Monday, August 22, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – அத்திக்காய் காய் காய்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

தமிழ்த் திரைப்பாடல் உலகில் கண்ணதாசனைப் பற்றிப் பேசியாக வேண்டிய தருணம் அத்துணை பொருண்மை மிக்கது ! தமிழ்த்திரையுலகின் எண்பதாண்டுகால வரலாற்றில் ஒரேயொரு இலக்கியச் சாதனையாளனை மட்டுமே குறிப்பிடவேண்டும் என்றால் அது கண்ணதாசன் தான். மேலை இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பத்தாயிரக்கணக்கான நூல்கள் நுவலப்பட்டுள்ளன. அவ்வாறு ஒரு கலை இலக்கிய ஆசிரியனின் படைப்பில் ஊறித் திளைத்து உவகை பூத்துக் கொண்டாடி எழுதப்பட்ட நூல்களுக்கு நம் மொழியிலிருப்பதைப் போன்ற பஞ்சம் வேறெங்கே உண்டு ? மீறிக்கூறினால் பாரதியைப் பற்றிச் சில நூறு நூல்கள் காணக்கிடைக்கலாம். பாரதிதாசனுக்குக் கொஞ்சம் எழுதப்பட்டிருக்கலாம்.

கண்ணதாசனின் ஒவ்வொரு திரைப்பாடலையும் விவரித்துப் பெருங்கட்டுரைகள் எழுதலாம். அவரது ஆயிரக்கணக்கான பாடல்களையும் துளித்துளியாக இரசித்து விவரித்து ஒப்பு நோக்கி நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதலாம். கண்ணதாசன் முன்வைத்த திரைப்பாடல் துறையின் இலக்கியக் களம் அவ்வளவு விரிவானது. தம்மை ஆள்பவர் யாரெனத் தெரியாதிருந்த பாமரத் தமிழரிடையேயும் கண்ணதாசன் தம் பாடல்களால் பரவியிருந்தார். இறப்புக்கும் பிறப்புக்கும் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பிணிக்கும் பேருவகைக்கும் உறவுக்கும் பிரிவுக்கும் காதலுக்கும் துரோகத்துக்கும் கண்ணதாசன் தம் பாடல்களில் தெளித்துச் சென்ற தமிழ் வரிகள் காலத்தை மிக எளிதாக வென்றவை. ஒவ்வொருவரும் தம்மோடு தொடர்புபடுத்தி மயங்கத்தக்க எளிய வரிகளை - தம் புலமையாழத்தின் வண்டல் சத்தை ஏற்றி - இலக்கியச் சுவையால் இனிப்பேறிய பாடல்களைத் தம் இறுதி வரை வழங்கினார்.

கண்ணதாசன் 1940களின் பிந்தைய ஆண்டுகளில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய சண்டமாருதம்என்னும் பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகிறார். அப்போது அவருக்கு வயது 21. அங்கே கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன் போன்றோர் முறையே எழுத்து, நடிப்பு சார்ந்த இளநிலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம். அதே மாடர்ன் தியேட்டர்ஸில் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு படத்திற்கான வசனம் பாடல்களை எழுதிக்கொடுக்க நாற்பதாயிரம் உரூபாய் சம்பளம் பேசப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பாரதிதாசன் எழுதிக்கொடுத்த பாடல் ஒன்றில் ‘கமழ்ந்ததுஎன்ற வார்த்தை வருகிறது. அந்த வார்த்தையை அங்கே நிறுவியிருந்த ஒலிப்பதிவுக் கருவியால் பதிவு செய்ய இயலவில்லை. படக்குழுவினர் பாரதிதாசனிடம் சென்று நிலைமையை விளக்கிக் கமழ்ந்தது-வை மாற்றித் தரக்கோருகிறார்கள். மறுத்த பாரதிதாசன் ‘என் வார்த்தையை மாற்ற முடியாது. வேண்டுமானால் நீ உன் ஒலிப்பதிவுகருவியை மாற்றிக்கொள்என்று சினந்து அனுப்பிவிடுகிறார். வழியறியாது விழித்த படக்குழு கண்ணதாசனிடம் உதவக் கேட்கிறது. கண்ணதாசன் உடனே ‘கமழ்ந்ததுஎன்ற வார்த்தைக்கு மாற்றாக ‘மலர்ந்ததுஎன்று எழுதித் தருகிறார். பாடலும் நல்லபடி பதிவாகிறது. தம் பாடலைத் தம் அனுமதியின்றி மாற்றிய காரணத்தால் பாரதிதாசன் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து ‘நீயும் ஆச்சு. உன் நாற்பதாயிரம் உரூபாய் ஆச்சுஎன்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியேறுகிறார். அந்த வெளியேற்றத்தின் பின் பாரதிதாசன் தம் இறுதிவரை திரையுலகில் நுழையமுடியவில்லை. அந்த உள்நுழைவின் பின் கண்ணதாசன் தம் இறுதிவரை திரையுலகைவிட்டு வெளியேறவில்லை. பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘கன்னியின் காதலிஎன்னும் படத்தில் ‘கலங்காதிரு மனமே ! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!என்ற பாடலை எழுதிப் பாடலாசிரியராகிறார் கண்ணதாசன். இது 1948 வாக்கில் நடக்கிறது. தாம் அறிமுகமாகி சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கண்ணதாசனால் திரைப்பாடல் இயற்றுவதில் பெரிய கணக்கைத் துவக்க முடியவில்லை. 1958களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசனை விஞ்சிய பாடலாசிரியராக முன்னேறுகிறார். அதே காலகட்டத்தில் வாலி என்பவரும் அறிமுகமாகிறார். அடுத்து வந்த 1960கள்தாம் கண்ணதாசனின் பொற்காலம். அந்தக் காலகட்டம்தான் தமிழ்த் திரையுலகின் பொற்காலமும் கூட.


