Monday, August 22, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – அத்திக்காய் காய் காய்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

தமிழ்த் திரைப்பாடல் உலகில் கண்ணதாசனைப் பற்றிப் பேசியாக வேண்டிய தருணம் அத்துணை பொருண்மை மிக்கது ! தமிழ்த்திரையுலகின் எண்பதாண்டுகால வரலாற்றில் ஒரேயொரு இலக்கியச் சாதனையாளனை மட்டுமே குறிப்பிடவேண்டும் என்றால் அது கண்ணதாசன் தான். மேலை இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பத்தாயிரக்கணக்கான நூல்கள் நுவலப்பட்டுள்ளன. அவ்வாறு ஒரு கலை இலக்கிய ஆசிரியனின் படைப்பில் ஊறித் திளைத்து உவகை பூத்துக் கொண்டாடி எழுதப்பட்ட நூல்களுக்கு நம் மொழியிலிருப்பதைப் போன்ற பஞ்சம் வேறெங்கே உண்டு ? மீறிக்கூறினால் பாரதியைப் பற்றிச் சில நூறு நூல்கள் காணக்கிடைக்கலாம். பாரதிதாசனுக்குக் கொஞ்சம் எழுதப்பட்டிருக்கலாம்.

கண்ணதாசனின் ஒவ்வொரு திரைப்பாடலையும் விவரித்துப் பெருங்கட்டுரைகள் எழுதலாம். அவரது ஆயிரக்கணக்கான பாடல்களையும் துளித்துளியாக இரசித்து விவரித்து ஒப்பு நோக்கி நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதலாம். கண்ணதாசன் முன்வைத்த திரைப்பாடல் துறையின் இலக்கியக் களம் அவ்வளவு விரிவானது. தம்மை ஆள்பவர் யாரெனத் தெரியாதிருந்த பாமரத் தமிழரிடையேயும் கண்ணதாசன் தம் பாடல்களால் பரவியிருந்தார். இறப்புக்கும் பிறப்புக்கும் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பிணிக்கும் பேருவகைக்கும் உறவுக்கும் பிரிவுக்கும் காதலுக்கும் துரோகத்துக்கும் கண்ணதாசன் தம் பாடல்களில் தெளித்துச் சென்ற தமிழ் வரிகள் காலத்தை மிக எளிதாக வென்றவை. ஒவ்வொருவரும் தம்மோடு தொடர்புபடுத்தி மயங்கத்தக்க எளிய வரிகளை - தம் புலமையாழத்தின் வண்டல் சத்தை ஏற்றி - இலக்கியச் சுவையால் இனிப்பேறிய பாடல்களைத் தம் இறுதி வரை வழங்கினார்.

கண்ணதாசன் 1940களின் பிந்தைய ஆண்டுகளில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய சண்டமாருதம்என்னும் பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகிறார். அப்போது அவருக்கு வயது 21. அங்கே கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன் போன்றோர் முறையே எழுத்து, நடிப்பு சார்ந்த இளநிலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம். அதே மாடர்ன் தியேட்டர்ஸில் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு படத்திற்கான வசனம் பாடல்களை எழுதிக்கொடுக்க நாற்பதாயிரம் உரூபாய் சம்பளம் பேசப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பாரதிதாசன் எழுதிக்கொடுத்த பாடல் ஒன்றில் ‘கமழ்ந்ததுஎன்ற வார்த்தை வருகிறது. அந்த வார்த்தையை அங்கே நிறுவியிருந்த ஒலிப்பதிவுக் கருவியால் பதிவு செய்ய இயலவில்லை. படக்குழுவினர் பாரதிதாசனிடம் சென்று நிலைமையை விளக்கிக் கமழ்ந்தது-வை மாற்றித் தரக்கோருகிறார்கள். மறுத்த பாரதிதாசன் ‘என் வார்த்தையை மாற்ற முடியாது. வேண்டுமானால் நீ உன் ஒலிப்பதிவுகருவியை மாற்றிக்கொள்என்று சினந்து அனுப்பிவிடுகிறார். வழியறியாது விழித்த படக்குழு கண்ணதாசனிடம் உதவக் கேட்கிறது. கண்ணதாசன் உடனே ‘கமழ்ந்ததுஎன்ற வார்த்தைக்கு மாற்றாக ‘மலர்ந்ததுஎன்று எழுதித் தருகிறார். பாடலும் நல்லபடி பதிவாகிறது. தம் பாடலைத் தம் அனுமதியின்றி மாற்றிய காரணத்தால் பாரதிதாசன் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து ‘நீயும் ஆச்சு. உன் நாற்பதாயிரம் உரூபாய் ஆச்சுஎன்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியேறுகிறார். அந்த வெளியேற்றத்தின் பின் பாரதிதாசன் தம் இறுதிவரை திரையுலகில் நுழையமுடியவில்லை. அந்த உள்நுழைவின் பின் கண்ணதாசன் தம் இறுதிவரை திரையுலகைவிட்டு வெளியேறவில்லை. பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘கன்னியின் காதலிஎன்னும் படத்தில் ‘கலங்காதிரு மனமே ! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!என்ற பாடலை எழுதிப் பாடலாசிரியராகிறார் கண்ணதாசன். இது 1948 வாக்கில் நடக்கிறது. தாம் அறிமுகமாகி சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கண்ணதாசனால் திரைப்பாடல் இயற்றுவதில் பெரிய கணக்கைத் துவக்க முடியவில்லை. 1958களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசனை விஞ்சிய பாடலாசிரியராக முன்னேறுகிறார். அதே காலகட்டத்தில் வாலி என்பவரும் அறிமுகமாகிறார். அடுத்து வந்த 1960கள்தாம் கண்ணதாசனின் பொற்காலம். அந்தக் காலகட்டம்தான் தமிழ்த் திரையுலகின் பொற்காலமும் கூட.


