Saturday, October 5, 2013

வலி மிகுதல் - தொடர் 1

தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்பற்றியதே அது

.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் விரிவுபடுத்தி அல்லது எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படி எழுதுவேன்

வலி மிகுதல் மற்றும் வலி மிகாமை குறித்த தெளிவு ஏற்பட்டுவிட்டால் எழுதுவன எல்லாம் பெரிதும் பிழையற்றனவாகும். தலைவலி மிகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்

வலி மிகுதல் என்றால் என்ன ? வல்லின மெய்யெழுத்துகள் வாக்கியக் கோவையில் இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறுமே வல்லின மெய்கள். டகர றகரங்களில் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித் தெரிந்துகொள்வதே நம் நோக்கம்

வலிமிகுதல் என்னும் மொழிப் பண்பு தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்த வேறெந்த உலக மொழி இலக்கணங்களிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.
                                                            
இனி நிலைமொழி, வருமொழி என்கிற பயன்பாடு அடிக்கடி இருக்கும். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி. மல்லிகைப் பூ - என்பதில் முதலில் உள்ள மல்லிகை நிலைமொழி, அடுத்து வருகிற பூ வருமொழி. இதை நினைவில் வைத்துக்கொள்க

இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வருமொழி வல்லினத்தில் இருந்தால் வலிமிகும். இது அடிப்படை

ஆடித் தள்ளுபடி, போக்குவரத்துக் கழகம், கண்மணிப் பூங்கா. தமிழ்ப் பாட்டு, அழகுக் குறிப்புகள்

உம்மைத் தொகையாக வரும் பெயர்ச்சொற்கள் எனில் வலிமிகாது

சங்கப் புலவர்களில் கபிலர் பரணர் அறிவேன்
தவறாமல் தினமணி கதிர் படிப்பேன்

உம்மைத் தொகை என்றால் இரண்டு பெயர்ச்சொற்களையும்உம்என்ற விகுதி சேர்த்துக் கருதுவது. சங்கப் புலவர்களில் கபிலரும் பரணரும் அறிவேன், தவறாமல் தினமணியும் கதிரும் படிப்பேன் - இவ்வாறு அவை பொருள் தருவன.

வேற்றுமைத் தொகைகள் தொக்கி நிற்பன. உவமைத் தொகை, உம்மைத் தொகை போன்றவை தொகுக்க நிற்பன. மொழியுருவில் தொக்கி நிற்பனவற்றைத்தான் தொகுக்க முடியும் என்பது இயல்பு.

தினமணிக் கதிர் என்றால் வேற்றுமைத் தொகை. தினமணி கதிர் என்றால் உம்மைத் தொகை. இரண்டுமே சரிதான். தினமணியின் கதிர்என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகவேண்டும்(வேற்றுமைத் தொகை). இங்கே இரண்டும் வேறு வேறல்ல. தினமணியும் கதிரும் என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகுதல் கூடாது. உம்மைத் தொகை. எழுதுபவர் என்ன பொருளில் கூற வருகிறார் என்பதே இவ்விடம் பொருந்தும். தினமணி கதிர் என்றே பெயர் தாங்கி வருகிறது. தினமணி என்கிற செய்தித்தாள் தனி. கதிர் என்கிற இணைப்புப் புத்தகம் தனி - இதுவே அவர்கள் உணர்த்தும் பொருள்.

அடுக்குத் தொடரில் வலி மிகாது என்பதே விதி. ஆனால், அடுக்குத் தொடரில் அபூர்வமாக வலி மிகுதலையும் காண முடிகிறது. உதா: பூப்பூப்பூ, தீத்தீ. காரணம் இது ஓரெழுத்து ஒருமொழி.

இரட்டைக் கிளவியில் மிகாது.


Wednesday, June 26, 2013

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?





1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

3. தமிழில் பேசுவதற்கு சுவாசமண்டலம் ஏராளமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுவதே நெஞ்சுரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இதமான பயிற்சியாகும். உதாரணத்திற்கு பாரதியார் பாடல்கள் சிலவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள். இரண்டு சுற்று மைதானத்தில் ஓடியதுபோல் மூச்சு வாங்கும்.

4. தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு.

5. தமிழ் அளவில்லாத சொல்வளம் பெற்றிருக்கும் மொழியாகும். தமிழில் வழங்கும் பெயர்ச்சொற்கள் ஒன்றிரண்டோடு சுட்டி முடிந்துவிடுவதில்லை. ஒன்றைக் குறிக்க மிகச் சாதாரணமாகப் பத்திருபது பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. அதேபோல் ஒற்றைச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்களும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாணி என்ற வெறும் இரண்டெழுத்துச் சொல்லுக்கு – காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, இசை, ஒலி, இசையுறுப்பாகிய தாளம், அழகு, அன்பு, முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று, பறைப்பொது, கூத்து, கை, பக்கம், சொல், சர்க்கரைக் குழம்பு, கள், பழச்சாறு, இலைச்சாறு, மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை, நீர், ஊர், நாடு, ஊர்சூழ் சோலை, காடு, பூம்பந்தர், பலபண்டம், கடைத்தெரு, நடை, சரகாண்டபாடாணம், பாடினி – என்று எத்தனை பொருள்கள் வழங்குகின்றன, பாருங்கள் !

6. ஒரு மொழியின் உயிர்நாடி அதில் வழங்கும் வினைச்சொற்கள்தாம். அம்மொழி பேசும் மக்கள் எத்தகைய வினைத்திட்பம் மிக்கவர்கள் என்பதையும் அச்சொற்களே எடுத்தியம்புகின்றன. தமிழ் வினைச்சொற்களின் அருமை என்னவென்றால் அவற்றுள் ஏராளமானவை பெயர்ச்சொற்களைப் போலவே வடிவில் எளியதாயும் அளவில் சின்னஞ்சிறிதாயும் இருப்பவை. உதாரணத்திற்குப் ‘பொங்கு’ என்ற இந்தச் சிறிய வினைச்சொல் பத்துக்கும் மேற்பட்ட செயல்களைச் சுட்டுவதாகும். அவை (பொங்குதல்) : காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், மகிழ்தல், சினத்தல், செருக்குறுதல், நுரைத்தல், விளங்குதல், மயிர் சிலிர்த்தல், வீங்குதல், விரைதல், துள்ளுதல், கண் சூடடைதல், உயர்தல், செழித்தல், ஒலித்தல், சமைத்தல்.