எம்.ஜி.ஆரின் ‘தகர வரிசைப் படங்களிலும் (தர்மம் தலைகாக்கும், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்...) சிவாஜி கணேசனின் ‘பகர வரிசைப் படங்களும் (பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு, பார் மகளே பார்...) கண்ணதாசனைப் புகழின் உச்சுக்குக் கொண்டுசெல்கின்றன. மூன்றாம் பிறையில் எழுதிய ‘கண்ணே கலைமானேஎன்னும் தம் கடைசிப் பாடல் வரையிலும் கண்ணதாசன் தந்நேரற்றே நிகரற்றே விளங்கினார். கண்ணதாசனின் நெஞ்சம் ஒரு வெற்றிகரமான படமுதலாளி ஆவதற்கே விரும்பி இருந்தது. அதற்காகவே அவர் அரும்பாடுகள் பட்டார். அரசியல் களத்தில் எதிரிகளை வெல்ல வாழ்வின் முதன்மையான காலங்களையும் ஈட்டிய செல்வங்களையும் அவர் அசுரத்தனமாகச் செலவிட்டார். ஆனால் அம்முயற்சிகள் யாவும் கசப்பில்தாம் முடிந்தன. அவருக்கான நிரந்தரப் புகழை அவர் உதிரத்தில் ஓடிய தமிழ்தான் வழங்கிற்று.


பலே பாண்டியா திரைப்படத்தில் வரும் அத்திக்காய் காய் பாடலை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. கண்ணதாசன் கவிதைப் பித்தேறி நின்ற தம் வாலிபப் பருவத்தில் அநாயசமாக எழுதிய பாடல் இது. காய் என்னும் சொல்லைத் தாவர விளைவான காய் என்னும் பெயர்ச்சொல்லிலும் - காய் என்னும் வினைச்சொல்லிலும் (வெம்மையுற வீசு, கோபம் கொள், கடிந்து பேசு) ஆய் என்னும் வேற்றுமை உருபாகவும் பன்பொருள்படப் பயன்படுத்திக் கவிஞர் ஆடிய மொழியாட்டம் நம்மை இறுகப் பிணித்து இறும்பூது எய்தச் செய்கிறது.

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

அந்தத் திசையில் வெம்மையுற வீசு ஆலமரத்துக் காயைப் போன்று தூரத்தே இருந்து சிறிதாகத் தோன்றும் வெண்ணிலவே ! இந்த்த் திசையில் வெம்மையுற வீசாதே... ஏனென்றால் என் உயிராக உன்னைக் கருதும் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

கன்னி எனக்காக... என்னுடைய ஆசைக்காக... காதல் கொண்டிருக்கும் பாவையாகிய எனக்காக.... அங்கே வெம்மையுற வீசு... அவர்மீது வெம்மையுற வீசு... மங்கையாகிய என்னுடைய அரசனை (கோவை) வெம்மையுற வை...!

