Tuesday, August 31, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே 4

 • ·         அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசுவது - என்றால் என்ன ?

பேச்சுப் பேச்சாக இருக்க வேண்டும். உன் அண்டர்கிரவுண்ட் மேட்டருக்கு நானும் வரமாட்டேன். என் அண்டர்கிரவுண்ட் மேட்டருக்கு நீயும் வரப்படாது – என்று அர்த்தம்.

 • ·         விஸ்வநாதன் ஆனந்த் கௌரவ டாக்டர் பட்டத்தை மறுத்தது ஏன் ?

முணுமுணுத்தபடி தரப்படுவதைப் பெற்றுக்கொள்ள அவர் அரசியல்வாதி அல்லர். மூளையைப் பிழிந்து விளையாடும் ஆட்டக்காரர்.

 • ·         ஆந்திரத் திரையுலகம் போதையில் புரள்கிறதா ?

மிதமிஞ்சிய பணமும் தகுதிக்கு மீறிய புகழும் சென்றடையும் இடம் போதையுலகம்தானே !

 • ·         மீன் தின்னும்போது நாவில் முள் குத்திய அனுபவம் உண்டா ?

ரத்தத்தின் ருசியறியக் கிடைத்த அபூர்வ தருணமல்லவா அது !

 • ·         பொறியியல் கல்லூரிகளைப் புதிதாகத் துவங்க அனுமதி மறுக்கவேண்டும் என்று பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளாரே...

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகளைத் துவங்க அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அவர்களுள் ஆளும் வர்க்கத்தினர் ஒருவருமே இல்லை என்ற உறுதியைத் தந்துவிட்டு அந்த வேண்டுகோளை விடுக்கலாம்.

 • ·         பாகிஸ்தான் அணியினர் ஆடிய கடந்த 80 ஆட்டங்களையும் சூதாடிகளே முடிவு செய்தனரா ?

நான் கிரிக்கெட் பார்ப்பதை எப்பொழுதோ நிறுத்திவிட்டேன்.

 • ·         அண்மையில் கனவு எதுவும் கண்டீர்களா ?

என் கனவுகள் மிகவும் இரகசியமானவை. உறக்கத்தை ஊடறுக்கும் வல்லமை அவற்றுக்கு இன்னும் ஏற்படவில்லை.

 • ·         தர்மபுரி பேருந்து எரிப்புக்கு நிகரான ஒரு கொடிய நிகழ்வென்று எதைச் சொல்லலாம் ?

மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை.

 • ·         தங்கத்தின் விலை ஒரு பவுன் இருபதாயிரத்தைத் தொட்டால் என்னவாகும் ?

மனைவியை மகிழ்விப்பது எப்படி ? என்ற கவலை நூறு மடங்கு அதிகரிக்கும்.

 • ·         பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் போதுமா ?

அப்படியாவது பணத்தாசை நீங்கி மக்கள் பணி ஆற்றட்டும்.

 • ·         எழுத்தாளர்கள் ஏன் ஈகோ பார்ட்டிகளாகவே இருக்கிறார்கள் ?

நாய்வால் ஏன் வளைந்தே இருக்கிறது ?

 • ·         வழக்கத்திற்கு மாறாக நீங்கள் ஒரு கேள்வியைக் கேளுங்கள்.

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா ? – இதை எழுதியவர் யார் ? (சரியான விடையைப் பின்னூட்டவும்)

 

Tuesday, August 24, 2010

புகை

ஏனென்றே தெரியாமல் இரண்டு பழக்கங்களை என் இளமை முதலே வெறுத்து வந்திருக்கிறேன். புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்.

சிறு வயதில் என் பெற்றோர் எப்படிப் பாலையும் நெய்யையும் ஊட்டி வளர்க்கவில்லையோ, அப்படியே எந்தவொரு ஒழுக்க விதிகளையும் ஊட்டி வளர்க்கவில்லைதான். கிடைத்ததை உண்டு இளமையின் பசியாற்றம் நடந்தது. இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று அக்கம் பக்கம் கற்பித்திருக்கலாம். ஆனாலும் இது எவ்வாறு நேர்ந்தது என்பதை நான் யோசிப்பதுண்டு.

என் தந்தையார் தினமும் புகைத்து எறியும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்து அதன் வடிபஞ்சைப் பிரித்து விளையாடிக் கொண்டிருப்பேன். பிரித்த பஞ்சைக் கூட பற்றவைத்து அபாயமாக விளையாடத் தோன்றியதில்லை. தேர்ந்த இலக்கிய ஆசிரியர்கள் ஒரு விஷயத்தை எப்படி இழை இழையாகப் பிரித்து அபத்தமாக நிறுவுவார்களோ அவ்வாறு இழை இழையாகப் பிரித்துக் கொண்டிருப்பேன். கடைசியில் இரண்டிலும் பிரமாதமான பொருளொன்றும் அகப்படுவதில்லை.

இப்பொழுதுதான் ஆராய்ச்சி முடிவுகளை அறிந்துகொள்வதற்குக் கூட ஆர்வமில்லாமல் இருக்கிறேனே தவிர, சிறு வயதில் எதையும் ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்வதில் மிகுந்த துடிப்போடு இருந்தேன். அந்நோக்கோடு இலங்கை நிலையங்களை இழுத்துப் பிடித்து உள்ளிழுப்பதும் ஊதுவதுமாக ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் வானொலிப் பெட்டியை வீடு அசந்த நேரம் பார்த்து எல்லாவற்றையும் கழற்றிப் பார்த்துவிடுவேன்.

ஓயாது பினாத்திக்கொண்டிருக்கும் கட்டைக் குரல் அறிவிப்பாளர்கள் உள்ளே அகப்பட்டதே இல்லை. அவர்கள் சாமர்த்தியமாக பேட்டரி செல்லுக்குள் போய் ஒளிந்ததுகொள்வதற்கு சாத்தியம் இருப்பதால் அதையும் உடைத்துப் பார்ப்பேன். அதில் வெறும் கரித்துண்டும் டீத்தூளும்தான் இருந்தன. திறமையான அறிவிப்பாளர்கள் ஒளிந்து விளையாடும் ஜாம்பவான்களாகவும் இருந்ததாலோ என்னவோ எங்கும் அகப்படவில்லை. என் முதுகுத் தோல் உரிந்த காலத்திற்குப் பிறகு  அவர்கள் உயரமான இடத்தில் வைக்கப்பட்ட டிரான்ஸிஸ்டரில் இருந்தவண்ணம் அறிவிக்கலானார்கள். 


எதை வாங்கினாலும் வைத்திருந்தாலும் எனக்குத் தந்துவிடும் தந்தையார் இந்தக் குழலை மட்டும் தர மறுத்துவிட்டுத் தான் மட்டுமே ஒய்யாரமாக அமர்ந்து உறிந்து ஊதிக்கொண்டிருப்பார். அது எனக்கு அவசியம் ஆய்ந்தறிய வேண்டிய பொருளாக மாறிவிட்டது. தருணம் பார்த்திருந்தேன்.