7. ஒருவரின் சிந்தனைப் பாங்கு அவர் பேசுகின்ற மொழியோடு தொடர்புடையது. எண்ணம் வெறும் படிமத்தளத்தில் தோன்றுவது. அந்தப் படிமத்தை விளக்குவதற்கு, குறைந்தபட்சம் எண்ணியவரே விளங்கிக்கொள்வதற்கு அவருக்குத் தெரிந்த மொழியே துணை. எண்ணியவற்றை விளக்க, போதாக்குறையோடு ஒருவரின் மொழி இருந்தால் அந்த எண்ணத்தால் ஆகக்கூடிய நன்மை என்ன ? வளமான தாய்மொழியை வாய்க்கப் பெற்றவர் தம் எண்ணங்களை படிமத் தளத்திலிருந்து இல்லை, மொழித்தளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ள வல்லவர் ஆவார்.

8. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளும் உயிர்மெய்யெழுத்துகளும் தமிழின் உச்சபட்சச் சிறப்பாகும். ‘தமிழ்’ என்ற பெயரே இந்த மூன்று வகை எழுத்துகளையும் பயன்படுத்தி வழங்கும் பெயர் என்பர். த – வல்லின உயிர்மெய். மி – மெல்லின உயிர்மெய். ழ் – இடையின மெய். வன்மையாகக் கூறவேண்டிய இடத்தில் வல்லின மெய்களையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மிகுதியாகப் பயன்படுத்தி முழங்கினால், அந்த முழக்கம் முழங்குபவரின் உடலையும் மனத்தையும் பறைபோல் அதிரச் செய்துவிடக்கூடியது. ’எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ? சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும் !’ – இவ்வரிகளில் வல்லின மெய் மற்றும் வல்லின உயிர்மெய்கள் மிகுந்து புழங்குவதால் உச்சரிப்பும் ஒலிப்பும் வன்மை உணர்ச்சி ததும்ப இருக்கின்றன.

9. மெல்லின மற்றும் இடையின மெய்களைப் பயன்படுத்தி எழுதினால் தமிழ்மொழி மென்மையின் தடத்தில் அதிராமல் நடக்கும். அவ்வகையான சொற்களை உரிய மாத்திரை அளவுகளில் திருத்தமாக உச்சரித்தால் மயக்கமே வந்துவிடும். உதாரணத்திற்கு ‘மெல்ல நட… மெல்ல நட… மேனி என்னாகும் ? சின்ன மலர்ப்பாதம் நோகும் ! உந்தன் சின்ன இடை வளைந்துவிடும் ! வண்ண சிங்காரம் குலைந்துவிடும்.’ மெல்லின மெய்களின் மென்மை புரிகிறதா ? (உங்க ளுக்கு எளிதில் விளங்கவேண்டும் என்பதற்காகவே திரைப்பாடல் உதாரணங்களைக் கூறியுள்ளேன். பாடல்கள் உச்சரிப்பொலிகளையும் கூடுதலாக நினைவூட்டும் என்பதற்காகவும்)

10. உலகில் எத்தனை இனங்களுக்குச் சொந்தமான தாய்மொழி வாய்த்திருக்கிறது என்று சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ நேர்ந்தவருக்கும் உடன் வரும் சொத்து அவர்களின் தாய்மொழி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனை மொழிகள் பேசும் உதடுகளற்றுச் செத்தன என்று எண்ணுங்கள். இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேசுவாரற்று ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று அடங்கிவிட்டது. வெறும் ஆயிரங்களில் சொற்களையுடைய மொழிகளைக்கூட அந்தந்த இனத்தினர் விடாது பற்றிக்கொண்டுள்ளனர். நம் பிள்ளைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் பயிலட்டும். ஆனால், தமிழைப் பழுதறக் கற்றுவிடட்டும்.

Saturday, June 22, 2013

தலைக்கோட்டைப்போர் - விஜயநகரப் பேரரசின் முடிவு


தென்னிந்தியாவின் பேரரசாக இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் செங்கோல் செலுத்தியிருந்த விஜயநகர அரசுக்குத் தலைக்கோட்டைப் போர் முடிவுரையாக அமைந்தது. 

கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு, ஏதாவது ஒரு வகையில் அரசவம்சத்தில் உதித்தவர்களிடையே பதவிப் பேராசை பிடித்தாட்டியது. ஒருவரை ஒருவர் ஏய்த்தோ கொன்றே அரசராகினர். அல்லது வாரிசுரிமைப்படி ஒருவரை அரச கட்டிலில் அமர்த்திவிட்டு, மதியூகியாக இருந்த அமைச்சர் எல்லா அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆண்டு வந்தார். 

சதாசிவராயர் என்பவரை மன்னராக ஆக்கிவிட்டு அவருடைய பிரதம அமைச்சர் இராமராயர் என்பவர் நிழல் அரசராக வலம் வந்தார். விஜய நகர அரசைப் பொறுத்தவரையில் கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடைப்பட்ட பகுதிக்காக (இடைநாடு என்கிறார்கள்) வடக்கேயிருந்த பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீரார், பீடார் பகுதிச் சுல்தான்களோடு நிரந்தரமான சர்ச்சையும் சமரும் ஏற்பட்டவண்ணம் இருந்தன. அந்த விவாகாரங்களில் எப்போதும் விஜயநகர அரசர் கைகளே ஓங்கியிருந்தன. மேலும் இந்த சுல்தான்களுக்கிடையேயும் தீராத முன்வினைப் பகைகள் இருந்தன. 