எம்.ஜி.ஆரின் ‘தகர வரிசைப் படங்களிலும் (தர்மம் தலைகாக்கும், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்...) சிவாஜி கணேசனின் ‘பகர வரிசைப் படங்களும் (பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு, பார் மகளே பார்...) கண்ணதாசனைப் புகழின் உச்சுக்குக் கொண்டுசெல்கின்றன. மூன்றாம் பிறையில் எழுதிய ‘கண்ணே கலைமானேஎன்னும் தம் கடைசிப் பாடல் வரையிலும் கண்ணதாசன் தந்நேரற்றே நிகரற்றே விளங்கினார். கண்ணதாசனின் நெஞ்சம் ஒரு வெற்றிகரமான படமுதலாளி ஆவதற்கே விரும்பி இருந்தது. அதற்காகவே அவர் அரும்பாடுகள் பட்டார். அரசியல் களத்தில் எதிரிகளை வெல்ல வாழ்வின் முதன்மையான காலங்களையும் ஈட்டிய செல்வங்களையும் அவர் அசுரத்தனமாகச் செலவிட்டார். ஆனால் அம்முயற்சிகள் யாவும் கசப்பில்தாம் முடிந்தன. அவருக்கான நிரந்தரப் புகழை அவர் உதிரத்தில் ஓடிய தமிழ்தான் வழங்கிற்று.


பலே பாண்டியா திரைப்படத்தில் வரும் அத்திக்காய் காய் பாடலை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. கண்ணதாசன் கவிதைப் பித்தேறி நின்ற தம் வாலிபப் பருவத்தில் அநாயசமாக எழுதிய பாடல் இது. காய் என்னும் சொல்லைத் தாவர விளைவான காய் என்னும் பெயர்ச்சொல்லிலும் - காய் என்னும் வினைச்சொல்லிலும் (வெம்மையுற வீசு, கோபம் கொள், கடிந்து பேசு) ஆய் என்னும் வேற்றுமை உருபாகவும் பன்பொருள்படப் பயன்படுத்திக் கவிஞர் ஆடிய மொழியாட்டம் நம்மை இறுகப் பிணித்து இறும்பூது எய்தச் செய்கிறது.

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

அந்தத் திசையில் வெம்மையுற வீசு ஆலமரத்துக் காயைப் போன்று தூரத்தே இருந்து சிறிதாகத் தோன்றும் வெண்ணிலவே ! இந்த்த் திசையில் வெம்மையுற வீசாதே... ஏனென்றால் என் உயிராக உன்னைக் கருதும் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

கன்னி எனக்காக... என்னுடைய ஆசைக்காக... காதல் கொண்டிருக்கும் பாவையாகிய எனக்காக.... அங்கே வெம்மையுற வீசு... அவர்மீது வெம்மையுற வீசு... மங்கையாகிய என்னுடைய அரசனை (கோவை) வெம்மையுற வை...!

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

பெண் அவ்வாறு கூறியதும் ஆண் சமாதானம் கூறுகிறான் :- மாதின் உள்ளம் என்னைக் காய் எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல் ஆனாலும் (மாது+உளம்+காய்) அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா என்ன ? அதனால் என்மீது வெம்மையுற வீசாதே வெண்ணிலா !

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

இரவுக்காகவும் அவ்வாறு இரவு வந்தால் ஏற்படும் உறவுக்காகவும் ஏங்குகின்ற இந்த ஏழைக்காக நீ வெம்மையுற வீசு. எந்நேரமும் வெம்மையுற வீசு. இதோ நேரில் என்னை அணைக்காமல் நிற்கிறாளே இவளைக் கடிந்துகொள் !

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

ஆண் அவ்வாறு சினந்து பேசுவதால் பெண் அவனுக்குத் தன் உள்ளக் கிடக்கையைக் குறிப்பால் உணர்த்துகிறாள் :- அட புரியாதவரே... நான் உருவத்தால் சின்னஞ்சிறியவளாய் இன்னும் பழுக்காதவளாய்த் தோன்றுகின்றேனேயன்றி பருவத்தால் எப்படிப்பட்டவள் தெரியுமா... காயைப் போன்றவள் இல்லை அன்பரே... பருவத்தால் நான் பழுத்துக் கனிந்தவள் அல்லவா ! அதனால், வெண்ணிலவே அவர் சொல்கிறார் என்று என்னைக் கடிந்து பேசாதே !

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி நிற்குமோ அப்படி எங்கள் உள்ளத்தில் காதல் என்னும் நறுமணம் காலந்தோறும் மணந்து நிற்கட்டும் என்று நிலவே நீ வீசு...! ஜாதிக்காய்ப் பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து கனியும்படி காய்வாயாக !

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

என்ன வெண்ணிலவே ! என் காதலி சொன்னதை விளங்கிக்கொண்டாயா ? இருவருக்கும் இடையே தூதாகவும் விளங்கி நிற்கும் வெண்ணிலவே !

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

உள்ளம் எல்லாம் இளக மாட்டாயோ ? உன்னிடமுள்ள ஒவ்வொரு தேன் துளியையும் சுரக்கமாட்டாயோ ? வெள்ளரிக்காய் பிளந்ததுபோல பற்கள் அனைத்தும் தெரிய சிரிக்க மாட்டாயோ ?

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலவே

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

கோதையென்னைக் காயாமல் என் மன்னவனைக் காய்வாய் வெண்ணிலவே ! சரி சரி ! எங்கள் இருவரையும் காயவேண்டாம் ! எங்கள் பாவிளையாடல் முடிந்துவிட்டது. இனி பருவவிளையாடல் ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில் வீசிக்கொண்டிரு வெண்ணிலவே !

இந்தப் பாடல் நல்கிய இன்பத்தை நான் புதிதாக எடுத்தியம்பி நிறுவ வேண்டியதில்லை. என்னென்ன காய்களின் பெயர்கள் பயின்றன என்றும் நான் குறிப்பிடவில்லை. தமிழும் பொருளும் இசையும் மிடுக்காக நடந்து நடந்து தொட்ட உயரத்தை நாம் ஐம்பதாண்டுகள் கழித்தும் அண்ணாந்துதானே பார்க்கிறோம் !


Friday, August 5, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – குயிலே கவிக்குயிலே


குயிலே கவிக்குயிலே

யார் வரவைத் தேடுகிறாய்

மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா ?


குயிலே கவிக்குயிலே

யாரை எண்ணிப் பாடுகிறாய்

உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா ?


