Thursday, May 19, 2011
மொழியறிவற்றவன் எவ்வாறு எழுதுவான் ?
மொழியறிந்தவனுக்கும் மொழியறியாப் பேதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்வது நமக்கு மிகுந்த பயனளிக்கும். மொழிப்புலமை துளியளவு கூட இல்லாதவனும் அதற்கான முனைப்பை எள்ளளவேனும் காட்டத் தயங்குபவனும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என நம்மிடையே உலவுகின்றனர். தேவையற்ற புகழ்ச்சிக்கு அத்தகையோரை ஆளாக்கி அவர்களையும் துன்புறுத்த வேண்டா. நாமும் துன்புற வேண்டியதில்லை.
நம் ஆழ்மனத்தில் கருந்திமிங்கலமாக நாம் பயன்படுத்தும் மொழி வீற்றிருக்கின்றது. பெருந்தொகையான புத்தகங்களில் எறும்புச் சாரையாக அச்சிடப்பட்டிருக்கும் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி, உயிர்ப்போடு உலவுமிடம் - அதைப் பேசும் எழுதும் வாசிக்கும் சிந்திக்கும் உயிர்த்திரளான மக்களிடம் தான். அதைத் தூய்மையாகவும் உயர்தனிப்பண்புகளோடும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
மொழியைத் தவறாகப் பயன்படுத்தும் எழுத்துலக வறியவர்களைக் கண்டறிய எளிய வழிகள் பல உள்ளன. அவை எவை என்று பார்ப்போம்.
எண்களை எழுத்தால் எழுதுவது என்பது நாம் இரண்டாம் வகுப்பிலேயே கற்றறிந்த பாடமாகும். ஆனால், மொழியறியாத எழுத்தாளன் எண்களை எழுத்தால் எழுதும்போது குப்புற விழுவான்.
39 – இந்த எண்ணை எழுத்தால் எழுத வேண்டும். மொழியறியாதவன் ‘முப்பத்தி ஒன்பது’ என்றுதான் எழுதுவான். தமிழ்நாட்டிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகள் மொத்தம் முப்பத்தி ஒன்பது’ என்பான். மூன்று பத்தும் ஓர் ஒன்பதும் என்பதுதான் அவ்வெண் சுட்டும் பொருள். அதை எழுத்தால் ‘முப்பத்து ஒன்பது’ என்று எழுதவேண்டும். முப்பத்தி என்று எழுதலாமா ? இதைப் போலவே எல்லாப் பத்துகளையும் பிழையோடு அடித்து வீசுவான். இருபத்தி, முப்பத்தி, நாற்பத்தி, ஐம்பத்தி, அறுபத்தி, எழுபத்தி, எண்பத்தி... எனப் புழுதி கிளப்புவான். ‘ஆயிரத்து’ என்பதற்குப் பிழையாக ‘ஆயிரத்தி’ என்பான். 460 – இந்த எண்ணை நானூற்றி அறுபது என்பான். ‘நானூற்று அறுபது’ என்று ஒருபோதும் எழுதான்.
எண்களால் ஆள்கணக்கைச் சொல்லும்போதும் இரண்டு பேர், நான்கு பேர் என்றெழுதுவான். தமிழில் இவ்வகையான பயன்பாடுகளுக்கு அருமையான முழுமையான தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றை அவன் பயன்படுத்த அறிந்தே இருக்கமாட்டான். ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர்... என உள்ள சொற்கள் யாராலும் பயன்படுத்தப் படாமல் பரண்மேல் கிடக்கின்றன.
176378 – இது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழர் மனங்களைவிட்டு நீங்கிவிட்ட, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பத்திரிகையாளர்களால் தொடர்ச்சியாகப் புழக்கத்தில் விடப்பட்ட ஓர் எண்ணாகும். ஒருவரும் இந்த எண்ணை எழுத்தால் எழுதத் துணிந்தாரில்லை. அப்படி எழுதினால் ‘ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரத்தி முன்னூற்றி எழுபத்தெட்டு’ என்று தவறாகவே எழுதவும், அவ்வாறே உச்சரிக்கவும் செய்வான். முறையாக ‘ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முந்நூற்று எழுபத்தெட்டு’ என்றெழுத வேண்டும். இங்கேயும் முன்னூறு என்றெழுதி ‘முன்னே நூறு’ என்றே பொருளில் நிற்பார்கள். மூன்று நூறுகள் (மும்+நூறு) முந்நூறுகள் என்றே புணரும்.
மொழியறியாதவன் பதட்டம் என்று எழுதுவான். அவனுக்குப் பதற்றம் என்ற பதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. பதறுவதுதான் பதற்றம். பதட்டத்தால் எப்படிப் பதடுவது என்று எனக்குத் தெரியவில்லை. உடமை என்றெழுதுவான். அவனுக்கு உடைமையைப் பற்றி ஒன்றும் தெரியாது. உடையதுதான் உடைமை. உடமையின் வழியாக அவன் எதை ‘உடுகிறான்’ என்று தெரியவில்லை. நிலமை என்றெழுதுவான். எந்த நிலத்தில் அவன் அந்த மையைக் கண்டுபிடித்தானோ ! நிலைமை என்றெழுத வேண்டும்.
இப்படி எழுதுபவன் தன் மொழியறிவின் நுனிப்புல் அறிவை நாம் அறியத் தருகிறான். நாம் அவனை இனங்கண்டுகொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
கவிஞருக்கு,
ReplyDeleteநம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் சில பதங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எங்களைப் போன்றவர்களுக்கு இதுமாதிரி கற்பிதங்கள் அவ்வப்பொழுது தேவைப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து எங்களுக்கு ஆசிரியராக இருங்கள். எங்களுக்கும் மறந்து போன தமிழ் மீண்டும் நினைவிலிருத்தப்படும்.
நன்றிகள் பலப்பல.
மொழியை பழுதற பயன்படுத்த வேண்டுமென்ற ஆவலை இன்னும் அதிகரிக்கிறது.
ReplyDeleteவணக்கமும் நன்றியும்.
அன்புடன் கதிரவன்.
திண்டுக்கல்லில் இருந்து.
மொழியை பழுதற பயன்படுத்த வேண்டுமென்ற ஆவலை இன்னும் அதிகரிக்கிறது.
ReplyDeleteவணக்கமும் நன்றியும்.
அன்புடன் கதிரவன்.
திண்டுக்கல்லில் இருந்து.