யாருமற்ற ஒரு பொழுதில் அவர் விட்டுச் சென்ற சிகரெட் பெட்டியைக் கைப்பற்றி ஓரமாகப் போய் அமர்ந்தேன். பெட்டியின் உள்தட்டைப் பிதுக்கி ஒரு சிகரெட்டை எடுத்து இரண்டு கத்திரி விரல்களுக்கு இடையில் வைத்தேன். தகப்பனாரின் விரல்களுக்கு இடையில் நன்கு குறுக்காக அமரும் சிகரெட் என் விரல்களுக்கிடையில் மரியாதையாக அமராமல் ஆட்டுக் காதுபோல் ஏதாவது ஒரு பக்கம் சரிந்தது. நான் எடுத்துக் கொண்ட ஆய்வு நோக்கிற்கு இது அப்பாற்பட்டது என்பதால் இதில் என் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிராமல் உதட்டில் வைத்தேன்.

தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தேன். பற்றிய தீக்குச்சியின் ஜுவாலை உதட்டருகில் வந்தவுடன் உயரம் குறைந்து நசுங்கித் தன் ஜீவனை விட்டது. உள்ளங்கைக் குவியலுக்குள் சுடரைக் காப்பாற்றி சிகரெட் முனைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த என் முயற்சிக் காலத்தில் டவுன் பஸ் ஒன்று இரண்டு ஊர்களுக்கிடையில் இரண்டுதரம் போய்வந்துவிட்டது.

என் அடுத்தடுத்த முயற்சிகளும் தீக்குச்சி விரயங்களில் முடிந்தன. சரியாகப் பற்றிய தீயைக் கொண்டுபோய் சிகரெட் முனைக்கு அருகில் நிறுத்தும்போது எனது கண்பார்வை தியான அப்பியாசத்தில் ஒரு புள்ளியில் குவிவதுபோல் ஒருங்கு குவிந்து மாறுகண்ணாகிக் கொண்டிருந்தது. இடையில் சிகரெட்டின் வாய்க்குள் செருகியிருந்த முனை எச்சிலில் ஊறி சோறாகியிருந்தது. எனது கைத்திறனின் மீது மேலும் நம்பிக்கை கொள்ளாமல் சிகரெட்டைத் தரையில் வைத்துப் பற்றவைத்து உதட்டில் வைத்துக்கொண்டேன்.

இந்நிகழ்ச்சி, 'உதட்டிலுள்ள சிகரெட்டுக்கு தீக்குச்சியை உரசி நெருப்புயிர் ஊட்டுவது' ஆய கலைகளில் அறுபத்து நான்கிற்கு அடுத்ததாகக் கொள்ளத்தக்கது என்ற என் முதல் ஆய்வு முடிவிற்கு இட்டுச் சென்றது. 

பற்றிய சிகரெட்டை வாயில் வைத்து அளவாக இழுக்காமல் சூப்பை உறிஞ்சுவதுபோல் முழு நுரையீரலும் நிரம்புமளவு இழுத்ததுத் தொலைத்தேன். அப்புறமென்ன ? தலைக்குள் ஆயிரம் பட்டாசுகள் வெடித்தன. அத்தனை புகையும் குறுக்குச் சுற்றில் பாய்ந்து நுரையீரலைப் புரட்டிப் போட்டு நேராக கபாலத்தின் உச்சிக்குழி வழியே பிதுங்கியது. மூக்கின் சன்னச் சுவர்கள் எல்லாம் கொள்ளியை வைத்துக் கருக்கியதுபோல் எரிந்தன. காதுச் சவ்வு கிழிந்ததுபோல் செவிநுகர்திறன் ஒரு நாழிகை மந்தமாகியிருந்தது. கண்கள் பழமாகச் சிவந்து பொலபொலவென்று நீராகக் கொட்டின. வயிற்றுக்குடல்கள் உள்ளிருப்பதை வெளியேற்றவா என்றன.

இயல்புக்கு வந்து சேர்ந்ததும் எனது ஆராய்ச்சிப் பொருள்களைத் தலையைச் சுற்றித் தூக்கி எறிந்தேன். அடுத்த இரண்டு தினங்கள் தின்ன சோற்றுக்கு ருசி தெரியாமல் தவித்தேன். இப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு எவனாவது அந்த சனியனைத் தொடுவானா ?

நான் தொடவில்லை.

பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம் வந்தது ஞாபகமிருக்கும். சட்டம் வந்த ஜோரில் பேருந்து நிறுத்தங்களில் வயிறெரிந்து புகைந்துகொண்டிருந்தவனையும் உள்ளே தள்ளி அழகு பார்த்தார்கள். என்போன்றவர்கள் அவசர அவசரமாக 'அப்படிப்போடு சபாசு' போட்டோம். போகப் போக பழைய குருடி கதவைத் திறடி கதையாக முகத்தருகில் வந்து ஊதிச்செல்பவனிடம் கூட நெருப்பு கேட்குமளவுக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் சபாசுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டோம். 

ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திரையரங்கின் இடைவேளையில் வெளிப்படும் நபர்களை மெனக்கெட்டு ஊன்றிக் கவனித்தேன். எல்லாரும் எடிட்டிங், ஒளிப்பதிவுக் கோணங்கள் வரை அலசிப் பேசுகிறார்கள். மற்றும் புகைக்கிறார்கள்.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியவன் நிச்சயம் புகைக்கிறான். புகைக்கும் பழக்கமுள்ளவன் கழிப்பறையில் நுழையும் ஒவ்வொரு தடவையும்

கழிகிறானோ இல்லையோ ஆழ்ந்து புகைக்கிறான். யோசிக்கிறவன் புகைக்கிறான். பேசிக்கொள்பவர்கள் புகைக்கிறார்கள். இதை வாசிக்கிற நீங்கள் கூட புகைத்துக் கொண்டிருக்கலாம்.

பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல் விட்டேற்றியாகப் புகைப்பவன் தன் வாயிலிருந்து வெளியேறும் புகை நேரடியாக ஒரு குழாய் மூலம் வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக எண்ணுகிறான். அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப் பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும் பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது என்று எண்ணுவதே இல்லை.

தோரணையாகப் புகைத்து சுருள் சுருளாகப் புகை விடுபவனையே பெண்கள் விரும்புவதாக ஐதீகம் நிலவுகிறது. அவன் புகையை மட்டுமல்ல அவனை விரும்பியதும் கூட எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைப் போகப் போக புரிந்துகொண்டுவிடுகிறார்கள்.

என் நண்பன் ஒருவனின் மனைவிக்குக் காலை எழுந்ததும் முதல் வேலை கோலம் போடுவதோ வாயில் தெளிப்பதோ அல்ல. இரண்டு சிகரெட்டுகளையும் தீப்பெட்டியையும் எடுத்துச் சென்று கழிப்பறையில் வைத்துவிடவேண்டும். அதிகாலையில் சிகரெட் இல்லாவிட்டால் அப்பெண்ணே முக்குக் கடைக்குப் போய் வாங்கி வந்து வைத்தாக வேண்டும். தவறினால் அவன் அன்று முழுப்பொழுதும் குதி குதியென்று குதித்துக் கொண்டே இருப்பான். அதுவும் அப்பெண்ணை மல்லாத்திப் போட்டு நெஞ்சில் குதிப்பான். அவன் புகைக்கும் அழகில் மயங்கித் திருமணம் செய்துகொண்டவள் அவள். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அவன் செயலற்று இரும மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று நுரையீரலைச் சுரண்டி அரைக்கிலோ நிக்கோடின் களிம்பை எடுத்திருக்கிறார்கள்.

அன்னார் குணமாகி வந்தும் பழக்கத்தை விட முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறார். 

 புகைப்பதால்தான் நோவும் சாவும் வருகிறதா ? மனிதராகப் பிறந்த யாரும் சாகத்தான் வேண்டும். அது முதுமையினால் மட்டுமன்றே ! நோவினால் விபத்தினால் கூடத்தானே ! நாம் உண்ணும் உணவில் எத்தனை கேடுகள் உள்ளன தெரியுமா ?  வளிமண்டலத்தை என் சிறுவாய்ப்புகை மாசுபடுத்திவிடுமா ?  தொழிற்சாலைகளின் புகைப்போக்கிகள் வெளியிடும் நஞ்சுகள் கொஞ்சமா ?' என்று வாதிடுபவர்கள் உள்ளனர். அவர்கள் எதைச் சொன்னாலும் குதர்க்கமாக எதிர்த்தடிக்கும் கலகக்காரர்கள். அவர்களிடம் தர்க்கவியல் சுவாரஸியங்கள் உண்டே தவிர பின்பற்றக் கூடிய நல்லுபதேசங்கள் ஒன்றுமில்லை.

அதனால் புகை விடுவதை விடுக ! நெடுநாள் வாழ்க !

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல - தலை வலிக்கிறது


நான் மகான் அல்ல திரைப்படத்தைப் பார்க்கவேண்டியதில்லை என்பதில் மிக உறுதியாகத்தான் இருந்தேன். கடந்த பதிவில் அதைப் பற்றிய கேள்வியை எழுப்பியும் இருந்தேன். ஆனாலும் என் விதி படத்தைப் பார்க்க வைத்துவிட்டது. சனிக்கிழமை என் அலுவலக மின் துண்டிப்பு நேரம் மாற்றப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் திரையரங்கை நாடவேண்டியதாகிவிட்டது. படத்தைப் பார்த்து வைப்பதால் ஒன்றும் கெட்டுப் போய்விடப் போவதில்லை.

மேலும், என் வலைப்பக்கத்தில் திரைவிமர்சனம் செய்வதில்லை என்றும் இருந்தேன். ஆனால், சில திரைப்படங்களைச் சார்ந்து கறாராகச் சொல்வதற்கு இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

எண்பதுகளில் வெளிவந்த ரஜினி படங்களில் அதிக வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்த படங்கள் நான் மகான் அல்ல-வும் நான் சிகப்பு மனிதனும். இதில் நான் சிகப்பு மனிதன் - காரண காரியத் தொடர்புகள் விறுவிறுப்பாகப் புனையப்பட்டு வர்த்தகத் திரைப்பட நேர்த்திகள் ஓரளவுக்கு முழுமை செய்யப்பட்டு வெற்றி பெற்ற படம். தேசத்தின் சட்ட ஒழுங்கு பரிபாலிக்கப்படுவதில் உள்ள நடைமுறைக் கீழ்மைகளை, நீதிமன்ற விசாரணை அலங்கோலங்களை காட்சிப்படுத்தியிருந்த படம் அது. அந்த அளவிற்குக் கூட இல்லாமல் - வெறும் குரூரமான வன்முறைக் காட்சிகளும், ரசிகனின் டுபுக்கு ரசனைக்குள் பழியுணர்ச்சியைத் தூண்டி அதற்குத் தீனியிடுவதற்காக வரிசையாகப் பழி தீர்க்கும் காட்சிகளைக் கொண்டும் எடுக்கப்பட்ட படம் பழைய நான் மகான் அல்ல.

புதிதாக ஒரு தலைப்பைக் கூடச் சூட்டத் தெரியாத அல்லது சூட்டுவதற்கு முன்வராத ஒரு படக்குழு என்ன பெரிதாய்ப் புதிது செய்துவிடும் என்கிற அடிப்படைக் கேள்வி இங்கே யாருக்கேனும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இங்கே வலைப்பூக்களில் விமர்சனம் எழுதுவோரில் பலர்  பின்வாசல் வழியாக நுழைந்து யாராவது ஒரு திரைத்துறைப் புள்ளியிடம் தலையைச் சொரிந்து நிற்பவராக இருப்பது காரணமாக இருக்கலாம். இதே இயக்குநர் தம் முந்தைய படமான வெண்ணிலா கபடி குழுவை எடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்பதற்கு இந்தப் படத்தில் ஏராளமான தடயங்கள் காணக்கிடைக்கின்றன.

கார்த்தி முதன்மைப் பாத்திரத்தில் தோன்றுகிறார். பையா படத்தில் அணிந்திருந்த அதே உடைகளைக் கழற்றாமல் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் என நினைக்கிறேன். எப்பொழுதும் குறுகுறுப்பான வசனங்களைப் பேசியபடி காட்சிகளில் தென்படுகிறார். பையா படத்தின் பேன்ட் ஷர்ட்டுகளுக்குப் பதிலாக வேறு உடை தரப்பட்டால் ஆள் இதேயளவுக்கு எடுபடுவாரா என்பது கேள்விக்குறியே. அவர் செய்யும் வசன சில்மிஷங்கள் வழியாக படத்தின் சாதாரணக் காட்சிகளையும் கொஞ்சம் நிமிர்த்திவைக்கிறார். விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவாவைவிட - ஆள் வசனச் சொல் விடுவிப்பில் நூதனம் காட்டுகிறார். ஆனால், அதுவே கூடுதலாகப் போய்விட்டது. இதே முறைமை இன்னொரு படத்திலும் தொடர்ந்தால் கார்த்தி தனுஷைப் போல சந்தையிழப்பார். மேலும் படம் தொடர்ந்து கார்த்தியைச் சுற்றியே வருவதும் அலுப்பைத் தருகிறது. எந்தக் காட்சியும் கார்த்தியை விடுவிக்காமல் அள்ளி அணைத்துச் செல்கிறது. முதல் காட்சியில் கார்த்தியைக் கண்டதும் கொடுத்த காசுக்கு மேலாகக் கூவிய இளசுகள் கூட்டம் போகப் போக குரலடங்குகிறது.

நாயகிக்கு நடிக்கவேண்டிய வேலை இருக்கவில்லை. அதற்கான காட்சிகளும் இல்லை.

தோன்றுவதன் வழிப்பட்ட மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்துவதில் ரவிபிரகாஷ் பெயரைத் தட்டிப் போகிறார். ஒரு காலத்தில் முக்கிக் கத்தி விஜயகுமார் ஏற்றுச் செய்த தந்தை வேடங்களுக்கு எதிரான வேடங்களை அவர் செய்துவருவது தெரிகிறது. உப வேடங்களில் தோன்றும் சிலரும் வேடப் பொருத்தம் உடையவர்களே.

நிறைய டிவிடிக்களைப் பார்த்துப் பார்த்து உட்கார்ந்து யோசித்துச் செய்யப்பட்ட செயற்கையான கதை இது என்பதில் எனக்கு ஐயமில்லை.

நின்றால் கொலை நடந்தால் கொலை என்று சரமாரியாக நடந்துகொண்டிருக்கும் களத்தில் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது காட்டப்படவேயில்லை. குறைந்தபட்சம் அவர்கள் உத்தரத்தைப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார்கள் என்றாவது ஒரு காட்சியை அமைத்திருக்கலாம்.

இப்பொழுது தமிழ்த் திரை இயக்குநர்களை ஆட்டிப் படைக்கும் லத்தீன் அமெரிக்கப் படங்களின் சொல்லல் மற்றும் ஆக்கல் முறைகளை அப்படியே கவ்விச் செய்த கவிச்சை ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. சுயமாகச் சிந்திக்கவும் என்று இன்னொருவர் சொல்லவா முடியும் ? அது சுயமாக விளைய வேண்டும்.