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

பெண் அவ்வாறு கூறியதும் ஆண் சமாதானம் கூறுகிறான் :- மாதின் உள்ளம் என்னைக் காய் எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல் ஆனாலும் (மாது+உளம்+காய்) அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா என்ன ? அதனால் என்மீது வெம்மையுற வீசாதே வெண்ணிலா !

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

இரவுக்காகவும் அவ்வாறு இரவு வந்தால் ஏற்படும் உறவுக்காகவும் ஏங்குகின்ற இந்த ஏழைக்காக நீ வெம்மையுற வீசு. எந்நேரமும் வெம்மையுற வீசு. இதோ நேரில் என்னை அணைக்காமல் நிற்கிறாளே இவளைக் கடிந்துகொள் !

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

ஆண் அவ்வாறு சினந்து பேசுவதால் பெண் அவனுக்குத் தன் உள்ளக் கிடக்கையைக் குறிப்பால் உணர்த்துகிறாள் :- அட புரியாதவரே... நான் உருவத்தால் சின்னஞ்சிறியவளாய் இன்னும் பழுக்காதவளாய்த் தோன்றுகின்றேனேயன்றி பருவத்தால் எப்படிப்பட்டவள் தெரியுமா... காயைப் போன்றவள் இல்லை அன்பரே... பருவத்தால் நான் பழுத்துக் கனிந்தவள் அல்லவா ! அதனால், வெண்ணிலவே அவர் சொல்கிறார் என்று என்னைக் கடிந்து பேசாதே !

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி நிற்குமோ அப்படி எங்கள் உள்ளத்தில் காதல் என்னும் நறுமணம் காலந்தோறும் மணந்து நிற்கட்டும் என்று நிலவே நீ வீசு...! ஜாதிக்காய்ப் பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து கனியும்படி காய்வாயாக !

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

என்ன வெண்ணிலவே ! என் காதலி சொன்னதை விளங்கிக்கொண்டாயா ? இருவருக்கும் இடையே தூதாகவும் விளங்கி நிற்கும் வெண்ணிலவே !

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

உள்ளம் எல்லாம் இளக மாட்டாயோ ? உன்னிடமுள்ள ஒவ்வொரு தேன் துளியையும் சுரக்கமாட்டாயோ ? வெள்ளரிக்காய் பிளந்ததுபோல பற்கள் அனைத்தும் தெரிய சிரிக்க மாட்டாயோ ?

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலவே

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

கோதையென்னைக் காயாமல் என் மன்னவனைக் காய்வாய் வெண்ணிலவே ! சரி சரி ! எங்கள் இருவரையும் காயவேண்டாம் ! எங்கள் பாவிளையாடல் முடிந்துவிட்டது. இனி பருவவிளையாடல் ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில் வீசிக்கொண்டிரு வெண்ணிலவே !

இந்தப் பாடல் நல்கிய இன்பத்தை நான் புதிதாக எடுத்தியம்பி நிறுவ வேண்டியதில்லை. என்னென்ன காய்களின் பெயர்கள் பயின்றன என்றும் நான் குறிப்பிடவில்லை. தமிழும் பொருளும் இசையும் மிடுக்காக நடந்து நடந்து தொட்ட உயரத்தை நாம் ஐம்பதாண்டுகள் கழித்தும் அண்ணாந்துதானே பார்க்கிறோம் !


11 comments:

 1. இன்றைய கவிஞர்கள் படிக்கவேண்டிய புத்தகம்

  “கண்ணதாசன்“

  ReplyDelete
 2. கவிஞரே! நானுமிந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன் அதன் அர்த்தம் விளங்கிக்கொள்ளாமலே.
  மிக அற்புதமான பதிவு.
  தமிழின் வளம் அள்ள.அள்ள குறையாதது அள்ளிக்கொள்ளத்தான் ஆளில்லை!

  ReplyDelete
 3. முனைவர் இரா. குணசீலன் ! நன்றி.

