Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல - தலை வலிக்கிறது


நான் மகான் அல்ல திரைப்படத்தைப் பார்க்கவேண்டியதில்லை என்பதில் மிக உறுதியாகத்தான் இருந்தேன். கடந்த பதிவில் அதைப் பற்றிய கேள்வியை எழுப்பியும் இருந்தேன். ஆனாலும் என் விதி படத்தைப் பார்க்க வைத்துவிட்டது. சனிக்கிழமை என் அலுவலக மின் துண்டிப்பு நேரம் மாற்றப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் திரையரங்கை நாடவேண்டியதாகிவிட்டது. படத்தைப் பார்த்து வைப்பதால் ஒன்றும் கெட்டுப் போய்விடப் போவதில்லை.

மேலும், என் வலைப்பக்கத்தில் திரைவிமர்சனம் செய்வதில்லை என்றும் இருந்தேன். ஆனால், சில திரைப்படங்களைச் சார்ந்து கறாராகச் சொல்வதற்கு இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

எண்பதுகளில் வெளிவந்த ரஜினி படங்களில் அதிக வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்த படங்கள் நான் மகான் அல்ல-வும் நான் சிகப்பு மனிதனும். இதில் நான் சிகப்பு மனிதன் - காரண காரியத் தொடர்புகள் விறுவிறுப்பாகப் புனையப்பட்டு வர்த்தகத் திரைப்பட நேர்த்திகள் ஓரளவுக்கு முழுமை செய்யப்பட்டு வெற்றி பெற்ற படம். தேசத்தின் சட்ட ஒழுங்கு பரிபாலிக்கப்படுவதில் உள்ள நடைமுறைக் கீழ்மைகளை, நீதிமன்ற விசாரணை அலங்கோலங்களை காட்சிப்படுத்தியிருந்த படம் அது. அந்த அளவிற்குக் கூட இல்லாமல் - வெறும் குரூரமான வன்முறைக் காட்சிகளும், ரசிகனின் டுபுக்கு ரசனைக்குள் பழியுணர்ச்சியைத் தூண்டி அதற்குத் தீனியிடுவதற்காக வரிசையாகப் பழி தீர்க்கும் காட்சிகளைக் கொண்டும் எடுக்கப்பட்ட படம் பழைய நான் மகான் அல்ல.

புதிதாக ஒரு தலைப்பைக் கூடச் சூட்டத் தெரியாத அல்லது சூட்டுவதற்கு முன்வராத ஒரு படக்குழு என்ன பெரிதாய்ப் புதிது செய்துவிடும் என்கிற அடிப்படைக் கேள்வி இங்கே யாருக்கேனும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இங்கே வலைப்பூக்களில் விமர்சனம் எழுதுவோரில் பலர்  பின்வாசல் வழியாக நுழைந்து யாராவது ஒரு திரைத்துறைப் புள்ளியிடம் தலையைச் சொரிந்து நிற்பவராக இருப்பது காரணமாக இருக்கலாம். இதே இயக்குநர் தம் முந்தைய படமான வெண்ணிலா கபடி குழுவை எடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்பதற்கு இந்தப் படத்தில் ஏராளமான தடயங்கள் காணக்கிடைக்கின்றன.