குத்துப் பாட்டு, குடும்பப் பாசப் பாட்டு, பிளாஷ் பேக் கொடுமை, தனி காமெடி ட்ராக் அலப்பறை, கடைசியில் 4 நண்பர்களின் உதவி என்று நிறைய விவகாரங்களில் நாம் தப்பிவிடுகிறோம்.

தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த டிரேடர்களின் கையில் படம் சிக்கிவிட்டால் வெற்றி என்று தெரிகிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைத்துறை, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் ஊடகம் – தமிழ்த் திரையுலகம். அது எப்படி ஒரு குடும்பவலைக்குள் அடைபட்டு நிற்கிறது என்கிற கேள்வி எமக்குள் எழாமல் இல்லை. விடை தெரிந்தவர்கள் கூறுக.

ஒளிப்பதிவு, பின்னணி ஒலியமைப்பு, படத்தொகுப்பு மூன்றையும் குறை சொல்வதற்கில்லை. என்னதான் எல்லாம் சரியாக இருந்தாலும் வெளியே வந்தால் எதற்காகத் தலை வலிக்கிறது என்பதுதான் தெரியவில்லை. 

Friday, August 20, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே 3

·         இலங்கைப் பந்து வீச்சாளர் ரந்தீவ் இந்தியாவிற்கெதிரான ஆட்டத்தில் வேண்டுமென்றே நோபால் போட்டதற்கு ஊடகங்கள் லபோ திபோ என்று அங்கலாய்க்கின்றனவே...

மக்கள் மீது குண்டு போட்டால் ஊடகங்கள் ஒருவேளை மௌனம் காத்திருக்கும். நோபால் போட்டால் விட்டுவிடுமா ?

·         சத்யம் ராஜூவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதே...

ஊரார் பணத்தை உருக்கி உள்ளுக்குத் தள்ளிக்கொண்டிருப்பவர் மத்தியில் உள்ளதை உருப்பெருக்கி ஊருக்குக் காட்டியவருக்கு ஜாமீன் கிடைக்க இத்தனை நாளானதுதான் ஆச்சரியம்.

·         தினத்தந்தி வெள்ளிக்கிழமை பேப்பரில் என்ன விஷேசம் ?

25 சினிமா விளம்பரங்கள் 12 ராசி பலன்கள்

·         நாநோ கார் வாங்கலாமா ?

நோநோ

·         காமன்வெல்த் போட்டித் தொடர்களுக்கு விளம்பரங்கள் குறைகின்றனவாமே...

அதுதான் பெரிய விளம்பரம் கிடைத்துவிட்டதே !

·         நான் மகான் அல்ல படம் பார்ப்பீர்களா ?

நான் மகான் இல்லை

·         சேலத்திற்கு முதலமைச்சர் இன்று வருகிறாராமே..!

அம்மா அடுத்து சேலத்தில் கால் வைப்பதற்குள் ஐயா முந்திக்கொண்டுவிட்டார்

·         பாராளுமன்றக் கட்டிடம் ஒழுகுகிறதாமே...!

கூரையோடு அடித்தளத்தையும் பழுது பார்க்கவேண்டிய கட்டிடம்

·         ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் 8000 பேர் வெளியேறவிருக்கிறார்களாமே...!

வந்த வேலை முடிஞ்சுபோச்சு. வாங்க போவோம்.

·         கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றார்களே...!

அந்த எண்ணிக்கை - வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதைத் தெரிவிக்கும் முதல் எச்சரிக்கை மணி

·         இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு மோசடி ஆசாமியிடம் நிலம் என்று ஏமாந்து கடல்பரப்பை விலைக்கு வாங்கியிருக்கிறதாமே...!

அப்படியானால் IOC கடனும் வாங்குகிறது கடலும் வாங்குகிறதா ?

·         திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தால் தவறாமல் செல்லவேண்டுமா ?

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகளில் அதுவும் ஒன்று. சரியான நேரத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி அங்கு உலவும் முகங்கள் ஒவ்வொன்றையும் படித்து வரவேண்டும்.

Wednesday, August 18, 2010

அரங்கு சூழ் உலகம்

கிராமங்களிலும் நகரங்களிலும் ஏன் பெருநகரங்களிலும் கூட சினிமா பார்க்கக் கிளம்புவது குடும்பத்திற்குள் மிகுந்த தடபுடலை, உடனடி ஆனந்தத்தை இன்றளவிலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றும் ஏற்படுகிறதா என்று ஒரு கால்புள்ளியை உங்களைப் போலவே நானும் வைத்திருக்கிறேன்தான்.

முன்பதிவு செய்யப்பட்ட புதுப்படச் சீட்டைக் காட்டிக்காட்டியே எத்தனையோ காரியவாதிகள் தத்தம் மணவாட்டிகளைத் தாம் அமைத்துக்கொடுத்த கையாலாகாத வாழ்க்கையின் அதிருப்தியிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்திருக்கிறார்கள். அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி அடுத்தபடியாக ஆளில்லாத அரங்கின் மென்னிருளில் எக்கச்சக்கமாக நோக்கு நோக்கு என்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

தனது கல்லூரி நாள்களில் வெளியான அத்தனை படங்களையும் கல்லூரி மாணவன் கண்ணுற்றுவிடுகிறான். குழந்தைகள் அந்தந்த காலத்தின் இரண்டு மாச ஆயுளுடைய குத்துப் பாடலை மழலை குழைத்து உளறுவதன் மூலம் பெற்றோர்களை ஈன்றபொழுதின் பெரிதுவக்க வைக்கின்றன.

ஆதிக்கத் தோரணை மிகுந்த மிடுக்கான ஒரு பெருங்கட்டிடம் சிறுகுடில் தமிழனைத் தன்னுள் புக அனுமதித்ததும் அங்கே அவன் அமர சாய்மானம் உள்ள ஓர் இருக்கை தரப்பட்டதும் திரையரங்குகளால் இயன்ற சரித்திர முக்கியத்துவமான நிகழ்வுகளாகும். குனியாமல் நுழைய முடியாத குடிசைக்குள்ளிருந்து வருபவனை அண்ணாந்து 
பார்த்தால் கழுத்து சுளுக்கும் ஓர் ஆடம்பர மாடம் ஏற்றுக்கொண்டது அங்குதான். 

அன்று தொடங்கிய பாசப்பிணைப்பு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பழைய அரங்கின் முன்பு நின்று தீப்பிடித்தெரிந்த வீட்டைப் பார்ப்பதுபோல் ஏக்கமாகப் பார்த்தழுவதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது. 

படியேறுவதை வைத்து ஆரோக்கியத்தை அளக்கமுடிவதுபோல திரையரங்குகளின் எண்ணிக்கையைக்கொண்டு அந்த ஊரின் கனபரிமாணத்தைக் கணிக்க முடியும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இரண்டே இரண்டுக்குத்தாம் லேண்ட்மார்க்காகும் அருகதை உண்டு. ஒன்று திரையரங்குகள். மற்றொன்று என்ன ? ஆம். அதேதான். சிலைகள் !  

திரையரங்குகளுக்கு வைக்கப்படும் பெயர்களைக்கொண்டும் பேராராய்ச்சி நடத்தலாம். மானாமதுரை சீனியப்பா பொள்ளாச்சி நல்லப்பா உடுமலை கல்பனா ஊட்டி லிபர்ட்டி வடபழனி எஸ். எஸ். ஆர். பங்கஜம் திருப்பூர் டைமண்ட் திருச்செங்கோடு பிளவர்கிங். 

