Tuesday, March 3, 2009

ஏ ஆர் ரகுமான் தமிழ்ப் பாடல்களை வளர்த்தாரா ?

தமிழ் மொழி பாமரனோடு மிகவும் நெருங்கியிருந்த இடம் அவன் கேட்டுக்கொண்டிருந்த திரைப்பாடல்கள் ஆகும். தமிழினத்தின் ஆகப்பெரும் வர்க்கமான உழைப்பாளி தமிழ் மொழியின் ஒரே மனித வங்கி ஆவான். ஓர் இனத்தின் அடையாளத்தை வேரறுக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியைக் குலைக்க வேண்டும். இளையராஜா தம் காலம் முழுவதும் பாடல்களைக் கீழ்த்தரமாக உச்சரிக்கும் பாடகனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மேலும் இளையராஜா உள்ளிட்ட எந்த இசையமைப்பாளரும் பாடல் வரிகளை அடக்கி இசையொலிகளைப் பெருக்கிக் காட்டவில்லை. பாடலின் பின்புலமாக இசை நின்றதே ஒழிய பாடல் ஒலியின் ஒலிப்பை நெறித்துக் கருவிகளைக் கர்ண கடூரமாக ஒலிக்க விட்டதில்லை. அதனால்தான் பாடலை எங்கோ தூரத்துக் காற்றில் கேட்ட தமிழன் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி / காதுக்கொரு கானக்குயில் / நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி / நீதானம்மா’ என்று பாடிச் சென்றான். அவனையறியாமலே நற்றமிழ்ச் சொற்கள் பத்துப் பதினைந்தை உயிருக்குள் ஊட்டிக் கொண்டான். ‘மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே’ என்று மொழியழகான வரிகளை ஆழ்மனத்திலிருந்து ஏற்றிப் பாடினான். மொழி பாடலின் முதுகேறி இனத்தின் உள்ளங்களைத் தீண்டிக்கொண்டிருந்த நிலையை முதலில் கொல்வதற்கு வழிகோலியவர் ஏ ஆர் ரகுமான் ஆவார். ‘காதலிஹ்ஹும் பெந்நின் ஹைஹல் தொட்டு நீட்டிநால்’ என்று உதித் நாராயணனைத் தமிழில் பாட வைத்தவர் ரகுமான். காதல் தேசம் என்ற படத்தின் பல பாடல்களை இன்றுவரை ஒற்றைத் தமிழனும் முழுதாகக் கேட்டறியவில்லை. கேட்டால் சொற்களைக் காணவில்லை. கருவிகளின் கோர ஒலிக்குள் சொற்களைப் பிணப்பாடம் செய்து அடக்கம் செய்யும் பணியை ரகுமான் தான் தொடங்கிவைத்தார். அந்தத் தொடக்கம் இன்று எத்தனை குப்பைப் பாடல்களைப் பெற்றுத் தள்ளியிருக்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணி வெட்கித் தலைகுனிய வேண்டும். ஒன்றுமறியாப் பிஞ்சுகள் கூட ‘வேர் ஈஸ் த பார்ட்டி ? எங்க ஊட்ல பார்ட்டி’ என்று பாடிப் பலியாவதைக் கண்கூடாகக் காண்கிறோம். வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புள்ள ஒரு பாடலைக் கூட ரகுமான் தரவில்லை. எல்லாப் பாடல்களும் காதல் மயக்கங்கள் அல்லது பிரிவு இம்சைகள் கேளிக்கை கொண்டாட்டங்கள். கறாரான விமர்சனங்களுக்குப் புகழ்பெற்ற எத்தனையோ மேதைமை மிக்க இசை விமர்சகர்களும் மொழிப் புலவர்களும் இன்று ஏதேனும் ஓர் அரசாங்கக் கட்டிடத்தில் ஓய்வூதிய நிலுவைகளுக்கு மனுச் செய்துகொண்டிருக்க வேண்டிய அவல வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டுவிட்டனர். அந்த தைரியத்தில் தான் இன்று ஏராளமான தட்டுக்கெட்ட தத்தாரிகள் கலைத்துறையின் எல்லாத் துளைகளிலும் நுழைந்து எந்த வரலாற்றாலும் மீட்கவே முடியாத இன மொழி உணர்வுக் கேடுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிட்டனர். இத்தகைய இழப்புகளோடு ஒப்பிட்டு ரகுமானின் ஆஸ்கரை விமர்சனம் செய்யவேண்டிய எத்தனையோ அறிவாளிகள் வாழைமட்டையாகக் குழைந்து நிற்பதைக் காணச் சகிக்கவில்லை.