கார்த்தி முதன்மைப் பாத்திரத்தில் தோன்றுகிறார். பையா படத்தில் அணிந்திருந்த அதே உடைகளைக் கழற்றாமல் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் என நினைக்கிறேன். எப்பொழுதும் குறுகுறுப்பான வசனங்களைப் பேசியபடி காட்சிகளில் தென்படுகிறார். பையா படத்தின் பேன்ட் ஷர்ட்டுகளுக்குப் பதிலாக வேறு உடை தரப்பட்டால் ஆள் இதேயளவுக்கு எடுபடுவாரா என்பது கேள்விக்குறியே. அவர் செய்யும் வசன சில்மிஷங்கள் வழியாக படத்தின் சாதாரணக் காட்சிகளையும் கொஞ்சம் நிமிர்த்திவைக்கிறார். விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவாவைவிட - ஆள் வசனச் சொல் விடுவிப்பில் நூதனம் காட்டுகிறார். ஆனால், அதுவே கூடுதலாகப் போய்விட்டது. இதே முறைமை இன்னொரு படத்திலும் தொடர்ந்தால் கார்த்தி தனுஷைப் போல சந்தையிழப்பார். மேலும் படம் தொடர்ந்து கார்த்தியைச் சுற்றியே வருவதும் அலுப்பைத் தருகிறது. எந்தக் காட்சியும் கார்த்தியை விடுவிக்காமல் அள்ளி அணைத்துச் செல்கிறது. முதல் காட்சியில் கார்த்தியைக் கண்டதும் கொடுத்த காசுக்கு மேலாகக் கூவிய இளசுகள் கூட்டம் போகப் போக குரலடங்குகிறது.

நாயகிக்கு நடிக்கவேண்டிய வேலை இருக்கவில்லை. அதற்கான காட்சிகளும் இல்லை.

தோன்றுவதன் வழிப்பட்ட மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்துவதில் ரவிபிரகாஷ் பெயரைத் தட்டிப் போகிறார். ஒரு காலத்தில் முக்கிக் கத்தி விஜயகுமார் ஏற்றுச் செய்த தந்தை வேடங்களுக்கு எதிரான வேடங்களை அவர் செய்துவருவது தெரிகிறது. உப வேடங்களில் தோன்றும் சிலரும் வேடப் பொருத்தம் உடையவர்களே.

நிறைய டிவிடிக்களைப் பார்த்துப் பார்த்து உட்கார்ந்து யோசித்துச் செய்யப்பட்ட செயற்கையான கதை இது என்பதில் எனக்கு ஐயமில்லை.

நின்றால் கொலை நடந்தால் கொலை என்று சரமாரியாக நடந்துகொண்டிருக்கும் களத்தில் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது காட்டப்படவேயில்லை. குறைந்தபட்சம் அவர்கள் உத்தரத்தைப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார்கள் என்றாவது ஒரு காட்சியை அமைத்திருக்கலாம்.

இப்பொழுது தமிழ்த் திரை இயக்குநர்களை ஆட்டிப் படைக்கும் லத்தீன் அமெரிக்கப் படங்களின் சொல்லல் மற்றும் ஆக்கல் முறைகளை அப்படியே கவ்விச் செய்த கவிச்சை ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. சுயமாகச் சிந்திக்கவும் என்று இன்னொருவர் சொல்லவா முடியும் ? அது சுயமாக விளைய வேண்டும்.

குத்துப் பாட்டு, குடும்பப் பாசப் பாட்டு, பிளாஷ் பேக் கொடுமை, தனி காமெடி ட்ராக் அலப்பறை, கடைசியில் 4 நண்பர்களின் உதவி என்று நிறைய விவகாரங்களில் நாம் தப்பிவிடுகிறோம்.

தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த டிரேடர்களின் கையில் படம் சிக்கிவிட்டால் வெற்றி என்று தெரிகிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைத்துறை, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் ஊடகம் – தமிழ்த் திரையுலகம். அது எப்படி ஒரு குடும்பவலைக்குள் அடைபட்டு நிற்கிறது என்கிற கேள்வி எமக்குள் எழாமல் இல்லை. விடை தெரிந்தவர்கள் கூறுக.

ஒளிப்பதிவு, பின்னணி ஒலியமைப்பு, படத்தொகுப்பு மூன்றையும் குறை சொல்வதற்கில்லை. என்னதான் எல்லாம் சரியாக இருந்தாலும் வெளியே வந்தால் எதற்காகத் தலை வலிக்கிறது என்பதுதான் தெரியவில்லை. 

