Saturday, October 2, 2010

காந்தி அண்ணல் - பகுதி 6


பிரித்தாளும் சூழ்ச்சிகளால் நாட்டை ஆண்டு

பெருங்காலம் தேசத்தைச் சுரண்டி வாழ்ந்தோர்

பிரித்தார்நம் திருநாட்டை இரண்டு துண்டாய் !

பிதாமனமோ ஏற்காமல் துவண்டு நிற்கும் !

எரிதழலில் வீழ்ந்தமலர் எரிதல் போல

எம்மானின் துயருள்ளம் கருகக் கண்டோம் !

பிரிவெண்ணம் மக்களுக்குள் பேதம் ஊட்டப்

பிற்போக்கு சம்பவங்கள் அரங்கில் ஏறும் !

‘‘இந்தியரே ! பன்னூற்று ஆண்டு சென்று

இனிப்பான வாய்ப்பொன்றின் வாசல் முன்னம்

உம்தலையின் எழுத்துகளை எழுதிக் கொள்ளும்

உவப்பான கட்டத்தில் இருக்கின் றீர்கள் !

இந்தவொரு அரும்வாய்ப்பை மறந்து நீங்கள்

இரத்தவெறி பிடித்தலைதல் நன்றா ? சொல்வீர் !’’

இந்தவாறு ஆங்கிலேய வைஸ்ராய் வேவல்

இரக்கமுடன் கூறுமாறு நிலைமை பாரீர் !

நவகாளி எனுமிடத்தில் மக்கள் கூட்டம்

நரவெறியால் இரத்தருசிச் சாற்றில் நீந்த

தவமெல்லாம் கெட்டதென்று தந்தை அஞ்சி

தவறிழைத்த வீதியெல்லாம் பயணம் செய்து

அவமானம் துடைக்கின்ற பணியைச் செய்தார்;

அஞ்சாமல் உபவாசம் சிரமேற் கொண்டார்;

சவக்காடா காமல்நம் நாடு மிஞ்ச

சத்தியவான் ஏற்றதுயர் இரண்டா ஒன்றா ?

எத்தனைபேர் வீரமுடன் ரத்தம் தந்தார்

எத்தனைபேர் தீரமுடன் உயிரை ஈந்தார்

எத்தனைபேர் சிறைபுகுந்து இன்னல் உற்றார்

எத்தனைபேர் அடியுதையின் வாதை ஏற்றார்

எத்தனைபேர் மனைமகவு உடைமை நீத்தார்

எத்தனைபேர் ஏழ்மையை முயன்று நோற்றார்

எத்தனையோ விலைஈந்து பெற்ற செல்வம்

இன்றினிக்கும் விடுதலையாம் எண்ணிப் பாரீர் !

வழிபாட்டுக் கூட்டத்தை நெருங்கும் போது

வணக்கத்தைச் சொன்னபடி மார்பை நோக்கிப்

பழிபாவம் அஞ்சாதான் ஒருவன் சுட்டான் !

பரம்பொருளை அழைத்தபடி மண்ணின் மீது

படுகிடையாய் விழலானார் ! மூன்று குண்டு

வெறும்நெஞ்சைத் துளைத்துவிட இறந்து விட்டார் !

விழியெல்லாம் நீர்க்கோலம் ! தேசத் தந்தை

விறகுக்கு இரையானார் சாம்பல் ஆனார் !


கொடுங்கூற்றே ! உன்கொடுமைக் களவில் லையோ !

குணக்குன்றம் தீப்பட்டு வேக லாமோ !

நடுங்கிற்றே தேசத்து மக்கள் நெஞ்சு !

நாற்றிசையும் உயிர்க்கதறல் விழிநீர் வெள்ளம் !

அடங்காத துயரத்தை ஆற்ற வல்லோர்

ஆருண்டு ! மேய்ப்பரற்ற மந்தை ஆனோம் !

கடுங்காலம் எதிர்வந்து கண்ம றைக்கக்

காந்திமகான் தகனத்தை ஐயோ கண்டோம் !

‘‘தசையோடும் எலும்போடும் இரத்தத் தோடும்

தகைசார்ந்த அருங்குணங்கள் கொண்டார் பூமி

மிசைமீது நிசமாக வாழ்ந்தார் என்றால்

மிகையாகக் கொள்ளுமெதிர் தலைமு றைகள்’’

இசைவான புகழுரையை ஐன்ஸ்டீன் சொன்னார் !

இம்மண்ணின் மூத்தகவி தாகூர் சொன்னார்;

அசையாத வைரமனம் தொண்டே வாழ்க்கை

’‘‘அவராத்மா மகாஆத்மா !’’ காந்தி வாழ்க !


--------முற்றும்-----------


1 comment:

  1. கவிஞரே,

    சொல்ல வார்த்தைகளில்லை.
    ஒரு மாபெரும் சகாப்தத்தை, ஆறு அத்தியாயங்களுக்குள் - அதுவும், எதுவும் விட்டு விடாமல் அடக்கி, சொல்லாட்சியோடு கூடிய கவிதை நடையில் சொல்லிய விதத்தை - சொல்ல வார்த்தைகளில்லை.

    இன்றைய இளைஞர்களுக்கு இந்தக் கவிவரலாறு மிகவும் தேவையான ஒன்று.
    நல்ல பணி.
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete