Wednesday, July 27, 2011

என் அமைதியின் மர்மம்


என் வீடு திரும்பல்கள்

சுடுகாட்டு வழிமேற் செல்வது


என் அன்றாட மாலைகளில்

அங்கே

நான் காணத் தவறாது -

கங்குகளாய் மிஞ்சிய தகனத் தீ

புதைக்கக் குழுமிய சிறுகூட்டம்

சிலவேளை கொப்புளங்களாய்ப் புடைத்திருக்கும் தனித்த நிலம்

களைத்த அழுகுரல்

பாலூற்ற வந்து திரும்பும் மௌனக்குழு


அந்தக் காற்றில்

நிரந்தரமாகச் சுழன்றுகொண்டிருக்கும்

ஆத்மாக்களின் கருகிய வாசனையை

என் சுவாசகோசங்களில்

பிதுங்கப் பிதுங்க நிரப்பிக்கொள்வேன்


அம்மண்ணில் இறைந்திருக்கும்

நிறைவேறாத கனவுகளின் தாமிரத் துகள்களை

பாதமெங்கும் படியவிடுவேன்


நிராசைகளின் கடைசிப் பார்வைகள்

அந்திக் கீற்றில் ஏறி

சூரியனை நோக்கிக் கிளம்பும்போது

வழியனுப்புவது நானே


இடைமுறிந்த காதலின் தற்கொலைச் சவம்

அங்கே எரியத் துவங்கியபோது

நான்

ஒரு மயிலைப் போல அழுதேன்


பெருவாழ்வுகளின் முடிவிடம்

இப்படியோர் ஆளற்ற அனாந்தரமா

என்னால் தாளமுடியவில்லை


ஒரு பேயைக் காணமுடிந்தால் நன்றென

இருளில் தாமதித்தும் வருவேன்

பேய்

என்னைப் பத்திரமாக அனுப்பிவைக்கும்

தாயாகிய தருணத்தை

நான் அடைந்துவிட்டிருந்தேன்


இப்பொழுது விளங்கிற்றா

என் அமைதியின் மர்மம் ?

Friday, July 15, 2011

நீதி


இப்பொழுது

ஒருவர் வருவார்


விசாரிப்பார்

நடந்தது என்ன என்று


நாம் விவரிப்போம்

உடைகுரல் இடைமறிக்க

ஒவ்வொன்றாக


அவர் குறுக்கிட்டுக் கேட்பார்

அவரது ஐயங்கள் பெருகிக்கொண்டே போகும்

நாமும் தளராது

ஒருவரை மீறி ஒருவராகப் பகர்வோம்


அவர் நம்மைச் செவிமடுக்க வந்தவரா

அல்லது

நம்மைத் தம் கேள்வியால் ஒடுக்க வந்தவரா

நாமறியோம்


அவர் நம் இரட்சகரா

அல்லது

நம் நிலைகண்டு உள்மகிழ வந்த ரசிகரா

நாமறியோம்


நம்மை ஒரு பொருளாகக் கருதி

நாடிவரும் எவரிடமும்

நாம் நம்மை ஒப்படைத்துவிடுகிறோம்


வந்த வேலையை முடித்து

அவர் திரும்புகிறார்


நாம் காத்திருக்கிறோம்

அவர் பெற்றுத்தரும் தீர்ப்புக்காக

அல்லது

இன்னொருவருக்காக !

Thursday, July 14, 2011

மனைவி, பெண்டாட்டி – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வறுமை ஏழ்மை – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வறுமை என்பது

வறண்ட வற்றிய நிலை.

ஏழ்மை என்பது

என்றும் இருந்திராத இன்மை நிலை.

குளம் கோடைக்காலத்தில் நீரற்று வற்றி வறண்டு இருக்கும்.

அது குளத்தின் வறுமை !

பாலை எல்லாக்காலத்தும் நீர் காணாது நிரந்தரமாக இன்மையில் வாடும்.

அது பாலையின் ஏழ்மை !

எப்போதும் இல்லாத நிலை ஏழ்மை.

இப்போது ஏற்பட்டு விட்ட இல்லாத நிலை வறுமை.

எப்பொழுதும் கொள்கையில்லாத அரசியல் கட்சிகள் ஏழ்மையானவை.

இப்பொழுது பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் வறுமையானவை.

