Friday, July 30, 2010

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது

அது தன்னை

யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது

அதற்காக

ஒரு பாடலாக உருமாறி

காற்றின் நாளங்களில் பரவியலைந்தது

ஒருவரும் செவிமடுக்கவில்லை

அது தன்னை

யாருக்கேனும் தின்னத் தரவும் தயாராக இருந்தது

அந்தக் காதல்

தன்னை ஒரு கரும்புத் தண்டாக மாற்றிக்கொண்டு நின்றது

ஒருவரும் அதைக் கடித்துறிஞ்சவில்லை

அது தன்னை

யாருக்கேனும் முழுதாகக் காண்பிக்க முன்வந்தது

அதற்காகவே

தன் ஆடைகளைக் களைந்து நடந்தது

அதன் பித்துநிலை கண்டு

அனைவரும் அஞ்சியோடினர்

அது தன்னை

யாருக்கேனும் விற்று ஒழியப் பார்த்தது

ஒரு விலைமகளாக

கடைத்தெரு மூலையில் காத்திருந்தது

ஒரு ரோகிகூட விலை வினவவில்லை

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது

Thursday, July 29, 2010

ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?


ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?

ரமேஷ் வைத்யா இதைக் கேட்டு வைத்ததாகத் திருப்பூர் பதிவர் சந்திப்பின்போது பரிசல்காரன் கூறினார். அந்தக் கேள்வியிலிருந்து நாங்கள் வேறொரு சிரிப்புப் பேச்சில் திசைமாறிச் சென்றுவிட்டாலும் இதற்கு உரிய பதிலைச் சொல்லியாகவேண்டிய கடமை எனக்கிருப்பதாக உணர்ந்தேன்.

ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.

Wednesday, July 28, 2010

மாறா நிரல்


மாறா நிரல்

  • ·

உங்களைப் போலவே நானும்

காலையில் அலுவலகம் கிளம்புகிறேன்.

என் நீலநிறப் புரவியை

அதன் தாங்கியிலிருந்து நகர்த்தி ஏறி அமர்கிறேன்.

கிளப்பியதும் அது எழுப்பும் ஒலியில்

என் கர்வத்தின் துகள்கள் சில

காற்றில் கலக்கின்றன !

மெல்ல அதன் வேகத்தை முடுக்கி

நெடுஞ்சாலை வந்தடைகிறேன்.

அங்கே

என்னைப் போலவே உங்களைப் போலவே

எல்லாரும்

தாங்கள் உடனே சென்று

பொருந்திக்கொள்ள வேண்டிய

பொந்து நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள் !

அவ்வமயம்

மளிகைக் கடைகளும் தேநீர்க் கடைகளும்

முதல்சுற்று வணிகம் முடிந்த களைப்பில்

மூழ்கியிருக்கின்றன.

நகரப் பேருந்துகள்

எந்த நிறுத்தத்திலும்

கழியவே கழியாத கூட்டத்தோடு

என் உடன்வருகின்றன.

பள்ளிகளின் கொடுவாய்களில்

பிள்ளைகள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.

நொய்யலோரப் பாதை வருகிறது !

தொண்டையிலிருந்து திரட்டி

கையளவு எச்சில் துப்புகிறேன்.

விபூதியிட்ட சாக்குக் கடைக்காரர்

முதல் கோணிப்பையைத் தைத்துவிட்டு நிமிரும் தருணம்

நான் அவரைக் கடக்கிறேன்.

இது எப்பொழுதும் நிகழ்ந்தபடியிருக்கிறது !

சமணக் கோயிலருகில்

மேலுதட்டில்

வியர்வை அரும்ப விரையும் பெண்ணை

தினமும் எதிர்கொள்கிறேன்.

அவளைக் கண்டதும்

என் வண்டியின் வேகத்தை நான் தணிப்பதும்

என்னைக் கண்டதும்

தன் நடையின் வேகத்தை அவள் கூட்டுவதும்

நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

செத்த இரும்புகளால் ஆன சரக்கு ரயில் ஒன்று

நிலையத்தில் நிற்கிறது.

மேம்பாலத்தைக் கடக்கிறேன்.

முச்சந்தியில் எல்லா வாகனங்களையும்

மறித்துப் பின் அனுப்பும்

புதிய போலீஸ்காரியின் விதியை

எண்ணி எனக்குள் நகைக்கிறேன்.

என் அலுவலகம் வந்துவிட்டது !

