என் வீடு திரும்பல்கள்
சுடுகாட்டு வழிமேற் செல்வது
என் அன்றாட மாலைகளில்
அங்கே
நான் காணத் தவறாது -
கங்குகளாய் மிஞ்சிய தகனத் தீ
புதைக்கக் குழுமிய சிறுகூட்டம்
சிலவேளை கொப்புளங்களாய்ப் புடைத்திருக்கும் தனித்த நிலம்
களைத்த அழுகுரல்
பாலூற்ற வந்து திரும்பும் மௌனக்குழு
அந்தக் காற்றில்
நிரந்தரமாகச் சுழன்றுகொண்டிருக்கும்
ஆத்மாக்களின் கருகிய வாசனையை
என் சுவாசகோசங்களில்
பிதுங்கப் பிதுங்க நிரப்பிக்கொள்வேன்
அம்மண்ணில் இறைந்திருக்கும்
நிறைவேறாத கனவுகளின் தாமிரத் துகள்களை
பாதமெங்கும் படியவிடுவேன்
நிராசைகளின் கடைசிப் பார்வைகள்
அந்திக் கீற்றில் ஏறி
சூரியனை நோக்கிக் கிளம்பும்போது
வழியனுப்புவது நானே
இடைமுறிந்த காதலின் தற்கொலைச் சவம்
அங்கே எரியத் துவங்கியபோது
நான்
ஒரு மயிலைப் போல அழுதேன்
பெருவாழ்வுகளின் முடிவிடம்
இப்படியோர் ஆளற்ற அனாந்தரமா
என்னால் தாளமுடியவில்லை
ஒரு பேயைக் காணமுடிந்தால் நன்றென
இருளில் தாமதித்தும் வருவேன்
பேய்
என்னைப் பத்திரமாக அனுப்பிவைக்கும்
தாயாகிய தருணத்தை
நான் அடைந்துவிட்டிருந்தேன்
இப்பொழுது விளங்கிற்றா
என் அமைதியின் மர்மம் ?
// கொப்புளங்களாய்ப் புடைத்திருக்கும் தனித்த நிலம்//
ReplyDeleteபுதை மேடுகள்...?! அட!
//பெருவாழ்வுகளின் முடிவிடம்
இப்படியோர் ஆளற்ற அனாந்தரமா
என்னால் தாளமுடியவில்லை//
:-(
கவிதையைத் துய்த்துக் கருத்திட்டதற்கு நன்றி நிலாமகள் !
ReplyDelete