  இரவிக்குமார் ! கண்ணதாசன் பாடல்களின் பொருள் விரிவுகள் ஓர் இயக்குநருக்கு வரப்பிரசாதம். அதனால்தான் அவருக்காகத் தவம் கிடந்து அழைத்துச் சென்றார்கள். மணிரத்னம் சொன்னதுபோல் Cinema is nothing but light and sound. விஷுவலை இயக்குநர்கள் உருவாக்கிக்கொள்ள ஒலிப்புலத்தை கவிஞர் கவனித்துக்கொள்வார்.

  தனிமை இன்பம் கனியக்காய் - என்ற பயன்பாட்டில் கனியைக் காய் என்ற கூற முடிகிறது பாருங்கள். அதே இடத்தில் கனிவதற்காக காய்ப்பாயாக என்ற முறையீட்டையும் நோக்கலாம்.

  ReplyDelete
 4. மகத்தான பாடல்களை எடுத்துக் காட்டும் முகமாக நீங்கள் எழுதிக் காட்டும் வரலாறு வியக்க வைக்கிறது. பாரதிதாசன் முறித்துக்கொண்டு போன கதை... என்னதான் பகுத்தறிவு பேசினாலும், ||உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் ...|| என்னும் எளிமைச் சார்பின் இன்றியமையாமையையும் கருத வைக்கிறது.

  ReplyDelete
 5. அண்ணாச்சி ! பாரதிதாசனார் பிற்காலத்தில் பாண்டியன் பரிசு-வைத் திரைப்படமாக்க தம் வீட்டை விற்றுப் பெரும் பொருள் எடுத்துக்கொண்டு சென்னை வந்தார். சிவாஜி கணேசனின் நாள்களுக்காக வருடக்கணக்கில் காத்திருந்தார். திரையுலகம் அவரைக் காக்க வைத்துக் கழுத்தறுத்தது. தாம் கைகாட்டும் எவனோ அவனே புதுவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்ற நிலையிலிருந்த அந்த சிங்கம், நிராசையின் வெம்மையில் உயிரை விட்டது.

  ReplyDelete
 6. கடந்த வாரம்தான் இந்தப் பாட்டின் பொருளை அம்மாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். ("இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்" போன்ற சில வரிகளை மட்டும் தவிர்த்து விட்டு)

  ஆனால் "உருவங்காய் ஆனாலும் -
  பருவங்காய் ஆகுமோ; ஒவ்வொரு தேன் சுரைக்காயோ" ஆகிய வரிகள் மட்டும் இத்தனை ஆண்டுகளாகப் புரியாமல் இருந்தன. நன்றி கவிஞரே!

  இன்பத்துப்பால் பற்றி 'இலைமறை காயாக' இதை விட அருமையாக எழுத முடியுமா என்பது ஐயம்தான். இந்த ஒரு பாட்டுக்காகவே கண்ணதாசன் அவர்களுக்கு 'தேசிய வாழ்நாள் சாதனையாளர்' வழங்கியிருக்கலாம். ஆனால் தேசிய விருதாவது வழங்கினார்களோ என்னவோ தெரியவில்லை!

  ReplyDelete
 7. திரு. இ.பு. ஞானப்பிரகாசன். நன்றி !

  பாடலில் சிறந்த வரியே ‘உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ ?’ என்னும் வரிதான். ‘ஒவ்வொரு தேன் சுரைக்காயோ ?’ என்னும் வரியை ‘ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ?’ என்றும் ஒலிப்பில் (ஒவ்வொரு பேச்சாக் உரைக்க மாட்டாயோ ?) இருக்கிறது. இப்படிப் பாட பேதங்கள் அமைந்தாலே அது அருமையான பாட்டுதான்.

  ReplyDelete
 8. இந்தப்பாடலின் சிறப்பை முன்னமே நாங்கள் சிலர் சிலாகிச்சி பேசி இருக்கிறோம் இங்கும் விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ..எவெர் க்ரீன்சாங்!

  ReplyDelete
 9. Wow!

  இதுவரை காய்களின் தொகுப்பான பாடல் என்று நினைத்திருந்தேன். உங்களின் கோனார் நோட்ஸ் சிறப்பான மறைபொருளை எடுத்தியம்பியது. அருமை, மிக்க நன்றி.

  ReplyDelete
 10. Intha Paadaluku oru moola paadal tamil ilakiyathil ulathena kelvi. Therinthavar yaravathu irunthal thayavu seithu pakirungalen. Ithai eppadi tamil paduvathena theriyavullai. Mannikavum.

  ReplyDelete