இவற்றில் தொகுப்பரங்குகள் சூட்டியிருக்கும் ஈற்று இயைபான பெயர்கள் இன்னும் சுவாரசியமானவை. சினிப்ரியா மினிப்ரியா சுகப்பிரியா. கங்கா யமுனா காவேரி. சாந்தம் சத்யம் சங்கம். கொங்கு நாட்டில் நால்வரில் ஒருவனுக்குப் பழனிசாமி என்ற நாமகரணம்போல பெரும்பாலான ஊர்களில் ஏதாவதோர் அரங்கு சென்ட்ரல் அலங்கார்.    
அநேகமாக நாம் அனைவரும் சுமார் நூற்றுக்கும் குறைவில்லாத அரங்குகளுக்குள் புகுந்து வெளியேறியிருப்போம். யாராவது இத்தொகை தன்னைப்பொறுத்தவரை குறைவென்று கையுயர்த்துவாரேல் அவர் திரைமயக்கால் பாழடையாத மகாத்மாவாக இருப்பார். அல்லது ஒரே அரங்கில் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்தவராக இருப்பார். இந்த இடத்தில் அவரைப்பற்றிய அனுமானமொன்றை சத்தியம் செய்து சொல்லமுடியும். அவர் ஒத்தைப் பொண்டாட்டிக்காரர்.

சினிமாவுக்குப் போன அனுபவங்களை எண்ணிப்பார்த்தால் ரசமான ஞாபகங்கள் குமிழியிடுகின்றன. வெங்கச்சங்கல்லை வாயில் போட்டு மென்றால் எழும் ஒலிகளைத் தம் பெயர்களாகக் கொண்ட சர்வதேச இயக்குநர்களின் படங்களை நான் அப்பொழுது பார்த்ததில்லை. இப்பொழுதும் கூட அதிகம் பார்ப்பதில்லை. 

ஏதாவதொரு திரைப்படச் சங்கத்தில் சேர்ந்து ரசனையை உயர்த்திக்கொள்ளலாம் என்று முயன்றால் அக்குழுக்கள் தமது பட்டிக்குள் அடங்கிய ஆடாக இருக்க நிர்ப்பந்திக்கின்றன. வெளியே மேயப்போகாமல் என்னால் இருக்க ஏலாது. அதனால் என்னுடைய இளவயது காட்சியின்பத்தின் கர்த்தாக்கள் உள்ளூர் முத்துராமன்கள் மற்றும் விஜயன்களே. அரங்குகள் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் அல்ல. உள்ளூர் கொட்டகைகளே.

எண்பதுகள் திரையரங்குகளின் பொற்காலங்கள். ஊருக்கு ஒரு படம் ஓர் அரங்கில் மட்டுமே நின்று நிதானமாக எழுபது நாள் ஓடும். தீபாவளி பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு ஆகஸ்டு 15 ஆகிய சமயங்களில் இருபத்தாறு படங்கள் வெளியாகும். பிரேமபாசம் திறமை விடிஞ்சா கல்யாணம் படிக்காதவன் ஊமை விழிகள் என்னும் அந்தப் பட்டியலிலிருந்து உவப்பான ஒரு படத்தைத் தேர்வு செய்யவேண்டும். 


இப்பொழுது முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல் சோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு இந்தப் படத்திலா சிரிப்புக்கு கவுண்டமணியா(இந்த சென்னைம்மா நகரத்திலே) ஜனகராஜா(தங்கச்சீயெ நாய் கட்சிட்சீப்பா) ஜோடி யாரு கடைசிப் பாட்டு சிலுக்குக்கா அனுராதாவுக்கா சீட்டுக் கிடைத்தால் படிக்காதவன் இல்லையேல் விடிஞ்சா கல்யாணம். ஒரு சினிமாவுக்குக் கிளம்புவதற்குள் எத்தனை சிந்தனைச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் !

இப்படிப்பட்ட முன்னாராய்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆய்வு முடிவுகளோடு எத்தகைய திரையரங்குளை நாடி எவ்வாறு ஒரு படத்தைப் பார்த்தேன் என்பதை இழைபிசகாமல் ஞாபகத்தில் திருப்பிப் பார்த்தேன். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம், கொஞ்சம் ஏழ்மை, கொஞ்சம் கலை தாகம், கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் நகைச்சுவை என அந்த அனுபவங்களின் பொதுத்தன்மை உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம் என்பதால் இதைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டுதலுற்றேன்.

அரங்கில் நுழைந்ததும் உடைசல் இல்லாத முன் தலை மறைக்காத கைப்பிடி ஆடாத நடுமையமான ஆசனம் தேர்ந்து உட்கார்வேன். கீழ்வகுப்புகளில் அமர்ந்து படம் பார்ப்பவர்கள் குருவிக்கூட்டைப் பார்ப்பதுபோல் அண்ணாந்து பார்க்கவேண்டியிருக்கும். இந்தக் கஷ்டத்தில் திரைக்கு மையமாக அமராமல் ஓரஞ்சாரமாக அமர்ந்துவிட்டால் அவ்வளவுதான் கதாபாத்திரங்கள் எல்லாம் வற்றி ஒடுங்கிக் குச்சியாகத் தெரிவார்கள். மொத்தப் படத்தையும் எங்கோ இருந்து எட்டிப்பார்த்த கதையாகிவிடும்.

பொருளாதாரமே என் திரைப்படங்களை நான் கீழ்வகுப்புகளில் அமர்ந்து பார்க்கக்காரணம் என்றாலும் திரைக்கு அருகிலிருந்து பார்ப்பதில்தான் எனக்கு அலாதி விருப்பம். எதற்கு எச்சுக்காசு கொடுத்து எட்ட அமர்ந்திருக்கிறார்கள் என்னும் ஐயத்திற்கு வெகுநாள் விடைதெரியாமல் விழித்திருக்கிறேன். சில நாய்கள் கிணற்றுத் தண்ணீரை எட்டிப்பார்க்காது. இறங்கி நக்கிப் பார்க்கும். 

இப்பொழுதுவரும் அகல்திரைப்படங்களை கீழ்வகுப்பின் நடுமையத்தில் அமர்ந்தாலும் பாடில்லாமல் பார்க்க முடியாது. இடதுபுறத்தில் ஒருவர் வசனம் பேசும்பொழுது இடதுபுறம் திரும்பிப் பார்க்க வேண்டும். வலதுபுறத்தில் பேசும்பொழுது வலதுபுறம் திரும்பிப் பார்க்க வேண்டும். விறுவிறுப்பான டென்னிஸ் போட்டியைப் பக்கவாட்டில் அமர்ந்துள்ள ரசிகர் எப்படி இடவலம் வல இடம் என்று கழுத்தைத் திருப்போ திருப்பென்று திருப்பிப் பார்ப்பாரோ அப்படி இருக்கும் அது. இருபுறத்திலும் பேசிக்கொண்டால் யாராவது ஒருவரைத்தான் பார்க்க இயலும். காதல் காட்சிகளில் மட்டும் இந்தத் தொந்தரவு இருக்காது. யார் யாருடன் பேசினாலும் வைத்த கண் வாங்காமல் நான் பார்த்துக்கொண்டிருப்பது நாயகியைத்தானே !

