Sunday, April 4, 2010

கண்மூடி வழக்கமெல்லாம்




அன்றாடங்களில் நான் அநுசரிக்கும் சமய அடையாளச் செய்கைகள் ஏதேனும் உண்டா என்றால் அப்படியொன்றுமில்லை. என்னிடம் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கைகள் எவையேனும் ஊறியிருக்கின்றனவா என்றால் இல்லை. இந்தக் கணம் நான் கடவுள் மறுப்பாளனே.

நான் கோவிலுக்குப் போவதுண்டு. உங்கள் மீட்டிங்குக்கு எப்படி ஒரு கடமையாக வந்து செல்வேனோ அதைப்போலத்தான் நான் கோவிலுக்குப் போவதும். அங்கே நான் பெற்றுக்கொள்வதுமில்லை. விட்டுச் செல்வதுமில்லை. எனக்கு அது ஒரு நல்ல வெளியேறல் பொழுது (Outing). அதே சமயம் கடவுளை என்னால் முற்றாக மறுக்கமுடியுமா என்றால் என்னிடம் உள்ளவையும் என் மூத்தோர்கள் வழங்கிச் சென்றவையும் சற்றே பற்றாக்குறையுள்ளவையாகவே தென்படுகின்றன.

நான் மூண்ட அக்னி முன்னமர்ந்து தங்கத்தாலான மங்கள நாண் என்னும் தாலி அணிவித்துத் திருமணம் புரிந்துகொண்டேன். நான் தாலி மறுப்புத் திருமணம்தான் செய்வேன் என்றிருந்தால் கடைசி வரை எனக்குத் திருமணம் ஆகியிருக்காது. என் பெயர் ஒரு இந்துமதக் கடவுளின் பெயர்தான். என் தந்தை சூட்டிய அப்பெயரை எப்போதும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அவரிடமே உறுதியளித்திருக்கிறேன். இப்படிச் சிற்சில சூழ்நிலைகள் தவிர என் வாழ்வில் நான் பிறந்த மதம் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு நம்பிக்கையாகவோ, நிர்ப்பந்தமாகவோ, சடங்காகவோ, ஆறுதல் தரவோ என் வழியில் குறுக்கிட்டதில்லை. இதனால் என் மதத்தின் மீது எனக்கு மில்லியளவும் வருத்தமும் இல்லை துவேஷமும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் பிற மதங்களோடு ஒப்பீடு செய்து பெருமிதமும் அடையலாம்.

நான் ஒரு கவிஞன், நான் எழுதவேண்டிய மகத்தான கவிதை என் வாழ்க்கை’ என்கிற தெளிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். வெள்ளையர்கள் நம்மையெல்லாம் ஒரு நிலப்பரப்புக் கலாச்சாரத்தின் பொதுக்கூறுகள் வழியாக அடையாளம் கண்டு தொகுத்து நீங்களெல்லாம் இந்துக்கள் என்று பெயரிட்டுச் சென்றபிறகே நாம் இந்துக்கள் என்று நமக்கே தெரிந்தது.

இந்து மதத்திற்கென்று முளைத்திருக்கின்ற அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள், சங்கங்கள், கார்பரேட் ஆபீஸ்கள் எவற்றோடும் என்னைப்போன்ற கோடிக்கணக்கான இந்துக்களுக்குத் தொடர்பொன்றும் இல்லை. இந்து தர்மம் என்ன சொல்கிறதென்றால்’ என்று திருவாய் மொழிகிற அதிகாரத்தையும் இந்து மதம் யார் ஒருவருக்கும் பட்டம் கட்டி வழங்கவில்லை.

