Monday, August 1, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – கவிதை அரங்கேறும் நேரம்

கவிதை அரங்கேறும் நேரம் - மலர்க்

கணைகள் பரிமாறும் தேகம் – இனி

நாளும் கல்யாண ராகம் – இந்த

நினைவு சங்கீதம் ஆகும்


பார்வை உன்பாதம் தேடி – வரும்

பாவை என்னாசை கோடி – இனிக்

காமன் பல்லாக்கில் ஏறி – நாம்

கலப்போம் உல்லாச ஊரில்...!

உன் அங்கம் தமிழோடு சொந்தம் – அது

என்றும் திகட்டாத சந்தம்


கைகள் பொன்மேனி கலந்து – மலர்ப்

பொய்கை கொண்டாடும் விருந்து – இனி

சொர்க்கம் வேறொன்று எதற்கு ? – எந்தச்

சுகமும் ஈடில்லை இதற்கு !

மனம் கங்கை நதியான உவமை – இனி

எங்கே இமை மூடும் இளமை ?


நீரில் நின்றாடும் போதும் – சுடும்

நெருப்பாய் என்தேகம் ஆகும் – அது

நேரில் நீவந்த காயம் – இந்த

நிலைமை எப்போது மாறும் ?

என் இளமை மழைமேகமானால் – உன்

இதயம் குளிர்வாடை காணும் !

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற கவிதை அரங்கேறும் நேரம்தமிழ்த் திரையுலகு ஈந்த அருமையான பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலை எழுதியவர் குருவிக்கரம்பை சண்முகம் ஆவார். பிற்காலத்தில் மாப்பிள்ளை மனசு பூப்போல...என்றொரு திரைப்படத்தை எடுத்தார். வானம்பாடிக் குழுவில் இருந்தவர் என எண்ணுகிறேன். தமிழில் தேர்ந்த புலமை உள்ளவர் என்பதற்கு இந்தப் பாடலில் அவர் நாட்டியிருக்கும் மேதைமையே சான்று.

எம். எஸ். விஸ்வநாதன் இந்தப் பாடலின் இசைக்கோப்பாளர். இந்தப் பாடலில் பல்லவி முடிந்ததும் இடைநிரப்பு இசை எதுவும் இல்லாமலே மெல்லிதாக வயலினை மட்டும் ஒரு துண்டு இழுத்துவிட்டு நேரடியாக, ‘பார்வை உன் பாதம் தேடி வரும் பாவைஎன்று முதலாம் சரணத்தை ஆரம்பித்திருப்பார்.

ஒரு பாடல் எவ்வாறு வாத்தியங்களின் பேரெழுச்சியுடன் துவக்கப்படவேண்டும் என்பதற்கும் இப்பாடல் தகுதியான உதாரணம்.

பாடலை எடுத்த எடுப்பிலேயே பல்லவி வரியோடு ஆரம்பிக்கக் கூடாது. முதல் முப்பது மணித்துளிகளுக்கு அந்தப் பாடலின் ஆத்ம த்வனியை இசைக்கோப்பாக்கி ஒலிக்கவிடவேண்டும். அப்போதுதான் பாடலின் மையத்திற்குப் பார்வையாளனை இழுத்துவர முடியும். அப்படி வரவழைக்கப்பட்ட ரசிகனிடம் வரிகளைத் தரவேண்டும். அதன்பின் அவன் பாடலோடு ஒன்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை. இளையராஜா தம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கையாண்ட உத்தி இதுதான். முதல் பதினைந்திலிருந்து முப்பது விநாடிகள் தம் மேதாவிலசத்தில் மூழ்கி ஊறிய இசையொலிப்பை வழங்கிவிட்டுத்தான் பாடல் வரியைப் பாடகனைப் பாடவைப்பார். இளையராஜாவின் ஹிட் பாடல்கள் எதைவேண்டுமானாலும் ஞாபகப் படுத்திப் பாருங்கள் (சிறந்த உதாரணம் : ராக்கம்மா கையத் தட்டு). ஓப்பனிங்கில் இசையரசனாக ஒரு இசையொலிப்பைச் செய்து தாண்டவமாடி இருப்பார். பாடல் வரியைப் பாடலின் இருபதாம் விநாடிக்குப் பின் தான் கேட்க முடியும்.

ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு நிறுத்தி அழுத்தி சந்தத்தோடு பழுதறக் கலந்து பாடப்பட வேண்டும் என்பதற்கும் கவிதை அரங்கேறும் நேரத்தைஎடுத்துக்காட்டலாம். ஜெயச்சந்திரனும் ஜானகியும் புதிய தலைமுறையின் நினைவகத்தில் எந்த மூலையில் இருக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

சரணத்தை முடித்துவிட்டு பல்லவிக்கு மீண்டு செல்லும் இடத்தில் வலிமையான கவிதைப் புலப்பாட்டு வரிகளை அமையச் செய்வது மேன்மையான பாடலாசிரியர்கள் கைக்கொள்ளும் உத்தி. அந்த உத்தியை இப்பாடலின் மூன்று சரண முடிவிலும் நாம் இனங்காணலாம். உன் அங்கம் தமிழோடு சொந்தம் என்ற முடிப்பில் ஏன் அது தமிழோடு சொந்தம்...? அதற்கான காரணம்தான் என்னவோ...என்று நம்மைக் கேள்விக்குள் இழுத்துச் செல்கிறார் பாடலாசிரியர். தமிழோடு சொந்தமென்றால் அவள் அங்கம் தமிழைப்போல் முதுமையோ என்னும் நகைப்பான திசையிலும் நாம் நகரக் கூடும். கதைப்படி நாயகி முதிர்கன்னிமைக்குள் எட்டு வைக்கும் தருணத்தில் வேறு இருப்பாள். விடையை ஈற்றடியில் ‘அது என்றும் திகட்டாத சந்தம்என்று முடிக்கிறார். தமிழ் என்றாலே இனிமை, பண், பாட்டு எனப் பொருள்கள் பலவுண்டு. அந்த முடிவோடு பல்லவியின் வரி மேற்கூடி வரும்போது இன்னொரு பொருளையும் கூட்டித் தருகின்றது. தமிழோடு சொந்தமாகிய உன் அங்கம் என்னும் என்றும் திகட்டாத சந்தத்தில் இப்பொழுது நம் உறவு என்னும் கவிதை அரங்கேறும் நேரம் வந்துவிட்டதுஎன்ற நெடிய அர்த்தத்தில் முதல் சரணம் முடிந்து பாடப்படும் பல்லவி பயணிக்கிறது.

இரண்டாம் சரணத்தில் நீங்கள் அர்த்தத் தெளிவுறாமல் தடுமாறக் கூடிய அமைப்பு இருக்கிறது.

கைகள் பொன்மேனி கலந்து – மலர்ப்

பொய்கை கொண்டாடும் விருந்து

இவைதாம் அவ்வரிகள். சந்தச் சுவை உங்களுக்குப் புரிகிற அதே நேரம் பொருள் துலக்கமாகப் புரியாத மந்த நிலைமை இவ்வரிகளால் சிலருக்கு ஏற்படலாம். மலர்ப்பொய்கையாகிய இவள் பொன்மேனி என் கைகளைக் கலந்து விருந்து (புதிய உறவு) கொண்டாடுகிறதுஎன்று மொழிமாற்றிப் பொருள்கொள்ள வேண்டும்.

மனம் கங்கை நதியை உவமையாகக் கொண்டுவிட்டது. மனது புதுப்புனலாகிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்போது இளமையின் இமைகள் எங்கேயாவது ஓய்ந்து கண் துஞ்சுமா ? இந்த வெள்ளத்தைக் கொண்டு நிலத்தின் எப்பகுதியை நனைக்கலாம், மண்ணின் எவ்விடத்தைக் கரைக்கலாம், தடுப்புகளை எவ்வெவ்வாறு அரிக்கலாம் என்பதுதானே நோக்காக இருக்கும் ! இனி எங்கே இமை மூடும் இளமை ? என்னும் அருமையான வரி சரணத்தை முடிக்கிறது.

