Sunday, October 6, 2013

வலி மிகுதல் - தொடர் 2


இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ


அந்த, இந்த , எந்த


அங்கு, இங்கு, எங்கு

ஆங்கு, ஈங்கு, யாங்கு

அப்படி, இப்படி, எப்படி

ஆண்டு, ஈண்டு, யாண்டு

அவ்வகை, இவ்வகை, எவ்வகை

அத்துணை, இத்துணை, எத்துணை

இனி, தனி

அன்றி, இன்றி

மற்ற, மற்றை

நடு, பொது, அணு, முழு, புது, திரு

அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

Saturday, October 5, 2013

வலி மிகுதல் - தொடர் 1

தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்பற்றியதே அது

.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் விரிவுபடுத்தி அல்லது எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படி எழுதுவேன்

வலி மிகுதல் மற்றும் வலி மிகாமை குறித்த தெளிவு ஏற்பட்டுவிட்டால் எழுதுவன எல்லாம் பெரிதும் பிழையற்றனவாகும். தலைவலி மிகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்

வலி மிகுதல் என்றால் என்ன ? வல்லின மெய்யெழுத்துகள் வாக்கியக் கோவையில் இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறுமே வல்லின மெய்கள். டகர றகரங்களில் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித் தெரிந்துகொள்வதே நம் நோக்கம்

வலிமிகுதல் என்னும் மொழிப் பண்பு தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்த வேறெந்த உலக மொழி இலக்கணங்களிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.
                                                            
இனி நிலைமொழி, வருமொழி என்கிற பயன்பாடு அடிக்கடி இருக்கும். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி. மல்லிகைப் பூ - என்பதில் முதலில் உள்ள மல்லிகை நிலைமொழி, அடுத்து வருகிற பூ வருமொழி. இதை நினைவில் வைத்துக்கொள்க

இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வருமொழி வல்லினத்தில் இருந்தால் வலிமிகும். இது அடிப்படை

ஆடித் தள்ளுபடி, போக்குவரத்துக் கழகம், கண்மணிப் பூங்கா. தமிழ்ப் பாட்டு, அழகுக் குறிப்புகள்

உம்மைத் தொகையாக வரும் பெயர்ச்சொற்கள் எனில் வலிமிகாது

சங்கப் புலவர்களில் கபிலர் பரணர் அறிவேன்
தவறாமல் தினமணி கதிர் படிப்பேன்

உம்மைத் தொகை என்றால் இரண்டு பெயர்ச்சொற்களையும்உம்என்ற விகுதி சேர்த்துக் கருதுவது. சங்கப் புலவர்களில் கபிலரும் பரணரும் அறிவேன், தவறாமல் தினமணியும் கதிரும் படிப்பேன் - இவ்வாறு அவை பொருள் தருவன.

வேற்றுமைத் தொகைகள் தொக்கி நிற்பன. உவமைத் தொகை, உம்மைத் தொகை போன்றவை தொகுக்க நிற்பன. மொழியுருவில் தொக்கி நிற்பனவற்றைத்தான் தொகுக்க முடியும் என்பது இயல்பு.

தினமணிக் கதிர் என்றால் வேற்றுமைத் தொகை. தினமணி கதிர் என்றால் உம்மைத் தொகை. இரண்டுமே சரிதான். தினமணியின் கதிர்என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகவேண்டும்(வேற்றுமைத் தொகை). இங்கே இரண்டும் வேறு வேறல்ல. தினமணியும் கதிரும் என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகுதல் கூடாது. உம்மைத் தொகை. எழுதுபவர் என்ன பொருளில் கூற வருகிறார் என்பதே இவ்விடம் பொருந்தும். தினமணி கதிர் என்றே பெயர் தாங்கி வருகிறது. தினமணி என்கிற செய்தித்தாள் தனி. கதிர் என்கிற இணைப்புப் புத்தகம் தனி - இதுவே அவர்கள் உணர்த்தும் பொருள்.

அடுக்குத் தொடரில் வலி மிகாது என்பதே விதி. ஆனால், அடுக்குத் தொடரில் அபூர்வமாக வலி மிகுதலையும் காண முடிகிறது. உதா: பூப்பூப்பூ, தீத்தீ. காரணம் இது ஓரெழுத்து ஒருமொழி.

இரட்டைக் கிளவியில் மிகாது.