நான் கடவுள், நீ கடவுள், அவர் கடவுள், இவர் கடவுள் போன்ற சொற்றொடர்கள் அண்மைக் காலத்தில் என்னை மிகவும் சிரிக்கச் செய்திருக்கின்றன. இந்த விஷயத்தில் நான் ஒரு காலிப் பாத்திரமாகவே இருந்து எல்லாத் தரப்பையும் ஊன்றிக் கவனித்திருக்கிறேன். கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இன்னும் இத்தனை கொடுமைகளையும் கொடுங்கோல்களையும் பார்வையாளர் கேலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் ? அவர் இல்லை என்றால் இல்லாத ஒருவருக்காக நாம் ஏன் இவ்வளவு காலம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம் ? இல்லாத ஒருவர் அல்லது இல்லாத ஒன்றைப் பற்றிய கருத்து எப்படி இத்தனைத் திரளான மக்கள் மனங்களை இந்நெடுங்காலம் பற்றிப் பரவிவந்திருக்கிறது ? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்தான் உண்டு. ’நிலையாமை மீது நிலைத்திருக்கும் பேரச்சம்’.
இந்து மதத்தில் ஜீவித உபாயங்கள் எவ்வளவு உண்டு என்றறியேன். ஆனால், பிழைப்பிலிருந்து வெளியேறி அடையும் சந்நியாச வாழ்வுக்கு ஏராளமான பாஷ்யங்கள் காணக்கிடைக்கின்றன. எல்லாக் காலத்திலும் அவர்கள் நெல்விளைவிப்போரை விடவும் உயர்வாகவே கருதி போற்றப்பட்டிருக்கிறார்கள். மக்களும் முதுகு குனிந்து வணங்கி வாழவைத்திருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் திருப்பித் தந்தது என்ன என்றால் எந்தக் குறிப்பையும் காணோம். உழவன் துண்டி பீடிக்குத் தவியாய் தவிக்கையில் பிரயாகையில் எல்லா நிர்வாணிகளும் கஞ்சா புகைக்கிறார்கள். எலிகளைப் பிடித்து எல்லாரும் உண்டுகொண்டிருக்கையில் சிலர் வாழையிலையில் மலம் கழிக்கிறார்கள். குஞ்சு குளுவான்களுக்கு மத்தியில் மனைவியைத் திரும்பிப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்ட சம்சாரிகளுக்கு மத்தியில் சந்நியாசிகள் ராசலீலைகள் நடத்துகின்றனர்.

துறவி என்பதற்கு பௌத்தம் அளித்திருக்கும் விளக்கத்திற்கு நிகராக வேறு எதையுமே கூறமுடியாது. அதன் இலக்கணப்படி யார் ஒருவர் ஓர் இடத்தில் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்காதவரோ அவரே உண்மையான துறவி. இரண்டு இரவுகளுக்கு மேல் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் ஒருவருக்கு அவ்விடத்தின்மீது மெல்ல பற்றுதல் வரத் தொடங்குகிறது. மூன்றாம் இரவில் அங்கே உறங்கிக் கழித்துவிட்டான் என்றால் அவனது துறவு-அறம் அழிகிறது. விவேகானந்தரின் இலக்கணப்படி துறவி என்பவன் இடையறாது தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பவன். ஓயாத தேடலில் மூழ்கியிருப்பவன். முதன்மையாக அவன் யாத்ரீகன். தாவரங்களுக்குப் பௌதீக வடிவில் நிலத்தைப் பற்றிநிற்கும் வேர்கள் இருப்பதைப்போல மனிதர்களுக்குத் தாம் வாழும் நிலத்தின்மீது பற்றுதலின் வேர்கள் ஆழ்ந்து இறங்கியிருக்கின்றன. அவை உணர்வு மயமான சூட்சும ரூபத்திலானவை. அந்த வேர்களை முதலில் அறுத்தெறிந்து நடப்பவன்தான் துறவி.