இருக்கையிலமர்ந்ததும்

ஒலிக்கும் தொலைபேசியை எடுக்கிறேன்

‘சார்... சொல்லுங்க...!

Monday, July 26, 2010

தீவினை அச்சம்



தீவினை அச்சம்



தீங்கிழைப்போன் காடழிப்பான் நாடழிப்பான்

தீங்கிழைக்க அஞ்சுவோன்

மலர்கிள்ள மயங்குவான்


தீங்கெனும் கன்றுகளுக்கு நீருற்றினால்

வளர்ந்து மரமாகி

தீங்கெனும் எரிநிழல் பெய்யும்


எதிர்த்தடிக்க எண்ணாதிருந்து

கடந்துவிடும் அறிவு

தீமையின் நஞ்சுக்கு முறிமருந்து


அறியாமற் செய்த தீங்குக்கு

ஆற்றிநின்ற

அறங்களே பகை


இல்லாமையால் செய்த தீங்கு

பசிக்கு

முள்ளோடு தின்ற கள்ளிப் பழம்


கெடுதல்களால் கெடாதிருக்க

கெடுதல்களைக் கொடாதிரு !

சுடுகொள்ளி அகன்றால் சூடேது ?


எதிரியால் தீங்கு எள்ளளவு !

எதிர்மறைச் செயலால்

ஏற்பட்ட தீங்குக்கேது கொள்ளளவு ?


தீச்செயல் விளைவை

ஓடியொளிந்து காப்பதேது ?

வால்பற்றிய நெருப்பை வைக்கோல் போரில்

தேய்த்தணைக்க முயன்றதாம் குரங்கு !


தீங்கிழைக்கத் தெரியாதிருத்தல்

அடுத்துக் கெடுக்க அறியாதிருத்தல்

உன்னை ஓம்பும் உளப்பாங்கு


தீச்செயல் அறியான் நெஞ்சு

வண்ணத்துப் பூச்சி

வந்தமரும் பூங்கொடி


Friday, July 23, 2010

புறங்கூறாமை



புறங்கூறாமை


நேரில் இல்லாதார்பற்றி

நிறையழியப் பேசுவோர்

ஊருக்கு நூற்றுவர்

முகத்தின்முன் ஒன்றாக

முகத்தின்பின் வேறாகப் பேசுவோன்

அகமெல்லாம் அழுக்கு

இல்லாத ஆள்குறித்துப்

பொல்லாது சொல்பவன்

மனிதக் கீழ்மையின் நாயகன்

நேர்நின்று காறியுமிழலாம்

புறம்போய்ச் செய்யலாமா

புன்னகை ?

புறஞ்சொல் வல்லாரை

அறவோரின் அறிவு

அப்படியே அறியும்

புறங்கூறித் திரிபவனின் மறுபுறம்

வௌவால்கள் தொங்கியுறங்கும்

பாழிடம்

உவந்து உள்ளம் களிக்கும் நட்பை

புறங்கூறுவோன்

என்றும் பெறத் தெரியாதவன்

உடனிருந்து புறம்சொல்பவனால்

தோழர்கள் தொலைவர்

பெருகுவர் எதிரிகள்

புறங்கூறிக் குடிகெடுத்தோன்

மண்ணுக்குப் போகுமுன்

மனப்பிணியுற மாட்டானா ?

மாற்றானைத் தூற்றும்முன்

மனக்கண்ணாடியில் கண்டாயா

உன்னழகை ?

Wednesday, July 21, 2010

நவீன கவிதையில் திருக்குறள் - பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை

சொற்களுக்குக் கூர்முனைகள் உள்ளன

அவை வாள்களை ஒத்தன

முகைகளையும் ஒத்தன

தோழனைச் சொல் அடையவில்லை எனில்

அங்கே இன்னும்

தோழமை தோன்றவில்லை

யாரும் கேளாச் சொற்களைப்

பேசும் வாய்

ஊமைக்கு எவ்விதம் உயர்ந்ததாம் ?

ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டால்

அங்கே சொல்லும் இல்லை

சொல்பவனும் இல்லை

சான்றோர்களின் சொற்கள்

அயராமல் பறக்கும் பறவைகள்

அவை தொடுவானம் தொடுவன


நலம் பயக்கும் சொற்கள்

நடுங்கும் குளிரில் உள்ளோர்முன்

நன்கு பற்றிய நெருப்புத் துண்டுகள்

நீதியில் மூழ்கி

அறத்தில் ஊறிய சொற்கள்

வெறும் தீர்ப்புகள் மட்டுமேவா ?