இளமை சதிராடும் தோட்டம்

காயும் கனியானதே

இனிமை சுவை காணும் உள்ளம்

தனிமை உறவாடுதே

ஜாடை சொன்னது என் கண்களே

வாடை கொண்டது என் நெஞ்சமே

குயிலே அவரை வரச்சொல்லடி

இது மோகனம் பாடிடும் பெண்மை

அதைச் சொல்லடி


பருவச் செழிப்பினிலே

பனியில் நனைந்த மலர்

சிரிக்கும் சிரிப்பென்னவோ

நினைக்கும் நினைப்பென்னவோ

மெல்ல மெல்ல

அங்கம் எங்கும் துள்ள துள்ள

அள்ளிக்கொள்ள

என்னை வெல்ல இதுதானே நேரம்

அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

இது யவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி


என்னை ஆட்கொண்ட ராகம்

என்றும் ஒரு ராகமே

இன்று நான்கொண்ட வேகம்

என்றும் உனக்காகவே

வாழ்வில் மின்னல் போல்வந்தது

யாரோ யாரோ யார் கண்டது

குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி

ஒரு தேன்மலர் வாடுது என்று நீசொல்லடிஅன்னக்கிளி திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் இசைவெள்ளத்தில் நனைந்துகொண்டிருந்த நேரம். அதையெடுத்து ஒரே பறவைப் பெயர்களாகத் தமிழ்த் திரைப்படங்கள் தலைப்பைச் சூட்டிக்கொண்டு நின்றன - அன்னக்கிளி, சிட்டுக்குருவி, கவிக்குயில், மாடப்புறா என. அன்னக்கிளி படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் ‘கவிக்குயில்என்னும் படத்தைப் பஞ்சு அருணாசலம் எடுத்தார். கவிக்குயில் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் குயிலே கவிக்குயிலே... எனும் இப்பாடல் நம் தாய்மார்கள் பருவத்தில் நின்றபோது அவர்தம் மனதைக் கவ்வி மந்திரமாகிய பாடல்.

இந்தப் பாடலை இயற்றியவர் படத்தின் முதலாளியாகிய பஞ்சு அருணாசலம் ஆவார். பஞ்சு அருணாசலம் கவிஞர் கண்ணதாசனோடு இரத்த உறவுடையவர். கண்ணதாசனும் முதன்மையாக ஒரு படமுதலாளிதான். அவரோடு ஆரம்பம் முதலே உதவியாளராகப் பணியாற்றினார் பஞ்சு அருணாசலம். காரைக்குடிச் செட்டியாராகிய பஞ்சு அருணாசலத்துக்குப் படத்தொழில் கைவரப் பெற்றதைப் போலவே கண்ணதாசனின் நிழல்பட்டுப் பாடலியற்றும் ஆற்றலும் நல்லுருவம் பெற்றது. இளையராஜாவை அறிமுகப்படுத்தியது அவரின் தலையாய பெருமை. இறுதிவரை அவரெடுத்த அத்தனைப் படங்களுக்கும் ராஜாவே இசையமைத்தார். பிற்காலத்தில் அவர் தயாரித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜாவையும் திரையுலகுக்குள் கொணர்ந்தார். பஞ்சு அருணாசலம் தாம் தயாரிக்கும் எல்லாப் படங்களுக்கும் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களின் பொறுப்பை ஏற்பார். ஆளவந்தான் படத்தின் திரைக்கதையைத் தம்மோடு கலந்தாலோசித்திருந்தால் அத்திரைப்படம் அப்படியொரு தோல்வியைத் தழுவியிருக்காது என்று பிற்காலத்தில் பத்திரிகைப் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் பஞ்சு அருணாசலம். அந்த அளவிற்குத் திரைக்கதை விற்பன்னர். 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் பனிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் – திரைப்பாடல் எழுதிவிட்டுத்தான் நான் வீடு திரும்புவேன் என்ற சபதத்தோடு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். பல நாள்கள் அலைந்து திரிந்தேன். கையில் இருந்த படத்தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிப் புத்தகத்தின் வழியாக பஞ்சு அருணாசலத்தின் தியாகராய நகர் வீட்டைக் கண்டுபிடித்தேன். அப்போது ‘தம்பி பொண்டாட்டிஎன்ற ஒரு குப்பைப் படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தார் அவர். வீட்டின் கீழ்த்தளம் ஒரு அலுலவக தோரணையில் இருந்தது. P.A. Art Productions நிர்வாகி ஒருவர் தோரணையாக அமர்ந்திருந்தார். நான் நுழைந்தேன்.

‘என்ன தம்பி... என்ன வேணும் ?

‘நான் சாரைப் பார்க்கணுமுங்க

‘எதுக்குப் பார்க்கணும் ?