என் இருக்கையையடுத்து வந்தமர்பவனிடமிருந்து தொடங்குகிறது பிரச்சினை. வகுப்பின் அத்தனை இருக்கைகளும் காலியாக இருந்த போதிலும் அவன் என் இருக்கைக்கு அடுத்துள்ள இருக்கைக்கே வந்தமர்வான். புது ஆசாமி மட்டும் வகுப்பின் ஓரத்தில் அமர்ந்து குச்சித் தொடைகளைப் பார்க்கத் துணிவானா ? தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு நாங்களிருவரும் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையும் நட்பு பெருகிக் கைத்தலம் பற்றி அமர்ந்திருப்பவர்களைப் போலத் தோற்ற மயக்கம் ஏற்படுத்துவோம். இருவருக்கும் பொதுவாக அமையும் கைப்பிடியால் அது சாத்தியம்தான். FCFS முறைப்படி அந்தக் கைப்பிடியை நான் மட்டுமே பற்றிக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருப்பதான பாத்தியதையில் இருப்பேன். கொஞ்சம் ஏமாந்து பெண்வகுப்புப் பக்கம் திரும்பும்போது புது ஆசாமி கைப்பிடியைக் கைப்பற்றிக்கொள்வான். அவன் மட்டும் என்ன மகரிஷியா ? அவனது முறையில் பெண் வகுப்புப் பக்கம் கவனமுறும்போது நான் கைப்பிடியை ஆக்கிரமித்து விடுவேன்.

இனி மெதுவாக அரங்கின் உள் கட்டழகுகளில் மனம் செலுத்துவேன். இருபுறமும் கொடுக்குகளாகத் தொங்கும் மின்விசிறிகள் நான் அமர்ந்துள்ள நடுசென்டருக்குக் காற்றை வாரி இறைக்க இயலாதவை. சட்டையின் கழுத்துப் பட்டையைத் தளர்த்திக்கொள்வேன். பெரும்பாலும் குளிர்காற்றரங்குகளில் படம் பார்த்த அனுபவம் இல்லையாததால் அதன் முடைக்குளிர் நாற்றம் பற்றி ஒன்றும் அறியேன். பின் சுவரில் படத்தைப் பாய்ச்சும் பொந்துகள் சரியாக இருப்பதைப் பார்த்து நிறைந்துபோவேன். அதற்குள் ஆள் நடமாட்டம் ஏதும் தென்பட்டால் விரைவில் படம் போகப்போகிறதை முன் கூட்டியே அறிந்த மகிழ்ச்சி முகத்தில் ஏறிவிடும். அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பாமல் திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து படத்தின் முதல் பிரேமிலிருந்து காட்சி இன்பம் பெறுவேன். 

இடைவேளைக்குப் பின்பான படத்தைக் குறைவில்லாமல் பார்க்கவேண்டுமானால் இரைப்பைக்குள் இரண்டு முறுக்குகள் அரைபட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இரண்டு முறுக்குகளை இருக்கைக்கே கொண்டுவந்து மொர்மொருக்குச் சத்தமெழத் தின்று பக்கத்து சீட் ஆசாமியை வெறுப்பேற்றி என்னோடு இதுவரை அவன் நிகழ்த்தி வந்த பங்காளிச் சண்டைக்குப் பழி தீர்த்துவிடுவேன். படம் முடிந்ததும் நேராக நிறுத்தத்திற்குள் போய் மிதிவண்டியைக் கொத்தாகப் பற்றி இழுத்துக்கொண்டு ’ஊரத் தெரிஞ்சிகிட்டேன் ஒலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி’ என்ற பாடலைப் பாடியபடி வெளியேற வேண்டியதுதான்.

அப்பொழுதெல்லாம் சினிமா பார்ப்பதற்கான அனுமதி எனக்கு அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. பத்துகிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மிதிவண்டியில் தண்ணீர் சுமந்து தொட்டியை நிரப்பினால் என் தாயாருக்கு மனது இளகிவிடும். தொட்டியை நிரப்பிவிட்டு ’கூம்பும் பருவத்துக் கொக்காக’ அவர் முகமெல்லாம் சிரிப்பாணியாக இருக்கும் நேரம் பார்த்து ஒரு மனுப்போட்டு வைப்பேன். கேட்ட மாத்திரத்தில் சிரிப்பை சைபருக்குக் கொண்டுவந்து மனுவின்மீது மந்திரிமார்கள் நடந்துகொள்வதுபோல ஒன்றுமே சொல்லாமல் போய்விடுவார். அதற்காக நான் எனது கலைத்தேட்டத்தைக் கைவிடமுடியுமா ? கமுக்கமாகக் கிளம்பிவிடுவேன். திரும்பி வரும்போது தண்ணீர் சுமந்து நான் அடைந்திருந்த சலுகை மட்டம் மேட்டூர் அணையைவிட மோசமாக வற்றியிருக்கும். அதை மறுநாள் நான்குநடை சேர்த்து தண்ணீர் அடித்து நேர்செய்யவேண்டும்.

ஒவ்வொரு தடவையும் இதே உத்தியைச் செயல்படுத்தியதில் என்னுடையை சினிமா பார்க்கச் செல்லும் முறை இலக்கியத்தில் புழங்கும் அலுப்பூட்டும் சொல்முறைகளைப் போல ’க்ளீஷே’ ஆகிவிட்டது. தேய்வுற்றுப் பொருளிழந்து கண்டனத்திற்குரியதாகிவிட்டது. ’தண்ணீ நப்பி வெச்சுட்டு சினிமாவுக்கு ஓடுனே தொலச்சுப்புடுவேன் ஆமா“.

அப்பொழுதுதான் என் மூன்று வயதுத் தம்பி கண்ணில் பட்டான். அவனுக்கும் எனக்கும் ஒன்பது வயது வித்தியாசம். நான் எழுபத்தைந்து மாடல். அவன் எண்பத்தைந்து மாடல். அவனும் சிம்மம் நானும் சிம்மம். ஏக லக்கினத்தால் யோகங்கெட்டது என்பது என் தந்தையார் நம்பிக்கை. பிறந்து ஆறுமாசம் கழிச்சலாகக் கழித்துக்கொண்டிருந்தும் தேறியவன். நன்கு வாய்பேசுபவனாக இருந்த அவன் தன் தாயாரின் கக்கத்தில் தொற்றிக்கொண்டு அடிமைப் பெண், தேடிவந்த மாப்பிள்ளை போன்றவற்றுக்குப் போய்வந்திருந்தான். அத்திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளால் குழந்தை பெரிதும் மயங்கி இருந்தான். அவன் முதன் முதலாக மனப்பாடம் செய்த குழந்தைப்பாடல் ’வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி உன் ஒடம்பைப் பிச்சி போட்டுடுவேன் பஜ்ஜி’ என்பதுதான். அந்தப் பாடலைப் பாடியபடி வெகுகாலம் என் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டிருந்தான். 

அன்று நான் பார்க்க எண்ணியிருந்த படத்திற்கு அவனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். எனவே அவனைத் தனியாக மடக்கி நம்மூர் கொட்டகையில் பயங்கரமான சண்டைகள் நிறைந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அம்மாவிடம் அந்தப் படத்தை இன்றைக்கே பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடி என்றும் திருகிவிட்டேன். 

சண்டயில கடசியில யாரு ஜெயிப்பா?’ என்று கேள்வி கேட்டான். ’யாரு ஜெயிச்சா என்னடா ? நாம்ப சண்டயப் பாக்கவேண்டியதுதானே? ’சண்ட இப்படியெல்லாம் போடுவாங்களா?’ என்று காற்றில் இரண்டு கைகளை உதறி கால்களைச் செங்கோணமாகவும் குறுங்கோணமாகவும் கண்டபடி நீட்டி நெளித்து உத்தரவாதம் கேட்டான். ’ஆமாமா... அப்படியெல்லாம் போடுவாங்க...’ என்று உறுதியளித்ததும் பையன் உற்சாகமாகிவிட்டான்.     