தாகித்திருப்போர் நாவில்

குளிர்ந்த துளியாய் இறங்கவே

உன் சொற்கள் முயலட்டும்

தவறிச் சொல்லாத சொல்

பயன் தவறாத சொல்

எத்துணை மகத்தான விதை

பிணைபட்டவனின் கட்டுகள் அறுபடும்

சொற்களைக் கூறுபவன்

விடுதலையின் தலைமகன்

Monday, July 19, 2010

நவீன கவிதையில் திருக்குறள் - வான்சிறப்பு


வான்சிறப்பு

வானம் வள்ளல் என்பதால் வழங்கவில்லை

நாம் அதன் பிள்ளைகள் என்பதால்

பெற்றுக்கொள்கிறோம்

உணவை ஆக்கி உணவும் ஆகும் மழையே !

நீ உயிரை ஆக்கி

உதிரத்தை ஊட்டும் எம் தாயே !

பசிப்பிணி கண்டு

புதுவழிகாணப் புறப்படுவோம் எனத்தானே

நீ பொய்த்துப்போகிறாய் !

எமக்கு ஏர்செய்யத் தெரியும்

மழையே உனக்கு மட்டுமே

நீர் செய்யத் தெரியும்

பெய்து கெடுப்பாய்

பெய்யாமலும் கெடுப்பாய்

கொடுத்துக் கெடுத்தது போதும் என்றா

கெடுத்துக் கொடுக்கிறாய் ?

புல்லிதழ் ஒரு துளி மழையால் துளிர்த்ததென்றால்

மண்ணுயிர்கள் மீது

எத்தனை மாக்கடல்கள் பொழிந்திருக்கும் !

முகில் வற்றும்போது கடல் வற்றும்

கடல் வற்றும் அன்றே

நம் காலம் முற்றும்

உழவுச் சேற்றில்

மிதிபடவே விரும்பும் உன்னை

வழிபடும் தகுதி எமக்குண்டா ?

நீ வானிலிருந்து வந்துகொண்டிருப்பது

எல்லாரும் ஏய்த்துச் சென்ற எம்மை

ஏய்க்க மனமில்லாமல்தானே !

புகைப்போக்கி பொத்துக்கொண்டிருந்தாலும்

பகைப்போக்கில் செல்லாத பண்புருவே

பணிந்தோம் யாம் !

Friday, July 16, 2010

நவீன கவிதையில் திருக்குறள்




நண்பர்களே ! தற்சமயம் நான் திருக்குறளை நவீன கவிதையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதன்மையான காரணம் புதுக்கவிதையில் நீதி போதிக்கும் கவிதைகள் முற்றாகவே இல்லை என்பதாகும். எல்லாக் கீழ்மைகளும் எல்லா மட்டத்திலும் மிகுந்து பெருகிவிட்ட இந்தக் காலத்திற்கு உடனடித் தேவை பழுத்த நீதி நூல்களே. நீதிகளையும் அறத்தையும் போதிப்பதற்குப் போதிய தகுதியுடைய கவிவாணர்களும் இல்லைதான். மேலும் அது அளப்பரிய உழைப்பைக் கோரும் பெரு முயற்சியும் கூட. உரைநடை எழுத்தாளர்கள் இதிகாசங்களையும் புராண பாத்திரங்களையும் தம் வழியில் மறுபடைப்புச் செய்து உலவ விடுவதைப் போல செய்யுள் இலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற தாகம் என் உள்ளத்தை அரித்தது. ஆகவே, முனைந்து இச்செயலில் இறங்கிவிட்டேன்.

ஒவ்வொரு அதிகாரத்தையும் அதன் பாடுபொருள் பிசகாமல் எடுத்துக்கொண்டு, அதிலுள்ள ஒவ்வொரு குறளையும் அதன் சாரம் கெடாமல் - ஒவ்வொரு குறளிலும் குருதியாக ஓடும் சாற்றைச் சிறிதளவேனும் வடித்து இறக்கி எழுதிவருகிறேன். குறள் வெண்பாக்களைப் போலவே இக்கவிதைகளையும் சொற்சிக்கனமாகக் குறுகத் தரித்திருக்கிறேன்.