‘நான் நல்லாப் பாட்டெழுதுவனுங்க... அதான்என்று என் பாடல்களை எழுதிக்கோத்திருந்த கோப்பினை நீட்டினேன்.

‘அட ஏம்பா... பாட்டெல்லாம் நாங்களே எழுதிக்குவோம். நீ போறியா ?என்று கோப்பை வாங்காமலே எரிந்து விழுந்தார்.

நான் திரும்பிவிட்டேன்.’ ‘திரையுலகமே... இனி நானாக யார் வீட்டுப் படியையும் மிதிக்கமாட்டேன். நீயாக என் மதிப்பறிந்து என்னை மரியாதையோடு அழைத்து என்னைப் பாட்டெழுதச் சொல்லும்படி செய்வேன்...என்ற சபதத்தோடு ஊர் திரும்பினேன். பிற்காலத்தில் அந்த சபதமும் அதே சூளுரைப்படி நிறைவேறியது. நான் ஊர் திரும்பிய சில மாதங்களிலேயே வாசுகி வார இதழ் நடத்திய ரிக்‌ஷாக்காரர்களைப் பற்றிய கவிதைப் போட்டி ஒன்றில் நான் முதல் பரிசு பெற்றேன். அந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்தவர் நான் சந்திக்க முடியாமல் போன அதே பஞ்சு அருணாசலம். அக்கவிதை என் ‘ மண்ணே மலர்ந்து மணக்கிறதுதொகுப்பில் இருக்கிறது

பஞ்சு அருணாசலம் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல் கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்... வெண்பனி தூவும் நிலவே நில்...என்னும் பாடல். கண்மணியே காதல் என்பது கற்பனையோ – காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில் – காதல் ஓவியம் பாடும் காவியம் – அன்னக்கிளி உன்னத் தேடுதே – என்னுயிர் நீதானே... - என ஏராளமான பாடல்கள் அவருடையவை.

திகட்டல் இல்லாத சொற்களைக்கொண்டு வலிந்து புகுத்தாத மொழிநடையில் சரளமான பொருள்விரிவைத் தரும் கற்பனையோடு எழுதுவது பஞ்சு அருணாசலத்தின் பாணி. மெட்டோடு அத்துணை இலகுவாகப் பொருந்தும் சொற்றொடர்களை அமைப்பதில் நிபுணர். ஆகாத புருஷனும் வாழாத பொண்டாட்டியும் ஊர்கோலம் போவதைப் போல இருக்கின்றது இன்றைய மெட்டும் பாட்டும். மெட்டில் குழைந்து மேலெழும் பஞ்சு அருணாசலத்தின் வரிகள் காலங்கடந்தும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமை உடையன.

‘குயிலே... கவிக்குயிலே... பாடல் கவிக்குயில் திரைப்படம் வெற்றிபெறாத போதும் எங்கும் ஒலித்த பாடல். அதற்கு அந்தப் பாடல் வரிகளின் தெளிந்த நீரோட்டமான அமைப்பே காரணம். இளையராஜாவை இசைஞானி என்று இந்தப் பாடல் பதிவான அன்றே அறிவித்திருக்க வேண்டும்.

பழந்தமிழில் தூது இலக்கியம் என்ற சிற்றிலக்கிய வகை உண்டு. தம் நிலை, பாடு, வாதை, மகிழ்வை தம் மனதுக்குகந்தோரிடம் எடுத்துரைத்து வா என்று ‘என்நிலையைத் தன்னிலை எனக்கருதி மயங்கும் பேதை அறிவுடைய மென்பொருளிடம் (கிளி, குயில், தென்றல்) முறையிடும் முறை அந்த இலக்கியத்தின் மையச்சரம். அத்தகைய தூது வகைத் திரைப்பாடலாகும் இது.

குயிலிடம் தம் மணவாளனைச் சந்தித்து தம் நிலை விளக்கிக் கூறி அழைத்து வா என்று அரற்றுகிற இளமங்கையின் மனக்குரல். ‘குயிலே... யார் வருகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாய்... அவர் வந்தாரா...வரவில்லையே... யாரை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாய்... அந்தப் பாடலில் இழையும் உறவின் புரியாப்புதிரைப் பொருள்கூறி விளக்க அவர் வந்தாரா... இல்லையே...என்பதுதான் பல்லவியில் மலரும் ஏக்கம். ‘அதனால் குயிலே என்நிலை கூறி அவரை வரச்சொல்என்று மன்றாடுவதுதான் அடுத்து வரப்போகிற சரணங்களின் சாரம்.

