Thursday, December 23, 2010

நாஞ்சில் நாடன்


நாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. தகுதியும் அரசாங்க விருதும் அபூர்வமாகச் சந்தித்துக் கொண்டுவிட்டதில் எனக்குக் கட்டறு மகிழ்ச்சி ஏற்பட்டது.  செய்தியைக் கண்டவுடன் அவருடைய அலைபேசிக்கு அடித்தேன். எடுத்தார்.

சார். வாழ்த்துகள் !

நன்றி. எப்படி இருக்கீங்க ?

நலம். இணையத்தில் செய்தியைப் பார்த்தேன்.

இணையத்துல போட்டுட்டாங்களா ?

ஆமாம் சார்.

என்ன இப்பெல்லாம் கோயமுத்தூர் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேங்கறீங்க ?

எக்கச் சக்கமான வேலை சார். இல்லாட்டி வராமயா...

ஓ...

எங்களுக்கே கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷமுங்கொ...

பின்னே உங்களுக்குத் தானே கிடைச்சிருக்கு !

நாஞ்சில் நாடனை வாக்குப் பொறுக்கிகள் சிறுகதைத் தொகுப்பு மூலமாகத்தான் அறிந்தேன். அவருடைய மிதவை, சதுரங்கக் குதிரை முதலான புதினங்கள் அதைப் படித்த காலத்திலேயே என்னைப் பெரிதும் ஈர்த்தவை. புனைவுகளை விடவும் அவர்தம் கட்டுரைகளில் புழங்கும் அருமையான தமிழ் வாசகனை மயக்கிவிடக் கூடிய வல்லமையுடையது. அவரோடு மிக நெருக்கமாக உணரவைப்பது. அவற்றுள் ஆங்காங்கே அவர் தூவிச் செல்லும் பழந்தமிழ்த் தொடர்கள் எதிர்பாராத விருந்து. பிழைப்பதற்காகப் பிறவூர் சென்ற மனது பிழிபட்டு வதைபடும் தருணங்களை  அவருடைய கதைகள் உரக்கப் பேசின. அவரோடு உரையாடலில் ஈடுபட்டு அவருடைய மின்னல் தெறிப்பான வசனங்களைக் காதுகுளிரக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்க்கை பூரா ஒரு வாத்தியார் பாடமெடுத்துச் சம்பாதிக்கிற தொகையைப் போல பத்து மடங்கு தொகைய ஒரு படத்தில நடிக்கிறவன் அள்ளிக்கிட்டுப் போறானே... அப்படி என்னத்தை இவன் இந்தச் சமூகத்துக்கு நல்லது பண்றான் ? என்பார். நாஞ்சில் நாடன் உடன்வரும்படி ஒரு பயணம் அமைந்தால் அதைப்போல் இனிய அனுபவம் இன்னொன்று இருக்க முடியாது என்பது என் இலக்கிய நண்பர்களின் கருத்து.  

எல்லா நவீன இலக்கியப் படைப்பாளிகள் சார்பாகவும் இவ்விருதைப் பெற்றுக்கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். பின்னே உங்களுக்குத்தானே கிடைச்சிருக்கு என்று அவர் சொன்னதற்கு அதுதான் அர்த்தம்.

என்னுடைய காமக் கடும்புனல் தொகுப்பிற்கு அவர்தாம் முன்னுரை எழுதியிருந்தார். அதற்காகவும் என் நன்றிகள் !