வள்ளுவர் இயற்றிய குறள்களின் தெய்வீக நறுமணம் தணியாமல் இருப்பதற்காக அக்குறள்களின் தொனி/ஓர் அரிய சொல்/சொற்றொடர்/இணையான பொருள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். குறள்களில் சில இக்காலத்திற்கு ஒவ்வாத பொருள்கொண்டிருக்குமானால் அவற்றின் எதிர்த் திசையில் என் கவிதைகளை அமைப்பேன். தமிழ் அன்பர்கள் எனக்குத் தரும் ஊக்கத்தால் மட்டுமே இவ்வரிய ஆக்கத்தை என்னால் சோர்வுறாமல் முடிக்க முடியும்.

நான் இதை எவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை முழுமையாக என்னால் விளக்கிவிட முடியாது. அதனால், எடுத்துக்காட்டாக ஓர் அதிகாரத்தில் நான் ஆக்கிய கவிதைகளை உங்கள் முன்வைக்கிறேன். எடுத்தவுடனே, அறம்பாடவேண்டாம் என்பதால் இன்பத்துப்பாலில் உள்ள முதல் அதிகாரமான ‘தகையணங்குறுத்தல்’ என்ற அதிகாரத்தின்படி நான் எழுதிய பத்து ‘நவீன குறள்களை’ அன்பர்கள் வாசிப்பதற்காகக் கீழே தந்திருக்கிறேன்.

தகையணங்குறுத்தல்’ என்றால் ‘அணங்கின் தகைமையை வியத்தல்’ என்று அர்த்தம். அதாவது பெண்ணழகை வர்ணித்துப் பேசுதல்.

தகையணங்குறுத்தல்

பெண்ணுருக்கொண்டு கண்விழுந்தாள் அவள்

வண்ணத்திற்கும் வனப்பிற்கும் முன்

வானத்தையும் வையத்தையும் வை

உன்பார்வையின் தாக்குதல்கள் பேரரசின் வல்லாயுதங்கள்

கையளவு வெடிமருந்துடன் எதிர்கொள்ளும் நான்

சிறுபுரட்சிக்குழுவின் எஞ்சிய வீரன்

என்னைக் கொல்லும் எமன் உன் கண்ணுக்குள்

என் நெஞ்சுக்கூட்டில் உயிராகத் துடிக்கிறது

அவன் இரை

கண்டதும் வீழ்த்தும் கண்கள் உனக்கு

இனி என்றென்றும் எழமுடியாத எனக்கு

இது வரலாற்று வீழ்ச்சி

வதம்செய்து கொல்வதில் ஏவுகணையின் கண்கள்

இதம்செய்து தணிப்பதில் பூமழையின் கண்கள்

பார்வையில் எத்தனை பயங்கரம்

புருவத்தை நெறிக்காமலிரு

கற்கண்டுகளாய் நொறுங்குகின்றன

என் இறுதி நம்பிக்கைகள்

உன் இடைமேல் துகிலின் அருமை முன்னம்

என் நிலையும் நேரும்

எத்துணை இழிவு !

சொல்வென்று மல்வென்று வில்வென்றென்ன

உன்பாதம் காண

முதுகு வளைந்து அடிபணிந்தேன்

ஞானத்தினால் தோன்றும் மோனத்தைத் தெரியும்

தெரியுமா

அவள் நாணத்தினால் தோன்றும் ஊனத்தை

பனையும் கமுகும் தலைக்கேறித் தணியும் கள்சொரியும்

பாடைவரை கூடவரும் போதைதரும்

பனிநீர்கோத்த இதழாள் உதிர்த்த கள்



Wednesday, July 14, 2010

தமிழ்த் திரைப்படத் தலைப்புகள்


மதராசபட்டினம் என்கிற சொற்றொடர் மிகச் சரியான பயன்பாடுதானா எனத் தமிழாய்ந்து நின்றேன். நெய்தல் நிலக் கடலூர்களாகப் பொருள் கொள்ளப்படுகிற பட்டணம் என்கிற சொல் மிகச் சரியாக இருக்கக்கூடும். ஆனால், காவிரிப்பூம்பட்டினம் என்னும் பழைய வழக்காக வழங்கிய ஊர் இருப்பதால் அவ்வாறே வழங்கும் மதராசபட்டினத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். என் மனமொழிச்செயலி பட்டினம் என்பதற்குப் பட்டு வகைகள் என்றே முதன்மையாகப் பொருள்படுத்தித் தொலைக்கிறது. மேலும், தமிழ்த் திரைத்துறையில் தமிழறிவுடையோர் அருகிப் போய்விட்ட கோலம் நாமறியாத ஒன்றன்று.