நேராக அம்மையிடம் சென்று சினிமாவுக்காக அழ ஆரம்பித்துவிட்டான். என்றுமில்லாத புதிய கோரிக்கையுடன் குழந்தை அழுவதைப் பார்த்த தாயார் அவன் கோரிக்கையை நிறைவேற்றச் சித்தம் கொண்டு உடனடி நிவாரணமாக என்னைக் கூப்பிட்டு தம்பியைக் கூட்டிக்கொண்டு சினிமாவுக்குப் போகப் பணித்தார். நான் உடனே முகம் மலர்ந்துவிடக் கூடாதே ! ’இன்னிக்கி நெறயப் படிக்கவேண்டியது இருக்கு’ என்ற போலி அலுப்புடன் “சரி சரி... தம்பிக்காகப் போய்வருகிறேன்“ என்றேன். சினிமாவுக்குக் கிளம்பிவிட்டோம்.

முதலிரண்டு இரவுக் காட்சிகளை மட்டுமே தினசரி காட்டிக்கொண்டிருந்த அந்தக் கீற்றுக் கொட்டகையில் அப்பொழுது முதல்தான் மதியக் காட்சிகளைத் திரையிட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் திரையிடும் மதியக் காட்சிகளுக்கு உலகத்தைப் பழக்கும்பொருட்டு அத்திரையரங்கினர் இரண்டு உபாயங்களைச் செய்து வந்தனர்.
  
முதலாவதாக சுமார் பதினொன்றரை மணிக்கே ஊர்களை நோக்கிய திசையில் இறுக்கிக் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகளைப் பாடல்களால் அலற வைப்பர். இரண்டாவதாக நடுப்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து நுழைவுக் குகைவழியைத் திறந்து வைத்து ஆள் சேர்க்க ஆரம்பித்துவிடுவர். மதியக் காட்சியிடும் நேரமோ பிற்பகல் இரண்டரை.

பன்னிரண்டு மணிக்கெல்லாம் முதல் ஆட்களாக நுழைந்து அமர்ந்துவிட்டோம். அவ்வளவு பெரிய அரங்கில் தனித்திருக்கக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஓர் அரை மணி நேரம் பொறுமை காத்த இளவல் மெல்ல நெளிய ஆரம்பித்தான். தட்டித் தடவி சமாதானப்படுத்திவைத்தேன். அது அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடித்தது. 

பிறகு மெல்ல விசும்பி ’நான் வீட்டுக்குப் போறேன்’ என்றான். பார்க்கவிருக்கிற சண்டைக் காட்சிகளின் பேரின்பத்தை அவனுக்குள் கனவுகளாக விரியும்படி ஊதிப் பெருக்கினேன். அந்தக் கனவுகளின் அழுத்தத்தோடு திரையை உற்றுப் பார்த்ததில் சில நிழல்கள் கட்டிப்புரண்டு சண்டையிடுவதுபோல் தெரிய சற்று சமாதானமாகியிருந்தான். அடுத்து அவன் பொறுமையிழந்து கண் சொக்கி ஒரு குட்டித் தூக்கமும் போட்டுவிட்டு எழுந்தபோது வெற்றுத் திரையே அரங்கில் வியாபித்திருந்தது. என்னுடைய நல்ல நேரம் - அரங்கிற்குள் கொஞ்சம் கும்பல் சேர்ந்திருந்ததில் அவனுக்குச் சில வேடிக்கைகள் கிடைத்தன. அடுத்து அவன் பெருங்குரலெடுத்து அழுவதற்குள் இரண்டரை ஆகிவிட்டிருந்தது. எதிர்பார்த்த கூட்டமில்லாததால் திரை வேண்டா வெறுப்பாக மின்னியது.

மதியக் காட்சிக்காகப் புதிதாகச் செய்யப்பட்டிருந்த ’அரங்கை இருள்படுத்தும் ஏற்பாடுகள்’ பொய்த்திருந்தன. அதனால் திரையில் அழுத்தமில்லாத வண்ண நிழல்கள் மட்டுமே தெரிந்தன. படம் வேறு இருட்டைக் காட்சியாக்கும் இயக்குநரான மணிரத்னத்தின் ’இதயக் கோயிலாகப்’ போய்விட்டது. இது சண்டையே இல்லாத துயர காவியம் என்பதைத் தம்பி புரிந்துகொண்டுவிட்டான். விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தான். எனக்குக் கோபம் அதிகமாகித் தலையில் இரண்டு குட்டுகள் வைத்தேன். அடங்கவில்லை. கட்டித் தூக்கிக்கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன். 

மெல்ல மெல்ல எனது கட்டுகள் எனது வளர்ச்சியின் விகிதத்தோடு அவிழ்த்துவிடப்பட்டன. சுதந்திரமாகத் திரைப்படத்திற்குச் சென்றுவந்ததில் முன்பிருந்த ஆசைகள் அத்தனையும் வடிந்துவிட்டன. அதற்காக எனது சிந்தனைகளும் ஈடுபாடுகளும் பெரும் தரத்தை அடைந்துவிட்டன எனப் பொருளல்ல. திரைப்பட ஆர்வங்கள் மங்கியதற்குத் திரைப்படங்களும் திரையரங்குகளுமே பிரதான காரணங்கள். ஒரு காலத்தில் கூட்டம் அலைமோதும் ஒரு திரையரங்குள்ள சாலை வழியாகவே செல்ல முடியாது. அந்த அரங்கங்கள் எல்லாம் இன்று வண்ணப் பூச்சுக்கு வகையற்று நிற்கின்றன. 
அவற்றுக்கான காலம் முடிந்துவிட்டதை அவை உணர்ந்திருக்கின்றன. 

இன்றுகூட என்னோடு எங்காவது வருவதென்றால் பிய்த்துக்கொண்டு ஓடி ஒளிந்துகொள்கிறான் என் தம்பி. அந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு தசம ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. பயல் பழையதை மறந்திருப்பான் என்று சினிமாவுக்கு அழைத்துப் பார்த்தேன். எந்தக் குழப்பமுமமில்லாமல் ஊசலாட்டம் இல்லாமல் மிகத் தெளிவாக ’நான் வர்லே’ என்றான்.  


Sunday, August 15, 2010

உன் அன்பும் அண்மையும் எனக்குப் போதும்

நான் ஏங்கியிருப்பது
உன் தோள்களில்
தூங்குவதற்கே !
அவ்வண்ணம் தூங்குங்கால் என் ஜீவன்
நீங்குவதற்கே
!

