Saturday, September 24, 2011

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்


பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

வயதானால் வழுக்கை விழாது

நகரத்தில்

நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை

சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்

எப்பொழுதும் நம் செல்பேசி

பயன்பாட்டிலேயே இருக்கும்

சடங்கானால்

சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்

நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்

கல்யாணம், மருதாணி, நலங்கு,

பட்டுப்புடவை, வளைகாப்பு என

அநேக தருணங்களில்

நாயகியாகி அமர்ந்திருக்கலாம்

காமக் கவிதை எழுதினால்

இலக்கிய உலகமே திடுக்கிடும்

கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்

மூத்த இலக்கியவாதி

திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு

நம்மை அழைத்துப்போய்

கடல் பார் என்று காட்டுவார்

இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்

முகப்புத்தகத்தில்

எவனையும் கவிழ்க்கலாம்

எவனாவது ஒருவன்

நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்

கிழவியாயிருந்தாலும் ஒருவன்

அருநெல்லிக்கனி தருவான்

ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்

கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்

மதுரையை எரிக்கலாம்

கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி

ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்

டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்

அரச விவகார அதிகாரியானால்

பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்

நம் வலைப்பூவில்

நிறைய வண்டுகள் திரியும்

திடீரென்று நம் புத்தகம்

எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்

யார் அமைச்சராக வேண்டும் என்பதை

நாம் முடிவு செய்யலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?

12 comments:

  1. //திடீரென்று நம் புத்தகம்

    எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்//

    அன்பு மகுடேசுவரன்,

    அனைத்து வரிகளும் உண்மைகளை அடக்கிய பிடித்தமான வரிகளே.

    மேலே குறிப்பிட்டிருக்கும் இவ்வரிகள் மட்டும் ஏனோ மிகப்பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  2. என்ன ஒரு வஞ்சப் புகழ்ச்சி!

    தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையென்று ஒரு பரப்புரை நடக்கிறதே, நீங்கள் தமிழர்தானே?

    ReplyDelete
  3. சத்ரியன் ! நன்றி.

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! இதுவும் வஞ்சப் புகழ்ச்சியா ?

    ReplyDelete
  4. நமக்கு நகைச்சுவையும் வராதுங்கோ வஞ்சப் புகழ்ச்சியும் வராதுங்கோ (அதாவது தமிழனா முழுத் தகுதியும் இருக்குங்கோ). இதுவும் வஞ்சப் புகழ்ச்சியான்னு திரும்பவும் கேட்டுப்போடாதீங்கோ.

    ReplyDelete
  5. அய்யா கவிஞரே குறிப்பிட்ட பகுதி பெண்களின் சாதக அம்சங்களை பட்டிமன்ற வாசகம் போல எழுதியிருக்கிறீர்கள் ஆனால் சமூகத்தில் பெரும் பகுதி பெண்களின் நிலை பேசாமல் ஆணாகவே பிறந்திருக்கலாம் என்று பெண்ணே என்னுமளவுதானே இருக்கிறது.

    ReplyDelete
  6. ரவிக்குமார் ! எந்தத் தொனியில் சொல்லவேண்டும் என்பதை கவிதை எவ்விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேனோ அதன் அடிப்படையில் முடிவு செய்கிறேன்.

    என்னுடைய திரு. மாடசாமி துரையூரூக்குப் பயணமாகிறார் என்கிற கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது ஞானக்கூத்தனின் காலவழுவமைதி என்கிற கவிதையைப் படித்திருக்கிறீர்களா ?

    செறிவுபடுத்தப்பட்ட செந்தமிழில் எழுதும் கவிதைகள் வலைப்பூவுக்கு ஏற்றதல்ல.

    பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
    புன்னகையோ மௌவல் மௌவல் - என்ற திரைப்பாட்டில் வரும் மௌவல் என்ற வார்த்தைக்கு இங்கிலீஷ் டிக்‌ஷனரியில் அர்த்தம் துழாவிய ஆட்கள் உள்ள காலம் இது !

    தேர்ந்த நவீன இலக்கிய எழுத்தாளனும், வாரப்புத்தகத்தில் வெற்றுருட்டு உருட்டிக்கொண்டிருந்த துணுக்கு எழுத்தாளனும் இங்கே வேறுபாடில்லாமல் எழுத்தாளன்/விமர்சகன்/கருத்துசொல்கிறவன் என்கிற ஹோதாவில் உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    ஆணாகப் பிறந்திருக்கலாம், பெண்ணாகப் பிறந்திருக்கலாம், பிறக்காமலே இருந்திருக்கலாம் என்பது போன்ற விருப்புணர்வும் அது தொடர்பான சிந்தனைத் தொடரும் இலக்கியக் கருத்துகளை அகழ்ந்தெடுக்க உதவும் பாடுபொருள்கள் - அவ்வளவுதான். அதில் செய்தி வாக்கியத்தின் துல்லியத்தை எதிர்பார்க்கவேண்டியதில்லையே !

    ReplyDelete
  7. உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் கவிஞரே!

    ReplyDelete
  8. வஞ்சப் புகழ்ச்சி

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Pattaya Kilappitteenga boss

    ReplyDelete