காலப்போக்கில் இந்த சுல்தான்களுக்கிடையே மணவினை உறவுகள் ஏற்பட அவர்களுடைய பகை பின்தங்கியது. நட்புக்கரம் நீட்டும் நோக்கத்தோடு பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா இராமராயரின் மகன் இறந்த துக்கம் விசாரிக்க அரண்மனைக்கும் வந்திருக்கிறார். கிளம்பிச் செல்லும்போது தம்மை வழியனுப்ப இராமராயர் வராததைப் பெரிய அவமதிப்பாகக் கருதிவிட்டார் சுல்தான். நட்புக்கரம் முறிந்தது. 

இந்த சுல்தான்களுக்கிடையே மத்தியஸ்தராகவும் இருந்த இராமராயர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் அரசியல் சாணக்கியத்துடன் பிரித்தாளும் சூழ்ச்சியை உபயோகித்திருக்கிறார். இந்த வேலைகள் யாவும் சுல்தான்களிடையே ஏற்பட்ட மண உறவுகளால் அம்பலமாகி, பகை பழுக்கக் காரணமாகிவிட்டது. 

இராமராயர், நிழல் அரசராக வலம்வந்த அமைச்சர்தான் என்றாலும் அவருடைய நிர்வாகத்தில் பேரரசு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான ஆளுநரை மகாமண்டலீஸ்வரர் என்ற பெயரில் நியமித்து (அவர்கள் பெரும்பாலும் அரசர்/அமைச்சர் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள்) ஆண்டிருக்கிறார்கள். 


ஒவ்வொரு மண்டலீஸ்வரரும் அந்தந்த பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் வரையிலான எண்ணிக்கையுடைய காலாட்படையை வைத்திருந்திருக்கின்றனர். போர்க்குதிரைகள் ஆயிரங்களிலும் யானைகள் நூறுகளிலும் படையில் இடம்பெற்றன. 

விஜயநகர அரசர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரையில் கோவா போன்ற பகுதியில் வணிகத்திற்காகக் காலூன்றிய போர்ச்சுகீசியர்களின் முக்கிய வணிகமே கப்பல் கப்பலாக குதிரைகளை இறக்குமதி செய்து விஜயநகர அரசர்களுக்கு விநியோகம் செய்வதுதான். இதுதொடர்பாக போர்ச்சுகீசியர்களுடன் கிருஷ்ண தேவராயர் ‘எப்ப ஆயிரம் குதிரைகள் வந்திறங்கினாலும் நேராக எங்கள் கொட்டடிக்கு ஓட்டி வந்துவிடவும்’ என்று ஒப்பந்தமே போட்டிருக்கிறார். 

குதிரைகளைப் பழக்க இஸ்லாமிய வீரர்களும் பயிற்சியாளர்களும் விஜயநகரப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கோட்டைக்குள்ளேயே தொழுகைக்குப் பள்ளி வாசல் கட்டிக்கொள்ளவும் அனுமதி தந்திருக்கின்றனர்.


இராமராயரிடம் பீஜப்பூர் சுல்தான் ஒரு தூதுக்குழுவை அனுப்பி ரெய்ச்சூர் கோட்டையைத் தம் வசம் ஒப்படைக்கக் கேட்டிருக்கிறார். இராமராயர் வழக்கம்போல் தூதுக்குழுவை மாதக்கணக்கில் சந்திக்காமல் இழுத்தடித்து அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். இதனால் தக்காண சுல்தான்கள் விஜயநகரப் பேரரசுக்கு எதிராய்ப் போரிட, கூட்டுப்படை அமைத்தனர். 

1565ஆம் ஆண்டு கிருஷ்ணை நதிக்கரைக்கு வடக்கே தலைக்கோட்டை என்னுமிடத்தில் அவர்கள் முகாமிட்டனர். தமக்கெதிராக சுல்தான்கள் படைதிரட்டி நிற்பதை அறிந்த இராமராயர் பேரரசின் மண்டலீஸ்வரர்கள், தம் ஆதரவு பெற்ற சிற்றரசர்கள் ஆகிய அனைவரும் தங்களின் முழுப்படையுடன் வந்து சேரும்படி தகவல் அனுப்பினார். பல்வேறு இடங்களில் இருந்தும் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தன. 

சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சதாசிவராயர் விஜயநகரத்திலேயே வீற்றிருக்க, இராமராயர் தம் தம்பிகள் திருமலைராயர், வேங்கடாத்திரி ஆகியோருடன் படைத்தலைமை ஏற்றுத் தலைக்கோட்டைக்குச் சென்றார். இந்திய சரித்திரத்தில் தென்னிந்திய நிலத்தில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான பெரும்போர் தலைக்கோட்டைப் போர்தான். 


விஜயநகர அரச படைகளில் ஒன்பது இலட்சம் காலாட்படையினரும், நாற்பத்தைந்தாயிரம் குதிரைப்படையினரும் இரண்டாயிரம் போர்யானைகளும் இடம்பெற்றிருந்ததாக பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் எழுத , கூட்டோ என்பவரோ காலாட்படையினர் ஆறு இலட்சம், ஒன்று அல்லது இரண்டு லட்சங்களில் குதிரைப்படையினர் மற்றும் நூறுகளில் யானைகள் என்று எழுதுகிறார். எதிர்த்து நிற்கும் சுல்தான்களில் கூட்டுப்படைகள் இவற்றில் பாதியளவே இருந்திருக்கிறது. ஆனால், அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பீரங்கிகள் இருந்திருக்க வேண்டும். 

1565ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் போர் தொடங்கியது. நம்மை ஆண்ட முடியாட்சி முறையின் கடைசி திராவிடப் பேரரசு தன் அந்திமத்தில் அடியெடுத்து வைத்த நாள். இருதரப்புக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது. 



முதலில் விஜயநகரப் படைகள் எதிர்த்தரப்பைத் திணறடித்தன. அவர்களிடமிருந்து வெடித்த பீரங்கிகள் இராமராயர் தலைமையிலான படைக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தன. இராமராயர் தாமே முன்னின்று, தீரமாகப் போரிட்ட வீரர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கி ஊக்கிக்கொண்டிருந்தார். 