இளமை நடனமாடுகிற என் தேகம் என்னும் பழத்தோட்டத்தில் காய்கள் யாவும் பழுத்துவிட்டன... அந்தக் கனிவின் இனிமையையும் சுவையையும் உட்கொண்டு இன்பம் காண வேண்டிய என் உள்ளம் உறவேதுமின்றித் தனிமையில் ஆடுகிறது... கண்களாலும் நான் ஜாடை காட்டி அழைத்தேன்... நெஞ்சம் வாடையில் வாடுகிறது... அதனால் குயிலே... அவரை வரச்சொல்... இது முகந்திருப்பிக் கொள்ளாது... மோகனம் பாடும் பெண்மையடி... அதைச் சொல்என்று முதல் சரணத்தில் ஒரு பெண்ணாகவே மாறி விட்டு விளாசுகிறார் பாடலாசிரியர்.

‘பருவச் செழிப்போடு இருக்கும் என் மனம் என்னும் மலர் காதல் பனியில் நனைந்தால் எப்படியெல்லாம் சிரிக்கும் தெரியுமா... எப்படியெல்லாம் நினைக்கும் தெரியுமா... மெல்லத் துள்ளும் என் அங்கத்தை அள்ளிக்கொள்ள இதுவே நேரம் இல்லையா... என் பிறப்புக்கே அர்த்தம் சொல்ல அவன் வரக்கூடாதா... நான் அப்படியொரு பருவச் செழிப்போடு மலர்ந்து பனியில் நனைந்து காதல் சுமையில் நடுங்குகிற யவ்வனமான முல்லைப் பூ என்று சொல்லடிஎன்பது இரண்டாவது சரணம். இந்த சரணம் வேறொரு சந்தத்தில் இருக்கும்.

‘வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோஎன்ற கதறல்தான் இந்தப் பாடல் நம்மை முழுதாகக் கட்டிப் போடப் பயன்பட்டக் கயிற்று வரி. ஒரு பாடலில் இவ்வாறு அமையும் பொன்வரிதான் அந்தப் பாடலையே ஜீவனுள்ளதாக்குகிறது. ‘இந்தத் தேன்மலர் வாடுது என்று சொல்லேன்டி...என்று மூன்றாம் சரணம் முடிகிறது.

நம் மனதைக் கொள்ளையடிக்கும் ஜானகியின் குரல் பாடலுக்கு உயிர். இப்பாடலுக்கு ஓடியாடிய யவ்வன ஸ்ரீதேவியின் கருப்புவெள்ளைத் தோற்றம் உள்ளபடியே ஒரு மௌனச்சோகத்தைக் காட்சிப்படுத்திவிட்டது.

இந்தக் கட்டுரையைப் படித்துமுடித்தவுடன் சிரமம் பாராமல் இந்தக் காணொளி இணைப்பையும் பார்த்து கேட்டுவிட்டு அகல்க ! இதுகாறும் இந்தப் பாடல் உங்களுக்குப் புலப்பட்டதை விடவும் மேலதிகப் புலப்பாட்டை உங்களுக்குள் நிகழ்த்தும். அதை இழக்கக் கூடாதல்லவா ?


Monday, August 1, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – கவிதை அரங்கேறும் நேரம்

கவிதை அரங்கேறும் நேரம் - மலர்க்

கணைகள் பரிமாறும் தேகம் – இனி

நாளும் கல்யாண ராகம் – இந்த

நினைவு சங்கீதம் ஆகும்


பார்வை உன்பாதம் தேடி – வரும்

பாவை என்னாசை கோடி – இனிக்

காமன் பல்லாக்கில் ஏறி – நாம்

கலப்போம் உல்லாச ஊரில்...!

உன் அங்கம் தமிழோடு சொந்தம் – அது

என்றும் திகட்டாத சந்தம்


கைகள் பொன்மேனி கலந்து – மலர்ப்

பொய்கை கொண்டாடும் விருந்து – இனி

சொர்க்கம் வேறொன்று எதற்கு ? – எந்தச்

சுகமும் ஈடில்லை இதற்கு !

மனம் கங்கை நதியான உவமை – இனி

எங்கே இமை மூடும் இளமை ?