கட்டியணைத்திருக்கும்
உன் கைகளில்
என் காதலின் மகரந்தங்கள்
ஒட்டியிருக்கின்றன
அவை உதிராமல் இருக்கவேண்டும் என்றே
நான் உன்னோடு இருக்கிறேன்
இன்னும் இன்னும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிறோம்
இந்த நெருக்கத்தால்
நம் உடல் வெப்பம் ஒன்றாகட்டும்
நம் இதயத் தட்பம் ஒன்றாகட்டும்எனக்குத் தெரியும்
நம் நெருக்கம் இறுதியில் நெகிழும்
அந்த நெகிழ்வால் நம்முள் சில மொக்குகள் அவிழும்
அந்த அவிழ்வு
காற்றில் சுகந்தத்தைத் தூவும்
அதன் முடிவு
ஒரு முத்தமாகக் கூட இருக்கலாம்


Friday, August 13, 2010

ஏற்றுமதி

கர்நாடக மாநிலத்தில் தாது மண் கொள்ளை போய்க்கொண்டிருப்பது குறித்து அண்மைக் காலங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கொள்ளை தமிழ்நாட்டில் ஒரு செய்தியாகப் பரவும் முன்பே, சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக, ஒரு கவிதையாக எழுதினேன். அந்தக் கவிதை தீம்தரிகிட இதழில் வெளியானது என்று ஞாபகம். ஓர் அரசியல் எதிரியின் முன் நகர்த்தப்படத் தேவைப்படும் காய் என்பதால் மட்டுமே இந்தக் கொள்ளை ஊடக அளவில் விவாதப் பொருளாகிறதே தவிர யாருக்கும் உண்மையான அக்கறை இருக்கிறதா என்பது கேள்விக் குறியே. ஆனால், கவிஞர்களுக்கு உண்மைக்கும் சத்தியத்திற்கும் அப்பாற்பட்டு எந்தச் செயல்பாடும் இல்லை. கவிதை வெளிவந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கவிதை பேசிய பிரச்சனை குறித்து யாருக்கும் கவனமோ அறிதலோ இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அதனால் அந்தக் கவிதையை மீண்டும் இங்கே தருகிறேன். 2006 ஆம் ஆண்டு வெளியான மண்ணே மலர்ந்து மணக்கிறது என்ற என் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது.ஏற்றுமதி

நான் ஏற்றுமதியாளன்

பொருளாதாரத்தின் தூண்

ஏதாவது ஒன்றை

ஏற்றி அனுப்பிக்கொண்டே இருப்பேன்

எதையாவது ஒன்றை

எவனாவது ஒருவனுக்கு

விற்றுக்கொண்டே இருப்பேன்

என்னால் எதையும் விற்கமுடியாத அன்று

நான் இறந்துவிடுவேன்


ஆடைகளை

ஏற்றுமதி செய்து பார்த்தேன்

என்னைப்போலவே

பருத்திக்காடுகளும் விளைந்து களைத்துவிட்டன

தைத்துத்தைத்து

ஊசிகள் மூளையைப்போல மழுங்கிவிட்டன

நாள் பொழுது தட்பவெப்ப நிலைகளை இழந்து

உடல்கள் துவள்கின்றன


ஆனால், என்ன செய்வது !


பாவம்

தூங்காமல்

வேட்கையுடன் அலைகின்றன லாரிகள்


துறைமுகங்கள் காத்திருக்கின்றன

அங்கு

ராட்ஷசக் கப்பல்கள் நங்கூரமிட்டு

காலிக் கொள்கலன்களோடு

ஏங்கி நிற்கின்றன


வற்றிய நரியின் பசியோடு

வர்த்தகர் அழுகிறார்

என்னைத் தொடர்ந்து நச்சரிக்கிறார்


‘எதையாவது ஒன்றை

ஏற்றி அனுப்புஎன்கிறார்


ஒரு மாறுதலுக்காக

மிளகாய் ஏற்றுமதி செய்தேன்

உமது காரங்களை

உமது துக்கங்களின் வீரிய விதைகளை

தூர தேசங்களுக்கு

ஏற்றி அனுப்ப முயன்றேன்


நீங்கள் சிந்திக்கொண்டிருக்கும் கண்ணீரை

வேறு எங்கோ எவனோ

சிந்தட்டுமென்று

வெங்காயம் ஏற்றுமதி செய்தேன்


தோல் ஏற்றுமதி செய்தேன்

உமது மதலைகளுக்குப் பால் புகட்டிய

ஆநிரைகளைக் கொன்றுரித்து

உலர வைத்து இறுக்கித் தைத்து

ஏற்றினேன்


எதுவும் சரியில்லை


இறுதியாக

தாதுமண்ணை ஏற்றுமதி செய்கிறேன்


உங்கள் மூதாதைகளின்

வியர்வையும் உதிரமும் கலந்து

கனிமமாகக் கரைந்திறுகிய மண்ணுக்கு

நல்ல கிராக்கி


பூமியின் ஒரு பகுதியைத் தோண்டி

இன்னொரு பகுதிக்கு

அனுப்பிக்கொண்டே இருக்கலாம்


பூமிக்குத் துளை விழுமா ?

நல்ல கற்பனை


உமது வசிப்பிடங்கள்

சுரங்கங்களுக்குள் அமையலாம்


சுரங்கங்கள் வறண்டபிறகு

நான்

உங்களிடமிருந்து விடைபெறுவேன்

நீங்கள் மேலேறிவரும்

கயிற்றைத் துண்டித்துவிட்டு.

Tuesday, August 10, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே - 2

· காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி செய்ய வெறும் 4 இலட்ச ரூபாய் விலை மதிப்புள்ள டிரெட் மில் சாதனங்களை 10 இலட்சத்துக்கு வாடகைக்கு எடுத்தார்களாமே... ?

இதைத்தான் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்றார்களோ !


· என்ன வகை செல்பேசி வைத்திருக்கிறீர்கள் ?

LG GX200. விலை மலிவு. மின்னேற்றம் வாரக்கணக்கில் தாங்குகிறது.

· ஜோதிடத்தின்மீது நம்பிக்கை வருகிறதா ?

வரூஊஊம். ஆனா வராது.

· பீகார் வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டார்களாமே கோவையில் இரண்டு வயதுக் குழந்தையிடம்...

அவர்களைப் பிடித்து கொரில்லா செல்லில் அடைக்கவேண்டும்.

· டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஜெயலலிதா ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே...?

என்ன இருந்தாலும் அவர்கள் அம்மாவின் நியமனங்கள் அல்லவா...

· கார்கள் விற்பனை அதிகரித்திருக்கிறதாமே...?

கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த விற்பனையையா சொல்கிறீர்கள் ?

· திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி விரைவில் தி.மு.க.வில் இணையப் போகிறாராமே ?

தோழர்களை சித்தாந்தங்கள்தாம் வழிநடத்த வேண்டும். வேறு சிந்தனைகள் அல்ல. அவிநாசி சாலையில் பழைய ஸ்கூட்டரில் நிதானமாகச் சென்றுகொண்டிருக்கும் அவரை அநேக முறை பெருமையோடு கடந்து சென்றிருக்கிறேன்.· பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றுக்கு உங்களை அனுப்பி வைத்தால் என்ன செய்வீர்கள் ?

திரும்பி வரமாட்டேன்

· எந்திரன் அறிவியல் புனைகதை என்கிறார்கள். அதை நம் மக்கள் ஏற்பார்களா ?

அவர்கள் எடுத்திருப்பது எந்திரன் அல்ல. கால்குலேட்டட் ரிஸ்க்.

· பா... வை ஒருவரும் சேர்த்துக்கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டார்களே...?

பொதுத்தேர்தல் வரும்போது பாருங்கள் அவர்களுக்கு ஏற்படும் கிராக்கியை.

· ஊட்டிக்குப் போகவில்லையா ?

எதற்கு... டால்பின் நோஸிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்கா ?

· மும்பையில் கப்பல்கள் மோதிக்கொண்டதால் கடல் பாழாகிக் கொண்டிருக்கிறதாமே...?

கப்பல்கள் மோதிக்கொண்டதுதான் புதிய செய்தி. கடல் பாழாகிக் கொண்டிருப்பது பழைய செய்திதான்.