மலர், பூ – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

மலர் மலராக ஆவதற்கு முன்பு இளநிலைகள் சிலவற்றைக் கடந்தாக வேண்டும். அரும்பு, முகை, போது என அவற்றுக்கு வரிசைப்படியான பெயர்கள் உண்டு. மலரான பிறகும் முதுமைப் பெயர்கள் (அலர், வீ) உண்டு. மலர்களுக்கு வாசனையே முதன்மைப் பயன். அவை கனியாகிப் பயன் தரும் தன்மையில் கொஞ்சம் பின் தங்கியே இருப்பன. மலர்ந்து மணம்பரப்பி வாடி உதிர்வதில் முதன்மையானவை. மலர்கள் பெரும்பாலும் பற்றிப் படரும் கொடிகளின் பிள்ளைகள்.

பூ மிக நேரடியான பரிணாமத்தை உடையது. அதீத எளிமையும் அதீத வன்மையும் உடைய தாவர வெளிப்பாடு. கொழிஞ்சிப்பூவும் துளசிப்பூவும் எளிமை வகை. தாழம்பூ, வாழைப்பூ, நாகலிங்கப்பூ, பூசணிப் பூ, சூரியகாந்திப் பூ, ஊமத்தம் பூ ஆகியன வன்மையின் வகை. நறுமணம் பரப்புவது பூக்களின் முதன்மையான நோக்கம் அன்று. பூக்கள் காயாகவும் கனியாகவும் பரிணாமம் எய்துவதில் முன் நிற்பவை. பூக்கள் பெரும்பாலும் மரங்களின் பிள்ளைகள்.வண்ணம், நிறம் – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வண்ணம் தோற்ற நிலை.

நிறம் உள்ளிருந்து இயங்கும் நிலை.

வண்ணம் என்கிற தோற்ற நிலையை வகுத்துத் தருபவர்கள் வண்ணார்கள். நிறம் என்கிற உள்ளிருந்து இயங்கும் நிலையை நிறுவுபவர்கள் சாயமிடுபவர்கள்.

வானத்தின் நீல நிறம் அதன் பகல்வண்ணம். ஆனால், இரவு வானத்தின் கருவண்ணம் அதன் நிரந்தர நிறம் !

வெள்ளை நிறக்கற்றை வானவில்லில் ஏழு வண்ணங்களாகத் தோற்றமளிக்கிறது !


மனைவி, பெண்டாட்டி – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

தன் மனைமாட்சியால் உன்னை மகிழ்விப்பவள் மனைவி.

தன் பெண்மையால் உன்னை ஆட்டுவிப்பவள் பெண்டாட்டி.

Tuesday, July 12, 2011

அங்கே மழை பெய்கிறது !எங்கோ

ஒரு நிலத்தில்

புதைக்கப்பட்ட பிணங்கள்

புரண்டு படுக்கின்றன


அப்பிணங்களைத் தீண்டுகிறது

நிலத்தில் இறங்கிய மழையின்

நீர்க்கால் ஒன்று


புதையுடல்கள்

துயில் கலைந்தனபோல்

உடல் முறித்து எழ முயல்கின்றன


அவற்றின் உதடுகளில்

இன்னும் பதியப்படாத சொற்களும்

உலக மனசாட்சியின் மீது

வாள்செருகும் வினாக்களும்

தொற்றியிருக்கின்றன


தாம் சவமாகும் முன்பே

புதைபட்டதைத்

தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்

கூறியிருக்கின்றன


அவை

தாம் இறக்கவில்லை

தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை

மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன


மழைத்துளியிடம்

எமது மைந்தர்கள் மீது

இதே குளுமையுடனும்

கருணையுடனும்

பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !


Thursday, July 7, 2011

இணையத்தில் உலவும் பூனைகள்

இணையத்தில் பூனைகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையால் அறையலுற்றேன்.

இந்தப் பூனையும்
பால் குடிக்கும் !
ஆனால்
பாத்திரம்
பண்புடையதாக இல்லை.

கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி !
பெண்ணுக்கும் மீசையென்றால்
எண்ணம்தான் பேதைமை கொள்ளுமடி !


நாங்கள் பழ உண்ணிகள் அல்ல
கனிந்து வெடித்திருக்கும்
கனியைக்
கடந்து செல்வோரும் அல்ல


கறிக்கடை ராவுத்தர் : ‘நின்னுக்கோரி வ..ர்..ண..ம்’

அம்மாடி ! எத்தாத் தண்டி வாயி !


நின்றநிலையில்
இது ஒரு வென்றநிலை !


பல்லு இல்லை
பல்லு இல்லை
கள்ளிச்செடி முள்ளு


சிபிஐ !
எனக்கும்
2Gக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை !

ஹி...ஹி...
முகப்புத்தகத்தில்
மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்...

