Saturday, September 3, 2011

நான்



வேப்பங்குச்சியில்

பல் துலக்கியிருக்கிறீர்களா ?


நீங்கள் வாங்கிய வேளாண்பூமியில்

நடைபயின்றபோது

புதரிலிருந்து ஒரு முயல்

புறப்பட்டோடியதைப் பார்த்திருக்கிறீர்களா ?


எல்லாப் பிடிவாதங்களையும்

விட்டுவிட்டு

இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறீர்களா ?


அட்டைப்பூச்சி

உங்கள் ரத்தத்தைக் குடித்தபின்

கருந்திராட்சையைப் போல் உதிர்ந்ததைக்

கண்டதுண்டா ?


ஈருருளியின் கைப்பிடியை

உங்கள் வேட்பின்படி மாற்றியமைத்ததுண்டா ?


பங்குச் சந்தையில்

ஒரே நாளில்

முதலை இரட்டிப்பாக்கியிருக்கிறீர்களா ?


மகிழ்வுந்தை

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில்

ஓட்டியிருக்கிறீர்களா ?


எவ்வளவு பெரிய எழுத்தாளன் ஆயினும்

அவனின் கீழ்மையறிந்து

ஏளனமாகப் புறந்தள்ளியிருக்கிறீர்களா ?


என்றும் வற்றாத சேற்றுக் குட்டையில்

பயமின்றி நீராடப்

பாய்ந்திருக்கிறீர்களா ?


தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச்

சிறப்பு அழைப்பில் சென்று

அங்கு தரப்பட்ட சில நூறுகளை

அவன் முகத்திலேயே விட்டெறிந்திருக்கிறீர்களா ?


ரயிலில்

எதிர் இருக்கையமர்ந்த இளந்தாயின்

கொழுகொழு குழந்தையை

வாங்கி வைத்துக்கொண்டதுண்டா ?


கைப்பிள்ளையோடு பிச்சை இரப்பவளுக்கு

எப்பொழுதும்

பத்து ரூபாய் இடுவீர்களா ?


பாப்பாவின் பள்ளிக்குப்போய்

ஏன் உன் பள்ளிப் பிரார்த்தனையில்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை என்று

தாளாளனைத்

தைரியமாகத் தாளித்திருக்கிறீர்களா ?


காவல் துறை மீதே

வழக்கு போட்டிருக்கிறீர்களா ?


இவை அனைத்தும்

எனக்கு நேர்ந்திருக்கிறது

நான் செய்திருக்கிறேன் !

9 comments:

  1. எல்லாத்துக்கும் வாய்ப்புன்னு ஒன்னு வரணும் இல்லையா?

    நீங்க மனுசப் பிறவி. நாங்க அப்படி இல்ல.

    ஆனாலும், "வர்றியா?" என்று கண்காட்டியவளுக்கு, "கையில பையில ஒன்னும் இல்லியே," என்று சொல்லித் தப்பித்திருக்கிறீர்களா? என்று கேட்டால்...

    அவரவர் கைமணல்!

    ReplyDelete
  2. அண்ணாச்சி !

    உதிரத் துடித்த பழங்கள்மேல்
    உட்காராமலே
    பறந்த தருணங்கள் பல.

    ReplyDelete
  3. அய்யா கவிஞரே பதிவை ஒருமுறை படித்ததும் அருகிலிருப்பவரிடம் வைரமுத்துவைப்போல படித்துகாண்பித்தேன். போப்பா காலைல...என்றார்.
    பைக்கின் கைப்பிடியை எனக்கேற்றபடி ஆல்ரேசன் செய்திருக்கிறேன் மேலும் மூன்றுபேர் செல்வதற்கு!? வசதியாக பைக்கில் எக்ஸ்ரா புட்ரஸ்ட் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  4. கட்சி கூட்டணி வைத்த காரணத்தால் வேறு வழி இன்றி இரட்டைஇலைக்கு ஓட்டுபோட்டிருக்கிறேன்

    ReplyDelete
  5. இரவி ! நீங்களாகச் செய்த தனித்துவமான இரண்டைச் சேர்த்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. தனித்துவமானது என்றால்...
    ராங் நெம்பரில் அறிமுகமான நாகர்கோவிலை சேர்ந்த ஒருவனுக்கு திருப்பூர் வரவழைத்து கம்பெனியில் வேலைவாங்கி கொடுத்தது

    ஊட்டிபார்த்ததில்லை என்ற நண்பனை இருசக்கரவாகனத்தை அப்படியே அப்போதே ஊட்டிக்கு விட்டது
    இவைகள் சேருமா?

    ReplyDelete
  7. இரவி ! சேரும் சேரும்.

    தவறிய எண்ணில் அறிமுகமாகி திருப்பூர்ப் பணியில் சேர்ந்து இப்போது அவன் எப்படியிருக்கிறான் என்கிற விவரணைகள் தனித்த சிறுகதையாகிற (in your case குறும்படம்?) தன்மையுடையது.

    நண்பனுக்கு ஊட்டியைக் காட்டிய உங்களுக்கு ஊட்டிப் பேணும் தாயுள்ளம் இருக்கிறது.

    இத்தகைய பச்சையத்தால் உள்ளம் தழைக்கட்டும் !

    ReplyDelete
  8. ஆகா!... ஆகா!... ஆகா!... அட்டகாசம் ஐயா! அட்டகாசம்!

    ReplyDelete