ஒருகட்டத்தில் விஜயநகரப் படைகள் வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருக்க, அது நிகழ்ந்தது. வரலாற்றின் மகத்தானவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்த துரோகம்தான் அது. விஜயநகரப் படைப்பிரிவில் முக்கியமான இரண்டு பிரிவுகளைத் தலைமையேற்றிருந்த முஸ்லீம் தளபதிகள் விஜயநகரப் படையை விட்டு விலகி, சுல்தான் படைகளிடம் போய்ச்சேர்ந்தனர். 

இதற்கிடையே மதம்பிடித்த யானையொன்று (போர் யானையின் தந்தங்களில் கூர்வாள்கள் கட்டியிருப்பர் என்பது குறிப்பு) உன்மத்தம் முற்றி இராமராயரின் பல்லக்கை நோக்கிக் கண்மண் தெரியாமல் ஓடிவந்தது. யானையைக் கண்டு பயந்துபோன பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தரையில் எறிந்துவிட்டு அலறியடித்து ஓடிவிட்டனர். 


பல்லக்கில் இருந்து இராமராயர் விழுந்துவிட, அவரை எதிரிப்படையினர் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். அந்த இடத்திலேயே இராமராயரின் தலையைக் கொய்து ஈட்டியில் செருகி விஜயநகரப் படைவீரர்கள் இடையே தூக்கிப் பிடித்தபடி வலம் வந்தார்கள். 

தலைமைக்கு நேர்ந்த முடிவால் விரக்தியும் பீதியும் உற்ற விஜயநகரப் படையினர் சிதறி ஓடினார்கள். இராமராயரின் இளவல் திருமலைராயருக்குக் கண்ணில் அம்பு குத்தியது. மற்றொரு இளவல் வேங்கடாத்திரி என்னவானார் என்றே தெரியவில்லை. போரில் கிடைத்த பொன் பொருள்களையும் குதிரை, யானை உள்ளிட்ட செல்வங்களையும் சுல்தான்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். 


விஜயநகரத்தில் இருந்த அரசர் சதாசிவராயருக்குத் தம் படையும் படைப்பிரதானிகளும் அழிந்துவிட்டது தெரியவர, தம் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததை உணர்ந்தார். விஜயநகரத்தின் கருவூலத்தையும் பொன் பொருள் நவரத்தினங்களையும் ஐந்நூறு யானைகளில் ஏற்றி அருகிலுள்ள பெனுகொண்டாவுக்கு அனுப்பிவிட்டு, தாமும் தம் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினார். 

செய்வதறியாத விஜயநகர மக்கள் இருப்பதை அள்ளிப் போட்டுக்கொண்டு தென் பகுதியை நோக்கிப் பதறி ஓடினர். பலர் தம் செல்வங்களைப் புதைத்து வைத்தனர். பலர் கொல்லப்பட்டனர். அதுவரை சுற்றிலுமிருந்த காடுகளில் திரிந்த கொள்ளையர் கூட்டமும் தம் பங்குக்கு விஜயநகரத்துள் நுழைந்து பெருங்கொள்ளை அடித்தது. 


விஜயநகரத்தில் நுழைந்த எதிரிப் படைகள் சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து நகரை அங்குலம் அங்குலமாகத் தீயிட்டுப் பொசுக்கினர். கலைக்கட்டுமானங்கள், கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் வெளியேறினர். 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் அகலொளிர் மாடங்களும் அன்பெழில் மங்கையரும் கலைதிகழ் கட்டிடங்களும் என விண்ணகம் பழிக்க வாழ்ந்த பெருநகரம் இப்போது பாம்புகளும் நரிகளும் ஒட்டடைகளும் வௌவால்களும் நிறைந்த பாழ்நகராயிற்று. பிறகு சுல்தான்களும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வீழ்ச்சியடையவேண்டிய நிலைமை ஏற்பட்டது வேறு விஷயம்.


பெனுகொண்டாவிற்குச் சென்ற சதாசிவராயர் சில ஆண்டுகள் கழித்து வந்து விஜயநகரத்தைப் புனர்நிர்மாணம் செய்து பார்த்தார். ஆனால், மக்கள் ஒருவரும் அந்நகருக்குக் குடிவர மறுத்துவிட்டார்கள். பெனுகொண்டாவிலும் தலைவலிகள் இருந்ததால் சந்திரகிரிக்கும் வேலூருக்கும் (வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் விஜயநகர அரசர்கள் உபயமே) தம் தலைநகரை விஜயநகர அரசர்கள் மாற்றி மாற்றித் தெற்கே வந்தவண்ணம் இருந்தனர். 


சதாசிவராயரும் 1570இல் திருமலை ராயரால் கொல்லப்பட்டார். திருமலைராயர் 1575இல் இறந்துவிட அவருடைய மூன்று புதல்வர்களில் ஒருவரான வேங்கடர் 1614 வரை ஆட்சி செய்து பின் இறந்தார். அதற்குப் பின் தொப்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு போருடன் விஜயநகரப் பேரரசு முற்றிலுமாக வரலாற்றிலிருந்து மறைந்தது. 

பின்குறிப்பு : இந்தப் படையெடுப்புகள், நகர அமைப்புகள், மக்கள் வாழ்க்கை, அரண்மனை, அரச சிந்தனை, போர்க்காட்சிகள், அழித்தொழிப்புகள், தீவைப்புகள் ஆகியவற்றைக் காட்சிரூபமாகக் காணவிரும்பினால் TROY என்கிற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள். அதில் வரும் காட்சிகள் யாவும் விஜயநகர வரலாற்றுச் சம்பவங்களுக்கு நிகரானவை, பிரம்மாண்டமானவை. ட்ராய் என்ற அந்தப் படம் ஹோமரின் இலியட் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 



(படங்கள் கோட்டை இடுபாடுகளின் மீதம், விஜயநகரத்தின் தலைமைச் செயலகம், அந்தப்புரம்)


Saturday, May 26, 2012

புல்லறுக்க வந்தவன் தந்த புதையல்


தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் - நா. காமராசன்
புல்லறுக்க வந்தவன் தந்த புதையல்
·         மகுடேசுவரன்


தம் படங்களுக்குப் பாடல்கள் எழுதப் புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்ளக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது.

எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு நில்லாமல் அவர்களுக்குத் தம் படங்களில் இயன்றவிடங்களில் எல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து ஏற்றிவிட்டிருக்கிறார். தமிழ்த் திரையின் அபூர்வமான படைப்புகளைத் தந்த இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆர் தந்து புரந்ததால் ஆளானவர் என்பதை அவரது சுயசரிதைப் பக்கங்கள் கூறுகின்றன. இத்தனைக்கும் மகேந்திரன் எம்.ஜி.ஆரின் படங்கள் எவற்றிலும் பங்கு பெற்றவரோ பணியாற்றியவரோ அல்லர். தம் கடைசிக் காலத்தில்கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார். அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும் ?’ என்பதே.

பஞ்சு அருணாசலம், புலமைப் பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன்.

நா. காமராசன் தேனிமாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியிருக்கிறார். தாம் கல்லூரியில் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு  கவனிப்பார்கள் என்று நா. காமராசன் கூறியிருக்கிறார். முன்னால் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இளமையில் திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். அதற்காகச் சிறைசென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகளில் அவர் கவிதைகள் எழுதி வெளியிட்டார். தன் இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழைக் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் அவர் கவிதைகள் எழுதத் துவங்கினார். அதுவே தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை வடிவம் துளிர்விடத் துவங்கியிருந்த நேரம். எழுத்து இதழில் கவிதை எழுதியவர்கள் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தோடு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் நா. காமராசன் மரபுக் கவிதையைப் போன்றே சந்தச் சொற்றொடர்களில் புதுப் பதச்சேர்க்கைகளைத் தம் கவிதைகளில் பயன்படுத்தினார். அந்த உருவம் அப்போதைய காலகட்டத்தில் மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். அப்போதைய காலத்திற்கேற்ற புதுமைகளை அவர் செய்ததால் நா. காமராசனின் கவிதைகள் பெரும் புகழைப் பெற்றன. ஒரு வகையில் அவர் வானம்பாடிகளுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன்
ஒளிகள் பேசும் மொழியிலே – நான்
இருள்களோடு பேசுவேன்

என்றெல்லாம் அமைகிறது அவர் கவிதை. இந்தப் போக்கைக் கவிஞர் கண்ணதாசன் போன்ற மரபை மட்டுமே எழுதிய கவிஞர்களும் முன்வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதை நா. காமராசனின் ‘சூரிய காந்தி’ கவிதைத் தொகுப்புக்குக் கண்ணதாசன் வழங்கிய முன்னுரையால் உணர முடிகிறது. ‘ஒரு நூலுக்கு முன்னுரை என்பது யானைக்குத் தந்தத்தைப்போல’ என்பது நா. காமராசனின் கருத்து. பிற்காலத்தில் வாரப்பத்திரிகைகளில் வெளியாகி சாதாரணமான வாக்கிய அமைப்புகளாகிப் போன போக்குகளுக்கும் அவரிடமே தோற்றுவாய்களைக் காணமுடிகிறது.

இந்தியாவிற்கு / சுதந்திரம் வந்தபோது / நான் மட்டும் அடிமையானேன் / ஆம் ! அன்றுதான் நான் / ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன்.
திருமணத்திற்குப் பிறகு / இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள் / அதற்குப் பிறகு / அவர்கள் இரண்டுபேரும் சண்டை போடுகிறார்கள் / ஏன் ? / ‘அந்த ஒருவர்’ / யார் என்று தீர்மானம் செய்வதற்காக.

– என்பதைப் போன்றவற்றை ‘சித்திர மின்னல்கள்’ என தம் தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.

உருவகக் கவிதை வடிவத்தை அவரே முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். கறுப்பு மலர்கள் என்னும் அவருடைய சொல்லாட்சி நீக்ரோக்களைப் பற்றிய உருவகம் ஆகும். நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் / ஆடை வாங்குவதற்காக... என்பது விலைமகளைப் பற்றிய அவருடைய புகழ்பெற்ற வரி. நடைப்பிணங்கள் என்ற தலைப்பில் கறுப்பு மலர்கள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மலைவாழ் பளியர் குலத்தின் சோக வாழ்க்கைப் பாடல் ‘நடையிலொரு தவவேகம் / நயனத்தில் புத்த நிழல் / குடிசைகளில் துறவுநெறி / நாங்கள் காட்டு மூலிகைபோல் / கண்டெடுக்க முடியாமல் / ஓட்டைக் குடிசைகளில் / உயிர்வாழும் நடைப்பிணங்கள்’ என்று முடிகிறது. ஒருவேளை தமிழ்ப் புதுக்கவிதையில் எழுதப்பட்ட விளிம்பு நிலை மக்களைப் பற்றிய முதல் வரிகளாக நா. காமராசனின் இவ்வரிகளே இருக்கக் கூடும்.
நா. காமராசனைக் கவிதையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. சுரதாவைப் போலவே நா. காமராசனிடமும் புதிய உவமைகளைக் காணமுடிகிறது. உவமை தரும் இன்பம் என்பது யாப்பு நமக்கு நல்கிய அரிய செல்வம். மொழி தள்ளாடி நடந்த ஆதிகாலத்தில் ஒவ்வொன்றும் உவமையின் வழியாகத்தான் எடுத்துச் சொல்லப்பட்டுக் கருத்துப் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். உவமை எதிர்பாராத திசையிலிருந்து மின்னலைப் போல் தோன்றும்போது அது உணர்த்த விரும்பும் பொருள் இடியைப் போல் இறங்குகிறது. நா. காமராசன் உவமைகளை உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியவர். கரிகால் வளவனின் கால்போல் கறுத்த மேகம் - போர்க்களத்தில் ஓடுகின்ற தேர்கள்போலப் புதுவெள்ளம் - விதைநெல்லின் மூட்டையைப்போல் தூக்கிக்கொண்டு விரித்திருந்த மெத்தைக்குக் கொண்டு போனான் – நிழல்பந்தல் போட்டதுபோல் நின்றிருக்கும் புளியந்தோப்பு – நினைவுகள் திரும்பிவர நீர்வீழ்ச்சி போலழுதாள் – வைகைநதித் தண்ணீர்போல் அடக்கம் - என அவரின் உவமைக் கணக்குகள் ஏராளம்.