முன்பொரு முறை, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் திரைப்பட அறிவிப்பு ஆயுத எழுத்துஎன்பதாகத் தினத்தந்தியின் வெள்ளிக்கிழமை சினிமாப் பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. மறுநாள் சனிக்கிழமை அத்திரைப்படத்தின் உரையாடல் இயற்றுநர் எழுத்தாளர் சுஜாதாவுடன் அம்பலம் இணைய தளத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். ஆயுத எழுத்து குறித்த பேச்செழுந்தபோது “சார்! ஆயுத எழுத்து-திரைப்படம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டிருப்பவர்களைப் பற்றியதா?என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை. கதை மூன்று இளைஞர்களைப் பற்றியது. தமிழில் அஃ என்ற எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளைப் போல அவர்கள் கதையின் மூன்று பிரதிநிதிகள்என்னும் பொருள்படச் சொன்னார். அதற்கு நான் ‘சார்! அத்திரைப்படத் தலைப்பு ஃ என்கிற எழுத்தைக் குறிக்க வேண்டுமென்றால் அது ஆயுத எழுத்தன்று. ஆய்த எழுத்து !என்றேன். சுஜாதாவிடமிருந்து ஒரு மௌனத்தொடர்தான் பதிலாக வந்தது. பிறகு படத் தலைப்பை ‘ஆய்த எழுத்து என்று மாற்றிக்கொண்டுவிட்டார்கள். தமிழ்த் திரைப்படத் தலைப்பொன்றில் புழங்க நேர்ந்த முறையான தமிழுக்கு நான் இவ்வாறு மறைமுகக் காரணமாயிருந்திருக்கிறேன்.

எப்படியாவது முயன்று இயக்குநராகிய கூட்டம் ஒன்று தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்த்திரையுலகைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டத்திடமிருந்துதான் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் திரையுலகைக் கைப்பற்றிய காலம் துவங்குகிறது. திரைப்படத் தலைப்புகளில் என்னென்ன மாறுபாடு காட்டலாம் என்பது சொந்த மொழியறிவுக்கு எட்டாத நெருக்கடியாக அவர்கள்முன் முளைத்து நின்றது. அப்பொழுதுதான் ஆங்கிலத் தலைப்புகளைப் படங்களுக்குச் சரமாரியாக வைக்கத் துவங்கினார்கள். அந்த வசதியைத் தமிழ்த் தலைப்புகளுக்கே வரிவிலக்கு என்கிற அறிவிப்பின் மூலம் மாநில அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது. உடனே நம் இயக்குநர்கள் கதாநாயகன் பெயரையோ அல்லது அவனது பண்புருவத்தையோ பெயராகச் சூட்ட ஆரம்பித்து காலத்தை ஓட்டுகின்றனர். இன்னொரு கூட்டம் பழைய தலைப்புகளைச் சலித்துக்கொண்டு இருக்கிறது.

தாயின் கருவறையைக் குறிப்பிடும் விதமாக அருமையான தலைப்பு வேண்டும். என்னாலோ உங்களாலோ கற்பனை செய்யவே முடியாத அசத்தலான தலைப்பு அது. அப்படிப்பட்ட தலைப்பு ஒன்றை எம்.ஜி.ஆர் தம் படத்திற்கு வைத்தார். அந்தத் தலைப்புதான் குடியிருந்த கோயில். இன்றைய சூழலில் இப்படி ஒரு தலைப்பை நம்மவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா ?

வல்லின ஒற்று மிகுவதை நம் இயக்குநர்களால் எந்தக் காலத்திலும் சகித்துகொள்ள முடிந்ததில்லை. மேட்டுக்குடி என்று வைக்கவேண்டிய பெயரை மேட்டுகுடி என்று வைப்பார்கள். யாரும் கேட்கமாட்டார்கள்.

