Tuesday, October 11, 2011

பிரிவின் மடி


நாம் அந்த அலுவலகத்தில்

ஒன்றாகப் பணியாற்றினோம்

உனக்கு உள்ளிருந்து தட்டச்சிடும் பணி

எனக்குப் பணி ஊர் வீதி அலைதல்

காலையில்

அனைவரும் அலுவலகத்தில் கூடுவோம்

நான் என் பையைத் தோள்மாட்டுவேன்

நீ உன் தாள்களை எந்திரமேற்றுவாய்

என் கால்கள்

வீதியை அளந்து நகர

உன் விரல்கள்

எழுத்துருக்களை மிதிக்கும்

அச்சானவற்றைக் கொண்டுபோவேன்

அச்சாகவேண்டியவற்றைக் கொணர்ந்து தருவேன்

யாருமில்லாத தனிமையில்

நாம் அங்கே இருக்கும் தினங்களும் வந்தது

நீ என்னைக் கேட்டாய்

நான் தலைகவிழ்ந்து

என் பிய்ந்த செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன்

பிறகு

நான் ஐஸ்விற்பவனாகி

என் பனிப்பெட்டியை

மிதிவண்டியில் கட்டிச் செல்பவன் ஆனேன்

என் பணிக்கூடத்தில்

ஐஸ்வார்க்கும் பெண்ணை

நான் தனிமையில் சந்திப்பதே இல்லை.

5 comments:

  1. ஒரு நல்ல அழகான அழுத்தமான க(வி)தை!

    ReplyDelete
  2. //நான் தலைகவிழ்ந்து

    என் பிய்ந்த செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன்//

    மனதைத் தொட்ட வசீகரக் கவிதை.

    ReplyDelete
  3. பிரிவின் மடி கனமான கவிதை.

    ReplyDelete
  4. படிமங்களோடு கூடிய தொடர்களை அமைக்க முடியவில்லையே என்பதல்ல, மகுடேசுவரன் போல் எளிய தொடர்களை உறவாடவிட்டு உணர்நிலைகளை உருவாக்க முடியவில்லையே என்பதுதான் என் ஏக்கம்.

    Touching touching!

    ReplyDelete
  5. ரவிக்குமார், வெண்புரவி, இராஜராஜேஸ்வரி ! நன்றிகள்.

    அண்ணாச்சி ! படிமங்கள் எனக்கு அதிகக் களைப்பூட்டுகின்றன. உலகில் மிகவும் அருமையானது தண்ணீர்தான். ஆனால், அதுவோ எத்துணை எளிமையானது ! வலைப்பூவில் நான் எழுதும் கவிதைகளுக்கு இதுவே நான் வகுத்துக்கொண்ட இலக்கணம். பாராட்டுக்கு நன்றிகள் !

    ReplyDelete