நம்மைச் சுற்றி எப்படி வந்தான்
இந்தக் குறைகூறி ?
இவனிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே
ஆற்றல் அனைத்தும் விரயமாகிவிடுகிறது.
வெள்ளைத்தாளில்
கரும்புள்ளி தேடுவதே இவன் வாடிக்கை.
தோசையின்
பசியணைக்கும் வள்ளாண்மையைப் பேசாமல்
அதன் வட்டக்குறைகளையே பேசுபவன்.
வடக்கு நோக்கி நின்றால்
நீ கிழக்கு நோக்கி நின்றிருக்கலாம் என்பான்.
மனச்செயலியை
முற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது
குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து.
ஒருவனின் மழலையே அவன் என்பதில்
நான் முழுநம்பிக்கையுள்ளவன்.
அந்த மழலையை அரிந்து அகற்றுவதில்
குறைகூறி குறியாயிருக்கிறான்.
குறைகூறியை
நாம் எப்போதும் நாடுவதில்லை
அவன்தான்
நம்மைத் தேடியபடியே இருக்கிறான்.
அவனிடமிருந்து
நாம் ஒளிந்துகொள்ளாததால்
அவன் நம்மைக் கண்டுகொள்கிறான்.
ஒரேயொரு குறைகூறி
நம்மை எல்லாத்திசையிலும் முடக்கிவிடுவான்.
ஒரேயொரு குறைகூறி
நம்மை என்றும் எழாதபடி வீழ்த்திவிடுவான்.
ஒரெயொரு குறைகூறி
நம்மைக் குதறிக் கொன்றுவிடுவான்.
குறைகூறி என்னும் பெருநோயாளி
வைத்தியக் குறிப்புகள் கூறுபவனைப்போல் தோன்றுவான்.
குறைகூறி என்னும் பைத்தியக்காரன்
அலையாத விழிகளோடு எதிரே நிற்பான்.
குறைகூறி என்னும் குற்றவாளி
நமக்கு நீதி செய்பவன்போல் அமர்ந்திருப்பான்.
குறைகூறி என்னும் தாழ்ந்த சுயமதிப்பீட்டாளன்
நம்மை விமர்சனத் தராசில் நிறுத்துவான்.
இப்பொழுது நான் எச்சரிக்கையாகிவிட்டேன்.
அவன் என்னை எந்நோக்கோடு அணுகுகிறான்
என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவன் ஓர் ஆளே இல்லை என்பது தெரிந்துவிட்டது.
முன்பெல்லாம்
குறைகூறி எதைச் சொன்னாலும்
‘அப்படியா சொல்றீங்க ?’ என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.
இப்பொழுது
‘போடாங்கொய்யாலே’ சொல்கிறேன்.
மனச்செயலியை
ReplyDeleteமுற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது
குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து. //
இந்தக் குறைகூறிக் குப்பன் சுப்பன்களை சரியாக இனம் காட்டும்படி நாடி பிடித்து சொல்கிறீர்கள்!
அவனவனுள் எஞ்சிய குழந்தைமையாய்
ReplyDeleteசில அறியாப் பிழைகள்...
அந்த மழலையை அரிந்தகற்றுவதில்
குறைகூறி குறியாயிருக்கிறான்.
கவிதை அபாரம்.
ReplyDeleteஇந்தப் பின்னூட்டம்
\\நிலாமகள் said...
அவனவனுள் எஞ்சிய குழந்தைமையாய்
சில அறியாப் பிழைகள்...
அந்த மழலையை அரிந்தகற்றுவதில்
குறைகூறி குறியாயிருக்கிறான். \\
மிகப் பொருத்தம்