Sunday, October 17, 2010

உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்


நான்

உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்

ஆனால் நான்

என் சகாக்கள் பலரையும்போல்

உங்களிடம் டியூசன் படிக்கவில்லை


ஐயா

என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை

இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்

விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது

அதனால்தான் எப்பொழுதும்

கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்


காதறுந்த துணிப்பையில்

என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்

முத்து முத்தான கையெழுத்தால்

நிறைந்து வழியும் என் ஏடுகள்

உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை

நான் அறியவில்லை ஐயா !


என் உணவுப் போசியில்

கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது

எப்பொழுதும் நான்

நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்

தனித்து மூலையில் அமர்ந்து

வாரி வாரிச் சாப்பிடுவதை

நீங்கள் பார்த்திருக்கலாம்


ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்

கொஞ்சம் மை கசியும் என்றாலும்

மாவுபோல் எழுதும்

அது காணாமல் போன அன்று

நான் கதறிக் கதறி அழுதேன்

புல்மேயும் ஆடுபோல்

குனிந்த தலை நிமிராமல் தேடி

மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்

எனக்கு உயிரே வந்தது.


காலில் செருப்பில்லை.

என்னிடமிருப்பவை

சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்

தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே

மறதியறியாத

கத்திக் கூர்மையை ஒத்த

சாம்பல் மூளை மட்டுமே


ஐயா

உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்

ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்


காரணமேயில்லாமல்

என்னைக் கடியாதீர்

ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று

நீங்கள் அறிந்திருப்பதுபோல்

ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என

நான் அறியவில்லை ஐயா !


பாடம் எடுக்கும்போது

என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா !

12 comments:

  1. மனம் கனத்து விட்டது கவிஞரே

    ReplyDelete
  2. பெரிதும் தாக்கிய வரிகள்
    //காலில் செருப்பில்லை.
    என்னிடமிருப்பவை
    சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்
    தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே
    மறதியறியாத
    கத்திக் கூர்மையை ஒத்த
    சாம்பல் மூளை மட்டுமே//

    ReplyDelete
  3. கவிதை பள்ளியின் மணிபோல் கணீர் என்று இருக்கிறது. ஒரு கருத்து - "என்னிடமிருப்பவை/ சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்/ தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே/ மறதியறியாத/ கத்திக் கூர்மையை ஒத்த/ சாம்பல் மூளை மட்டுமே" என்பதை சொல்லாமல் வாசகனின் எண்ணத்திற்கு விட்டு இருக்கலாமோ என எனக்கு தோன்றியது.
    நானும் என் பள்ளியில் டியூஷன் போகாத மாணவர் பட்டியலில் இருந்து சற்று சிரமபட்டவன்!

    ReplyDelete
  4. எல்லா மாணவர்களையும் கரையேற்றவேண்டியதே ஆசிரியர் கடன் என்றிருந்தது போய் டியூஷன் எடுக்கிற மாணவர்களைச் சிறப்பாகக் கவனிக்கிற கொடுமை...

    அப்படியே காசு உள்ளவர்களுக்குத்தான் கல்வி என்று இன்று கல்லூரி வரை பீடித்துவிட்டது.

    உணவுப் போசியில் கொஞ்சம் பழைய சோறு கொண்டுவந்து, நான்கு பேர் மத்தியில் அல்லாமல், தனித்து, மூலையில் அமர்ந்து சாப்பிடுகிற மாணவர்களை என்னிப்பார்க்க வதையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. //ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்

    கொஞ்சம் மை கசியும் என்றாலும்

    மாவுபோல் எழுதும்

    அது காணாமல் போன அன்று

    நான் கதறிக் கதறி அழுதேன்

    புல்மேயும் ஆடுபோல்

    குனிந்த தலை நிமிராமல் தேடி

    மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்

    எனக்கு உயிரே வந்தது.// i saw such poor boys in our school . its painful . good kavithai.

    ReplyDelete
  6. மனசு கனக்கிறது அண்ணே... இப்படிப்பட்ட மாணவர்களை என் பள்ளி நாட்களில் பார்த்ததில்லை..

    ReplyDelete
  7. மனம் கனக்கிறது! இதுபோல் டியூசன் படிக்காதவர்களை மட்டம்தட்டும்/பெயிலாக்குவதை கண்டுள்ளேன்.

    ReplyDelete
  8. 100க்கு 75 சதவீத ஆசிரியர்கள் டியூசன் நடத்துகிறார்கள்..!!பள்ளியில் என்ன செய்வார்கள்..?

    ReplyDelete
  9. //

    ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று

    நீங்கள் அறிந்திருப்பதுபோல்

    ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என
    நான் அறியவில்லை ஐயா !//

    கற்றுக்கொள்ளும் சூழலில் நாம் எப்படி நடத்தப் படுகிறோம் என்பதைப் பொட்டில் அடித்தார்ப் போல் சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
  10. அனைவரின் பாரட்டுகளுக்கும் நன்றிகள் !

    ReplyDelete
  11. அன்புள்ள மகுடேஸ்வரன்..

    உங்கள் கவிதைகளுடன் ஏற்கெனவே எனக்குப் பரிச்சயம். இந்தக் கவிதை மனதை ஈரப்படுத்தி அசைத்த கவிதை.

    ReplyDelete
  12. my dear friend maguda,every word in urr poem is the truth of realisation,and i adore reading urr poems,becoz sometimes its the feel of a mother,or,the childs dance of joy in rain and the feel of loving arms,around u.maguda,write on and on,coz,we feel thirsty to read urr poems and get from so many things unwanted in life.GOD BLESS U yearh,and this particular poem moved me and a tear drop is my gift to u.

    ReplyDelete