Saturday, October 15, 2011

உள்ளாட்சி வேட்பாளர்களுக்கு...


என் வாக்கு உங்களுக்குத்தானா

என்பதில் உங்களுக்கு எந்த உறுதியும் இல்லை


என் வாக்கால் நீங்கள் வெல்வீர்களா

என்பதும் உங்களுக்குத் தெரியாது


ஆனாலும் என் வீடு தேடி வருகிறீர்கள்

என்னைக் கும்பிடுகிறீர்கள்

ஏராளமான வாக்குறுதிகளைத் தருகிறீர்கள்

மறக்காமல் உங்கள் சின்னத்தில் வாக்களிக்கக் கோருகிறீர்கள்


எனக்குத் தெரிகிறது

உள்ளாட்சி அமைப்பில்

மக்கள் பிரதிநிதியாக அமரும் உங்களால்

இயலும் வேலைகள் சிற்சிலவே


சாலை அமைக்கலாம்

சாக்கடை கட்டலாம்

தெருவிளக்கு நிறுவலாம்

குடிநீர் வழங்கலாம்

குப்பை அள்ளலாம்

வரிவிதிக்கலாம் பெறலாம்

வாய்ப்பிருந்தால்

பூங்கா, ரவுண்டானா, நூலகம்,

சமுதாயக் கூடம், நியாயவிலைக் கடை அமைக்கலாம்


இதற்கு மேல் உங்களுக்கு

எந்த ஓர் அதிகாரமும் இல்லை


உங்கள் பதவிக்காலம் முழுவதும்

நீங்கள் இவற்றில் கூட நிறைவுறச் செயலாற்றுவதில்லை


இதற்கு ஏன் இத்தனை போட்டி ?

இதைச் செய்ய ஏன் இத்தனை கூப்பாடு ?

இதைச் செய்ய

ஒரு குழந்தையைப் போன்ற எளிய மனது போதாதா ?


இதற்கு ஏன் உங்களுக்கு இத்தனை அதீத ஆர்வம் ?

வெகுளியான தொண்டு மனம் போதாதா ?


நீங்கள் எதற்கு அடிபோடுகிறீர்கள் ?


ஒவ்வொரு பொதுப்பணியிலும்

நடுத்துண்டை எடுத்துத் தின்னலாம் என்றா ?


சொந்த சாதிக்குத் தோதாக

எதிர்சாதிக்குச் சொப்பனமாக வாழலாம் என்றா ?


கட்சிக்குள் முன்னுக்கு வர

இங்கிருந்துதான் முதல் கியரைப் போடவேண்டும் என்றா ?


சாலையோரக் கடைகளில்

தினப்படி வேட்டை கிடைக்கும் என்றா ?


மதுப் பருகுசாலையில்

மாதாந்திர மாமூல் நிச்சயம் என்றா ?


இன்னும் அடித்துப் பறித்துப் பதியவேண்டிய நிலங்கள்

அங்குமிங்கும் இருக்கின்றன என்றா ?


கணவன் மனைவித் தகராறுகளில் கூடத் தலையிட்டு

நடுவில் வந்து நிற்கலாம் என்றா ?


காவல் நிலையத்தில்

ஒரு கான்ஸ்டபிளின் இலகுவான பார்வைக்கா ?


ஊழலுக்கு இன்னும் எழுதப்படவேண்டிய புது இலக்கணங்கள்

மீதம் இருக்கின்றனவா ?


வென்றவுடன் உங்கள் ஸ்கார்பியோவிற்கு வெளியே

ஒரு நாள் உங்களைக் காண முடியுமா ?


எதற்கு

எதற்கு உங்களுக்குள்

இத்தனை ஆர்வம் போட்டாபோட்டி என்று கேட்கிறேன்


என் வினாக்களுக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்

நான் வாக்குச் சாவடிக்கு வருகிறேன்.

