- · ஏன் இத்தனை நாள்களாக கேள்வி-பதில்கள் எவற்றையும் எழுதாமல் இருந்தீர்கள் ?
அண்மைக் காலமாக என்முன் கேள்விகள் அதிகரித்தபடியே இருந்தன. அவற்றுக்கான பதில்கள் ஒன்றுமே துலக்கமாகத் தென்படவில்லை.
- · பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியில் அவருடைய மாமியார் மரணமடைந்துவிட்டாராமே...!
மாமியாருக்கும் மருமகனுக்கும் இடைநிலவும் பேரன்பின் உலகத்தை இன்னும் ஒருவரும் எழுதவில்லை. என் தந்தையார் இறந்தபோதும் பெருங்குரலெடுத்துக் கதறியழுதவர் என் தாயாரின் தாய் தான்.
- · தனியார் பள்ளிகளில் +2 தேர்வுகளில் ஏராளமானோர் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார்களே...!
சுமாராகப் படிக்கும் ஒரு மாணவன் பெருமதிப்பெண் பெற்றிருந்தான். காரணம் என்னவென்று வினவினேன். ஒருவனுக்கு விடை தெரிந்திருந்தால் அந்தத் தேர்வு அறை முழுவதுமே எழுதுவதாகத் தெரிவித்தான்.
- · கொடநாட்டில் இருந்து அம்மா கிளம்பிவிட்டார். நேராக எங்கே செல்வார் ?
கோட்டைக்குத்தான் என்று குழந்தை கூடச் சொல்கிறது. யதார்த்தம் என்னவென்று பதின்மூன்றாம் தேதி தெரிந்துவிடப் போகிறது.
- · அயோத்தி நிலப்பகிர்வுத் தீர்ப்புக்குத் தடை விதித்திருக்கிறதே உச்சநீதிமன்றம் ?
நீதிகள் மன்றத்துக்கு மன்றம் மாறுபடும் நிலையைக் களைய ஆட்சியாளர்களும் சட்டவல்லுநர்களும் ஏதேனும் ஆவன செய்தால் நலமாக இருக்கும்.
- · இலங்கையும் 20/20 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைத் துவக்கப் போகிறதாமே...
சொந்த மக்களையே குண்டுவீசிக் கொன்ற கொடுங்கோல் அரசுக்கு இந்த வேடிக்கைகள் மட்டும்தாம் குறையாகப்பட்டனவோ !
- · சும்மா ஒரு பழமொழி சொல்லுங்களேன். சொந்த சரக்காக இருந்தால் நலம்.
ஆகாத பொண்டாட்டிக்கிட்டயே
ஆறுபுள்ள பெத்தவன்
தோதானவ கிடைச்சிருந்தா
தொண்ணூறு புள்ள இல்ல பெத்திருப்பான் ?
- · கங்குலி மறுபடியும் கிரிக்கெட் ஆட வந்துவிட்டாரே...
கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை !
- · கனிமொழி ?
மாடத்தில் தோன்றிய மாதர் இலக்கிய நிலா
எளிமைக்குப் பெயரெடுத்த இளவரசி
(தெரிந்தவரை சொல்லிவிட்டேன்)
- · +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்டுவீர்களா..?
அந்த முதல் மாணவி எனக்கு ஒரு பொருட்டே அல்ல. முதலிடம் பெறுகிறவர்கள் தங்கள் முன்னுள்ள வழக்கமாக செயல்திட்டத்தின் வழியே ஓர் இலகுவான வாழ்க்கையை அடைந்து காம்பவுண்டு வைத்துக் கட்டப்பட்ட வீட்டுக்குள் கேட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிவிடுவார்கள். என் அக்கறையெல்லாம் அந்தத் தேர்வுகளில் தோற்றுப்போய்விட்ட ஒரு லட்சம் மாணவ மாணவிகளைப் பற்றித்தான். அந்த ஒரு லட்சம் பேர்தான் எதிர்காலத்தில் இந்த உலகை ஆக்குவதில் அல்லது அழிப்பதில் பங்கெடுக்கப்போகிறவர்கள்.
- · தேவையே இல்லாமல் ஒரு வேலையைத் துவங்கி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா...?
இந்த வலைப்பூவில் நான் எழுதிக்கொண்டிருப்பதை வேறு என்னவென்று நினைக்கிறீர்கள் ?
- · அண்மையில் வாசித்தவற்றில் உங்கள் மனங்கவர்ந்த பத்திரிகை எது ?
தமிழக அரசியல். கட்டுரைகளின் கட்டுமானம் வழமையாய் இருந்தாலும் அதில் எழுதுபவர்கள் பிற்காலத்தில் நன்கு மலரக்கூடியவர்கள். அதற்கான அறிகுறிகளைக் கண்டேன்.
7,9,10 மிக அருமை அண்ணா,,!
ReplyDelete