நம் காலத்துத் துறவிகளுக்கு நிலத்தின்மீது வேர்கள் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நிலங்களே இருக்கின்றன. அவை தேச எல்லைகளைக் கடந்து நீண்டிருக்கின்றன. ஏராளமான வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. நவீன வேலைப்பாடுகள் அமைந்த ஆசிரங்கள் இருக்கின்றன. உயர்ந்த ரக மெத்தைகள், தலையணைகள், நீர்ப்படிக ஒளித்திரைப் பெட்டிகள் (Liquid Crystal Display Televisions), கண்மூடிப் பின்பற்றுவதற்குப் பெருந்திரளான மக்கள், பூட்டிய அறைக்குள் கால்பிடித்துவிட்டு வாய்ச்சுவை தரும் நடிகை - என எல்லாமே உடைமை ! எதைத் துறந்ததால் ஒருவர் துறவி என்று அறியப்படுகிறார் ? உண்பதற்கு வாய்க்குகந்த உணவில்லாமல் பழையதைத் தின்று, பருகுவதற்குத் தூய நீரில்லாமல் உப்பு நீரைக் குடித்து, ரம்மியமான சூழலில் அணைத்துறங்கப் பெண்ணில்லாமல் முடங்கிச்சிறுத்து, எல்லா ஆசைகளையும் மனத்திற்குள்ளாகவே அடைத்து வைத்துக்கொண்டு, கிழிந்த பாயில் நைந்த தலையணையில் படுத்துறங்கும் ஒவ்வொரு கிரகஸ்தனும் எனக்கு இப்போது மாபெரும் துறவியாகவே காட்சியளிக்கிறான்.

மனித மனப் பதற்றங்களுக்கு ஒரு சிறிய சமாதானத்தைத் தன் பேச்சாற்றலால் எழுத்தாற்றலால் மதப்போர்வையில் இருந்துகொண்டு ஒருவர் நல்குவதன் வழியாக இத்தனை வசதிகளை அனுபவிக்க முடியும் என்றால் அது அதைப் பின்பற்றுவோரின் அறிவீனமே அல்லாமல் வேறென்ன ? நன்கு நிகழ்த்தப்பட்ட எந்த மேடைப் பேச்சைக் கேட்டாலும் எந்த எழுத்தைப் படித்தாலும் மனம் உள்ளபடியே கொஞ்சம் தணிவைக் காணும் என்பதை அக்கலைகளைக் கற்றவர்கள் அறிவார்கள். இதில் அவர் 300 புத்தகங்களை எழுதிவிட்டார், அவருக்குக் கொஞ்சமேனும் ஞானவிலாசம் இல்லாமல் இருக்குமா என்பதெல்லாம் நகைப்புக்குரிய வாதமே.

32 வயது இளைஞன் 40/50/60 வயது முதியவனின் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் குருவாக கடவுளாக முடியும் என்பது எப்படியிருக்கிறதென்றால் நாஞ்சில் நாடன் சொல்வதைப்போல ஒன்பதாம் கிளாஸ் படித்த நடிகை சந்தியா கோவைக் கல்லூரிகளில் முதுகலை பயிலும் மாணவர்கள் நடுவில் சொற்பொழிவாற்றியதைப் போன்றிருக்கிறது. தவறு யார் மீது ?

பெண்ணை அறிந்தபிறகு நோற்கும் பிரம்மச்சரியம்தான் உண்மையானது. பெண்ணையே அறியாத ஒருவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் பிரம்மச்சரியம் காக்கிறான் என்றால் அதை நம்புபவன் மனித உடல் இயக்கவியல் அறியாத பேதை.

பிரம்மச்சரியம் என்பதற்கு நமது காலத்தின் மாபெரும் பிரம்மச்சாரி மகாத்மா காந்தி தரும் பொழிப்புரையை யாரேனும் படித்திருக்கிறீர்களா ? அதை அப்படியே கீழே தருகிறேன்:-
· உயிரைச் சிருஷ்டிப்பதற்கான ஜீவ சத்தை அடக்கிக் காப்பதிலிருந்தே எல்லா சக்திகளும் வருகின்றன. இந்த ஜீவசக்தி தீய அல்லது சுகத்தை நாடி அலையும் ஒழுங்கற்ற வேண்டாத எண்ணங்களினால் தொடர்ந்து நம்மையும் அறியாமல் கூட வீணாக்கப்படுகிறது.