நீரில் நின்றாடும் போதும் – சுடும்

நெருப்பாய் என்தேகம் ஆகும் – அது

நேரில் நீவந்த காயம் – இந்த

நிலைமை எப்போது மாறும் ?

என் இளமை மழைமேகமானால் – உன்

இதயம் குளிர்வாடை காணும் !

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற கவிதை அரங்கேறும் நேரம்தமிழ்த் திரையுலகு ஈந்த அருமையான பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலை எழுதியவர் குருவிக்கரம்பை சண்முகம் ஆவார். பிற்காலத்தில் மாப்பிள்ளை மனசு பூப்போல...என்றொரு திரைப்படத்தை எடுத்தார். வானம்பாடிக் குழுவில் இருந்தவர் என எண்ணுகிறேன். தமிழில் தேர்ந்த புலமை உள்ளவர் என்பதற்கு இந்தப் பாடலில் அவர் நாட்டியிருக்கும் மேதைமையே சான்று.

எம். எஸ். விஸ்வநாதன் இந்தப் பாடலின் இசைக்கோப்பாளர். இந்தப் பாடலில் பல்லவி முடிந்ததும் இடைநிரப்பு இசை எதுவும் இல்லாமலே மெல்லிதாக வயலினை மட்டும் ஒரு துண்டு இழுத்துவிட்டு நேரடியாக, ‘பார்வை உன் பாதம் தேடி வரும் பாவைஎன்று முதலாம் சரணத்தை ஆரம்பித்திருப்பார்.

ஒரு பாடல் எவ்வாறு வாத்தியங்களின் பேரெழுச்சியுடன் துவக்கப்படவேண்டும் என்பதற்கும் இப்பாடல் தகுதியான உதாரணம்.

பாடலை எடுத்த எடுப்பிலேயே பல்லவி வரியோடு ஆரம்பிக்கக் கூடாது. முதல் முப்பது மணித்துளிகளுக்கு அந்தப் பாடலின் ஆத்ம த்வனியை இசைக்கோப்பாக்கி ஒலிக்கவிடவேண்டும். அப்போதுதான் பாடலின் மையத்திற்குப் பார்வையாளனை இழுத்துவர முடியும். அப்படி வரவழைக்கப்பட்ட ரசிகனிடம் வரிகளைத் தரவேண்டும். அதன்பின் அவன் பாடலோடு ஒன்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை. இளையராஜா தம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கையாண்ட உத்தி இதுதான். முதல் பதினைந்திலிருந்து முப்பது விநாடிகள் தம் மேதாவிலசத்தில் மூழ்கி ஊறிய இசையொலிப்பை வழங்கிவிட்டுத்தான் பாடல் வரியைப் பாடகனைப் பாடவைப்பார். இளையராஜாவின் ஹிட் பாடல்கள் எதைவேண்டுமானாலும் ஞாபகப் படுத்திப் பாருங்கள் (சிறந்த உதாரணம் : ராக்கம்மா கையத் தட்டு). ஓப்பனிங்கில் இசையரசனாக ஒரு இசையொலிப்பைச் செய்து தாண்டவமாடி இருப்பார். பாடல் வரியைப் பாடலின் இருபதாம் விநாடிக்குப் பின் தான் கேட்க முடியும்.

ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு நிறுத்தி அழுத்தி சந்தத்தோடு பழுதறக் கலந்து பாடப்பட வேண்டும் என்பதற்கும் கவிதை அரங்கேறும் நேரத்தைஎடுத்துக்காட்டலாம். ஜெயச்சந்திரனும் ஜானகியும் புதிய தலைமுறையின் நினைவகத்தில் எந்த மூலையில் இருக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

