8. இந்து சாம்ராஜ்யம் அழிந்தது இந்த போரில் தான்

    ReplyDelete