Saturday, January 28, 2012

கரப்பான் உலவும் அறை



குளிப்பறைக்குள் நுழைந்தேன்

அவசரமாக.

அதற்குள்

தனிமையைத் தவிர யாருமில்லை.

என்றும் இறுக்கி நிறுத்தவே முடியாத குழாயிலிருந்து

நீர்த்துளிகளின் இசையான உதிர்வொலி

சொட்டிக்கொண்டிருந்தது.

அப்படித் துளிர்க்காத குழாய்

யார் வீட்டுக் குளிப்பறையிலும் இருப்பதில்லை.

அந்த இசைக்கேற்ப ஆடி மகிழ்ந்திருந்தது

தன் ஒளிவிடத்திலிருந்து வெளிப்பட்ட

கரப்பான் பூச்சி.

என் நுழைவு அதைச் சிதறி ஓடவைத்தது.

அந்தப் பதற்றத்தில்

அது தன் ஒளிவிடத்தைத் தவறவிட்டது.

அதை நசுக்குவதா விரட்டுவதா என்று

எனக்கேற்பட்ட தத்துவக் குழப்பத்தில்

முட்டிய சிறுநீரைக் கழிக்க மறந்தேன்.

சரி, ஒரு சிறு தண்டனையாக

அதைக் கவிழ்த்துப்போடுவோம் என்று

என் காற்பெருவிரலால்

அதை எத்திக் கவிழ்த்துவிட்டு அகன்றேன்.

மீண்டும் அவ்வறைக்குள்

அவசரத்தோடு நுழைந்தபோது

மல்லாந்திருந்த அப்பூச்சி

புரண்டு நிமிர்ந்தெழும் போராட்டத்தில்

களைப்போடு ஈடுபட்டிருந்தது.

கவிழ்ந்த கரப்பான்

தன் காலம் முழுக்க முயன்றாலும்

எழமுடியாது என்பது

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதன் மீசையின் இரண்டு கிளைகளும்

காற்றில் நெளிந்தபடி எனக்குக் கூறிய உண்மைகள்

என்னை

அப்படியே புரட்டிக் கவிழ்த்துப் போட்டன.