என் வீட்டில் வளர்ந்துகொண்டிருந்த பூனைக்குட்டிகள் இவை. இதில் சாம்பல் நிற உடலில் கரும்புள்ளிகளோடு இருப்பவன் கடுவன் (ஆண்) குட்டி. வெள்ளை தேவதையாய் இருப்பவள் பெண்குட்டி.
இரண்டும் ஆகஸ்ட் 29ம் நாள் 2009இல் பிறந்தன. இதில் கடுவன் குட்டி எக்கச்சக்கமான சுறுசுறுப்பாளன். வெள்ளைக் குட்டி பரம சாது. கடுவன் பூனை தாவுவதில், மடிந்து மடிந்து ஓடுவதில், ஈருருளிச் சக்கரத்தை நகங்களால் சுரண்டுவதில், திடீரென்று காலிடையில் புகுந்து ஓடி நம்மை விழவைப்பதில், மரங்களில் தாவி ஏறிச் சிட்டுக்குருவிகளை விரட்டுவதில், கெஞ்சிக் கூத்தாடி பால் கிண்ணத்தை நிரப்ப வைத்துக் குடிப்பதில் அசகாய சூரன். அதன் உடலிலுள்ள கரும்புள்ளிகளால் அவனுக்குக் கருவாயன் எனப் பெயரிட்டோம். அசப்பில் ஒரு திரைப்படச் சண்டைப் பயிற்சியாளனின் விரைவு கடுவன் குட்டியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காணப்பட்டதால் அவனுக்கு வைத்திருந்த பெயரோடு அடைமொழியாக ‘ஸ்பீடு கருவாயன்’ என்றழைத்தோம். என்னோடு சமயத்தில் அந்தப் பூனன் பேசுவான். பூனையை நான் பூனன் என்று அன் விகுதி சேர்த்து உயர்திணையாக அழைப்பதுண்டு.
’’இப்போதான் பால் குடிச்சியா ?’’ என்றால் ’’ம்ம்ம்’’ என்பான்.
''m...e... இதை எப்படிப் படிக்கணும்?’’ என்று கேட்டால் “ம்மி’’ என்பான்.
''m...e...o...w இதை எப்படிப் படிக்கணும்?’’ என்று கேட்டால் சுருதி சுத்தமாக ‘ம்மியாவ்’ என்பான்.
இந்த இரண்டு கேள்விகளை எப்பொழுது கேட்டாலும் அவன் மாற்றிப் பதில் சொன்னதே இல்லை. இந்த விநாடி வினா விளையாட்டின் ஒரே விதி பூனைக்குப் பதில் சொல்லத் தெரிந்த கேள்விகளை மட்டுமே நாம் கேட்கவேண்டும் என்பதுதான்.
வேண்டியவரை விளையாடிவிட்டுக் களைத்துப்போய் இருவரும் உறங்க வருவார்கள். அப்பொழுது நான் எந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் எழுந்துவிடவேண்டும். ஸ்பீடு கருவாயன் கால்களைக் கடித்து முதுகில் முட்டி எழுப்பிவிடுவான். என் இருக்கைச் சூடு பரவியிருக்கும் நாற்காலியில் இருவரும் தூங்க ஆரம்பிப்பார்கள். முதலில் திக்குக்கொருவராய்ப் படுத்துப் பின் தூக்க மையத்தில் ஒருவரை ஒருவரை முட்டி அணைத்துக்கொள்வார்கள்.
இரண்டும் வீட்டில் ஒருவராக எல்லார் மனதிலும் அன்புயிர்களாகப் பயில ஆரம்பித்திருந்தன.
கடந்த ஞாயிறன்று சாலையைக் கடக்கும் போது ஓர் வண்டியின் முன் சக்கரத்தில் சிக்கி ஸ்பீடு கருவாயன் அதே இடத்தில் குருதி பெருகி இறந்தான். அதன் மரணம் ஒரு மனிதனின் மரணத்திற்கு நிகரான துக்கத்தை என்னில் தோற்றுவித்துவிட்டது. மிஞ்சியிருப்பது தன் துணையைக் காணாமல் தவிக்கும் வெள்ளைப் பூனையும், ஓர் அபூர்வ கணம் ஒன்றில் அவற்றின் அன்பணைப்பைக் கையில் சிக்கிய செல்பேசியில் பதிவு செய்த இப்படங்களும் தாம்.
நம் அன்புக்குரிய உயிரை சாவின் கொடுந்தாடைகள் மெல்ல மெல்லக் கவ்வி இழுத்துச் செல்லும்போது நாம் செய்வதற்கு ஒன்றுமேயில்லைதான்.