8 comments:

  1. அண்ணே அநேகமாக கடைசி 10 - 15 நிமிடங்கள் நடக்கும் இடைவிடாத சண்டை காட்சிகள் தான் காரணமாக இருக்கும்..

    நானும் இந்த படத்தை நேற்று இரவு பார்த்தேன்... ஒன்னும் புதுசா இல்லை... :(

    ReplyDelete
  2. வினோ ! தலைவலி இன்னும் தீரவில்லை.

    ReplyDelete
  3. உங்கள் விமர்சனத்தைவிட உங்கள் மொழி நடையை மிகவும் ரசித்தேன்..நன்று..

    ReplyDelete
  4. இன்று (ஞாயிற்றுக் கிழமை), சென்னை தேவி சினிமாவில் இப் படத்துக்கு தாராளமாகச் சீட்டுக் கிட்டியது. கறுப்பில் விற்கிற ஆட்களும் வாங்கிவைத்த சீட்டுகள் விற்றுத் தீராதோ என்கிற கவலையில் வழிமறித்து அதே விலைக்குத் தருவதாகச் சொன்னார்கள். மழை காரணமாக இருக்கலாம் என்று எண்ணினேன். நல்லவேளை, 'காசினோ' சினிமாவில் ஒரு தெலுங்குப் படத்துக்கு சீட்டு வாங்கி வைத்திருந்தேனா, தலைவலியில் இருந்து தப்பித்திருக்கிறேன்!

    ReplyDelete
  5. ’சுறா’வைப் பார்த்துட்டு, இந்த படத்தைப் பாருங்க...... சூப்பரா இருக்கும்!! ஹாஹாஹா...

    முதல்நாள், இரண்டாம் காட்சிக்குச் (எப்போதுமே) சென்ற என் கதி எப்படி இருக்கும் பாருங்கள்... எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு காட்சி அந்த படத்தில்., கார்த்தியின் அப்பா வரும் காட்சிகளில் ஒன்று!! மற்றபடி, அலறல் இல்லாத தலைவலி!!!

    நாங்க சுறாவுக்கே ‘கின்னுனு நின்னவங்க... இதெல்லாம் சுண்டைக்கா..

    ReplyDelete
  6. ரமேஷ் ! வெகுகாலம் கவிதை எழுதிய எங்களைப் போன்றவர்கள் மொழிநடையில் விற்பன்னர்கள். நீண்ட வாக்கியத்தை அமைத்து அதற்குள் எவ்வாறெல்லாம் அர்த்தச் சவுக்கைச் சொடுக்கலாம் என்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம். நீண்ட வாக்கியத்தை அமைக்கத் தெரிந்தவர்களை மொழிமன்னர்கள் என்று கண்டுகொள்க.

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! தெலுங்குப் படம் எப்படி இருந்தது ?

    ஆதவா ! சுறா படத்தை நான் பார்க்கவில்லை. பேரைக் கேட்டாலே பல் கூச்சம் எடுக்கிறது. படம் எப்படியிருந்திருக்கும் என்பது புரிகிறது.

    ReplyDelete
  7. தெலுங்குப் படம் 'Don Seenu'. நாயகன் ரவி தேஜா. ஜெயம் ரவி தமிழில் நடிப்பதற்காகத் தெலுங்கில் கூத்துக் கட்டுகிறவர்.

    இடைவிடாத நகைச்சுவை, இரண்டு நாயகியர் கவர்ச்சிக் கதை, அந்தரத்தில் எதிரிகள் பறக்கும் அடி உதை, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து இடைவேளை வரை - போதாது?

    நா.ம.அ. அளவுக்கு அறுவையாக இருக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
  8. "எல்லாம் சரியாக இருந்தாலும் வெளியே வந்தால் எதற்காகத் தலை வலிக்கிறது என்பதுதான் தெரியவில்லை."

    நல்ல விமர்சனம்...

    ReplyDelete