ஒற்று எவ்வாறு மிகும் ஏன் மிகாது என்பதற்கு மிக எளிய புரிதல் ஒன்றைச் சொல்கிறேன். ‘தமிழ் படம்என்ற பயன்பாடு ஒற்று மிகாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அது ‘தமிழும் படமும்என்றே பொருள் தரும். உம் என்னும் ஈற்று விகுதியைக் கொண்டு தொகுப்பதால் இதை உம்மைத் தொகை என்பார்கள். ‘தமிழ்ப்படம்என்று ஒற்று மிகுமானால் மட்டுமே ‘தமிழின் படம்அல்லது ‘தமிழில் படம் எனக் கொள்ள முடியும். ‘அங்காடி தெருஎன்றால் அங்காடியும் தெருவும். அங்காடித் தெருஎன்றால்தான் அங்காடிகளால் ஆகிய தெருவாகும். தினத்தந்தி என்பதுதான் தினமும் வரும் தந்தி என்னும் பொருளைத் தரும். இங்கே மதராசபட்டினம் மதராசப்பட்டினம் ஆகாமல் நிற்பதைக் கவனிக்கலாம். தமிழ்ப்படமும் அங்காடித் தெருவும் ஆரம்பக்கட்டக் குழப்பத்திற்குப் பிறகு ஒருவாறு பிழை நீங்கின.

திரைப்படங்களுக்குத் தலைப்பிடுவதும் அத்திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிகரான கலைதான். உலகப் புகழ்பெற்ற இயக்குநர்கள் தத்தம் படங்களுக்குச் சூட்டிய பெயர்களை எல்லாம் மனதில் உருட்டிப் பார்த்தால் நம் இளைய தலைமுறை இயக்குநர்கள் எவ்வளவு ஆழமான பாதாளத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கலைஞன் ஒருவன் தான் இயங்கும் மொழியில் தன் வாழ்நாள் கனவுப் படத்துக்கே இலக்கணப் பிழை நீங்கிய தலைப்பை இடமுடியாதவனாக இருக்கிறான் என்றால் இது எவ்வளவு பெரிய அவமானம் !

பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார், “சார் ! நாங்க சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகிறபோது எங்களுக்கு டிபன் கொடுப்பாங்க சார். அந்த டிபன் எப்படி இருக்கு என்பதை வெச்சே அந்தப் படத்தோட அத்தனை லட்சணத்தையும் – அந்தப் படம் முடியுமா முடியாதா நல்லாருக்குமா நல்லாருக்காதா வெளியாகுமா வெளியாகாதா ஓடுமா ஓடாதா என்று - எங்களால் துல்லியமாகச் சொல்ல முடியும்.

அந்தப் பத்திரிகை நண்பரைப் போலவே ஒரு படத்திற்கு இடப்படும் தலைப்பை வைத்தே அப்பட இயக்குநரின் சகல அம்சங்களையும் நாமும் கணிக்க முடியும். அந்த இயக்குநரின் படைப்பு மனம் இயங்கும் தளம் எது என்கிற முடிவுக்கும் வரலாம். எடுத்துக்காட்டாக இயக்குநர் பாலாவின் தலைப்புகளைப் பாருங்கள் - சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் – இந்தத் தலைப்புகள் ஆத்திரம் பிடித்த அகங்காரமான ஆணாதிக்கமான அடங்குதலுக்குட்படாத ஆதிக்க உணர்வுள்ள பாத்திரங்களின் உலகங்களைச் சுட்டுகின்றன. அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வண்ண வண்ணப் பூக்கள் போன்ற தலைப்புகள் அந்தப் படைப்பாளியின் மனதில் சுழன்றடிக்கும் காட்சிரூபச் சித்திரங்களின் பெரும் அலைவரிசையை முன்வைக்கின்றன. பேரரசுவின் தலைப்புகளிலிருந்து நாம் எந்த முடிவுக்கு வருவது என்று கேட்காதீர்கள்.

தமிழில் தம் திரைப்படங்களுக்கு மிகச் சிறந்த தலைப்புகளைச் சூட்டியவர் என்ற பெருமை இயக்குநர் ஸ்ரீதர் அவர்களையே சேரும். அவருடைய தலைப்புகள் ஒவ்வொன்றையும் தனியே அமர்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்.

கல்யாணப் பரிசு, நெஞ்சிருக்கும் வரை, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை, விடிவெள்ளி, தேன் நிலவு, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, அவளுக்கென்று ஒரு மனம், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், துடிக்கும் கரங்கள், ஓடை நதியாகிறது, ஆலய தீபம், தென்றலே என்னைத் தொடு, நினைவெல்லாம் நித்யா, யாரோ எழுதிய கவிதை, தந்துவிட்டேன் என்னை... என அத்தனை தலைப்புகளிலும் இன்பமும் இனிமையும் கவிதையும் கதையும் ஊறிச் செறிவுற்றிருப்பதை உணரலாம்.