ஒரே சொல்லை இருபொருள்படும்படிக் கையாள்வதைச் சிலேடை என்பார்கள். அப்படிப்பட்ட சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா. காமராசன் கெட்டிக்காரர். நா. காமராசனை நான் தேடிப் படிக்கத் தூண்டியவையே அவருடைய சிலேடை வரிகளில் எனக்கேற்பட்ட ஆர்வம்தான்.

வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள் / தன்னிழலைத் தண்ணீரில் விழவைக்காமல் தண்ணிழலை வளர்க்கின்ற மண்டபம் / நிலையான தண்மையுள்ள எழிலே வாழ்வின் நிலையாமைத் தன்மையுள்ள நிழலே / வஞ்சியாளும் சேரமன்னர் வஞ்சியாது இவ்வஞ்சியாளைச் சேர்ந்த மன்னர் / வெஞ்சமரில் வேல்மன்னர் வாள்மன்னர் என் வேல்விழியில் வாழ்மன்னர் / கொஞ்சுகின்ற மலரிதழ்மேல் அரும்பு மீசை கொண்ட மன்னர் கொடையருளில் கொண்டல் மன்னர் - இவையெல்லாம் சிறுவயதில் என்னை உடனே ஈர்த்து நின்றன. பிற்காலத்தில் சிலேடைப் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டாலும் அது தரும் சுவைக்கென்று ஒரு தனி மதிப்பு என்றும் இருக்கவே செய்யும். சிலேடைகள் தற்காலக் கவிதைகளில் காணப்படாமைக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அது புலமையைக் கொண்டு விளையாடும் ஆட்டமாக இருக்கிறது என்பதைத்தான். தற்காலக் கவிஞர்களுக்கு மொழிப்புலமையோடு எந்த ஒட்டுறவும் இல்லை. புழக்கத்தில் உள்ள சிலவாயிரம் சொற்களைக் கொண்டு இங்கே பலருக்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறைபட்டுக் கூறுவீர்களேயானால் நவீனம் என்ற குத்தை விட்டு உங்களைப் படுக்கப்போட்டுவிடுவார்கள்.    

தொட்டில் குழந்தைக்கு ஒரு தாலாட்டுப்பாடல் வடிவில் அவர் எழுதிய கவிதை ஒன்று.

தொட்டில் துணி முரடோ இல்லை இவன்
தோளெலும்பும் பூதானோ
ஆரோ எவரோ நீ
அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர் இளநீரோ

புதுக்கவிதையில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் முதலில் எழுதிப் பார்த்தவரும் அவரே.
அழகு என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அவர் பட்டியல் ஒன்றைப் போட்டு எழுதிய வரிகள் இவை. இந்தக் கவிதை பிற்பாடு எப்படிப்பட்ட திரைப்பாடலானது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மங்கைக்குக் கண்ணழகு ! துள்ளுகின்ற
மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி !
செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு !
சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு !
சங்கிற்கு நிறமழகு ! தேய்ந்துபோகும்
சந்தனந்தான் மார்பிற்கு அழகு ! நல்ல
தங்கநகை கழுத்திற்கு அழகு ! என்றன்
தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு !
  • ·           
நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படம் வாயிலாக நா. காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல. கனவுகளே ஆயிரம் கனவுகளே, போய்வா நதியலையே, விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான், ஓ மானே மானே உன்னைத்தானே, மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ, ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே – ஆகிய பாடல்கள் அவர் எழுதியவற்றில் என்னைக் கவர்ந்தவை. மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு,தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். தாம் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில் ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார். ‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்று மனம் வெதும்பிச் சொன்னார். திரையுலகம் அவருக்கு அநீதி இழைத்திருக்குமெனில் அதற்காக அது வெட்கப்படவேண்டும். உரிய கன்னிமையோடும் தூய பேரழகோடும் வளர்ந்த பெண்களைத் தன்னில் இழுத்து அழுக்காக்கிச் சக்கையாக்கித் துப்பிவிடும் அந்த மாய உலகம் நா. காமராசனுக்கும் அதையே செய்ததில் வியப்பொன்றுமில்லை. இப்படி எத்தனையோ வெள்ளை உள்ளங்களை வாட்டித் துன்புறுத்திப் பாவக்கடலாக மாறி நிற்கும் திரையுலகம் தனக்கான தண்டனையை உரிய மீட்பர் யாருமேயில்லாமல் ‘இடுமுதல் எட்டணாவிற்கு நம்பகமில்லாத ஒரு தொழிலாக மாறி தற்காலத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

ஏ.வி.எம்மின் ‘நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் நா. காமராசன் எழுதிய பாடல் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்பது. நா. காமராசனின் தமிழ் ஆட்சியும் சொல்லழகும் சந்தத்தோடு மெல்ல வழிந்து இதயத்தை வேதனைக்கடலில் மூழ்கடிக்கும் பாங்கும் அப்பாடலில் உண்டு. கேட்பவர் எவரும் பாடலின் இறுதியில் விழிக்கடை நீர்த்திரளைத் துடைக்காமல் எழமுடியாதபடி இருக்கும் அப்பாடல். பாடிய ஜேசுதாஸின் குரலில் அத்தனை உருக்கம் பாடலெங்கும் பனியாக மூடியிருக்கும்.
நானே எனக்கு நண்பன் இல்லையே என்று போக்கிரித்தனமாக சுற்றியலைந்த நாயகன் காதலுற்றுத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு உன்னதமான நிலைக்கு வருவான். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு சாட்சியாக ஒரு மகள் பிறந்திருப்பாள். அச்செல்ல மகள் தந்தைசொல் மீறித் தன் தலைவனைத் தேடி மணந்து பெற்றவரை நீங்குவாள். தன் இழிவுகள் அனைத்தையும் ஏற்று சகித்து தன்னையும் சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கிய தன் காதல் மனைவி வெந்து துடிப்பதைக் காணமுடியாத நிலையில் நாயகன் பாடும் பாடல் அது. பிரிவுத் துயரமும் உறவுகளின் நிலையாமையும் அந்தப் பாடல் வரியெங்கும் பிசினாக ஒட்டியிருக்கும்.


சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா ?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ?

சிட்டுக்குருவி நம் மகள். நம் இல்லக்கூட்டில் செல்லச் சிட்டாகப்பிறந்த ஒரே மகள். உணவையும் உயிரையும் வாயிட்டு ஊட்டி வளர்த்த அன்புச் சிறுவள். அந்தச் சிட்டுக் குருவிக்குச் சிறகு முளைத்துவிட்டது. சிறகு முளைத்ததும் கொஞ்சமும் காத்திருக்காமல் அவசரப்பட்டுப் பறந்து போய்விட்டாளே ! ரத்தத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவள், ரத்த உறவாக என்றும் இருந்து நம்மீது அன்பு செலுத்த வேண்டியவள் – அவளோடு இருந்த அத்தனை உறவும் தன் மணவாளனைத் தேடிப் பறந்ததில் கிளைபோல் முறிந்துவிட்டதே ! நாம் இந்த வாழ்வில் பெற்ற ஒரே பேறு நான் தந்தை என்பதும் நீ தாய் என்பதும்தான். அந்தப் பேற்ற நமக்குப் பிறந்து வழங்கியவள் நம் மகள். அவளே நம்மைத் துறந்து சென்றுவிட்டபிறகு அந்தப் பெருமையைக் கூட நாம் இழந்துவிட்டோமா ? அவளே இல்லையென்றால் நான் தந்தையும் இல்லை, நீ அன்னையும் இல்லையே ! இல்லை இது வெறும் கனவுதானா ? அல்லது அப்போதைக்கு நின்று நிலவிப் பின் மறந்தி நீங்கிவிடவேண்டிய நினைவா ? சொந்தம் என்பது பிறப்போடு வருவது. பந்தம் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் வந்து சேர்வது. அப்படி நெஞ்சோடு பந்தமாக வந்து சேர்ந்தவை எல்லாமே என்றும் தொடரும் தொடர்கதையா ? அல்லது அவ்வப்போது முடிந்துவிடும் சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளே நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்
கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?
தாயென்னும் பூமாலை தரை மேலே வாடுதே !

இந்த உலகில் நாம் நடந்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே நாடக மேடை நிகழ்வுகளே. அவை வெறும் போலிகள். நாம் நம்பிப் பயணிக்கும் ஓடங்களாகிய உறவுகள் எல்லாமே மூழ்கி உருவழியும் காகித ஓடங்களே. பாசம் என்றா சொல்ல முடியும் ? எல்லாமே வெறும் வேஷம் என்பதாகத்தானே இருக்கிறது ? அல்லது காலம் இட்டுக் காட்டுகிற வண்ணக்கோலங்களா இவையெல்லாம் ? ஜோடிக்குருவிகளாக இருந்த நம்மோடு கூடிவாழ்வதற்காக நம் உறவுக் கூட்டுக்கு ஓடி வந்த ஜீவன் நம் மகள். சிறகு முளைத்ததால் ஆடிப் பாடி மகிழ்வதற்காக நம் பாதுகாப்பான கூட்டைவிட்டு அது காட்டுக்குப் பறந்து போய்விட்டதே. அந்தக் காட்டில் அந்தச் சிறுகுருவியைக் கொத்தித் தின்பதற்காக எத்தனை எத்தனை பருந்துகளும் வல்லூறுகளும் வட்டமிடுகின்றனவோ ! அந்தத் துயரத்தில் அவளைப் பெற்ற தாயென்னும் இந்தப் பூமாலை தரைமேலே வாடி வதங்குகின்றதே !

காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை
கண்கள் ஆடப் பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !

புரிகிறது. காலங்கள் மாறிவருகின்றன. அதற்கேற்ப மாறிவிட்ட காட்சிகளைத்தான் இங்கே காண்கிறேன். என் மகள் பிரிந்துபோனது பருவத்தின் நிர்ப்பந்தம், ஒருநாள் மனம் மாறித் திரும்பவருவாள் என்றெல்லாம் நியாயங்கள் சில இருக்கலாம். ஆனால், அந்த நியாயங்கள் எங்களுக்கு ஆறுதலைக் கூறுவதில்லை. மஞ்சளும் குங்குமமும் மார்புச் சந்தனமும் சூடுகின்ற எங்கள் கன்னிப் பாவை எங்கள் குலவிளக்கு. பாசத்தின் ஒளிவிளக்கைத் தன் திருக்கரங்களில் ஏந்தி எங்களோடு வாழ்வதற்காக வந்த வேளை இது என்று எண்ணியிருந்தோம். தன் கண்கள் ஒருவனைக் கண்டு காதலில் ஆடிவிட்டதால் அவள் புதிதாக அடைந்திருக்கும் பெண்மை அவளது எண்ணத்திற்கு ஒத்துப்பாடி விட்டதால் இன்பம் கண்டு மகிழும் வழியில் வளர்ந்த மங்கையாகிச் சென்றுவிட்டாள். சரி அதற்காக அவளைச் சபிக்கவா முடியும் ? தாயும் தந்தையுமாகிய நாங்கள் கெட்டு அழிவுற்று வாடி நின்றாலும் அவள் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும் !

மகளைப் பெற்றவர்கள் எவரும் இந்தப் பாடலின் ஆழத்தை இன்னும் அதிகமாக உணர முடியும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அடர்த்தியான மௌனம் சூழ்ந்துகொள்ளும். அது நானும் மகளைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ ! 

