வீட்டின் முன் உள்ள மரம் ஒன்று
எங்களை இத்தனை பாடுபடுத்தக் கூடாது.
பழுத்து வெடித்த கோணைப்புளியம்பழங்களால்
அடர்ந்து நிறைந்தது அது.
அதன் சிவந்த கனிவு
பாதசாரிகளை மறிக்கிறது.
‘இத்தனை பழங்கள்
பழுத்திருக்கின்றனவே…
அவற்றைப் பறித்துண்ண
முடியாத
புளி ஏப்பக்காரனா
இவ்வீட்டுக்காரன் ?’
பார்த்துச் செல்பவர்
பார்வையிலிருந்து
பழுத்துதிர்கிறது
பொறாமை.
ஆள் அயரும் சந்தர்ப்பத்திற்காக
பெரும் சிறார்
கூட்டம் ஒன்று
ரகசிய போலீஸ்போல
வீதிகளில் திரிகிறது.
மரத்தை
அடிக்கடி இட்டுப்
பார்க்கிறது
எங்கிருந்தோ வரும்
ஒரு கல்.
முனையில் கேள்விக்குறி
மாட்டிய குச்சியோடு
செல்லும் ஒருவன்
வீட்டில் யாருமில்லாவிட்டால்
கொத்துக் கொத்தாய்ப்
பறித்துவிட அலைகிறான்.
அது முள்மரமாக
இருப்பதால்
யாராலும் தழுவி
ஏறப்படாமல் தப்பித்திருக்கிறது.
நாங்களும் பழங்களைப்
பறித்துண்பதில்லை.
யாரையும் பறிக்க
விடுவதில்லை.
மாற்றான் தோட்ட
மலரையும்
மாற்றான் வீட்டு
மங்கையையும்
மாற்றான் மரத்துக்
கனியையும்
காலந்தோறும்
கவர்ந்துகொண்டேயிருந்திருக்கிறது
இவ்வுலகம்.
கனிமரத்தைக் கண்டுசெல்வோனின்
கண்ணிலும்
அதே கள்மம் சுடர்கிறது.
அவர்களுக்குத்
தெரியுமா
இந்தப் பழமரத்தை
நம்பி
பத்துக் கிளிகள்
இருக்கின்றன என்பது ?
பதினைந்து தூக்கணாங்குருவிகள்
தினமும் வந்து
போகின்றன என்பது ?
சிட்டுகள் சில
கூடி
சித்திரம் பயில்வது
?
அவர்களுக்குத் தெரியுமா
ReplyDeleteஇந்தப் பழமரத்தை நம்பி
பத்துக் கிளிகள் இருக்கின்றன என்பது ?
பதினைந்து தூக்கணாங்குருவிகள்
தினமும் வந்து போகின்றன என்பது ?
சிட்டுகள் சில கூடி
சித்திரம் பயில்வது ? /
மகுடம் கூட்டும் வரிகளுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி !
ReplyDelete'கோணைப்புளி'யா? எங்கள் ஊர் வழக்கில் 'கொடுக்காய்ப்புளி'.
ReplyDelete//அது முள்மரமாக இருப்பதால்// என்பதில் இருந்தே, அது தானே உதிர்வனவற்றைத்தாம் மனித, விலங்குகளுக்கு ஒதுக்குகிறது.
இருந்தும், எல்லை தாண்டும் கல், குச்சி, மாற்றான் உடைமை காமுறுதல் என்றிப்படிக் கள்மம் கொள்ளும் மனிதப் பிறவி, விலங்கினும் இழிந்து கிடப்பதை இக் கவிதை சிறப்பாக உணர்த்துகிறது.
கோணைப்புளி, சீனிப்புளி என இப்பகுதியில் வழக்காடுகிறது, அண்ணாச்சி !
ReplyDeleteகள்மம் - வலிய சொல். உம் வரிகள் யாவும்
ReplyDeleteநெஞ்சார்ந்தம் ...மகுடு மகுடு தான்..கவி மகுடு தான்.
- பாதசாரி
காசியார் அவர்களுக்கு நன்றி !
ReplyDeleteமுள் மரத்தைப் பற்றி ஒரு சுவையான கவிதைக்கனி
ReplyDeleteமுள் மரத்திலிருந்து கனி பழுக்காது என்று யார் சொன்னது ? கவிஞனின் கையில் அமுதகனி கனியும்
நந்தினி மருதம்