மல்லாக்கப் படுத்து
விட்டத்தப் பாக்குறதுல
என்ன ஒரு சந்தோஷம் !
அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே

இனிமேல்
கொஞ்சம் எடையைக் குறைக்கணும் !

Saturday, July 2, 2011

விலையின் தாழ்நிலை அலகுகள்

http://tamilini.in/

தமிழினி மே-ஜூன் 2011 இதழில் வெளியாகியிருக்கும் என் பத்தி எழுத்தின் மீள்பதிவு (தமிழினி முழு இதழையும் இணையத்தில் மேற்காணும் இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்)

விலையின் தாழ்நிலை அலகுகள்

மகுடேசுவரன் | நகுதற் பொருட்டன்று

ருபத்தைந்து பைசா நாணயத்தைப் பயன்பாட்டிலிருந்து அகற்றியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதன் உண்மையான பொருள் – புழக்கத்தில் இனி இருபத்தைந்து பைசா மடங்குகளில் உள்ள விலைகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதே. அதாவது இருபத்தைந்து பைசா விலையில் – மக்களே, இனி நீங்கள் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. ஒரு மிட்டாய் இருபத்தைந்து பைசா என்றாலும் அதை நீங்கள் இரண்டு அலகுகளாக ஐம்பது பைசாவுக்கு வாங்கியாகவேண்டும். நாணயங்களின் தாழ்நிலை அலகுகள் மெல்ல மெல்ல அகற்றப்படுவது பொருளாதாரப் பணவியலில் முக்கியமான செயல்பாடுதான். இருபத்தைந்து பைசா நாணயம் சுற்றோட்ட அளவில் பேரளவுப் பயன்பாட்டு நாணயமாக இல்லாமல் போய்விட்டதும் அதை அச்சிடுவதற்கு இருபத்தைந்து பைசாவுக்கு மேல் செலவாவதும் நீக்கத்துக்கான காரணியாக இருக்கலாம்.

அடுத்ததாக அகற்றப்படவேண்டிய பைசா அலகு ஐம்பது பைசாதான். அந்த ஐம்பது பைசாவையும் அகற்றிவிட்டால் இந்தியப் பணத்திலிருந்து முற்றாக பைசாக்களை அகற்றியதாக ஆகும். எல்லாம் இனி ஒரு உரூபாய் மற்றும் அதன் மடங்குகளில்தாம் விலைகள் இருந்தாக வேண்டும். இந்த விலை முடுக்கங்களை உலகமயப் பொருளாதாரத்தில் உறுதியாக இருக்கும் அரசுகள் செயல்பாட்டளவில் கட்டாயமாக ஊக்குவித்தே ஆகவேண்டும். மக்கள் கைத்தலத்தில் சேரும் பணம் எல்லாமும் செலவழிக்கப்படுவதுதான் பொருளாதாரச் சுற்றோட்டத்துக்கு அத்தியாவசியம். மக்கள் பணத்தை மீதம் பிடித்துச் சேமிப்பது ஆளும் வர்க்கத்திற்கு உவப்பூட்டும் செய்கையாய் இராது. சேமித்த பணத்தின் மதிப்பைக் காவல் செய்து பணவீக்க விகிதத்திற்கு அருகிலான வட்டியையும் அரசுகள் வழங்கியாகவேண்டும்.

தானியங்கிப் பணமெடுப்பு எந்திரங்கள் (Automated Teller Machines) நிறுவப்பட்டபோதே மக்களைச் செலவாளியாக்கும் வலைக்குள் சிக்கவைத்தாகிவிட்டது. நீங்கள் அந்த எந்திரத்தில் ஓர் ஆயிரம் உரூபாயைப் பெறச் சென்றீர்களானால் உங்கள் கைக்குக் கிடைக்கும் பணத்தாள்கள் ஓர் ஐந்நூறும் ஐந்து நூறு உரூபாயுமாகத்தான் இருக்கும். அல்லது ஒரே ஆயிரம் உரூபாய்த் தாளாகவும் வரலாம். அந்த எந்திரங்களில் நாம் எடுக்கும் ஆயிரம் உரூபாய்த் தொகையை 20 ஐம்பது உரூபாய்த் தாள்களாகப் பெற வழியே இல்லை. அந்த எந்திரங்கள் தம்மளவில் ஐம்பது உரூபாய்ப் பயன்பாட்டை உங்களிடமிருந்து நைச்சியமாகப் பறித்துவிட்டதை நீங்கள் என்றேனும் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய இருபது முப்பது உரூபாய்ச் செலவுகளுக்கெல்லாம் மனங்கோணாமல் நூறு உருபாய் அல்லது ஐந்நூறு உரூபாய்த் தாளை முறிக்கவேண்டும். மீதமாகக் கிடைக்கும் முறிவுச் சில்லறை உங்களைவிட்டு எப்படிச் செலவாகி அகன்றது என்பதை உங்கள் நினைவகத்திலிருந்து சொல்லமுடியுமா ?