நன்றி: காட்சிப்பிழைதிரை (திரைப்பட மாதாந்திர ஆய்விதழ்)

Tuesday, May 15, 2012

மூணாறு



இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதால் இந்தக் கோடைக்கு கோடை வாசஸ்தலத்திற்கு மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்வதாக முடிவெடுத்தேன். கோடை காலத்தில் கோடை வாசஸ்தலங்களை எட்டியும் பார்க்கக் கூடாது என்று சபதமே எடுத்திருந்தேன். அங்குள்ளவர்களும் மக்களே, அங்குள்ளவையும் மேடு பள்ளங்களாலான புவியியல் தோற்றங்களே என்கிற தெளிவு மட்டுமே காரணமில்லை. அதுநாள்வரை இல்லாத புதுவெறியோடு ஊருலகத்தில் உள்ள அத்தனை மக்களும் புற்றீசல் போலப் படையெடுத்து அச்சிறுநகரங்களைப் புகையாலும் புழுதியாலும் நெருக்கடியாலும் கழுத்தைத் திருகிக் குற்றுயிராக்கி விடுகிறார்கள் என்பதுதான் முதல் காரணம். மலையூர்களுக்குச் செல்ல விரும்பினால் கோடை துவங்குவதற்கும் கார்காலம் முடிவதற்கும் இடையிலுள்ள ஒரு பருவத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர் பிடிக்கும் என்றால்  நடுங்கும் குளிர் மாதங்களும் கூட பயணத்திற்கு ஏற்றவைதாம்.




அருகில் உள்ள உதகையும் கோடைக்கானலும் எனக்கு வாந்தி வருகிற அளவிற்கு ஒவ்வாமை ஏற்படுத்திய இடங்கள் என்பதால் மூணாறுக்குச் செல்வதாக இறுதியாயிற்று. மூணாற்றில் ஹைடல் பார்க், மாட்டுப் பட்டி அணை, சில காட்சி முனைகள், இரவிகுளம் வரையாட்டுப் பூங்கா ஆகியன பார்க்கவேண்டியவை என்றாலும் செல்லும் வழியில் மறையூர் தொல்குடிகளின் கல்லறை மேடு, தூவானம் அருவி, லாகூன் அருவி ஆகியனவும் காண்பதற்கு அழகியவை. எங்களுக்கு உடுமலைப் பேட்டையிலிருந்து மூணாறு 89 கிலோமீட்டர்கள் என்பதால் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தின் யானைத்தடங்கள் வழியாக அமராவதி அணையின் கரையைப் பிடித்தபடிதான் செல்ல வேண்டும். ஊர் வழமையான ஒரு மலையூர் என்றாலும் செல்வழிக் காட்சிகளும் பசுமையும் கண்களுக்கு விருந்து.


போகும்போது மொத்தம் ஆறு இடங்களில் வண்டிகளை சாரை சாரையாக நிற்கவைத்து வண்டி ஓட்டுநரைக் குச்சுக்கு வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேர் இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். மறக்காமல் இருபது ரூபாய் கொடுங்கள் என்று லஞ்சத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த லஞ்சப் பொறுக்கிகள் உள்ளவரை இந்த தேசத்தை எந்த அன்னா ஹசாரேவும் காப்பாற்ற முடியாது.


மறையூரைத் தாண்டி ஓர் பள்ளத்தில் சினிமா ஷூட்டிங் கும்பல் காணப்பட்டது. சாலையோரத்தில் நின்ற அந்தக் கும்பலின் வண்டிகளில் இளவட்ட சினிமா முயற்சியாளர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். உடைகளுக்கான வேனிலிருந்து ஒருவர் பழைய புடவைகளைச் சாலையில் விரித்து வைத்து சுத்தியால் கொட்டி மேலும் கந்தலாக்கிக்கொண்டிருந்தார். யார் நடிகர்கள் என்று கேட்டோம். முரளியோட பையனும் அரவான் ஹீரோயினும் என்ற பதில் கிடைத்தது. படத்தின் பெயர் என்ன? என்றேன். ’பரதேசி’ என்று உங்களைத் திட்டும் பாவனையில் சொன்னான் ஒருவன். படத்தின் இயக்குநர் யார் என்றதற்குப் ‘பாலா’ என்றார்கள். சாலையில் சேலையை விரித்து வைத்துக் கந்தலாக்கிக்கொண்டிருந்ததற்கான காரணம் எனக்குக் கிடைத்துவிட்டது. பாலாவைச் சந்திக்கலாமா என்று ஓர் எண்ணம் தோன்றியது. புத்தகக் கண்காட்சியில் சுரேஷ் கண்ணனுடன் பாலா வந்தபோது ‘உங்களைப் பற்றி பாலுமகேந்திரா சார் நிறைய சொல்லியிருக்கார்’ என்று அவர் என்னோடு உரையாடிய ஞாபகம் வந்தது. வேண்டவே வேண்டாம்…. தன் பட ஷூட்டிங்கில் அதன் டைரக்டர் ஒரு மசை நாயைப்போல் காணப்படுவான் என்று என் ஞானம் சொல்லியதால் அப்படியே எஸ்கேப்.



மூணாறு போய்ச் சேர்ந்ததும் கிழவி கெட்ட வார்த்தை பேசத் துவங்கியதுபோல் அத்தனை மழை. அந்த மழை ஓர் இரண்டு மணி நேரம் எங்களை ஒரு தாழ்வாரத்தில் கட்டிப் போட்டுவிட்டது. சாலைகள் எல்லாம் நசுங்கிப் பிதுங்கும் வண்ணம் ஒரே வாகன நெரிசல். கேரள மஞ்சள் தோலர்களும் திருத்தமான மீசைக்காரர்களும் எங்கும் திரிகிறார்கள் என்றாலும் தமிழுக்குக் குறையில்லாத ஊர் மூணாறு. அந்தக் கருப்பு ஆட்டோக்களும் ஜீப்புகளும் ஆட்களைப் பிதுங்கப் பிதுங்க அள்ளிப்போட்டுக்கொண்டு எந்தப் பள்ளத்திலும் விழாமல் பாய்கின்ற இலாகவத்திற்கு எதையும் ஈடாகத் தரலாம்.

திரும்பி வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. வழியில் புலியோ யானையோ சாலையின் குறுக்கே நின்றால் என்ன செய்வது என்ற அச்சம் வேறு. நல்லவேளை ஒரே ஒரு காட்டுப் பன்றி மட்டும் குறுக்கிட்டு ஓடியது.