சரணத்தை முடித்துவிட்டு பல்லவிக்கு மீண்டு செல்லும் இடத்தில் வலிமையான கவிதைப் புலப்பாட்டு வரிகளை அமையச் செய்வது மேன்மையான பாடலாசிரியர்கள் கைக்கொள்ளும் உத்தி. அந்த உத்தியை இப்பாடலின் மூன்று சரண முடிவிலும் நாம் இனங்காணலாம். உன் அங்கம் தமிழோடு சொந்தம் என்ற முடிப்பில் ஏன் அது தமிழோடு சொந்தம்...? அதற்கான காரணம்தான் என்னவோ...என்று நம்மைக் கேள்விக்குள் இழுத்துச் செல்கிறார் பாடலாசிரியர். தமிழோடு சொந்தமென்றால் அவள் அங்கம் தமிழைப்போல் முதுமையோ என்னும் நகைப்பான திசையிலும் நாம் நகரக் கூடும். கதைப்படி நாயகி முதிர்கன்னிமைக்குள் எட்டு வைக்கும் தருணத்தில் வேறு இருப்பாள். விடையை ஈற்றடியில் ‘அது என்றும் திகட்டாத சந்தம்என்று முடிக்கிறார். தமிழ் என்றாலே இனிமை, பண், பாட்டு எனப் பொருள்கள் பலவுண்டு. அந்த முடிவோடு பல்லவியின் வரி மேற்கூடி வரும்போது இன்னொரு பொருளையும் கூட்டித் தருகின்றது. தமிழோடு சொந்தமாகிய உன் அங்கம் என்னும் என்றும் திகட்டாத சந்தத்தில் இப்பொழுது நம் உறவு என்னும் கவிதை அரங்கேறும் நேரம் வந்துவிட்டதுஎன்ற நெடிய அர்த்தத்தில் முதல் சரணம் முடிந்து பாடப்படும் பல்லவி பயணிக்கிறது.

இரண்டாம் சரணத்தில் நீங்கள் அர்த்தத் தெளிவுறாமல் தடுமாறக் கூடிய அமைப்பு இருக்கிறது.

கைகள் பொன்மேனி கலந்து – மலர்ப்

பொய்கை கொண்டாடும் விருந்து

இவைதாம் அவ்வரிகள். சந்தச் சுவை உங்களுக்குப் புரிகிற அதே நேரம் பொருள் துலக்கமாகப் புரியாத மந்த நிலைமை இவ்வரிகளால் சிலருக்கு ஏற்படலாம். மலர்ப்பொய்கையாகிய இவள் பொன்மேனி என் கைகளைக் கலந்து விருந்து (புதிய உறவு) கொண்டாடுகிறதுஎன்று மொழிமாற்றிப் பொருள்கொள்ள வேண்டும்.

மனம் கங்கை நதியை உவமையாகக் கொண்டுவிட்டது. மனது புதுப்புனலாகிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்போது இளமையின் இமைகள் எங்கேயாவது ஓய்ந்து கண் துஞ்சுமா ? இந்த வெள்ளத்தைக் கொண்டு நிலத்தின் எப்பகுதியை நனைக்கலாம், மண்ணின் எவ்விடத்தைக் கரைக்கலாம், தடுப்புகளை எவ்வெவ்வாறு அரிக்கலாம் என்பதுதானே நோக்காக இருக்கும் ! இனி எங்கே இமை மூடும் இளமை ? என்னும் அருமையான வரி சரணத்தை முடிக்கிறது.

மூன்று சரணம் உள்ள சோடிப் பாடல்களில் மூன்றாவது சரணத்தை நீராடும் காட்சியாக அமைப்பது தமிழ்த் திரை இலக்கணம். ஆயிரம் நிலவே வா... பாடல் உங்களுக்கு நினைவு வரலாம் (பொய்கையெனும் நீர்மகளோ பூவாடை போர்த்திருந்தாள்...! தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்..!). அதே போல் இங்கேயும் மூன்றாவது சரணம் நீராடும் காட்சி. “நீரில் குளிர்வித்தாலும் என் உடலம் நெருப்பாகக் கொதிக்கிறது. ஏனென்றால், அங்கே நேரில் நீவந்து என் நினைவுகளைக் காயமாக்கிவிட்டாய்... இந்த நிலைமை மாறுவதுதான் என்றோ ?என்று கேட்கிறாள் நாயகி. ‘என் இளமை மழைமேகமாகி உன் மீது பொழியத் திரண்டு நின்றாலே போதும்... உன் இதயத்தின் மீது குளிர்ந்த வாடைக் காற்று வீசும்என்று பதிலிடுகிறான் நாயகன்.

பாக்யராஜும் அம்பிகாவும் தோன்றிச் செய்த அபிநயங்களாலும் நுட்பமான நன்னயங்கள் பலவற்றாலும் நம்மால் மறக்கவே முடியாத பாடல் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ !

http://www.youtube.com/watch?v=2l7ih8GUvzY