மைச்சர் மரியம் பிச்சை சென்ற கார் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். நாடெங்கும் ராஜபாட்டைகளாக அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலைகளில் விபத்து ஏற்படுமானால் அது வெறும் படுகாயங்களோடு முடியும் ஒன்றாக அமைய வாய்ப்பேயில்லை. அவ்விபத்து உயிர்க்காவுகளில்தான் முடியும். அச்சாலைகள் நம் வாகனத்தை குறைந்தது எண்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்வதைத்தான் ஊக்குவிக்கின்றன. பாதுகாப்பான அதிகபட்ச வேகமான அறுபது கிலோமீட்டர் வேகத்தில் அந்தச் சாலைகளில் பயணித்தால் அது நத்தைவேகத்தில் செல்வதைப்போன்ற உணர்வையே தருகிறது. மேலும் அந்தச் சாலைகள் பின்னால் வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளாக்கிவிடும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இந்த நான்குவழிச் சாலைகளில் எதிர்சாரை வாகனங்களினால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால், இணைசாரை வண்டிகள் மோதிக்கொள்ளும் வழியாகிவிட்டது. மெதுவாகச் சென்றால் பின்னால் வரும் வாகனத்திற்குத் தடையாகிறோம். முன்னால் செல்லும் வாகனத்தை ஏதொரு முன்னறிவிப்புமின்றி பின்னால் வரும் வாகனங்கள் காற்றின் வேகத்தில் முந்திச் செல்ல முயல்வதுதான் விபத்துக்கு முக்கியக் காரணம். பின்னால் வரும் வாகனம் முன்வாகனத்தை முந்தும் தருணத்தில் முன்செல்லும் வாகனம் தன் நேர்கோட்டுப் பாதையிலிருந்து விலகி ஒரு பாகையளவு நெருங்கினாலும் மோதல் உறுதி. ஆகவே, அச்சாலைகளில் வாகனமெடுப்போர் பின்வண்டிகளைக் கணித்து ஓட்டுவதில் கவனமாக இருக்கவேண்டும்.

நான் பாடல்கள், வசனம் எழுதிய நஞ்சுபுரம் திரைப்படம் அண்மையில் வெளியானது. பட வர்த்தகம் இலாபகரமாகவே முடிவுற்றதாக விநியோகத் தரப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால், மக்கள் படங்களைப் பார்க்கிறார்கள் என்ற என் நம்பிக்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என் வீட்டு வளாகங்களில் குடியிருப்பவர்கள், என் நண்பர்கள், என் வணிக உறவுகள் என என்னைச் சுற்றி நிச்சயம் இருநூறு மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரைத் தவிர யாரும், நான் கேட்டுக்கொண்டும் கூட, திரையரங்குக்கு வரவில்லை. பெண்கள் திரையரங்குக்குச் செல்வதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். வீட்டுப் பெண்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியே போதும். ஒரு சினிமா டிக்கெட் வாங்கும் காசு இருந்தால் இரண்டு நாள் குழம்புச் செலவுக்காவது ஆகும் என்கிறார்கள். ஆண்களும் பாராமுகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிலும் அக்கறையும் ஆர்வமும் இல்லை. ஒளிப்பதிவுத் துறை நண்பர் ஒருவர் நஞ்சுபுரம் இயக்குநர் சார்லஸின் தொலைபேசி எண் கேட்கிறார். கேமரா நுணுக்கங்கள் இடர்ப்பாடுகள் குறித்துப் பேசவேண்டுமாம். படம் பார்த்தீர்களா என்றால் இல்லை என்கிறார்.

