Saturday, January 28, 2012

கரப்பான் உலவும் அறை



குளிப்பறைக்குள் நுழைந்தேன்

அவசரமாக.

அதற்குள்

தனிமையைத் தவிர யாருமில்லை.

என்றும் இறுக்கி நிறுத்தவே முடியாத குழாயிலிருந்து

நீர்த்துளிகளின் இசையான உதிர்வொலி

சொட்டிக்கொண்டிருந்தது.

அப்படித் துளிர்க்காத குழாய்

யார் வீட்டுக் குளிப்பறையிலும் இருப்பதில்லை.

அந்த இசைக்கேற்ப ஆடி மகிழ்ந்திருந்தது

தன் ஒளிவிடத்திலிருந்து வெளிப்பட்ட

கரப்பான் பூச்சி.

என் நுழைவு அதைச் சிதறி ஓடவைத்தது.

அந்தப் பதற்றத்தில்

அது தன் ஒளிவிடத்தைத் தவறவிட்டது.

அதை நசுக்குவதா விரட்டுவதா என்று

எனக்கேற்பட்ட தத்துவக் குழப்பத்தில்

முட்டிய சிறுநீரைக் கழிக்க மறந்தேன்.

சரி, ஒரு சிறு தண்டனையாக

அதைக் கவிழ்த்துப்போடுவோம் என்று

என் காற்பெருவிரலால்

அதை எத்திக் கவிழ்த்துவிட்டு அகன்றேன்.

மீண்டும் அவ்வறைக்குள்

அவசரத்தோடு நுழைந்தபோது

மல்லாந்திருந்த அப்பூச்சி

புரண்டு நிமிர்ந்தெழும் போராட்டத்தில்

களைப்போடு ஈடுபட்டிருந்தது.

கவிழ்ந்த கரப்பான்

தன் காலம் முழுக்க முயன்றாலும்

எழமுடியாது என்பது

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதன் மீசையின் இரண்டு கிளைகளும்

காற்றில் நெளிந்தபடி எனக்குக் கூறிய உண்மைகள்

என்னை

அப்படியே புரட்டிக் கவிழ்த்துப் போட்டன.

4 comments:

  1. //கவிழ்ந்த கரப்பான்
    தன் காலம் முழுக்க முயன்றாலும்
    எழமுடியாது//

    அப்படி இல்லை. அலையும் கால்கள் பற்றுவதற்கு ஒரு (அசையாத) துரும்பு கிடைத்தால் போதும், புரண்டுவிடும். சுவரை ஒட்டி மல்லாந்தால் சுவரைப் பற்றிப் புரண்டுவிடும். மண்தரையில் மல்லாந்தாலும் புரண்டு நேராக வாய்ப்புண்டு. குளியலறைத் தரை போன்ற வழுவழுப்பில் வாய்ப்பில்லைதான்.

    மற்றபடி, பூச்சி மருந்து அதன் நரம்பு ஒத்திசைவைப் பாதிக்கிறது. அப்படி நேர்கையில் அது தானே மல்லாந்து, பிறகு புரண்டு நேராக முடியாமல் மல்லாந்த நிலையிலேயே செத்துவிடும்.

    ReplyDelete
  2. mallantha karappan mathiyame marainthirukkum yerumbukalukku unavagi yen mutrathil...-KASI

    ReplyDelete
  3. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! பிரமிளின் ‘தத்தரே பித்தரே மல்லாத்தறே கல்லேத்தறே’ கவிதை நினைவுக்கு வருகிறது.

    காசி அண்ணா ! வருக... தங்கள் கருத்துகளால் நிறையட்டும் இந்தத் தளம் !

    ReplyDelete
  4. கரப்பான் பூச்சி ஒரு scavenger insect. பரிணாமத்தில் மனித குலத்துக்கு முந்தியே தோன்றி இன்னும் இருக்கிற ஒரு பிராணி அப்பிராணி. அதனைக் குறியீடு ஆக்கி, //தன் காலம் முழுக்க முயன்றாலும் எழ முடியாது// என்று ஒரு கவிஞன் கூறுவது எனக்கு வருத்தத்தை அளித்தது.

    இன்று எங்கள் மருத்துவரம்மாவிடம் உங்கள் கவிதையைப் பற்றிக் கூறினேன். அவர்களுக்குக் கோவம் வந்துவிட்டது. (பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டுத் தன் பிழைப்பைப் பார்த்து ஓடுவதாகப் படைக்கப்பட்ட 'அஞ்சலை' கதாபாத்திரத்தில் ஆத்திரப்பட்டு, "கண்மணி.குணசேகரனுக்குப் போன் போட்டுக் கொடுங்க அவரை ஏசணும்" என்றவர் எங்கள் மருத்துவர்.

    நான் இட்ட முதற் பின்னூட்டம் எனக்குத் தெரிந்த அறிவியல் உண்மை. (Verified too). இப்போது திரும்ப வாசிக்கையில், 'துரும்பு' என்பது பற்றுக்கோடாகவும் 'சுவர்' என்பது அரணாகவும் 'பூச்சி மருந்து' என்பது பொறுக்காதவர்களின் கொலைவெறியாகவும் உருவகப்பட்டுப் பொருந்தி வருவது எனக்கே உவப்பைத் தருகிறது.

    பாதசாரியும் நம்மைக் கண்காணிக்கிறார் என்பதில் மகிழ்வதா? எச்சரிக்கையாவதா? அவர் சொல்வதும் சரிதான்: அதனால், கரப்புகள் தாம் மல்லாந்துபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    மகுடு, நீங்கள் குறிப்பிட்ட பிரமிள் கவிதையை உங்கள் தள வாசகர்களும் தெரிந்துகொள்ளட்டுமே:

    தவளைக் கவிதை
    ----------------------------

    தனக்குப் புத்தி
    நூறு என்றது மீன்.
    பிடித்துக் கோர்த்தேன்
    ஈர்க்கில்.

    தனக்குப் புத்தி
    ஆயிரம் என்றது ஆமை.
    மல்லாத்தி ஏற்றினேன்
    கல்லை.

    'எனக்குப் புத்தி
    ஒன்றே'
    என்றது தவளை.
    எட்டிப் பிடித்தேன்;
    பிடிக்குத் தப்பித்
    தத்தித் தப்பிப்
    போகுது தவளைக்
    கவிதை:

    'நூறு புத்தரே!
    கோர்த்தரே!
    ஆயிரம் புத்தரே!
    மல்லாத்தரே!
    கல்லேத்தரே!
    ஒரு புத்தரே!
    தத்தரே!
    பித்தரே!'

    ReplyDelete