மூன்று சரணம் உள்ள சோடிப் பாடல்களில் மூன்றாவது சரணத்தை நீராடும் காட்சியாக அமைப்பது தமிழ்த் திரை இலக்கணம். ஆயிரம் நிலவே வா... பாடல் உங்களுக்கு நினைவு வரலாம் (பொய்கையெனும் நீர்மகளோ பூவாடை போர்த்திருந்தாள்...! தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்..!). அதே போல் இங்கேயும் மூன்றாவது சரணம் நீராடும் காட்சி. “நீரில் குளிர்வித்தாலும் என் உடலம் நெருப்பாகக் கொதிக்கிறது. ஏனென்றால், அங்கே நேரில் நீவந்து என் நினைவுகளைக் காயமாக்கிவிட்டாய்... இந்த நிலைமை மாறுவதுதான் என்றோ ?என்று கேட்கிறாள் நாயகி. ‘என் இளமை மழைமேகமாகி உன் மீது பொழியத் திரண்டு நின்றாலே போதும்... உன் இதயத்தின் மீது குளிர்ந்த வாடைக் காற்று வீசும்என்று பதிலிடுகிறான் நாயகன்.

பாக்யராஜும் அம்பிகாவும் தோன்றிச் செய்த அபிநயங்களாலும் நுட்பமான நன்னயங்கள் பலவற்றாலும் நம்மால் மறக்கவே முடியாத பாடல் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ !

http://www.youtube.com/watch?v=2l7ih8GUvzY


7 comments:

  1. காலத்தால் அழியாத பாடல்....

    அற்ப்புதம்....

    ReplyDelete
  2. நவீன இலக்கியவாதிகள் திரைப்படப்பாடல்களை பொருட்படுத்தாமல் முற்றாக ஒதுக்குவதில், எனக்கு உடன்பாடில்லை. (ஒருவகையில் இதை பொறாமை என்று நான் சொல்வேன்).
    மேலும், தொடர்வீர்கள் என்பதை தலைப்பில் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் அப்படியே வேண்டுகிறேன்.குருவிக்கரம்பை சண்முகம் அவர்களை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. திரு. சௌந்தர்... நன்றி !

    திரு. ச. முத்துவேல் ! அநேக நவீன இலக்கியவாதிகளும் கண்ணதாசனுக்கு தாசர்களே. திரைப்பாடல்களை வெறுக்கும் நவீன இலக்கியவாதிகளை நான் சந்திக்கவில்லை. ஆனால், அங்கு உருவாக்கப்படும் குப்பைப் பாடல்களை நவீன இலக்கியவாதிகள் எவ்வாறு பொறுத்துக்கொள்வார்கள் ?

    ReplyDelete
  4. மிக நேர்த்தியான நடையோடு எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் திரை இசைப்பாடல்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறீர்கள் என்ற எண்ணம் என்னில் எழுகிறது.அவ்வாறு இருப்பின், இந்த ஆய்வு எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறது? இந்த ஆய்வின் முக்கிய கூறுகளை வர இருக்கின்ற பதிவுகளில் தெரிய படுத்தினால் அகம் மகிழ்வேன். தமிழில் தேர்ந்த புலமையும்,தெளிவான சிந்தனையும் கொண்ட தங்களைப் போன்றவர்களின் குறுக்கீடு இல்லாமல் எப்படி நீங்கள் சொல்லும் இந்த குப்பைகள் உருவாவதை தடுக்க இயலும்?

    ReplyDelete
  5. திரு. பிரபு முத்தையன் ! திரையிசைப் பாடல்கள் மீதான என் ரசனைக்கு என் வயதின் வயது ஆகிறது. குழவிப் பருவத்தில் முத்தூர் வீதியொன்றில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.. ஹே’ என்று பாடியபடி சென்றதைக் கவனித்த ஒரு பெட்டிக்கடைக்காரர் என் கைநிறைய பச்சைக் காகிதம் சுற்றிய நியூட்ரின் சாக்லேட்களைக் கொடுத்து முத்தமிட்டு அனுப்பினார். அந்த மிட்டாய்கள்தாம் என் மொழி எனக்குத் தந்த முதல் வெகுமதி. என் பள்ளிக் காலங்களில் கண்ணதாசனின் அனைத்துப் பாடல்களும் எனக்கு மனனம். திரையிசைப் பாடல்களின் கட்டுமானம் எனக்கு அத்துபடி. இதை என் செருக்கின் கூற்று எனக் கொள்ளாதீர். இந்தத் தொடரில் சுமார் ஒரு நூறு பாடல்களை விவரிக்கும் ஆவல் எனக்கிருக்கிறது. அண்மையில் வெளியான நஞ்சுபுரம் திரைப்படம் வழியாக நான் பாடலாசிரியராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறேன். அந்த அடிவைப்பு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பயணத்தின் தொடக்கமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. தொடர்கிறேன். தொடருங்கள்

    ReplyDelete