உணர்வுகளுக்கு உணவு நல்கும் கலைகள் சார்ந்த திளைப்புகள் குறைந்து வரும் சமூகத்திடையே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மிழில் எழுதப்பட்ட சிறுகதைகளை, மிக அகன்ற அளவுகோல்களை வைத்து அளந்தாலும் அவசியம் படித்தாகவேண்டியவை என ஓராயிரம் சிறுகதைகளை மட்டுமே கூறவேண்டிவரும் (நாவல்கள் எனில் ஒருநூறு) என என் வலைப்பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அந்த சர்வாதிகார தொனி எனக்கே பிடிக்கவில்லைதான் என்றாலும் அந்த எண்ணிக்கை நிறையப் பேருக்கு பிடித்துப்போய்விட்டது. அவற்றைப் பட்டியலிடு என்றார் நண்பர் ஒருவர். பட்டியல் என்ன பட்டியல் ? அவற்றில் 435 சிறுகதைகளை நீங்கள் வாசித்துக்கொள்ளவும் கூட நான் வழி சொல்கிறேன். http://thoguppukal.wordpress.com என்று ஓர் இணைய வலை உள்ளது. அந்த இணைய தளத்தில் 435 சிறுகதைகளையும் நீங்கள் ‘கிளிக்கிப்’ படிக்கலாம்.

ணிப்பளு குறைந்திருக்கும் சமயத்தில் என்னை நான் பரபரப்பாக வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு பெரிய வேலையில் வலிந்து ஈடுபடுவது வழக்கம். அது அநேகமாக வீடு கட்டுவதாக இருக்கும். சென்ற வருடங்களில் நான் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆழம் கண்டுவிட்டு வந்தேன். கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஒரு வீட்டைக் கட்டத் துவங்கினேன். விலைவாசி உயர்வு என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணரவேண்டுமானல் ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தாலே போதும். இதற்கு முன்பு முடித்த கட்டிடங்களில் கட்டுமானப் பணிகள் முடிவுறும் சமயம் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறு செங்கற்கள் – அவற்றின் உடைவுகளைக் காண முடியும். ஆனால் இந்தக் கட்டிடத்தை முடித்தபோது கடைசியில் பால்காய்ச்சுவதற்கு அடுப்புக்கல்லாக ஒன்றுகூட மிஞ்சவில்லை. செங்கல் அத்தனை விலை. தாராளமாக நூறு கற்களைச் சேர்த்து இறக்க முடியவில்லை. இந்தக் காலகட்டதில்தான் மணல் சூறாவளியொன்று அரசியல் அழுத்தத்தோடு அடித்தது. ஆள் கூலி உயர்வு இருக்கிறதே அது ஒரு தனிக்கதை. வழக்கமாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் உரூபாய் சம்பளமாகிறது என்றால் அங்கே நான்காயிரம் உரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருள்கள் கட்டுமானத்திற்குள் வந்துவிடும். ஆனால், இன்று நான்காயிரம் ஊதியமாகுமிடத்தில் கூட இரண்டாயிரம் உரூபாய்க் கட்டுமானப் பொருள்கள் கட்டுமானத்திற்கு வந்து சேர்வதில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடித் திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு இன்னொரு பொருள் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிப் படுக்கையறைகள் புதிதாக வேண்டும். ஆனால், ஆண்டுக்குப் பத்து இலட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமான விலைகள் கட்டுபடியாகும்படி கட்டுக்குள் இருக்கவேண்டியது கட்டாயம்.

த்திருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலைகளையோ மாதச் சம்பள வேலைகளையோ எதிர்பார்க்காமல் ‘சுயதொழில் செய்’ என்று இளைஞர்களை எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தோம். இன்றைய சூழலில் சுயதொழில் செய்வது தற்கொலை முயற்சியாக அமைந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதுகாறும் நலமாக இயங்கிக்கொண்டிருந்த சிறுதொழிற்கூடங்கள் மின்தடை, மூலப்பொருள் விலையேற்றம், உற்பத்திப்பொருள் விலையிறக்கம் என புரையேறி விக்கலெடுத்து நிற்கின்றன. கொங்குப் பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் முதன்மையான சுயதொழில். அத்தொழிலில் கொள்ளைலாபம் இல்லையென்றாலும் பட்டபாட்டுக்குப் பலனில்லாமல் போனதில்லை. இன்று நூல்விலை சன்னஞ்சன்னமாகக் குறைந்துகொண்டே வருவதில் நெய்த துணிகளுக்கான விலையைக் காணவில்லை. இதுவரை ஈட்டியவை எல்லாம் இந்த ஒரே விலைவீழ்ச்சியில் காணாமல் போய்விடக் கூடிய அவலம் இங்கே நிலவுகிறது. மாத ஊதியக்காரன் காலம் முழுக்கச் சேமித்தவற்றை ஒரு மருத்துவச் செலவு விழுங்கிவிடுவதைப் போல தொழில்செய்பவன் ஈட்டியவை ஒரு பொருளாதாரத் தொய்வில் தொலைந்துபோய்விடுகிறது.

kavimagudeswaran@gmail.com