Tuesday, October 11, 2011

பிரிவின் மடி


நாம் அந்த அலுவலகத்தில்

ஒன்றாகப் பணியாற்றினோம்

உனக்கு உள்ளிருந்து தட்டச்சிடும் பணி

எனக்குப் பணி ஊர் வீதி அலைதல்

காலையில்

அனைவரும் அலுவலகத்தில் கூடுவோம்

நான் என் பையைத் தோள்மாட்டுவேன்

நீ உன் தாள்களை எந்திரமேற்றுவாய்

என் கால்கள்

வீதியை அளந்து நகர

உன் விரல்கள்

எழுத்துருக்களை மிதிக்கும்

அச்சானவற்றைக் கொண்டுபோவேன்

அச்சாகவேண்டியவற்றைக் கொணர்ந்து தருவேன்

யாருமில்லாத தனிமையில்

நாம் அங்கே இருக்கும் தினங்களும் வந்தது

நீ என்னைக் கேட்டாய்

நான் தலைகவிழ்ந்து

என் பிய்ந்த செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன்

பிறகு

நான் ஐஸ்விற்பவனாகி

என் பனிப்பெட்டியை

மிதிவண்டியில் கட்டிச் செல்பவன் ஆனேன்

என் பணிக்கூடத்தில்

ஐஸ்வார்க்கும் பெண்ணை

நான் தனிமையில் சந்திப்பதே இல்லை.

Monday, October 3, 2011

திரு. மாடசாமி துரையூருக்குப் பயணமாகிறார்

(இந்தக் கவிதை 1997-இல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. இக்கவிதை வெளியான சந்தர்ப்பத்தில் விமர்சகர்களாலும் எளிய வாசகராலும் அதிகம் எடுத்தாளப்பட்டுப் பேசப்பட்டது. அப்போது V-Four Exports என்கிற நிறுவனத்தில் பணியாற்றிய என் நண்பன் ஜெகன் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை என்னைத் தொலைபேசியில் பிடித்து ‘சார்... ரொம்ப டென்சனாயிருக்கேன். அந்தத் துரையூர்ப் பயணம் கவிதையைக் கொஞ்சம் சொல்லுங்க... ப்ளீஸ்’ என்று கெஞ்சுவான். நானும் உரிய ஏற்ற இறக்கங்களோடு சொல்வேன். நான் சொல்லும்போது தொலைபேசியை ஸ்பீக்கரில் வைத்துவிடுவான். கவிதையைக் கேட்டுப் பனியன் நிறுவனமே கெக்கே..பிக்கே என்று சிரிப்பதை நான் கேட்க வைப்பான்.

அவனுக்குச் சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் இக்கவிதை என் நினைவுத் தகட்டில் பசுமையாய் அமர்ந்துவிட்டது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெகன் இப்பொழுது எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. ஒருவேளை அவனையும் திருப்பூர் திருப்பி அனுப்பியிருக்கக் கூடும். மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் அதன் உதவி இயக்குநரை இந்தக் கவிதையின் பாதிப்பால் தனக்குக் கோபம் பொங்கிய தருணமொன்றில் ‘சார். கொஞ்சம் மூடீட்டு இருக்கீங்களா..?’ என்று காய்ந்துவிட்டான். அதற்காக அந்த அலுவலகத்திற்குள் அவன் நுழையாமல் பார்த்துக்கொள்ளும்படி அவனுடைய முதலாளியை அந்த அலுவலகம் கேட்டுக்கொண்டது.

என்னுடைய ‘அண்மை’ என்னும் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. அத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய கவிஞர். ஞானக்கூத்தன் தன் உரை முழுக்கவே இக்கவிதையைப் பற்றியே பேசியிருந்தார். )

தொரையூருக்கு எம்புட்டு ?

தொண்ணூறு பைசா டிக்கெட்டு.


ஒத்த ரூவா வாங்கீட்டு

டிக்கெட்டு குடுத்தான் கண்ரைட்டு.


பேசாம போய்ட்டான் அங்கிட்டு.


திரும்பி வந்து கண்ரைட்டு

சில்லறைப் பாக்கி தருவான்ட்டு

நானும் இருந்தேன் கம்முன்ட்டு.


வரவேயில்ல இங்கிட்டு.

என்றா எழவாப் போச்சுன்ட்டு

கோவம் வந்துது எகிறீட்டு.


கழுத்துல துண்டப் போட்டு

‘எடுறா பத்துப் பைசான்ட்டு

கேக்கலாம்னுருந்தேன் கறுவீட்டு.


ஆனா அதுக்குள்ள முந்தீட்டு

தொரையூர் ஸ்டாப்பிங் வந்திட்டு.


சட்னா எறங்க்யா... எறங்குன்ட்டு

கத்துனாம் பாரு கண்ரைட்டு.


எறங்கிக்கிட்டேன் மூடீட்டு.