· பிரம்மச்சரியம் என்பது என்ன ? பிரம்மத்தை – கடவுளை அடைவதற்கான வாழ்க்கை முறையே இது. ஜன்னோற்பத்தி முறையின் மீது முழுக் கட்டுத்திட்ட்த்தையும் கொண்ட்து இது. இந்தக் கட்டுதிட்டம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் இருக்கவேண்டும். எண்ணம் கட்டுத் திட்ட்த்திற்கு உட்பட்ட்தாக இல்லாது போயின் மற்ற இரண்டும் பலனற்றவை ஆகின்றன. எண்ணத்தைக் கட்டுத்திட்ட்த்திற்கு உட்படுத்திவிட்டவருக்கு மற்ற இரண்டும் மிக எளிதானவையாகி விடுகின்றன.

· வெளிக்கட்டு திட்டங்களால் வளர்த்துக்கொண்டுவிடக்கூடிய அருங்குணமன்று பிரம்மச்சரியம். பெண்ணுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தும் அதிலிருந்து தப்பி ஓடிவிடுகிறவன் பிரம்மச்சரியத்தின் முழுப்பொருளையும் உணர்ந்து கொண்டவன் ஆகான்.

· எல்லாநிலைமைகளிலும் சாத்தியமான எல்லா இச்சைகளையும் சமாளித்து நிலை பெறுவதாக இருக்கக்கூடியது மாத்திரமே பிரம்மச்சரியம்.
என் தனிப்பட்ட அனுபவத்தில் பிரம்மச்சரியம் என்பது புலனடக்கம், மன உறுதி, இலட்சிய சங்கல்பம் ஆகியவற்றோடு இறுகிய தொடர்புடையது. முதல் நாள் பிரம்மச்சரியத்தில் இருப்பவன் மனதில் எழும் இச்சையை அடக்க ஒருகிலோ மன உறுதி வேண்டும் என்றால் நூற்நாள்கள் பிரம்மச்சரியம் நோற்ற பின்பு மனதில் எழும் இச்சையை அடக்க நூறுகிலோ மன உறுதி வேண்டும். நோன்புகள் வளர வளர மனவுறுதியையும் இலட்சிய சங்கல்பத்தையும் அதே விகிதத்தில் வேகத்தில் வளர்த்தெடுத்துவர வேண்டும். இதில் நமது தரப்பு ஏதாவது ஒரு கட்டத்தில் சத்தியமாகத் தோல்வியைத் தழுவக் கூடியதே. பிறகு, துய்ப்பானது அதுவரை இல்லாதிருந்த நாள்களுக்கும் சேர்த்து அசுர வேகத்தில் நடக்கிறது. இதுவே நான் கண்டது !

துறவியும் நடிகையும் உடல்கலந்தார்கள் என்பது ஊரறிந்திருக்காவிட்டால் அது தனிப்பட்டவர்களின் விவகாரமே. சட்டம் நிர்ணயித்திருக்கிற வயதெட்டிய இருவரும் மனமொத்துப் பகிர்ந்துகொள்ளும் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்து படமெடுக்கப்பட்டது இந்த நூற்றாண்டின் மாபெரும் அத்துமீறல்களில் ஒன்று. நம் வரவேற்பறைக்குள் அக்காட்சிகள் ஒளிபரப்பானதும் அவ்வகையே. நமது ஊடகங்களும் எவன் திருப்பியடிக்க மாட்டானோ அவனைத் தேர்வு செய்து நாறடிப்பதில் வல்லமை பெற்றுவிட்டுவிட்டன.
(தமிழினி – மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)
(படங்கள்: மகுடேசுவரன்)